Saturday, 30 November 2013

எமதீழம் அன்றோ


மணிநாத ஒலிகூட்டும் மலர்விரிந்து நாறும்
பணிவோரின் இசைபக்தி பரவும் அதிகாலை
அணிசேரும் குருவியினம் ஆர்க்குமொலி கீதம்
தணியாத இன்பங்கொள் தமிழீழ மன்றோ

குளிர் தாரும் பெருவேம்பு முற்றத்தின் ஓரம்
புளி மாவின் பிஞ்சாய புரளும் கறை தேகம்
துளிவீழ மழைவெள்ளம் தோட்ட வரம்போடும்
களிகொண்டு சிறுவர்விடும் காகித மென் ஓடம்
நளினமிடும் நெற்கதிரும் நாடிவருந் தென்றல்
வெளி வானம் வீழ்ந்ததென விம்பம்தரும் குளநீர்
நெளிந்தோடும் நீரலையில் நீந்தப் பெரும் சுகமே
ஒளிகொண்ட விழிகொள்ளும் எங்கள் தாய் மண்ணே

எழில் வண்ணத் திருகோவில் திருவிழாக் கூட்டம்
தொழில் மாந்தர் துயர்போக்கும் சதிராட்டம் தாளம்
பொழில் தூங்கும் தாமரைகள் புனல் சந்த ஓசை
மொழி இன்பத்தமிழ் பேசும் மேன்மைநிறை ஈழம்

தாய்மண்ணைச் சூழ்கலிகள் தனைநீக்கு துன்பம்
போய்விடிவு காணவெனப் புறப்படு உன் தெய்வம்
தேய் வளங்கள் தனை நீக்கி தீரமுற செய்ய
 காய் கனியும்போல் கரமுகொள்ளும் இனிதேசம்
*************

Tuesday, 26 November 2013

அந்தநாள் வந்திடாதோ?

செஞ்சுடர் தோன்றிடக் காலையெனும் ஒரு
திருநாள் விடியாதோ - மனம்
அஞ்சிடும் மாந்தரின் வாழ்வினிலே  ஒரு
அறநாள் எழுமாமோ - விழி
கொஞ்சிடும் மாதரின் காளைகளின் சிறைக்
கூடங்கள் திறவாதோ - இனி
மிஞ்சிடும் நாட்களில் வாழ்க்கை யெனும் அந்த
மென்மலர் பூக்காதோ

பஞ்சினில் தீயிடும் பாதகரின் கரம்
பாழ்படப் போகாதோ - உயிர்
தஞ்சமென் றுன்னிடம் வந்தவரும் தலை
தப்பிட வாழாரோ - உள்
நெஞ்சமதிற் கனல் தீயெழுந்தே யவர்
நினைவது2ம் சிவக்காதோ -  மனம்
துஞ்சிடும் மாதரும் துயர றுந்தே உளம்
தென்றலென் றாகாதோ

கஞ்சியும் கூழெனக் குடித்தாலும் அவர்
கண்ணிய வாழ்வினிலே -  தினம்
பிஞ்சுடன் பூவென உயிர்வாங்கும் எமன்
போதுமென் றேகானோ -  துயில்
மஞ்சமும் இரத்தமும் சதைகளின்றி மலர்
மணந்திடப் காணாதோ - இனி
எஞ்சிய நாட்களில் இருளகன்றே  ஒரு
இளவெயில் தோன்றாதோ

சஞ்சலம் போயும்நல் வீரமெழத் தமிழ்ச்
சுதந்திர இசைபாடி - வண்ணக்
குஞ்சரங்கள் எழில் மாலைதொங்க நற்
கோலங்கள் ஆகாதோ - கொடு
நஞ்சிடை மனமெனக் கொண்டவர்கள் எம்
நற்றமிழ் அன்னைதனை - தன்
அஞ்சுடை வயதினில் கற்றதென்றே அவர்
ஆற்றலில் திருந்தாரோ

செஞ் சிவப்பாகிய வானமதில் அச்
சுந்தர சூரியனும் - ஒரு
கஞ்சமின்றி யொளி வெள்ளமிட எம்
கனவுகள் பலியாதோ
புஞ்சைநிலம் வயல் பூமியெல்லாம் -நிலை
பொன்னெழில் பூத்தாக - உனைத்
தஞ்சமென் றடைந்தோம் தாயவளே எம்
தமிழ் நிலம்  விடியாதோ?

நினைவே , நீ ஏன் இப்படி?

மனங் கொண்ட நினைவேநீ எதிர் ஆனதேன் - என்
மடிமீதில் உறவாடும் நிலை போனதேன்
கனம் கொள்ள இதயத்தில் சுவடாக்கினாய் - பின்
கனவென்றே தொலைசென்று  மறைவாகினாய்
தனமென்று பொருள்தானும் எதுவேண்டினை - அதைத்
தரவென்று நினைந்தாலும் உரு நீத்தனை
மனதோடும் உறவாடிச் சுகம் தந்தனை- இன்று
மலர்கின்ற விதம் இன்றி மறந்தோடினாய்

இரவென்ன பகலென்ன இனிதாகினோம் என்
இதயத்தில் எழுந்தேநீ எனைஆண்டனை
வரவென்ன நினைவோடு வழி சென்றவன் - இன்று
வரைவின்றி உளம்நொந்து விழிகாக்கிறேன்
பரவும் நல்லொரு காலை பிரிந்தோடுவோம் - நிலம்
பனிகொண்ட புல்மீது நடந்தோடுவோம்
தரவும் பல் லுரைகொண்டு வருங் கற்பனை - அதை
தரம் கொண்டு தரவே என்தமிழ் போற்றினேன்

பனிதூங்கும் மலர்மீறும் எழில் கொண்டவா - எனைப்
பார்க்காமல் மனம்தொட்டு துணை நின்றவா
இனிப் போதும் என்றாலும் உணர்வீந்தனை - இவ்
இகம்மீது ஏன் வாடும்செயல் தந்தனை
புனிதமென் றுயர்வானப் பொழுதாகியும்  - எனைப்
போகின்ற இடமெங்கும் உடன் வந்தனை
மனிதத்தின் உணர்வென்னும் தீ மூட்டியே - அவர்
மகிழ்கின்ற பொழுதேனோ  உயிர்வாங்கினாய்

குளிரென்றே அணைவாய் பின்கணம் மாறுவாய் - என்
குரலாகப் பிணைந்தோடிச் சினம்கொள்ளுவாய்
ஒளிபோன்று மதிகொண்டே புதிர்போடுவாய் - பின்
உறக்கத்தில் உயிர்தூங்க விடை கூறுவாய்
அளி யின்பம் எனவ்ந்து கவி சொல்லுவாய் - பின்
அழிஎன்று பயம்கொள்ள மருண்டோடுவாய்
புளிமாவின் கனிகாணும் சுவை தந்தபின் இப்
புவிகொள்ளும் சுதந்திரம் தனுக் கேங்கினாய்

அதிகாரம் கொண்டங்கே அரசோச்சினான் -  அங்கு
அடிமைக்கு நிகரென்று பணியாற்றுவாய்
அதி காரச் சுவையாகி உயிர் கொல்லுவாய் - பின்
அதைப்போலும் உயிர்கொள்ள அவள்பேணுவாய்
குதித்தோடிக் குணம்கொண்டு குலம்காத்திடும்  - உன்
குறைஏது தினம்மாறிக் கணம் வேறென்பாய்
புதிதென்று எதைஎண்ணிப் போய்வாழ்விலே - அந்தப்
பேய்களின் மனம்தாவிப் பலியாகினாய்?

சேர்ந்து நில் விடிவு வரும்

மலர் தூங்கும் பனி மண்ணில் வீழும் - பூ
மணம் ஏந்தி இளந்தென்றல் அலைந்தோடக் காணும்
புலர்கின்ற பொழுதான யாவும் - நம் 
பொன்னான தாய்மண்ணின் புதுமை என்றாகும்
சிலர்வந்து தாய்நிலம் பற்றி - எம்மைச்
செல்லென்று காட்டிடை சிறையிட்டு வைத்தால்
இலதென்று ஆகுமோ வீரம் - நாமும்
இருந்தழும்  நிலை  காண மீளுமோ தேசம்

கலை ஒன்றித் தமிழ் இன்பம் காணும் -  நற்
கனி போலும் சுவை எங்கள் தமிழீழ வாழ்வும்
உலைபொங்கும் வயல்கொண்ட நெல்லும்  - விதை
உழவர்தம் வியர்வையும் உதிர்கின்ற மண்ணும்
நிலை கொண்ட  எம் தேசம் வேண்டும் -  அதை 
நீர்வார்த்து தருமமென் றளிக்கவா நானும்
மலைபோன்று இடர் வந்தபோதும்-  நாமும்
மறுபடி கொள்வோமோ எமதன்னை நாடும்

சிலபூக்கள் குளம் தன்னில் ஆடும் - அதில்
சிந்தாமல் வண்டொன்று தேனுண்டே ஓடும்
வலைதன்னில் மீன்வந்து வீழும் -அதை
வாரிக் கரைபோட்டு விலைகூறு வோரும்
தலைசீவிப் பூச் சூட அன்னை - அவர்
தாயாம் என் பாட்டியின் கதை சொல்லும் தன்மை
நிலைகொண்ட நாம் வாழ்ந்த  மண்ணை -  இன்று
நீசர்தம் கைவிட்டு மீட்பதே வேலை


தொலை என்று வந்தாளும் பகைவன் - அவன்
துண்டுதுண்டாய் ஆக்கத்  துணைநின்ற உலகம்
மலை போலும் தமிழ் வீர மாந்தர் - இவர்
மாளென நஞ்சிட்டுக் கொன்றதோர் கோலம்
குலைகுலை யாகவே வெட்டி - அவன்
கும்மாளம் போட்டாடக் குவலயம்சுற்றித் 
தலை கீழென் றுருண்டோடும் பூமி  - நாமும்
தருமத்தைக் கேட்டிடிட எவருண்டு மீதி

மொழி ஒன்று தமிழ் எங்கள் அன்னை - இதை
மறப்பதோ ஒன்றாகு,  மதியூகம் கொண்டே
வழி கண்டு சென்றிட வாழ்வாம் -நூறு
வகையான வழிகாணில் பிரிவொன்றே மீதாம்
தெளிகின்ற மனதோடு உறுதி - அதை 
தேர்ந்து நீ சரியான திசைகண்டு சென்றால்
பழி வென்று தீர்வாகி விடியும் - நீயும்
பயமின்றி வாழ ஓர் விடியலும் தோன்றும்.******************************
**

நட விடியல் தோன்றும்


மலராத மலரெங்கும் உளதோ - மறுபடியும்
புலராத விடிகாலைப் பொழுதோ - மதுமலரில்
உலவாத வண்டினமெங் குண்டோ  உயிருடலை
விலகாது  தமிழ்காத்தல் தவறோ
தொடராத நிழல் தானும் உளலோ - மரம்மீது
படராத கொடி வளரத் தகுமோ - பின்னாலே
இடராக வந்த பெரும்  பகையோ - இவர்வாழ
விடலாமோ எம்தீழம் பொதுவோ

கடலோடிச் சூழ்நிலமும் எமதே -  இதைவந்து
தொடலாமோ அந்நியனை விடவோ - மெய்கீறி
குடலாக இவன் உருவ சடமோ - நம்விழியில்
படலாமோ விடநாமும் முடமோ


அறமின்றி அநியாயம் பலமோ- அடிமையென
மறமின்றித் தமிழ் மாந்தர் கெடவோ -கொண்டகுவை
துறவென்று மனை விட்டு செலவோ- வந்தபகை
உறவென்று நிலம்கொள்ளல் தகுமோ

சுடும் தீயில் வெந்தழியும் வாழ்வைப் - புதிதாக்க
எடுஎண்ணம்  உயிராய் மண்நேசி - இன்றுவிடில்
வடுவாகும் உனது பெருவாழ்வும் -  கடமைதனைத்
தொடுவீரமொடு   விடியல் தோன்றும்

Sunday, 27 October 2013

கண்ணே கண்ணுறங்காய்

சித்திரமே  செங்கரும்பே சேர்ந்தாடும் மல்லிகையே
நித்திரையைக் கொள்வையடி  நீர்விழிகள் ஊற்றுவதேன்
இத்தரையில் நீபிறந்தாய் ஈர்விழிகள் கண்டதெலாம்
அத்தனையும் துன்பமடி ஆறிமனம் கண்ணுறங்காய்

புத்திரியே பூமகளே பொல்லாயிப் பூமியிலே
கத்தியழும் காட்சிகளே  காலையிலே சேதியடி
நித்திரையில் கண்ணயர்ந்தால் நெஞ்சமெலாம் பதறியழக்
கத்தியும் கொண்டோர் உருவம் கனவிலெனைத் துரத்துதடி

பத்திரிகை கையெடுத்தால் படத்துடனே வெடிகுண்டால்;
இத்தனைபேர் போனதென  எண்ணிக் கணக்குரைப்பர்
சத்தமிட்டு அழுபவரும் சித்தமழிந் தாடுமிடம்
புத்தொளிவண் ணத்தொலைகாண் பெட்டிதரும் காட்சியடி

நித்தம்விழி காண்பதிலே நொந்துமனம் துடிதுடித்து
கொத்தும் விசஅரவமெனக் குலைநடுங்க வைக்குதடி
நித்தம் வருஞ் சேதியினை நீமறந்து கண்ணுறங்கு
அத்தனைக்கும் நீவருந்த ஆவி துடித்தஞ்சுமடி

சத்தியத்தின் ரூபமற்ற தத்துவமும் என்ன படி
மத்தியிலே அன்புஎனும் மாமருந்தே தேவையடி
சுத்தமென வாழ்நெறிகள் சொல்லிமனம் காப்பதற்கு
உத்தமரோ இவ்வுலகில் உள்ளனரோ .ஐயமடி

பெற்றவரின் குற்றமதோ பிள்ளைகளோ நாமறியோம்
குற்றமிடும் காட்சிகளில் கொண்டவரைத் தூண்டிவிட
பற்றெழத்துப் பாக்கியினைப் பெற்றழிக்கும் நாயகனை
முற்றும் முழுத்திரையினிலே  முன்னெடுத்துக் காட்டுகிறார்

அற்றதிங்கே நீதியென அழுதுமென்ன ஆரமுதே
தொற்றியதோர் நோயாகித் துடிக்கு முயிர் வதைப்போரும்
இற்றைய நாள் தீரரென இம்சையிட்டுக் கொல்கலையை
பற்றியவர் வீரரெனப் பாரில் புகழ்ந் தேற்றுவதோ

கற்றறியக் கணனியொன்றைக்  கைமடித்துத் தூக்கவெனப்
பொற்குலத்துப் பிள்ளையர்க்குப் பொருள்வழங்கப் போதைதரும்
உற்றதொரு குருதிதெறித் உடலமதில் குண்டு துளைத்
தற்றுயிரும் வீழ்த்துகின்ற தகமை பெற விளையாடி

பற்றெழவும் பாவியுடல் பதைபதைத்துக் கொல்வதினைச்
சுற்றுலகில் நாயகனாய் சொல்லாமல் உணர்வூட்டும்
வெற்றுலகின் வன்மைதனை விதைப்பவரோ பேருலகின்
முற்போக்கு வாதிகளும் மேலுலகாம் என் செய்வேன்

வித்தை யொன்று மில்லையடி வேந்தன் எனில் சொல்லும்வகை
உத்தரவென் றாணையிட  ஊரையெலாம் கொன்றொழித்துப்
பைத்தியமாய் தேசமெலாம் படை நடந்த கேவலத்தை
சத்தியத்தின் செய்கையென சாற்றுவதும் வேடிக்கையோ

கொல்லுமொரு கொலைவெறிக்கு கூடியிந்த உலகமெலாம்
நல்லோர் பொற்கிழி யளித்து நாட்டியமும் ஆடுதெனில்
இல்லார் குணமெடுத்தோர்  இயல்புடை நல் லோரெனவோ
எல்லாமோ எண்ணி விழி ஈரமெழ நீயழுதாய்

பொற்குவையே பேரழகுப் பேறேயென் புதுநிலவே
சொற்றமிழின் நற்கவியே சுந்தரமென் இதழ்குவித்து
வெற்றுவிழி செவ்வானச் சிவப்பெடுக்க நீயழுதால்
பெற்ற மனம்நோகுமடி பேசாமல் கண்ணுறங்காய்

******************************

என்னாவேன்

தேடிப் பார்த்தேன்  திக்கெட்டெங்கும்
  தெரியா விடைகொண்டேன்
ஓடிக் கேட்டேன் ஓடைநீரில்
  உலவும் அலை கேட்டேன்
நாடிக் கேட்டேன் நாளும் மலரும்
  நல்லோர் எழில்பூவும்
வாடிக்கீழே வீழுந் தன்மை
 வகையேன் விடைகேட்டேன்

கூடிக் கைகள் கூப்பித் தெய்வக்
  கோவில் உள்நின்றேன்
ஆடித்தெய்வம் முன்னே நின்று
  அருளே விடைஎன்றேன்
மூடிக் காதில் மொழிகள் அறியா
  மௌனத்தில் கேட்டேன்
சாடிப் பார்த்தேன் தெய்வம்மீது
  சலனம் எதுகாணேன்

சூடிக் கொண்டோன் பிறையைக் கேட்டேன்
  சோதிக் கனலாகி
வேடிக் கையாய் உலகம் சுற்றும்
  வெயிலை விடைகேட்டேன்
பாடிக் கேட்டேன் பாரில் தோன்றும்
 பருவந் தனைக்கேட்டேன்
சோடிக் குயிலைக் கேட்டேன் சுற்றும்
  காற்றை விடைகேட்டேன்

நானாய் இன்றும் கண்டேன் நாளை
  நானும் என்னாவேன்
தேனாய் மொழியும்பேசித் திடமும்
   திகழும் மனங்கொண்டேன்
கூனாய் குறுகிக் கோலும்கொண்டு
  கிடந்தும் உழன்றேன்பின்
தானாய் எரியும்தீயில் வேகுந்
  தருணம் என்னாவேன்

நெஞ்சில் கொண்டேன் நினைவாம் ஆற்றல்
  நிர்க்கதி யாய்போமோ
அஞ்சா வீரம் அகந்தை தோல்வி
  அலையும் சிறு உள்ளம்
கொஞ்சல் கோபம் கேளாத் தன்மை
  கொண்டோர் பிடிவாதம்
பஞ்சம் பாடு பலவும்கண்டேன்
  பனியென் றழிவாமோ

வெள்ளை நிறமும் விடிவான் செம்மை 
  விளங்கும் ஒளிகண்டேன்
கொள்ளை எழிலார் குழலாள் மங்கை 
  குலவும் சுகம் கொண்டேன்
பிள்ளைமேனி பிறப்பும் கொண்டோர் 
  பிணைப்பும் இவையாவும்
தெள்ளத் தெளியும் வகைபோம் இடமும்
  தெரியாப் போமாமோ

எங்கும்மௌனம் இழைந்தோர் அமைதி
  எதுவும் நிசப்தம், வான்
தங்கும் கோளத் தரையும் மௌனத்
  தணலைச் சுழன்றோடும்
கங்குல் இடையே கனத்தோர் வெடியும்
  கரையும் ஒளிவெள்ளம்
மங்கும் வகையும் கண்டேன் எண்ணம்
  மயங்கும் விடைகாணேன்

மனங்கொள் நினைவும் மதியும் ஆற்றல்
 மகிழ்வும் கண்டோம் நாம்
கனங்கொள்  உணர்வும் கற்பனை கொண்டும்
  காலம்பல ஆண்டாய்
சினம்கொள் விடிவும் சீற்றம் என்றே
  சேர்த்தே சிறுவயதின்
நினைவும் கொண்டோம் நீங்கும்போதில்
  நெஞ்சம் என்செய்யும்

தேடியதும் நாடுவதும் (1ம் பகுதி)

உள்ளம் பிழிந்தினி சொல்லுங் கவிதைக்கு
உட் பொருள் தேடி நின்றேன் -  ஒரு
கொள்ளை எழில்மலர் கூடிப்பொ லிந்தபூங்
காவினுள்ளே நடந்தேன் -அங்கு
அள்ளும் மனதெழில். ஆனந்தபோதைகொண்
டாட மலர்கள் கண்டேன்- இனி
கள்ளினைத் தேக்கிய வெண்மலர்காள் ஒரு
கற்பனை தாருமென்றேன்

வெள்ளை மலரொன்று வேடிக்கை நோக்குடன்
விந்தை உணர்வு கொண்டு  -ஏது
தெள்ளத் தெளிவின்றி கூறுவதென் உந்தன்
தேவையும் என்னவென்றாள் - ஆகா
அள்ளக் குறைவற்ற பேரழகி நானும்
அன்னைத் தமிழ்க் கவிக்கோர் - நின்றன்
கள்ளின்சு வையொத்த உட்பொருளில் ஓரு
கற்பனை தேடுகிறேன்

நள்ளிரவில் மின்னும் தாரகை போலந்த
நன்னெழிற் பூவருகில் - மெல்லக்
கள்ளச் சிரிப்பென்றைக் காற்றில்விடுத் தயல்
காணும் சிவந்தமலர் - விரல்
கிள்ளிவிட்ட கன்னச் செம்மையுடன் கண்டு
கற்பனை யாமறியோம் -  இங்கு
உள்ள தெல்லா முண்மை தானறிவோம் அதில்
என்றும் மலர்ந்தோ மென்றாள்

எள்ளவும் துய ரேதுமற்ற அந்த
இன்மல ரண்டை விட்டு - கரம்
அள்ளிச் சிறுபிள்ளை குங்குமமும் கொட்டி
அப்பிய கன்னமென - தரும்
உள்ளமதில் அச்சம் ஊற்றெழவே கதிர்
ஓடியெழ முன்னதாய் -பெரு
வெள்ளமெனச் சிவந் தோடும் முகில் கண்டு
விண்ணை ரசித்து நின்றேன்

வெள்ளிக் கொலுசுகள்  துள்ளிக் குதிக்குமவ்
வேளை தனில்எழுமே - அந்த
அள்ளிச் சிதறிடும் ஆரவாரத்தொடு
ஆலமரக் கிளை யில் - சிறு
புள்ளின கூட்டமும் புத்துணர்வில் வானம்
போகுமவ் வேளையிலே -அயல்
தள்ளியோர் புள்ளிசை கானம்படித்துப் பின்
தம்மினம் சேரக்கண்டேன்


(குருவி பாடியது)

நெல்லிருக்கும் தேசம் தேடிப் போகிறோம் - இந்த
  நீல விண்ணிலே எழுந்தே ஏகுவோம்          
நல்முதிர்ந்த நெற்கதிர்கள் கண்டிடில் -அதை
 நாடியுண்டு வீடு வந்துசேருவோம்
இல்லையென்ற கற்பனைக்குள் மூழ்குவோம் - இன்னும்
  எல்லையற்று நாடுதாண்டி ஓடுவோம்
அல்ல லற்ற ஆனந்தமாம் வாழ்விலே - கண்டு
  அன்பு கொண்டும் ஒன்றுகூடிக் காண்கிறோம்

நல்லவர்தம் நாட்டில் நின்று பாடுவோம்- அந்த
 நாட்டிலெங்கும் பச்சைவளம் காண்கிறோம்
அல்லவரின் தேசம் கூடச் செல்கிறோம் - அங்கு
 அன்னமின்றி ஏங்கும் மக்கள் நோகிறோம்
சொல்லவல்ல தூயமனம் கொண்டவர் - எங்கும்
 தோல்விகொள்ளத் தீயவர்கள் வெல்வதும்
எல்லயற்ற கற்பனை இல் உண்மைதான் - கண்டு
 ஏங்கி விழி சோர்ந்து வீடு செல்லுவோம்
********

சின்னக்குருவியின் செந்தமிழ் பாட்டினில்
 சிந்தை பறிகொடுத்தேன் -அது
என்னவிதம் அந்தக் கற்பனை வான்வெளி
 காணவென் றாசை கொண்டேன்
மின்னும் வெளிதனில் யான் பறந்தால் வரும்
 மேனி சிலிர்ப்பினிலே -நல்ல
இன்கவிதை வரும் வானெழவா என்றேன்
 அன்னையா கட்டுமென்றாள்

(அடுத்ததில் முடியும்)

தேடியதும் நாடுவதும் ( 2ம் பகுதி)


***********( விடியலுக்கு சற்றுமுன்)

கள்ளச் சிரிப்பொடு கண் சிமிட்டுமந்த
   காரிருள் விண் மிளிர்மீன் - நல்ல
வெள்ளி மணிச்சரம் கட்டறவே மணி
  வீழ்ந்து சிதறியதாய் - அதை
அள்ளி யெடுத்திட ஆளில்லையோ எனும்
  அந்தர வான்வெளியில் -நிலா
துள்ளி நடமிட துன்பமிட்டே அவள்
   தேகம் மெலிந்ததுவோ

தள்ளிக் கிடந்தது தாமரை நீரென 
  தண்ணிலா வான்.குளத்தில்-  அதைக்
கொள்ள வைத்தாரெவர் கேடெழுந்தோ குறை
  கொண்டிருக்கக் கதிரும் - பெரு
வள்ளலைப் போலொளி வாரிஇறைத்ததில்
  வாடியதோ நிலவும் - அட
கொள்ளென அச்சம் கொடுத்ததுயார் ஏனோ
  கோலமதி மறைந்தாள்


நள்ளிரவில் நடந்தோடியதால் நடை
  நாளில் மிக அருகி - ஒரு
வெள்ளை முகில்தனும் மெல்லநடந்துமோர் 
  பிள்ளை வடிவெடுத்தான் - என்
உள்ளமதில் பிள்ளை ஆசைகொண்டே  கொள்ள
  ஈர்கரம் நீட்டுங் கணம் - அங்கே
குள்ள மனம்கொண்டோர் கானகத்து விலங்
  காக வடிவெடுக்க

செங்கமலம் விழி கண்டு மலர்ந்திடச்
  செவ்வழல் சூரியனோ - அந்த
பங்கயம் மீதயல் பட்டுமலர்களும்
  பட்டொளி வெம்மையிட - பூவின்
அங்க மிதழ் நோக அல்லி புறஞ்சொல்ல
  அம்புயம் கர்வமுடன் - போடி
எங்கும்புகழ் கொண்டோர் இப்படித்தான் உந்தன்
  எண்ணம் தவிராய் என்றாள்

எட்ட யிருந்தொளி ஆதவனோ அங்கே
  என்னைக் கண்டுசினந்தான் -  அட
வெட்ட வெளியிடை கற்பனை தேடிடும்
  வித்தகர் இங்கு வாரும் - கொள்ளத்
தெட்டத் தெளிவொடு சேதிசொல்வேன்
  அதைத் தேடியுமென்ன பயன் -இந்த
வட்டப் பெருங் கோளம் வாழு முலகினில்
  வன்மைகள் மெய்யுரைப்பீர்

கெட்டுகிடக்குது பூமியென்றேன் - அந்த
`  கீழ்நிலையென்ன சொல்வேன் -இனி
பட்டுத் தொலை என்றே ஆண்டவனும் விட்ட
  பண்பினை நானுரைத்தேன் - ஒரு
கட்டுப்பாடு இன்றிக் காணுது வன்மைகள்
  காரணம் ஏதறியேன் -கதிர்
சுட்டுப் பொசுக்குவேன் தீயெடுத்தே எங்கே 
  சொல் லெனத்தான் சினந்தான்

தெட்டத் தெளிவொரு சேதிகொள் பூமியில்
  தேசமனைத்து மன்பை - இன்று
விட்டுக் கிடக்குது வாழ்க்கையென்ப தங்கு
  வீதியில் பெண்ணினத்தை - வெகு
மட்டமெனக் கொண்டு மங்கை இழிந்தவள்
  மாதெம் அடிமையென்றே - பலர்
கொட்ட மடித்துக் குதறுகிறார் அந்தக்
 . கீழ்மையை என்னுரைப்பேன்

சட்டமுண்டாம் என்று சொல்லி அவர் செய்யும்
  சஞ்சலக் கேடுகளை - தானும்
தொட்டெழுதிக் கவி செய்துவிட்டால் இந்த
  சூழ்நிலை மாற்றமில்லை - இது
கட்டுடைத்து கரையின்றி பெருகிடும்
 காட்டாற்று வெள்ளமது - இதில்
இட்டவிதி யென்று ஒன்றுமில்லை  அங்கு
  ஏதுசெய்வ தறியேன்

தட்டிக் கொடுத்தலும் நல்லவரைத் தர்ம
 தேவனரு கழைத்து - அவர்
நட்டுவளர் மரம்போல வளமொடு   
  நாட்டில் நிலைக்க விட்டு -நீயும்
தொட்டு மைகொண்டே கவியமைப்பாய் அந்தத்
 தூய கடமை விட்டால் - இடை
சுட்டது சட்டியென் றுன்கரமும்விட்ட
 சேதியென் றாகுமன்றோ

நெட்டிமுறித்துக் கை நீளச் சொடுக்கிப்பின்
  நேர்முகங் கொண்டவனைக் - கண்டு
தட்டிக் கேட்க எங்கே தர்மமுண்டு நீதி  
  தூங்குது வேடமிட்டு - அதைச்
சுட்டுத் துயில்கலைத் திட்டபணி கொள்ளச்
  செய்வதுன் வேலையென்றேன் - இதை
மட்டும் முடிவதென் றெந்த வழிதனும்
  என்னிடமில்லை யென்றேன்

கற்பனையைத் தேடிநான் பறந்தேன் அந்தக்
  காற்று வெளியிடையே - அந்த
அற்புத வான்ஒளி சொல்வதையும் மன
  ஆழத்திலே எடுத்தேன் -மண்ணில்
நிற்பதுவும் நிலை கொண்டதுவும்
  நிலையற்றுத்  தவித்திருக்க - எந்தன்
சொற்பதங்கள் தனைக் கற்பனையாம் வண்ணத்
  தூரிகை கொண்டமைத்தேன்

காற்றில் வரும் கனவுப்பெண் (சின்னத்திரை)

நேற்று நடந்தாள் இன்று நடந்தாள்
நாளையும் நடைகொள்வாள்
காற்றினில் வீழும் மென்னிலைபோலும்
காலத்தி லசைகின்றாள்
ஊற்றிடும் அருவி போல்மொழி பகர்வாள்
ஒளிவிழி குளமாவாள்
ஈற்றினில் போகும் இடமென்னஅறியேன்
இதயத்தின் துடிப்பாவாள்

ஆற்றென நீர்விழி பொழிகின்றாள் அவள்
அழுகையின் மெருகேற்றி
கூற்றினில் வன்மையும் கொள்ளுகிறாள் இக்
குணவதி நிலைமாறி
தோற்றமும் அன்பெனும் பண்புடையாள்  இங்கு
துயரமே கதியாகி
ஆற்றலும் தீரமும் கொண்டவளோ அதை
அழிவுக்கு துணையாக்கி

சேற்றிலும் வளரும் தாமாரையாம் இவள்
சிறுகுளம் சேறாக்கி
மாற்றமென்றே மனை ஆளுபவள் பெரும்
மாயைகொள் கதைபேசி
வேற்றுமனம் வினையாக்கலென பல
விந்தைகொள் பெண்ணாகி
ஏற்றமும் தாழ்வு மிழைத்தவளாம் அயல்
இன்குடி கெடுக்கின்றாள்

சீற்றமும் கொள்வாள் சினந்தெழுவாள் இவள்
செய்வினை கொடிதாகும்
கூற்றுவன் வேலை கையெடுப்பாள் நிதம்
கொடுமையில் மனையாளும்
பேற்றுடையாள் பெரும் வாக்குடையாள் ஏன்
பிணியொடு நினைவாகி
தோற்றமும் கொள்வாள் ஒளிக்காட்சித் தொலைத்
தொடர்களின் இளவரசி

******************

Tuesday, 22 October 2013

சக்திதாயே ! (அருள்வேண்டி)

எண்ணுக்குள் கூட்டல்என்றும்
. எழுத்துக்குச் சேர்ந்தேசொல்லும்
. இயல்பென்றும் ஆக்கும் தெய்வமே
கண்ணுக்குள் ஒளியின் ரூபம்
. கருத்துக்கு மொழியின் ஆக்கம்,
. காலத்தின் போக்கென் றாக்கியும்
பண்ணுக்கென் றிசையும் ராகம்
. பருவத்தில் பெய்யும் மேகம்
 பரவசங் கொண்டோர் மேனியும்
வண்ணத்தில் எண்ணம்கொண்டே
. வாழவும் செய்தே தீமை
. வழிநடந் தேகச் செய்ததேன்

விண்ணுக்குள் எரியும் சக்தி
. வியப்பிற்கு வழியும்கோலி
. வெறுமைக்குள் பொருளென் றானவள்
வண்ணத்து மலர்கள்பூத்தும்
. வளர் குறை நிலவும் ஓடி
. வருடுங்காற் றசையும் மென்மையும்
திண்மைகொள் வகையில் வாழ்வும்
. தெளிந்திடும் தன்மை தீரம்
. தினம் புதுத் தென்பும் தந்தபின்
மண்ணுக்கென் றாசைப்பட்டு
. மடமைகொண் டுயிரைவாங்கும்
. மாந்தர்செய் தேனோ விட்டனை

கண்ணுக்குள் கனவென் றின்பம்
. கற்பனை மகிழ்வென் றுள்ளம்
. காணென்றும் செய்தாய் பின்னரோ
உண்மைசொல்  அழிவென்றாக
. உறவுக்குள் வலிமை சோர
. உரிமைக்குப் பஞ்சம் வைத்ததேன்
பெண்ணுக்குள் கருவென்றாகிப்
. பின்னர் வந்தழுதே வீழும்
. பிணிகொண்ட வாழ்வை ஈந்தனை
அண்மைக்குத் துணையைக் கொண்டு
. அன்புக்குள் மடமைகண்டு
. அழியென்று விதியும் செய்ததேன்

உண்ணென்றே உலகில்பயிரும்
. உயிரென்று மூச்சில் காற்றும்
. உள்ளத்தில் நெகிழென் றுணர்வாக்கி
புண்ணுக்குள் தீயை வைக்கும்
. பெருந் துயர்கொண்டே யுழலும்
. பேரழிவொன்றே உடமைகொள்
அண்மையென் றாக்கி துன்பம்
. அதுகொண்டும் வாழும்போதே
. அறிவற்ற மூடர் அயல்செய்தே
எண்ணத்தில் தீதே கொள்ள
. எட்டாத வெளியில் நின்றே
. ஏன்செய்தாய் எங்கள் அன்னையே

வெண்மைக்கென் றுள்ளம்செய்து
. விருப்புக்குள் நீதி கண்டு
. வியனுறு தமிழை மொழியாக்கி
தண்மைகொள் மனமும்தந்து
. தரணிக்குள் இனமென்றாக்கி
. தவித்தழி அந்தம்கொள்ளென்றே
உண்மைவாய் நஞ்சும் ஊட்டி
. உயர்வென்னும் வேரைவெட்டி
. உலகில் யாம் நிலையாத் தன்மையும்
விண்ணுக்குள் நின்றே செய்தாய்,
. விடிவுக்கென் றொளியைத் தந்தாய்
. வீணுக்கென் றெம்மைச் செய்ததேன்

. இளைய சந்ததியே

மனமெங்கும் குதித்தாட 
...மகிழ்வோடு நிதம்காணும்
...மணிவண்ண ரூபங்களே - உங்கள்
இனமிங்கே உயிரோடு   
...இயல்பான வகைவாழ
...இகம் மீது உதவுங்களே - எங்கள்
சனம் அங்கம் தனையீந்து 
...தலையின்றி உடலின்றி
...சருகாகும் குறை வாழ்விலே - நாமு
கனமோடு உயர்வான 
...சமுதாயம் உருவாகக்
...கனவொன்றை நிசமாக்குங்கள்

பொழிலாடும் மலரோடு 
...புதிதாக வரும்காற்று
...பொழுதோட உறவாடிடும் - அதில்
எழிலோடு மயிலாட 
...இசைபாடும் இன்பங்கள்
...எமைக்கூடி மகிழ்வாக்கவும் - வெறும்
பழியோடு காண்போரின் 
...பரிதாப நிலைநீங்கி
...பாரெங்கும்  வளம் கொள்ளவும் - எமை
விழிநோக்கி உயர்வென்ற 
...வகையிலோ  ரிடம்தந்து
...விடு என்று  வாழ்வீந்தனை

விழுந்தோமின் றெழுவேமா 
...விதியென்று கொள்கின்ற
...வெகுவான துயர் மாற்றவும்
அழுகின்ற மனம் துள்ளி 
...அகமோடு புறம்யாவும்
...ஆனந்தம் குதித்தாடவும்
பொழுதன்று தமிழெங்கும் 
...புகழோடு பெருமையிற்
...பொலிந்தாடும் வளம் கொள்ளவும்
முழுதான தொருநல்ல 
...வழிகண்டு வாழ்வோரின்
...மூச்சினை மீட்டிடுங்கள்

தமிழ் பேசிப் பிறந்தோமே 
...தமிழ் கூறி வளர்ந்தோமே
...தமிழ் கற்று உயர்வாகினோம் -இன்னும்
தமிழென்ப அழிவில்லை 
...தரம்கொண்ட மொழியென்பர் 
...தன்னம்பிக் கைகொள்ளவும் -என்றும்
இமைமூடி இதயத்தில் 
...எமையாளும் பெருந்தீயின்
...எழும் சக்திதனை வேண்டிடு - இன்றே
அமையுமுன் பெருவாழ்வில் 
...ஆற்றலும் உயர்சக்தி
...அதை கொண்டுன் மண் மீட்டுக்கொள் 

ஒன்றெனக்கூடு உரிமையை வெல்லு

மலர்களிலே எத்தனைதான் மணமிருந்தாலும்
மாற்றமில்லை மலர்வதென்ற வகையி லொன்றாகும்
புலர்வதிலே எத்தனைதான் பொழுதுவந்தாலும்
பூமியிலே காலையின் புத் துணர்வில் ஒன்றாகும்
உலர் விழிகள்  வழிந்தழுது துன்பங் கொண்டாலும்
உலகிலெங்கும் இரங்குபவர் இல்லையென்றாகும்
சிலரதிலே துயர்தரவே தீமைசெய்தாலும்
செல்வழியில் நேர்மைகொள்ளு, தீரம் உண்டாகும்

இசைதனிலே பலவகையில் ராகமுண்டாகும்
இதயமதில் உணர்வினிமை என்றுமொன்றாகும்
தசையினுள்ளே தமிழ்கலந்து குருதி சென்றாளும்
தருணமதில் வீரமொன்றே விளைவெனக் காணும்
அசைவதிலே விதியுமொரு பக்கம் நின்றாலும்
அதை வெல்லவே மனது ஒன்றா யாகிடவேண்டும்
வசைசொல்லியே வரும்சிலரால் வாழ்வு துண்டாகும்
வழிமறித்து மதியுரைத்து வென்றிடவேண்டும்

திசைகள்தொறும் வழிகள்பல தனியேசென் றாலும்
செல்லும் வழி முடிவினிலே ஒன்றிட வேண்டும்
விசையுடனே விரைந்து செலும் வில்லம்பு போலும்
விளைவினிலே விடுதலையாம் இலக்கது வேண்டும்
பிசையுமுளத் துயர்களைந்து பெருமை கொண்டாடும்
பிறவிதனை இழிமை செய்வர் புறமுதுகோடும்
கசையடிகள் காணுமுடல் கனிவென மாறும்
காலமெனும் ஒன்றையினிக்  காணுதல் வேண்டும்

நிலைமை வரும் மகிழ்வுடனே நிலமதை மீட்கும்
நேரமதில் நெஞ்சலையில் நீந்திடும் வெள்ளம்
கலை பலதென் றாயிருந்தும் காண்பவர் உள்ளம் 
காட்சிதனைக் காணுகையில் களிப்பதே மிஞ்சும்
குலைகளிலே கனிகள் பல கூடுதல்போலே
குறியைஎண்ணி ஒற்றுமையாய் குழுமிடல் வேண்டும்
இலை குணங்கள் ஒன்றெனவும் இருந்திடும்போதும்
ஏற்றமுடன் தமிழ்நினைந்தே உழை -- நிலம்மீளும்


******************
சென்றாளும் - சென்று ஆளும் உடலை

நடு ஆற்றில் கைவிடுவோமா?

கலையோடு அமுத தமிழ் கற்குமிளஞ் சிறுவர்காள்
கதையொன்று சொல்வேனாம்  கேளீர்
அலைந்தோடி வாழ்கிறோம்ஆழிதிரை போலிங்கு
அமைதிக்கு  ஏன் வாழ்வில் பஞ்சம்
தலைபோகும் நிலையாகத்  தீதெமைக் கொள்ளவே
தாங்கா நிலம் விட்டலைந்தோம்
மலைபோலத் துன்பங்கள் எதிர்கொண்டு நிற்கின்றோம்
மலைத்துமே  மலைபோலும் நின்றோம்

அழகுசெந் தாமரைகள் ஆடிடும் குளநீரில் 
ஆதவன் மின்னிடும் வண்ணம்
பழகுசெந் தமிழ்கொண்ட பைந்தமிழ்ப் பாவொன்றைப்
பாடுங் குரல், இளங்குயிலின் கீதம்
உழவு செய் துண்டவனோ உல்லாசங் கொண்டயலில்;
ஊய்..ஊய் என்றோட்டி உழுமழகும்
குழவியதன் கூட்டிலே தேன்சொரிந்து கீழுற்ற
குடித்துமே கூத்தாடும் மந்தி

எழும் அழகு ஈழத்தி லிருந்தபோ தெம்வாழ்வும்
இனித்திட இனித்திடப் பாகாம்!
வளவுவயல் தோட்டமுன் வாய்க்கால் வரம்புடன்  
வற்றிய குளத்திலோர் தவளை
முழமெழுந்து பாய்கின்ற முயலோட பாட்டாக
முன்வீட்டில் குழந்தையழும் சத்தம்
முழவொலிக்க வீதிவரும்குமரன்திருக் கைவேலும்
முந்நான்கு கண்பார்த்தே அருளும்

நிலவினொளி வீழ்முற்றம் நிர்மலத்து வானங்கீழ் 
நீட்டியகை சோற்றுருண்டைஅம்மா
கலகலத்துப் பேசுமொலி கனிவான உள்ளமதில்
கனவெழுந்த தூக்கமும் கண்டோம்
மலமலென விடிபொழுதும்  மலர்களதன் வாசமெழ 
மனம்பூத்த நடை, பள்ளிசெல்லும்
பலசிறுவ ரென்றுசிறு பயமற்ற சீர்வாழ்வும்
பளிங்கென்ற நீரோடைகாணும்

இருந்தநிலை ஒன்றுண்டு இன்பமுடன் வாழ்ந்தின்று
எழுந்தபகை அழிந்த நிலம் என்று
உருவழிய உறவோட ஊர்கலைந்து வந்தோமெம் 
இனியவர்கள் உங்களையும் என்று
கரும்பின்சுவை வாழ்வதனிற் கலந்துவிட வைப்போம் நாம் 
கைதவறி நதிவீழ்ந்த மலராய்
வருமொளியை எதிர்பார்த்து அலைசுழலில் புரளும்விதி
விடியலினைக் காணும்நாள் என்று??

************

பூவாக மலரச்செய்

நீயே சக்தி நிறைவா யெங்கும்
நினைவில் அன்பைத்தா
காயாய் அன்றிக் கனியா யினிமைக்
கவிதை வளமும்தா
தாயே உன்னைத் தினமும் வேண்டித்
தவித்தேன் துவளாமல்
வாயால் இன்பத் கவிதை சொல்லும்
வளமும் வரமும் தா

சேயாய் என்னைத் தினமும் காலை
தென்றல் போல்நீவி
பாயாய் படரும் பச்சைப் புல்மேல்
பனியின் குளிர்கொண்டு
தீயாய் சுடரோன் செம்மை, வானத்
திங்கள் செய் குளுமை
தா யார் எந்தன் தமிழின்கவிதை
தன்னைக் கண்கொண்டால்

தோயாதுன்பம் துய்த்தலின்றித்
திகழும் கவியின்பம்
தேயா தினிமை சேர்ந்தோர் பாகாய்
தித்திப் பெனவாக்காய்
ஓயா தூற்றும் அருவிக் சாரல்
அதனில் கீழ்நின்றே
தூயோர் இன்பம்கொள்ளல் போலும்
தொன்மை வளமும் தா

சாயா விதியும் சரியா மனமும்
சாகாதுடல் கொண்டே
நீயாய் எந்தன் நினைவில் வந்தே
நீந்தும் அலைதானும்
ஒயா துள்ளும் அழகும் கொண்டே
உவகைப் பெருக்கோடு
காயாதென்னைக் காப்பாய், இன்பக் 
கவிதை  வளமும் தா 

கூவாக் குயிலும் குதியா நதியும் 
கொட்டா மழைமேகம்
தாவாக் குரங்கு தழுவாப் பிள்ளை
தனிமைச் சுகமில்லை
ஏவாய் என்னை எட்டும்வரையும்
இன்பத் சுனை யாக்கி
நீவா, கருணை நேரும் வாழ்வில்
நிதமும் கவிதை தா

***************

தாயே அன்பு கொள்வாய்!

இயக்காத காலும் எழுதாத கையும்
இருந்தென்ன போயென்ன தாயே
தயங்காத நெஞ்சும் தவிக்கின்ற உள்ளம்
தந்தென்ன நொந்தேனே நானே
பயந்தாடும் போக்கில் பகலென்ன அந்தி
பனிபொங்கும் இரவென்ன தாயே
சுயமின்றி ஆடும் சுந்தரன் உள்ளம்
சுகம்தந்து அருள் கொள்வை யாமே!

வயதுண்ட தேகம் வளைந்தாட வென்னில்
வடிவுண்டோ  இளநங்கை போலே
நயன்தாரும் இன்பம் நல்குமோ உந்தன்
நினைவெங்கு எனைகண்டு தாயே
வியந்தோடும் வண்ணம் வினைவந்து தீர்ப்பாய்
விரைந்துவா உயிர் போகும் முன்னே
துயர்கொண்டு பாரில் துடிக்மென் நெஞ்சை
துணைகொண்டு வரம்நல்கு வாயே

செயம் கொண்டவீரன் செல்கின்ற பாங்கில்
சிரம்தூக்கி நடைகொண்ட வாறுன்
மயம்சக்தி என்றே  மனம் மகிழ்ந் தாடி
மலர்கொண்டு துதிசெய்வன் தாயே
கயமைக்கு தேடி கருவென்றே ஆக்கி
கசந்திடும் வாழ்வென்ப வேண்டாம்
புயலுக்குள் பூவாய் புரிகின்ற அன்பை
புறந் தள்ளு பகையென்ப தாமோ

முயலுக்கு தாவும் கயலுக்கு நீந்தும்
கலைசொல்லி வாழென்று விட்டாய்
வயலுக்கு நீரும் வானுக்கு ஒளியும்
வரச்செய்து வாழ்வென்று தந்தாய்
செயலுக்கு காலும் சிறப்பென்று கையும்
சிரிப்பென்று முகம் மலர்வாக்கி
அயலுக்கு நல்லோர் ஆயிரம்செய்தும்
அடியேனை ஏன்  வதைக்கின்றாய்?

******************************
*****

சக்தியே என் அன்னையே

 காலகால மாகத்துன்பம் காண்பதற்கென்றா யிரண்டு
கண்கள் தம்மை நீகொடுத்தனை
கோலமோ இழிந்துகெட்டு கோணலாக ஆடை போர்க்கும்
கேவலம் இத்தேக மீந்தனை
ஆலமே உள் எண்ணமாக ஆடியும்  துடிக்கு மென்மை
அற்புதப் பொறிக்குச் சக்தியே
நீலமே கத்தின் இருப்பு நிர்மலம் என்றான விட்டு
நெஞ்சங் கொல்ல வன்மை வைத்ததேன்?

மேளதாள வாத்தியங்கள் மேடைமீது நாட்டியங்கள்
மேனி கூடவோர் பெரும்விழா
ஆளவந்தவன் அழித்தும் ஆனந்திக்கும் போது இங்கே
ஆக்குவர் அதற்கும் பேரவா
மாளவும் எரிக்கும் நீயே மற்றவர் எரிக்கும் வண்ணம்
மாசுடர் அவ்வானில் வைத்தனை
கேளம்மா எத்திக்கிருந்து கோமகன் எரித்துமூடக்
கேள்வியே இல்லாதுவிட்ட தென்?

ஆளையாள் கலந்துசெய்யும் ஆளணிப் பெருக்கமூடே
அன்பிலார்க் கிங்கேது செய்பணி
வாளையும்தன் குட்டிகாண வாழ்வினை இழக்கு மாமெம்
வாழ்விலும் இதற்கென் றேன்விதி
கேளம் மாமலை யிருந்து கீழ்நிலம்பரந்த மண்ணில்
கோடிகோடி யாய்ப் பரந்தனர்
வாழவாயிவ் வையம்மீது வைத்தனை இல்வீழ்த் தவென்று
வஞ்சகர்க் குத்தீனி தந்தனை

சூழுமா அலைநிறைந்த சோதியும் தினம் உதிக்கும்
சூட்சுமங்கள் செய்த பாரிலே
தாளுமா என்வாழ்வு மின்பம் தாங்குமா இத்தோளும் பாரம்
தூங்குமா என்மேனி என்பதாய்
மீளுமா அப்போன வாழ்வு மீண்டுமே என்காட்சியாகி
மேனியும் சிலிர்த்து வாழ்வேனா
பாளமாய் உடைந்துகெட்டுப் போனதாய் வகுத்ததேனோ
பாரமாவென்  தூறல் பொய்த்ததேன்

தோளும்மார் பிலே தவழ்ந்து தூயநல் மொழிக்கென்றீந்து
தீரமும் கொள்ளென்று ஆக்கினாய்
தேளுமா பெரும் கொடுக்கன் தூங்குமாம் சுருண்டபாம்பு
தேவையா எம்பாதை வைத்தனை
மூளுமா உன்தீயும் எம்மை  மோசமாய் அழித்தவர்க்கு
மூடராம், இல்லாத மூர்க்கரின்
வாழுமா ஜனங்கள் வாழ்வில் வந்துமே இடர் அளிப்பர்
வானிருந்தும் காத்துக் கொள்வையோ

கற்றல் வேண்டும்!


 
கண்ணிரண்டு காட்சிதனைக் காணக்கொண்டும்
கலையுடனே கல்விதனைக் கற்கும்பேறில்
எண்ணிரண்டு விழிமேலாய் அறியாமைக்குள்
இருள்போக்கிப் பொருள்காண எடுத்தோர்களே
கண்ணிரண்டு நல்லொளியில் காட்சிகண்டும்
கருவிழியும் இமைமூடக் கறுப்பே தோன்றும்
மண்ணிலொளி வேண்டுமெனில் மங்காதென்றோர்
மதிகாணும் சுடரோங்கும் விடியல் வேண்டும்

எண்ணிரண்டு அடியெடுத்து முன்னேவைப்பீர்
ஏடெழுதும் கையாலே எம்மை நாசம்
பண்ணுபவர் கொட்டத்தை அடக்கும்வண்ணம்
பாரினிலே இன்தமிழைப் பரவல் வேண்டும்
தண்ணிலவின் ஒளிபாயத் தாயின்தேசம்
தன்னிலொரு செங்கீத மொலிக்க வேண்டும்
விண்ணிலுறை சக்திதனை வேண்டியின்று
விடிவுக்காய் கண்ணயரா உழைக்கவேண்டும்

பொன்மணிக ளெம்நாட்டிற் பொலிதல்வேண்டும்
பொல்லாதோர் விதிமாற்றிப் புதிதா யாளும்
நன்மதியும் நீளோங்க நாடும் வேண்டும்
நாற்திசையும் எல்லைகளைக் காத்தல் வேண்டும்
பன்மொழிக ளூடுதமிழ் பெருக்க வேண்டும்
பாரில் தலை சிறந்ததாய்ப் பண்பும் வேண்டும்
மன்னனென எம்தமிழர் கையில் செங்கோல்
மறமெடுத்து வழிநடத்தும் மாண்பும்வேண்டும்

அன்னைமடி மீதுதலை வைத்தேகாணும்
அன்புதனும் வேண்டும்நல் லமுதம் உண்டே
பொன்னிலவும் ஒடிவரப் போர்க்கும் மேகம்
புன்சிரிப்பி னோடுகண் டுறங்கல்வேண்டும்
நின் மனதில் அச்சம்விட் டுயரும் எண்ணம்
நேர்மையுடன்  தமிழ்காக்கும் நினைவுஞ்சேர
சின்னவனே சிந்தையிலே ஒன்றாய்க் கூடி
சிறப்போடு  செயலாற்றும் செழுமை வேண்டும்
**********************

Monday, 21 October 2013

சக்தியின் சக்தி

     
தொம்தொம்தன தொம்தொம்தன என்றேபெரு விண்மீதினில்
நின்றே பெரு நடமே புரிவாள்
இம்மேதினிகண் கோடியில் பல்கோடியென் றெம்மேனியை
இங்கே உரு செய்தே தருவாள்
செம்மாலையில் அம்மேலையில் சென்றேவிழும் பொன்ஆதவன்
செய்காரியம் கொண்டான் எவரால்?
அம்மாபெரும் செந்தீயெழு பந்தானது விண்மீதினில்
அங்கோடிடச் செய்வாள் சக்தி!

வண்டானது செந்தேனையும் உண்டாகிட வைத்தாளவள்
அன்பானது கொண்டே உலகில்
கண்டானதும் ஓர்மாதினில் கண்பார்வையில் இன்காதலை
உண்டாகிடச் செய்வா ளிவளே
பெண்ணானவள் வன்பேசினும் முந்தானையில் பின்மோகமும்
கொண்டே நினைவொன்றாய் விடவே
மண்ஆண்டிடும் பொன்வேந்தனும் மைசேர்விழி பின்னேயுலைந்
தன்னோர்மதி கெட்டே யலைவான்
துண்டாடிடும் கூர்வாளதும் சிங்காரியின் கண்வீச்சினில்
எங்காகினும் வென்றாய் உளதோ
பெண்ணானவள் மென்மேனியும் சொல்லானதில் வல்லாண்மையும்
இல்லாயினும் வல்லாளெ னவாம்
கண்டோம் பல சாம்ராஜியம் கண்சாடையில் செவ்வாய்மொழி
கொண்டோர்அசை வொன்றில் அழிய
மன்னோர்களும் பொன்வார்முடி மண்மேல்விழத் தூள்ஆகிடச்
செய்வாளவள் சக்தி பெரிதே!

நெஞ்சில் அவள் எண்ணமெடு நித்தமவள் அன்பைநினை
நம் வாழ்வினில் சக்தி தருவாள்
பஞ்சாகிடும் துன்பங்களும் பட்டானதும் தொட்டானதும்
பற்றும் துயர் விட்டேவிலகும்
வெஞ்சீற்றமும் கொண்டேயவள் வெல்வாள்பகை கொல்வாள்,நினை
வேண்டும் வரம் ஈவாள் சுகமே
அஞ்சாமனம் கொண்டேநிதம் ஆற்றல்தரும் ஊற்றாகிடும்
அன்பாம்பெருவாழ்வும் உயரும்

Tuesday, 24 September 2013

வாழ்வின் முடிவுகள்


உயிராய் தீயின் உரிமைப் பொருளாய்
  உலகைக் காண வந்தோம்
பயிரும் மரமும் படருங் கொடியும்
  பார்த்தோம் நாமும் வளர்ந்தோம்
வெயிலும் மழையும்கண்டோம்  வாழ்வில்
  விருப்பங் கொண்டேநின்றோம்
மயிலின் நடமும் மானும் கண்டோம்
  மனதில் களிப்பே கொண்டோம்

கயிறும் எறியக் கதியும் முடியும்
  கவலை அற்றுச் சிரித்தோம்
பயிலும் காதல் கணைகள் வீசப்
  பலியென்றாகித் தொலைந்தோம்
வயிரம் அற்றே வழமை வாழ்வில்
  வழியென் றிருளில் நடந்தோம்
துயிலைக் கண்டோம் சுகமும் கொண்டோம்
  துடித்தோம் துயரில் உழன்றோம்

ஒயிலில் வடிவாள் உள்ளம்கண்டோன்
  உணர்வைப் பகிர்ந்தே உவன்றோம்
புயலைக் கண்டும் பொறுமை கொண்டோம்
  புதைந்தோம் ஓடித்தொலைந்தோம்
மயங்கிக் கிடந்தோம் மாயைதன்னில்
  மூழ்கித் தவித்தோம் எழுந்தும்
வியந்தோம் உறவும் விழிகள் மூட
  விழித்தோம் விரைவில் விட்டோம்

கயமை செய்வோர் களத்தில் கண்டார்
  காயம் மண்ணுல் கொண்டார்
பயத்தை விலையும்,கேட்டார் தம்மின்
  பாசம் கண்டே வியந்தோம்
தயக்கமின்றித்  தர்மம் கொல்லத்
  தனியே கிடந்தே அழுதோம்
தியங்கிக் கிடந்தோம் திரிந்தோம் வாழ்வின்
  திசைகள் முடிவைப் புரியோம்

அழிந்தோம் உலகில் இழிந்தோம்
  காலின் உதைகள் பட்டே நொந்தோம்
மொழிந்தோர் தமிழின் மூச்சென் றுணர்ந்தோம்
  மூச்சும் இழந்தோம் மெலிந்தோம்
அளந்தே நிலமும்  ஆண்டோர்குலமாம்
  ஆற்றல் தன்னை அழிக்க
குளமென்றோடும் கண்ணீர் நதியில்
   குளித்தும் ஏனோ குனிந்தோம்

அலையும் கடலும்  அணைக்கும்
  காற்றும் அதிவேகத்தில் உலகும்
தலையும் சுற்றி தளரா தோடும் 
  தருணம் எம்மைப் பற்றி
நிலையாய் கொண்ட நிகழ்வைக் கொண்டே
  நிதமும் நடந்தோம் நின்றோம்
இலையென் றொருநாள் இயக்கம் நின்றால்
  எங்கே போவோம் அறியோம்

அவளே தந்தாள் அவளே  கொண்டாள் 
  அதுதான் வரையும் வாழ்வில்
தவளும் வகையும் தாங்கக் கால்கள்
  தரையில் திரியும் நடையும்
பவளம் போலும் மேனிமிளிர்வும்
  பயிலுங் காதல் உணர்வும்
கவளஞ்சோறும் காணேல் பசியில்
  காயம் இழியும் நிலையும்

கலையும் அறிவும் கல்விச் சுகமும்
  கானம் பாடும்திறனும்
சிலைபோற் செல்வக் குழந்தை வரமும்
  சிகையில் வெள்ளை நிறமும்
அலையாய் திரையும் அழகுத்தோலும்
  அதன்பின்னாலே மரணம்,
விலையில் வாழ்வின் சூன்யம் ஆக்கும்
  விதமும் ஏனோ புரியேன்??

சிதம்பர சக்கரம்


              சிதம்பர சக்கரம்


சக்கரத்தைப் பேய்கள் நின்று சுற்றி சுற்றிப் பார்த்துமென்ன    
சக்தி நீதி தெய்வசீலம் கண்டிடுமாமோ
பக்தி கொள்ளும் கோவிலென்று பார்க்குமோ விலங்குவந்து
பாதிபூசை யில்நுழைந்து விட்டதன்பாடோ
விக்கிரத்தில் தெய்வம்கண்டு வீதிநான்கும் சுற்றிவந்தும்
வேண்டுமெங்கள் வாழ்வுகாணும் வில்லங்கம் ஏனோ
சக்திதெய்வம் போற்றிவாழ்வு சார்ந்து நின்று காக்குமென்று
சற்று கண்கள் தூங்கிவிட்டோம் சஞ்சலம் ஏனோ

உக்கிரமென் றுள்ளேவந்து ஓடு சுவர் இல்லமெங்கும்
ஊழிவினைக் காற்றுடைத்து வீழ்த்திடலாமோ
அக்கா  அன்னை தம்பி தங்கை  ஆசையோடு கூடியாடி
ஆண்டுகளாய்க் கொண்ட வாழ்வு போய்விடலேனோ
விக்கினத்தைச் செய்யவென்று வேண்டிதீயர் வந்துநிற்க
விட்டிருந்து வேடிக்கையும் பார்ப்பது முண்டோ
சிக்கலுக்குத் தீர்வுஎன்ன, சுற்றுடை வாள் கொண்டமாக்கள்
சத்திரத்தில் விட்டுப் பிச்சை யோடுதந்தாரோ

எக்கரத்தை தூக்குவதாம் இரந்திடவா எழுந்திடவா
ஏழரைமீ தேறிநின்றும் ஆடுது விதியே
விக்கிரமா  தித்தனவர் வீரமார்பில் தொங்கிவினா
வேடிக்கைவே தாளம்கேட்க விடையுளதாமோ
மக்கனுக்கு  காதினிலே மந்திரத்தை ஓதியென்ன,
மறுபடியும் மறுபடியும் மறந்திடுவானே
சக்கைபோடுபோட்டவரைச் சந்தியிலே வைத்தழித்துச்
சாக்கில் கட்டி வீசுகிறார் சாய்ந்திடலாமோ

அக்கிரமம் காணுதென்றே ஆறுகுளம் தாண்டியெங்கும்
ஆனதேசம் காடுமலை கத்திவந்தோமே
விக்கலுக்கு நீர்குடிக்க  வேண்டியவர்க் கீதலன்றி
விட்டுமவர் துடிதுடிக்கப் பார்த்திடல் ஏனோ
அக்கம்பக்கம் யாரிருந்தும் ஆற்றுஞ் செயல் அலைகடலை
அத்துமீறீ வந்திடுமென் றானது கனவே
சுக்கு மிளகு திப்பிலியில் சுட்ட காய்சல்போக்கிடலாம்
சொட்டி இரத்தம் கீழ்வழியும் வேறிதுவன்றோ

எத்தனை நாள் காத்திருந்து ஏடெழிதிப் பாட்டிசைத்து
என்னசுகம் கெட்டவர்க்கு சுற்றிடுமுலகே
அத்தனைக்கும் பக்கதாளம் அங்கிருந்து போடுதய்யா
ஆடுபலி கொள்ள முன்னர் ஆக்கிடுமிசையோ
சொத்து மண்ணை விட்டபின்பு சொர்க்கமெங்கு காணவென்று
சுற்றமுடன் சேர்ந்து மொன்றாய் சென்றிடலாமோ
சத்தமின்றி ஒன்றிணைந்து  சத்தியத்தின் சக்தியோடு
சட்டமிட்டு நம்பலத்தை காத்திடுவோமோ 

---------------------

Sunday, 15 September 2013

இன்னல் முடிவதெப்போ?

நீரோடிப் பூத்த விழி நெஞ்சோடு கொண்டதுயர்
நீங்காது காண்பதென்ன நித்தியமாமோ
ஊரோடி நிலம் பெயர்ந்தும் உறவோடு வாழ்பவரை
உலகோடி வென்றநிலை உண்மைகள் யாதோ
பாரோடி வானில் வரும் பட்டெரியும் தீயின்மழை
போடும்குறி வீழஉயிர் துடிதுடித்தாலும்                   
சேர்ந்தோடும் உலகின்விதி சென்றோடி உதவியதால்
சிரசோடு கொய்ததிலும் சேர்ந்தவராமோ 
        
பேரோடு பிறந்தகுலம் பெருமானம் கொண்டஇனம்
போராடிச் சாயவென விதிகொள்ள லாமோ
யாரோடு பழிசுமந்தோம் யார்வாழ்விற் குடிகெடுத்தோம்
ஊரோடு தீயைவைத்தும் எரித்ததும் ஏனோ?
தேரோடும் வீதியெங்கும் தமிழோடிக் கலந்தநிலை
தடைபோட்டும் ஒதுக்கிவைத்துத் தலைகொள்ளலாமோ
நேரோடி வளர்ந்ததெல்லாம் நிழலோடி மறைத்துவிட
நெஞ்சோடிப் பரந்தஇருள் வெளுப்பதுமென்றோ

மார்போடும் மடிமீதும் மலர்போலும் மழலைகளில்
மணியோசை நாதமெனக் குரல்சொலும்தமிழைச்
சீரோடும் ஒளிசிறந்த செழிப்போடும் வாழ்வமைந்த
செல்வவள நாடுதனைக் கொண்டிருந்தோரை
கூரோடும் வாளெடுத்து கொடுகோர ஈனச்செயல்
கொண்டுயிரும் மண்பறித்த கொடுமையைக்கேட்க
நீர் கங்கைகொண்டவனே நெய்கூந்தல் மாதவளின்
நேர்பங்கன் எம்நிலைத்தை நீவகுக்காயோ

ஆறோடு சேர்ந்த அலை அடித்தோடி யலைந்துகெடும்
ஆனலும் எங்கள்துயர் அந்தங் கொள்ளாதோ
பேறோடும் பெருமைகளும் பெற்றவராய் நாமிருந்தும்
பின்னிருந்து விதிமுடிக்கும் விளைவுகளேனோ
வீறோடு வீரமெனும் வெற்றிதனும் கண்டிருந்தோம்
வெறிகொண்ட இனமுமெழுந்து வீழ்த்திடலாமோ
ஏறோடி உயரஎழு இருந்தோடிப் படுத்தநிலம்
இரவோடு சுதந்திரதை எமக்களிக்காதோ

கனிகள் உண்போம்

மணம்வீசும் கனிதூங்கும் மரங்கள்தோறும்
மகிழ்வோடு பறவைகள் கனியைத் தேடும்
குணம்கொண்ட மனிதரோ விலங்கைத்தேடி
கொன்றதைத் தின்றிடக் கூடி ஓடும்
பிணம்மீது ஆசையை விட்டு நல்லோர்
பெரிதாம் நற் கனிமீதும் காய்கள் மீதும்
உணவென்று மனம் வைத்தால் உயர்வதோடும்
உடல் தானும் உணர்விலும் சிறப்பர் தாமே

தீங்கனிகள் தின்றிடத் தித்திப்போங்கும்
தினமுண்ண உடல்கொண்ட தீரம் சிறக்கும்
மாங்கனியோ முக்கனியில் முதலென்றாகும்
மாசுவையில் மேன்மையுற மகிழ்வைத் தாரும்
ஆங்கிவைகள் இனித்திருக்க இன்னாகொள்ளும்
அறிவிலதென் றொருசெயலைச் செய்யலாமோ
தீங்குகளும் எமைச்சேரும் தின்னத் தசைகள்
தீமை எழும் தெரிந்தும்பின் உண்ணலாமோ
 
வேல்கொண்ட முருகனோ நாவற்கனியும்
விதிமாற்றும் கனிநெல்லி அதியமானும்
கோல்கொண்ட அவ்வைக்கு ஈந்தார் இன்று
கொண்டெமக்கு யார்தருவர்? குழந்தைவேலன்
ஞாலமதை சுற்றிவந்து நானே வென்றேன்
தா கனியை எனவேண்டத் தமையன் கொண்டான்
காலமது மாறியதாம் உலகம் வேண்டாம்
கடைவீதி சுற்றிநற் கனியை உண்பீர்!

இலக்கியத் தலைவி - ஏகாந்தம்

வெள்ளி முளைத்ததடி வானில் - வரும்
வீசும் குளிரெடுத்த தென்றல்
உள்ளங் குலைக்குதடிதோழி - மனம்
ஊஞ்சல் என அலைவதோடி
எள்ளை நிகர்த்த சிறு அன்பும் - அவர்
எண்ணம் எடுத்த துண்டோ தோழி
மின்னல் அடித்த மழை முகிலும் - விட்டு
மேகம் வெளித்தென்ன போடி

அன்றோர் முழுநிலவின் ஊடே - ஒரு
ஆலமரத்தின் கிளைமேலே
கன்னம் உரசும் இரு குருவி - தனும்’
காதல் இசைபடித்த வேளை
பொன்னே உனைவிடுத்துப் போகேன் - இது
பொய்மைப் பிதற்றல் அல்ல உண்மை
நின்னைப் பிரியினுயிர் மாயும் - என
நெஞ்சம் பொய்யுரைத்துப் போனார்

கண்ணில் கண்கள்தனும் கலந்தே - இவள்
காணும் எழில் உலகின் விந்தை
பெண்மை விழிகள் கொண்டஅச்சம் - அது
பேசும் இளங் கவிதை முற்றம்
மண்ணின் மனித குலத்தூடே - இவள்
மங்கை திருமகளின் தங்கை
எண்ணம் கலந்து விட்டேனென்றான் - இன்று
என்னைப்புறம் விடுத்து நின்றான்

புன்னை மரநிழலும் வேகும் - அந்தப்
பேடைக் குயிலினிசை நோகும்
தென்னைக் கிளியிரண்டு பேசும் - எனை
திங்கள் தனை நிகர்த்தள் என்றும்
தன்னந்தனி உலவும் தென்றல் - அதன்
தங்கை எனமுறையும் கூறும்
சொன்னோர் விதம் அழகு தானோ - எந்தன்
சொந்தம் ஏகாந்த மாமோ

வெண்ணை வடித்த சிலை நானோ - அது
வெம்மை தனில் உருகும் மன்றோ
தன்னைப் பழிப்பர் செயல் கண்டும் - புவி
தாங்கிக் கிடத்தலென, நானும்
மன்னிக்கத் தோன்றுதடி தோழி - இதை
மானம் சிறுத்த மன்னன் காதில்
திண்ணமுரைத்து விடுதோழி - உடல்
தீயில் கருக முதல் தோழி!

எள்ளி நகைப்பர் தெரு வெங்கும் -ஊர்
இறைந்து கிடக்குதடி தோழி
கள்ள நகையும் இதழ் கொண்டே - எனை
காணின் புறமுரைக்கும் கூட்டம்
அள்ளி அனல் தெறிக்கும் கண்கள் - அந்த
அன்னை வழங்கவில்லைத் தோழி
உள்ளம் குமுற விழிமூடி  - நான்
ஓசைகெட அழுவதோடி

உன்னில் இட்ட தீ

இட்டதீ எரித்ததுவே ஏழைவர்க்கம்
இன்னுமா தீ கொண்டு எரித்தல் வேண்டும்
சுட்டதெது தாய்மண்ணில் செந்தமிழ் தேகம்
சொல்லரிய மானிடர்தம் மெய்கொள் தீயும்
பட்ட விதம் போதாதென் றெம்மைநாமே
பாரென்று எரித்துவிடில் எதிரிஎண்ணம்
விட்டதனைத் தொடர்வதாய் விளங்குமன்றோ
வீணாகத் தீயிலே எரியவேண்டாம்

கத்தவும் கேட்கவும் கைகள்கூட்டிக்
காய்ந்த மனப் பாறையிலே இரக்கநீரும்
சுத்தமென ஓடவழி செய்தே எங்கள்
சொல்லரிய சுதந்திரம் காணல்வேண்டும்
உத்தமரே வாருங்கள் உயிர்கள் வேண்டும்
ஒன்றல்லப் பலராக எரிந்தபோதும்
சத்தியமோ விழித்திடா தூங்கும் கண்கள்,
சத்துரு தான் மட்டுமே நகைத்து நிற்பான்

வித்தைகளைப் புரிந்திடவே வேகம்வேண்டும்
விதவிதமாய் நம்முயற்சி விளைச்சல் கூட்டிப்
பத்துடனே பலவழியும் முயன்றக் காலை
பங்காளிச் சண்டையெனப் பலகூறாக்கி
மத்தியிலே தலைமையிலா மாக்கள் போலும்
மனவெறுப்பு சண்டை என மாறிடாமல்
புத்திதனை விதவிதமாய் பாவித்தன்பில்
புதியதொரு விடுதலையின் பாதை காண்பீர்

நித்தம் மலர் பூவெனவே நிமிர்ந்து நில்லாய்
நீ வாழத் தந்த உடல் நின்னது மல்ல
செத்திடவும் உன்தேகம்  உனதென்றில்லை
சக்திஎனும் தீ பற்றக் காலம் உண்டு
புத்தொளியாய் கண்டவழி பயனைத்தாரும்
புதுவீரம் பொலிந்ததெனப் பலரும் கூடி
மத்தியிலே ஒருதலைவன் மட்டும்கொண்டு
மாணிக்க தீவினிலே மண்ணை மீட்போம்

சித்தமதும் கலங்கியதோ செல்வர் பூமி
சீரியதோர் வழிகண்டு நம்பால் அன்பை
புத்திகொண்டே என்னபடு பாடும்பட்டே
பொன் நாட்டை மூதாதைஇனமும் ஆண்ட
சத்தியத்தின் கதைஎண்ணிச் சரிந்திடாது
தன்வழியில் வீறுநடைகொள்ளல் வேண்டும்
நித்தியமாய் வாழவழி தேடும்போது
நிலைக்காமல் போவதிலே நன்மை உண்டோ

எழுத்தாணி அறியாத கவிதை

தேனூற்றும் தீந்தமிழில் தித்திக்கும் கவியூறும்
தொங்கிவீ   ழருவி யூற்றாய்
வானூற்றும் மழைபோலும் வந்தூற்றும் பாறையிடை
வளைந்தோடும் காற்றில் ஊறும்
பூநாற்றம் போலாகிப் பொழிலூறும் அலைபோலும்
புலமைகொள் கவிதை ஊறி
மாமாற்றம் பெற்றுமழை மடையுடைத்துப் பாயுமெனில்
மந்திரம் சக்திதேவி

வில்லூன்றி எய்யம்பு விரைவன்ன சொல்லாக்கி
வீழ்த்தி மனமெய்தல் காணும்
சொல்லூற்றிச் சுவையாக்கிச் சுந்தர மென்தமிழ் பூசிச்
சொர்க்கசுகம் இதுவேயென
மெல்லோடி மேகமிடை மிளிர்நிலவின் ஒளிகொண்டு
மேவியதிற் பொன்னும்பூசி
கல்லாத போதுமவை கண்நோக்கும் போதொளிரும்
காதிலவள் கூறுங்கால் காண்

எழுவதுமென் னிசையாகி இழைவ தவள்சொல் கீதம்
இயல்பிலெழும் குரலுமீந்தாள்
முழுதுமென நினைவோடு முடிவிலதென் றிணைபவளே
முன்காண லற்ற தெய்வம்
வழுவெதனும் உண்டோ இல் வரையுடனும் உண்டோயிவ்
வண்ணம்மது தெளியு மதிஇல்
கிழமனதில் கவிதைவளம் கொள்ளெனவும் ஆக்கியவள்’
குணம் போற்றின் கவிதை ஊறும்

தடையுமில சந்தமெழத் தரணியிலே நிறையொலிகள்
தாராளமாக வைத்தாள்
குடைவானில்மேக இடி குயிலோசை கழுதையழும்
குளத்தருகில் தவளைகூச்சல்
அடை மழையில் கூரையொலி அருவி மலை வீழுமிசை
எழில்வண்டின் ரீங்காரமாய்
அமிழ்தினிய சந்தமெழ  ஆக்கியவள் அவளேநம்
அன்புமனம் கொள்ளவருவாள்

தலைவன் ஏக்கம்


மொட்டு மலர்வதென் றிட்ட உன்புன்னகை
மொத்தம் வலிதரும் பூங்கணையோ
வட்ட விழித்துப்பொன் வண்ணநிலவிடை
வந்தயல் நிற்பது சொப்பனமோ
எட்டி அணைத்திட விட்டு நகர்ந்தனை
ஏதுமனங் கொண்ட கற்பனையோ
கொட்டும் குழவியென் றெட்டியும் கிள்ளிட
என் நிலைசுற்றிடும் பம்பரமோ

வெட்டும் விழிகளும் நட்ட நடுச்சுனை
வெள்ளியலை துடிப்பென்றிடவோ
பட்டுமலர்முகை பார்த்துக் குனிந்தன
பாவையுன் னோடிழை பொன்னழகோ
விட்டெனை நீமனை பஞ்சணைதூங்கிட
வேதனை கொண்டு நான்ஏங்குவதோ
தொட்டுவிட எண்ண தொல்லிடம் சேருவை
கிட்டவர வெட்கம் கொல்லுவதோ

சுட்டவெயிலெனப் பட்ட துயருடல்
செக்கச் சிவந்திட வான்மகளோ
விட்டுயர் வான்மதி வேண்டி யுலகதன்
வீதிவந் தாளென எண்ணிடவோ
முட்ட மனம்களிப் பெய்தல் கலயத்தில்
மொண்டு நிரப்பிய தண்புனலோ
இட்டவிதி இன்னும் ஏழைநீ வாடென
ஈவிரக்க மின்றிச் சொல்லுவதோ

கொட்டும் மழைவிழக் குட்டை குளமெங்கும்
கூடி வழிந்தோடும் வெள்ளமன்றோ
கிட்ட வந்தவளே இட்ட உணர்வென்ன
வட்டமதி தரை இறங்கியதோ
மொட்டை மலையிடை வீழ்நதியோ அது
முன்னெழுஞ் சாரல்த ருங்குளிரோ
கட்டியணைத்திடக் கையெழுமோ அதைத்
தட்டிவிட் டோடுவ தும்தகுமோ

பொட்டிடும் மாடத்ஹுப் பொற்கிளியே நிதம்
பூரிப் பெழும்நகை கிண்கிணியோ
முட்டி எனைவீழ்த்த இரட்டை புரவியில்
மூர்க் மெழும் பெண்மை வந்திடுமோ
பட்ட கணைமதன் விட்டவிழியம்பு
திட்டமிட்டே எனைத் தள்ளுவதோ
முட்டைவிழி வேலைக் கொண்டு இதயத்தில்
மோகினி நீவலி செய்திடவோ

முட்டும் காளையெனை மீள எழலின்றி
மென்மை எதிர்கொள்ள அஞ்சுகிறேன்
சட்டை செய்யாதுநீ போவதென்ன - என்னைச்
சஞ்சலத்தில் கைகள் கட்டுவதேன்
செட்டை கொண்ட பலபட்சியினம் விண்ணில்
வட்ட மடிப்பது போல இன்றோ
அட்ட திசையிலும் கொட்டி மலர்தூவ
ஆரணங்கே வலம் வந்திடுவோம்

காலமெனும் மருந்தே உதவும்

எழிலுற உலகும் இயற்கையென் றுறவும்
எமதிடை படைத்தவளே
அழிவுற உடலும் அதிலொரு உயிரும்
அகிலத்தி லாக்கி வைத்தாள்
பொழிலெழு அலையாய் புரள்நிரை வடிவில்
புதுப்புது அனுபவங்கள்
கழிவுறு மனமும் கவிமர முலவும்
கடையுணர் வுடனீந்தாள்

பழியுறப் பகையும் பருவத்தில் மெருகும்
பழமெனக் கனிமனமும்
வழிஎனப் புதர்கொள் வகைபல தடையும்
விதியென வாழ் வமைத்தாள்
குழிபல நடையும் கொளுமிருள் வழியில்
கிடவெனப் பலசமைத்தாள்
பிழியென இதயம் பிரளய வடிவில்
பெருந் துயருற அமைத்தாள்

வழிநடை நெடுகில் வதமிடும் வகையில்
வாழ்வியல் கொடுமையுடன்
தெளிவில இருளும் திசையறு பயணம்
தெரியென அறிவழித்தாள்
மொழிந்திவர் உறவும் முதிர்கனி மரமும்
முடிவினில் நிலம் விழுமாய்
அழிவுற வரமும் அவனியில் விதியாய்
ஆக்கியும் புதிர்விளைத்தாள்

மலையென திடமும் மனதினில் பெரிதும்
மகிழ்வினைத் தருமிவளே
வலையென அன்பும் வரும் பல உறவும்
வரைந்தொரு வாழ்வமைத்தாள்
நிலையெம தன்னை நெறிகொளும் தந்தை
நியதியென் றெமைக் காத்து
விலையறு வாழ்வை விதைத்தவள் பிரிவை
வேண்டுமென் றெமக் களித்தாள்

கலக்கமும் வேண்டாம் கடுந்துயர் போதும்
கடிதெனும் நிலையிதுதான்
உலகிடை எவரும் இலையென உணரும்
ஒரு பெருந்துயர் சமமே
விலகிடும் கவலை வெளியெனு மண்டம்
விளைத்தவள் காலமெனும்
அலகிடும் மருந்தை அளித்தனள், அருந்த
அதிமன துயரழியும்

பூவாக மலரச்செய்

நீயே சக்தி நிறைவா யெங்கும்
நினைவில் அன்பைத்தா
காயாய் அன்றிக் கனியா யினிமைக்
கவிதை வளமும்தா
தாயே உன்னைத் தினமும் வேண்டித்
தவித்தேன் துவளாமல்
வாயால் இன்பத் கவிதை சொல்லும்
வளமும் வரமும் தா

சேயாய் என்னைத் தினமும் காலை
தென்றல் போல்நீவி
பாயாய் படரும் பச்சைப் புல்மேல்
பனியின் குளிர்கொண்டு
தீயாய் சுடரோன் செம்மை, வானத்
திங்கள் செய் குளுமை
தா யார் எந்தன் தமிழின்கவிதை
தன்னைக் கண்கொண்டால்

தோயாதுன்பம் துய்த்தலின்றித்
திகழும் கவியின்பம்
தேயா தினிமை சேர்ந்தோர் பாகாய்
தித்திப் பெனவாக்காய்
ஓயா தூற்றும் அருவிக் சாரல்
அதனில் கீழ்நின்றே
தூயோர் இன்பம்கொள்ளல் போலும்
தொன்மை வளமும் தா

சாயா விதியும் சரியா மனமும்
சாகாதுடல் கொண்டே
நீயாய் எந்தன் நினைவில் வந்தே
நீந்தும் அலைதானும்
ஒயா துள்ளும் அழகும் கொண்டே
உவகைப் பெருக்கோடு
காயாதென்னைக் காப்பாய், இன்பக்
கவிதை  வளமும் தா

கூவாக் குயிலும் குதியா நதியும்
கொட்டா மழைமேகம்
தாவாக் குரங்கு தழுவாப் பிள்ளை
தனிமைச் சுகமில்லை
ஏவாய் என்னை எட்டும்வரையும்
இன்பத் சுனை யாக்கி
நீவா, கருணை நேரும் வாழ்வில்
நிதமும் கவிதை தா

சூழ்ச்சிகள்

தமிழென்தாயே நானுமுந்தன் மகனா - இன்று
தரணிமீது வாழுந் தகைமைஇலையா
அமுதமென்று கொண்டகாலம் வருமா- எம்மை
அடிப்பவர்க்கு அஞ்சிக் காலம்விடவா
எமது தேச இறைமை மீட்க நினைவா - உள்ளே
இதயம்பூட்டி இனிமை தேடும் வழியா
அமைதிகாணும் பாதை காண எழவா - எம்மை
அடக்குவோனின் கொடியைத் தூக்கி விழவா

எடுத்ததென்ன படுக்கபோடும் விதியா - நாம்
எழுந்து நிற்கக் குட்டுவீழும் பயமா
கொடுத்த தெல்லாம் கொடைகள் என்றுவிடவா - அதில்
குந்திபெற்ற மகனை முந்திக் கொள்ளவா
எடுப்பில் காணும் தோள்கள் கூனி கொளவா - நாம்
எதிரிகாலில் அடகுவைத்த பொருளா
தொடுவதென்ன துயர்கள் என்னும் இருளா - நாம்
தொட்டு வணங்கக் கடவுள் பேரில் இவனா

கெட்ட விலங்கு கையில் தூக்கும் வாளா - அது
கொன்றுபோடப் பார்த்து நிற்கும் உலகா
பட்டுத் துன்பத் துடிப்பைப் பார்க்கும் இகமா - இவர்
பார்வைக் கென்று கட்டும் துணியும் விடவா
பார்த்து பார்த்துக் களிக்கப் புதியதொடரா - நாம்
0பாவி தமிழர் பாடைகொள்ள அழகா
சேர்த்துப் படமும் செய்வன் கையில் பணமா - இனி
சேரும் தொழிலில் புதிய வர்த்தகத் துறையா

கூடிக் கொல்ல கேட்க ஆட்கள் இலையா - நாம்
கொண்ட யாக்கை துடிதுடித்து விழவா
மூடிவைத்த மந்திரம் போடும் உலகாம் - அதில்
மெல்ல தொடங்கும் வர்த்தக மாற்றுத் தொழிலாம்
ஆடிமுடித்தும் அனத்தும் அடங்கும் வேளை - ஓர்
அமைதியென்று போடும் வேடம் பொய்மை
போடி பெண்ணே புண்ய தம்ம சரணம் அதில்
போகும் பலிகள் தெரிந்தும் முற்றும் வழங்கும்

ஆக உந்தன் உயிருக்கான வாழ்வு - அது
அன்னை தேச பூமிமட்டும் எண்ணு
ஆக்கவென் றெழுந்து கத்து கூடு - உன்
ஆண்டதேசம் உனக்குச்சொந்தம் கொள்ளு
வேகவைத்த உலகம் வெள்ளிக்கூடு - அது
வீர ஆட்டை காவுகொள்முன் ஓடு
தேகமெங்கும் ஓடும் இரத்தச் சூடு - அதை
தேவை என்றாலோடிநீ போராடு

Thursday, 12 September 2013

நான் ஆடும் ஆட்டம்


தில்லையிலாடும் திருபரனே  எந்தன்
தேகமு மாடுதய்யா - ஏது
எல்லை வரையின்றி ஆடுதய்யா அது
என்சுகம் கொல்லுதையா
தொல்லையென நானும் கோடிதர மென
தேவை உரைத்துவிட்டேன் -ஆயின்
வல்லவரைக் காக்கும் சொல்லுனது என்னை
வந்தருள் செய்திடாதா?

அள்ளும் வரை இன்பம் உள்ளதென்று இந்த
ஆடும் உலகினிலே - பலர்
உள்ளம்கழித்திடக் காணுகிறார் அதில்
உள்ளதுன் பார்வை யையா
கள்ளமில்லாத உன் பிள்ளையிவன் மேனி
காணுந் துயர் பெருத்து - நிதம்
துள்ளுவதேன் உந்தன் சுந்தரமென் நடம்
சொல்லித் தருமெண்ணமா

நள்ளிரவு பகல் பேதமின்றி எந்த
நாளும் கருக்கலிலும் -அந்த
தெள்ளென வானம் இருக்கையிலும் அந்த
திக்கில் ஒளிஎழவும்
வெள்ளமிடும் மழைதூறலிலும் மஞ்சள்
வெய்யில் எரிக்கையிலும் - இங்கு
அள்ளி வழங்கிடும் உன்னருளால் நானும்
ஆடிக்களித்து நின்றேன்

எத்தனை இன்பம் இப்பூமியிலே இந்தப்
பக்தனை அன்புடனே - நீயும்
தத்தத் தரிகிட தோம் எனவே எந்தத்
தாளமும் இல்லாமலே
வித்தைஒன்று இவன் மேனியிலே உள்ளே
வைத்தும் என்கோலம் செய்தாய் - நானும்
உத்தரித்தும் தினம் நின்னை தொழுதிவன்
உத்தமன் ஆடுகிறேன்

பூமி அதிர்ந்திட வில்லை ஐயா எந்தன்
பொன்னுடல் ஆடுதய்யா - அதில்
வா,மினுங்கும் உந்தன் மேனிவண்ணம்  தன்னும்
வாய்த்திடல் பொய்த்திடினும்
நீமிதித்தே சுழன்றாடி நின்றால் இங்கு
நிற்கும் புவி நடுங்கும் -ஆயின்
சாமி எனைமட்டும் ஆடவைத்தாய் எந்தன்
சந்தம் இனிமையென்றோ??
*********

Wednesday, 11 September 2013

இழந்தவரின் எண்னங்களோடு..... (ஆறுதலுக்காக)

உயிராய் தீயின் உரிமைப் பொருளாய்
  உலகைக் காண வந்தோம்
பயிரும் மரமும் படருங் கொடியும்
  பார்த்தோம் நாமும் வளர்ந்தோம்
வெயிலும் மழையும்கண்டோம்  வாழ்வில்
  விருப்பங் கொண்டேநின்றோம்
மயிலின் நடமும் மானும் கண்டோம்
  மனதில் களிப்பே கொண்டோம்

கயிறும் எறியக் கதியும் முடியும்
  கவலை அற்றுச் சிரித்தோம்
பயிலும் காதல் கணைகள் வீசப்
  பலியென்றாகித் தொலைந்தோம்
வயிரம் அற்றே வழமை வாழ்வில்
  வழியென் றிருளில் நடந்தோம்
துயிலைக் கண்டோம் சுகமும் கொண்டோம்
  துடித்தோம் துயரில் உழன்றோம்

ஒயிலில் வடிவாள் உள்ளம்கண்டோன்
  உணர்வைப் பகிர்ந்தே உவன்றோம்
புயலைக் கண்டும் பொறுமை கொண்டோம்
  புதைந்தோம் ஓடித்தொலைந்தோம்
மயங்கிக் கிடந்தோம் மாயைதன்னில்
  மூழ்கித் தவித்தோம் எழுந்தும்
வியந்தோம் உறவும் விழிகள் மூட
  விழித்தோம் விரைவில் விட்டோம்

கயமை செய்வோர் களத்தில் கண்டார்
  காயம் மண்ணுல் கொண்டார்
பயத்தை விலையும்,கேட்டார் தம்மின்
  பாசம் கண்டே வியந்தோம்
தயக்கமின்றித்  தர்மம் கொல்லத்
  தனியே கிடந்தே அழுதோம்
தியங்கிக் கிடந்தோம் திரிந்தோம் வாழ்வின்
  திசைகள் முடிவைப் புரியோம்

அழிந்தோம் உலகில் இழிந்தோம்
  காலின் உதைகள் பட்டே நொந்தோம்
மொழிந்தோர் தமிழின் மூச்சென் றுணர்ந்தோம்
  மூச்சும் இழந்தோம் மெலிந்தோம்
அளந்தே நிலமும்  ஆண்டோர்குலமாம்
  ஆற்றல் தன்னை அழிக்க
குளமென்றோடும் கண்ணீர் நதியில்
   குளித்தும் ஏனோ குனிந்தோம்

அலையும் கடலும்  அணைக்கும்
  காற்றும் அதிவேகத்தில் உலகும்
தலையும் சுற்றி தளரா தோடும் 
  தருணம் எம்மைப் பற்றி
நிலையாய் கொண்ட நிகழ்வைக் கொண்டே
  நிதமும் நடந்தோம் நின்றோம்
இலையென் றொருநாள் இயக்கம் நின்றால்
  எங்கே போவோம் அறியோம்

அவளே தந்தாள் அவளே  கொண்டாள் 
  அதுதான் வரையும் வாழ்வில்
தவளும் வகையும் தாங்கக் கால்கள்
  தரையில் திரியும் நடையும்
பவளம் போலும் மேனிமிளிர்வும்
  பயிலுங் காதல் உணர்வும்
கவளஞ்சோறும் காணேல் பசியில்
  காயம் இழியும் நிலையும்

கலையும் அறிவும் கல்விச் சுகமும்
  கானம் பாடும்திறனும்
சிலைபோற் செல்வக் குழந்தை வரமும்
  சிகையில் வெள்ளை நிறமும்
அலையாய் திரையும் அழகுத்தோலும்
  அதன்பின்னாலே மரணம்,
விலையில் வாழ்வின் சூன்யம் ஆக்கும்
  விதமும் ஏனோ புரியேன்??

Tuesday, 10 September 2013

தீயாகி நின்றாள்

தொய்ந்தோடும் மேகமிடை தூங்கியெழும் வெய்யோனும்
நெய்யூற்றும் வேள்வியிலே தள்ளுவதாய் - இம்
மெய்கொண்ட மானிடனை மேதினியில் கருகிவிடச்
செய்கின்ற துன்பமதைத் செய்பவளே

மைகொண்டு விழிபூசி மலர்கொண்டு எனைநோக்கிக்
கைகொண்ட கணைபூட்டி வீசுகையில் - நான்
நெய்கொண்ட  பூக்களினை நினைக்கின்றேன் அழகெல்லாம்’
பொய்கொண்ட பூமியிடை ஓர்நாளே

செய்குண்டு போலுனது செயலெந்தன் இதயமதில்
போய்ங் கென்று வெடித்ததிலோ தூசானேன் - நீ
எய்கின்ற பூங்கணைகள் என்நஞ்சு பூசியதோ
நைய்கின்ற தாய் நெஞ்சு நலிவதுமேன்

துய்க்கின்ற வேதனைகள் தோள்மீது பூமாலை
வைக்கின்ற தீயாக வாட்டுவதேன் - ஓர்
பொய்கைக்குள் நீர்தானும் புனலாடப்போகையிலே
பூங்காற்றும் சேர்ந்தனலை கொட்டுவதேன்

பொய்க்குண்டோ வாழ்வுமுன் மெய்மீது பொய்வார்த்தால்
தைக்கொண்ட நாளில்நெற் கழனியிடை - எவர்
கைக்கொண்டு வைத்தமுளை கதிரானால் தலைகூனும்
மைக்கொண்ட  விழிக்கும்நான் மயங்குவனோ

தெய்த் தக்க என்றாடும் சின்னவளே சொல்லக்கேள்
எய்தக்க எத்தனையோ இருந்தாலும் - இது
தொய்தக்க வாழ்வல்ல தொலைதூரம் நீநின்றும்
உய்த்தோங்கப் பிறந்தோமே உணர்வாய்நீ


Monday, 26 August 2013

வாழ்வீயா வகையேன் ?

சில்வண்டே சொல்லாய்நீ  செழித்தோர் வனத்திடையே
நில்லென் றுனைநிறுத்த நேர்ந்தசெய லுண்டோ, ஏன்
இல்லென்று ஆகுவையென் றெள்ளித்  தமிழினத்தைக்
கொல்லென்று வந்தாரின் கொள்கை சிறப்பதுமேன்

கல்லென்ற உள்மனதைக் கனிந்ததாய்ப்  பூவாக்கி
நல்லெண்ணம் கொண்டேயிந் நாட்டின் நிலையறிந்து
சொல்கொண்டு பேசித்  சுதந்திரமே தீர்வாக்கித்
தொல்லைகொள்ளாதிந்தத் தூயமொழி காப்பார் யார்?

பல்வண்ண மாயைகளைப் பாரெடுத்த தேனடியோ
வெல்லென்று கூறியெழ வீரரையும் கொன்றுவிதை
செல்லென் றவர்வாழ்வைச் சீரழித்துப் போனவரும்
நல்லெண்ணத் தூதாய் நடிப்பதனை நம்பிடவோ

முல்லைக்கு வாசம் முகிலுக்குப் பெய்மழையும்
அல்லலுற ஈழமென் றனைத்துத் தமிழ்மாந்தர்
வல்லமைகொள் காலத்தில் வாள்வீசி ரத்தமெழப்
பொல்லா விதிசெய்தே போயழிய விட்டதுமென்

வல்லூறின் காலிடையில் வாழ்விழந்த சின்னதோர்
மெல்லியவெண் குஞ்சின் மேனிதனைப் போலாகிப்
புல்லாய் விதையாகிப் பூமிக்குள் போய்விடவும்
சொல்லா வதையுற்று சிதந்தழிந்து போகாமல்

பல்லோர் மனம்மாறிப் பண்பட்டும் ஒன்றாகித்
வல்லமை கொண்டே யுள்ளத் திறனோங்கித் தலைதூக்கிச்
சொல்லென்று நீதிதனை சுட்டொளிரும் வெய்யோனாய்
எல்லை யில்நின் றேகேட்க  ஏன் தயக்கம் எழுந்துவிடு

**************

Saturday, 24 August 2013

பிரிவின் துயரம் ( கெட்ட கனவாக)

(தந்த தன தன்ன தந்த னானா - தன
தந்த தன தன்ன தந்த னானா)

வெள்ளி யொன்று நிலம் வீழக்கண்டேன் - அடி
வெட்டி மரமொன்று சாயக்கண்டேன்
கொள்ளிவைத்து மனை கூரையெங்கும் - எரி
கொண்டு தீயுமெழக்காட்சி கண்டேன் 
அள்ளிவைத்த முத்து இரத்தினங்கள் - தனை
ஆற்றில் எறிந்திடலாகக் கண்டேன்
தள்ளியெமை வைத்து தானுமுனைக் - கொள்ளத்
தெய்வம் விரும்பிய காலமிதோ

நள்ளிரவில் ஒருசூரியனும் - தோன்றி
நட்ட நடுவானில் நிற்கக் கண்டேன்
எள்ளி நகையிட்டு ஏறியெரு - தினில்
ஏழை உயிர் கொள்ளும் காலன் கண்டேன்
பள்ளியில் கள்ளம் பயிலக் கண்டேன் - ஒரு
பாதையில் முட்களைத் தூவக்கண்டேன்
கள்ளிச் செடி முற்றம் முற்றும்கண்டேன் - ஒரு
காகம் வெள்ளையில் கரையக் கண்டேன்

துள்ளிக் கோவில் வலம், சுற்றுகையில் - ஒரு
தேளும் அரவம் துரத்தக் கண்டேன்
புள்ளியிட்ட வாசல்கோலத்திலே - யின்று
பேயின் முகமொன்று  தோன்றக் கண்டேன்
அள்ளியிட நீரில் ஆயிரமாய்ப் -  புழு
அங்கு மிங்குமென ஓடக்கண்டேன்
சுள்ளிவிறகு பொறுக்கியொரு - வனும்
தீமூட்டி உள்ளே படுக்கக் கண்டேன்

பொன்னி லங்கவில்லைப் பூக்கவில்லை - மனம்
போன இடத்திற்சந் தோசமில்லை
மின்னவில்லை மழை மேகமில்லை - எங்கும்
மெல்ல முளைத்திடும் புல்லுமில்லை
அன்ன முண்ண மனம் கூடவில்ல - அந்த
ஆவின் நறும்பாலும் நஞ்சின் சுவை
என்னே! பிரிந்தனை எங்குசென்றீர் - அம்மா
எப்படிமறந்து வாழுவமோ

காற்றில்வாச மில்லைப் பூக்களில்லை அங்கு
கட்டவிழ்க்கும் இதழ் ஊறவில்லை
தூற்றப் பெரு நெல்லு மூட்டையிலே கொள்ளத்
தோன்றிப் புயலிட்டு ஆற்று நிலை
வேற்றுமை கொண்டில்லம் வீதிவந்து உள்ளே
நாட்டில் நுழைந்தது மிச்சமில்லை
பேற்றென அன்னையும் பேசிமகிழ்ந்திட்ட
பெண்ணின் வாழ்வுமெங்கே, ஏங்குமன்னை!!!

***

Sunday, 18 August 2013

தெய்வத்தைத் தேடு (ஈழத்திற்காக)

  

தெய்வத்தைத் தேடியும் காணவில்லை - யெந்தத்
திக்கிலும் நல்லருள் தோன்றவில்லை
உய்வதற் கோர்வழி எங்குமில்லை - யெந்த
ஊரினில் தேடியும் பாசமில்லை
செய்வினை சாபங்கள் கேடு தொல்லை - யிவை
சேர்ந்து இடர் தரும் பார நிலை
மெய்வருத்தம் சாவு மேலும் வதை - யிவை
மீளப் பிடித்தெம்மை ஆட்டும்நிலை

கையைப் பிடித்தனல் கொண்ட உலை - தன்னில்’
காயம் எரிந்திடத் தள்ளும் நிலை
நெய்யை மொண்டு ஊற்றிமேலும் தீயை - ஊதி
நீள வளர்த்திடு தீயின் எல்லை
பொய்யைப் படைத்தயிப் பூமியிலே - ஏனோ
மெய்யைப் படைத்ததை வேக வைத்தே
தொய்யப் பையில்  காற்றும் போகவிட்டால் - அதில்
தோன்றும் நிலையென்ன ஆனந்தமோ

செந்தமிழ்த் தேனடை பொற்தமிழோ - எங்கள்
தேவை உயிர் கொள்ளும் வாழ்வுடைமை
தந்தவளே, இனி உன்படைப்பைக் - காக்க
தாமதமின்றியே செய்கடமை
மந்த மாருதமும் வீசிவர - மாலை
மாந்தர் சுகமெண்ணிக்  கூடிவர
அந்தர வான்வெளி கண்டிருக்கு - மெங்கள்
அன்னையே ஆனந்தமாக்கிவிடு

கன்னங்கருங் காக்கைக் கூட்டமென - இங்கு
காணுமெருதுக ளோட்டமென
பென்னம் பெருஞ்சோலைப் பூமரங்க - ளிவை
பேசரும் நல்லுணர் வோவியங்கள்
உன்னத ஒற்றுமைக் காணயிவை - சொல்லல்
உன்னரும் வாழ்வினில் காணும்வகை
நன்னெறிகற்று நல்லொற்றுமையில் - மனம்
நாளுமுயர் வெண்ணி வாழ்வையெடு

ஒற்றுமை யற்றவர் வாழ்வினிலே - என்றும்
உண்மைச் சுகந்தன்னைக் காண்பதில்லை
பற்றுமிகக் கொள்ளும் சுற்றமெனில் - அது
பாரில் பிழைத்திடும் முன்னைநிலை
மற்றும் எதுவின்பம் சேர்ப்பதில்லை - ஒரு
மந்திரமில்லை உன் வாழ்வு முறை
கற்றறிவாய் கூடி ஒற்றுமையைக் - கொள்ளக்
காணும் வெற்றி எனும் சக்திநிலை

கனவும் களிப்பும் கற்பனையும்

நான் விரும்பும் உலகம்

இருட்டில்லா உலகத்தில் எரியும் வெய்யோன்
எப்போதும் மிளிர்கின்ற இளமை மீண்டும்
கருப்பில்லாப் புவி,பச்சை பசுஞ்சோலைகள்
காற்றோடு மலர்வாசம், குருவிச்சத்தம்
நெருப்பில்லா உணவோடு நேசம்மட்டும்
நிலைக்கின்ற நெஞ்சங்கள், நிகழ்காலத்தின்
உருக்கொல்லும் மன்னர்கள் அரசே அற்ற
ஒன்றாகிக் களிக்கின்ற மாந்தர்கூட்டம்

விரிகின்ற வானத்தைப் போலும் நெஞ்சம்
விளையாடிக் குதிக்கின்ற வெள்ளையுள்ளம்
சரிகின்ற வானத்தை தாங்கும் பூமி
சற்றேனும் பிரியாத நட்பின் சேர்க்கை
புரிகின்ற செயல்நன்மை புனிதக் காட்சி
புலம்பாத நல்லெண்ணப் போக்கில்மாந்தர்
தெரிகின்ற வருங்கால தோற்றம் மின்னும்
தேவையெனில் எதிர்நீச்சல் திளைக்கும் வெற்றி

கலையாத ஏகாந்தம் கன்னித்தீவு
கரைமீது விழுந்தாடும் கடலின் கூச்சல்
அலைநீவும் வெறும்பாதம் அதனால் சில்லென்
றசைகின்ற சுகமேனி அடங்காத் துள்ளல்
தலைமீது கனவாகும் தாகத் தேவை
தாம்தீமென் றாடும்நீர் தாவும் அலைகள்
மலைமீது உறைவேளின் மணிசொல் நாதம்
மகிழ்ந்தாடிக் குதிக்கின்ற மந்திக் கூட்டம்

மலர்ந்தாடும் மகிழ்வோடு மனதைக்கொள்ளும்
மனோ ரம்மியப் பூவாசம் மனதில்நல்லோர்
பலமான உறுதி வீண்போகா தன்மை
பகையின்றி எதிர்காலம் பசுமைத் தேக்கம்
வலதேகாண் இடமென்று வார்த்தைபொய்க்கா
வளம்கொண்ட பேச்சும்நல் வழிகாட்டும்கை
இலதாகும் கொடுஞ்சொல்லும் இளகாநெஞ்சம்
இளமைகொள் புனிதத்தை இழக்காப் பண்பு

குளம்மீது அல்லிப்பூ குதிக்கும் மீன்கள்
கொள்ளின்பப் பாங்கோடு கூடும்வதனம்
உளமெங்கும் பூத்தூவும் இனிதோர் மாலை
இசைந்தோடும் தென்றல்தொட ஏற்கும் உள்ளம்
அளவான அதிகாரம் அணைக்கும் மென்மை
அழகோடு விளைமேனி அருகில் பெண்மை
இளமைக்கு குறையற்ற இசையின் சந்தம்
இதனோடு எழுங்கவிகள் எழுதும்வேகம்

தணலாகிக் கொதிக்கின்ற தங்கச் சூரியன்
தாங்காத வேர்வை நிழல் தருமோர்சோலை
மணல்மீது நடைபோடும் ஆற்றின் போக்கு
மறுபக்கம் ஊற்றுமோர் மலைவீழ் அருவி
கணம் வாழ்வை மறந்தேநின் றாடும் இதயம்
காண்கின்ற இன்பங்கள் காட்டும் தெய்வம்
பிணமாகிப் போகும்நாள் பிறக்கும் மட்டும்
பேசும் இவ்வாழ்வின்பம் பெற்றிடாதோ

தினம் வாடும் மலரே சிரிப்பதெப்படி? (கருவண்டும் மலரும்) 
(கருவண்டு)
கொட்டி யெழில்விரி சொட்டு மிதழ்மது
கட்டழகு முகத் தேன்மலரே
பட்டெனக் காணிலும் பூவேயுன் மேனியும்
விட்டதென் வாழ்வுமோர் நாள்தனியே
கட்டழ குமேனி பட்டகதிர் வெம்மை
சுட்டதென வரும் மாலையிலே
பட்டு விடமுன்னர் எப்படியோ இதழ்
கொட்டிச் சிரித்துநின் றாய்எதிலே?

(மலர்)
கட்டை கரும்நிறக் கொட்டும் வலியெழத்
துட்ட குணமுங் கொண்டான வண்டே
திட்டமிட்டே யெனைத் தொட்ட பின்புவிட்டே
எட்டிச் செல்லும்நிலை நானறிவேன்
சட்டமிட்டே யுன்னைக் கட்டிவைத் தலில்லை
மொட்டி லிருந்து கண் காணுகிறேன்
வட்டமிட்டே எமைத் தொட்டழித்த பின்பு
சொட்டும் கவலையின் றாவதுமென்

வண்டு:
முட்டு மிதழ்களில் மென்மை தொடுந்தென்றல்
பட்டுவிடச் சொட்டும் தேன்மலரே
எட்டி ரசிப்பதோ கிட்டவந்தே உண்ணா
விட்டுக் கிடந்திட வோதனியே
கொட்டும் மழையுடன் சட்டசட இடி
வெட்டு மின்னல் வரும் வேளையிலும்
சுட்டு விடவில்லைப் பட்டுவிழும் உன்னை
தொட்டதில்லை யெனில் வீண்மதுவே

மலர்:
அட்டமியி லுன்னை அன்னை படைத்தனள்
அத்தனை கும்மிருட்டோ எழிலே
பட்டுமலர்களைக் குட்டை குளமெங்கும்
தொட்ட ழித்தகதை நானறிவேன்
கட்டு மலர்இதழ் விட்ட மணம் மட்டும்
தொட்டுக் கொள்ளுதென்றல் போலில்லையே
பட்டே உளம்கொள்ளும் அச்சம் துயர்தனை
விட்டுமிருப்பது தான்அழகே

தட்டுங் கதவுகள் சொர்க்க மெனிலதைத்
தட்டுவது சரியாம் உயிரே
பொட்டென் றழிவது விட்டவிதி யெனில்
கட்டி யழுதென்ன போமுயிரே
வெட்டு மிருவிழி நட்ட நடுநிசித்
திட்டென் றிருள்தனில் காண்பதுண்டோ
பொட்டு மிட்டபூவை பற்றியிழுத் தென்னைக்
கட்டி மாலையிடல் ஏனறியேன்

கட்டை வயலினில் முற்றும் புதுநெல்லு
வெட்டிக் கதிரடித்தார் பின்னரே
கொட்டும் வெயிலிட்டு சுட்டுலர்ந்த பின்னர்
தட்டிலிட்டுப் பதர் நீக்கிடவே
எட்ட வீசி வருங் காற்றுள்ள போதினில்
விட்டு மிருப்பரோ வேளையதே
நட்டமின்றித் தூற்ற வேண்டுமன்றோ அதை
நாமுங்கொண்டே இன்பங் காணுகின்றோம்

முட்டி வெள்ளம் வரும் நட்டமிடும் இங்கு
முற்றும் பறிதெங்கும் வீசிவிடும்
கட்டி யிழுத்தவை வெட்டி மின்னலிட்டுத்
தொட்ட மரம் சாய்த்துக் கூச்சலிடும்
விட்ட விதியென்ன தட்டியெவர் கேட்கத்
தொட்டதை விட்டுச்சென் றாவதுண்டோ
மட்டும்நீ வாழென விட்டதே நாளெனில்
மிச்சமென சிரித் தாடலன்றோ

******************

எல்லாம் பெண்தானே!

 

மெல்லச் சிவந்திடும் அடிவானம் - அதில்
மேலே எழுந்திடும் கதிரோனும்
சொல்லக் கடிதெனும் பெரும்பாவம் - நிறை
சுற்றும் புவியிடை வர அஞ்சி
வல்லப் பெரிதொரு மலையோரம் - அதன்
வீசும் கதிர்களைப் சிறிதாக்கி
முல்லைப் பூநிறம் காண்முகிலுள் -  தன்
மூளும் தீயினை மறைதெழுந்தான்

வல்லோர் சிறகொடு நெடுவானம் - தனில்
வாழ்வைச் சுவையெனத் தினம்காணச்
செல்லும் குருவியின் விழிதானும் - அச்
செவ்வா னழகைக் கண்டஞ்சி
அல்லல் தருமொரு ஆவேசம் -  தனும்
அடிவான் கொள்ளக் காரணமென்
இல்லைப் புவியென ஆக்கிடவோ -  என்
இடர் நேரும்என விழிமூட

நல்லின் கனிபிழி திராட்சைமது - அதன்
நடுவே மிதக்கும் உருள்பனியும்
மெல்லச் செவ்விதழ் வாய் வைக்கும் - முகில்
மேலைகுமரியும் உண்ணல்போல்
அல்லிக் குளமிடை அணைதென்றல் - அதன்
ஆசைத் தழுவலில் தரு இலைக ள்
சல்லச் சலசல என்றாட  - அச்
சலனம் கண்டே மேற்கினிலே

வெள்ளைச் செறியதி பிரகாச - மனம்
வெந்தே தகித்திடும் வெய்யோனும்
கொள்ளை எழில்தரும் புவிமாதின் -  கண்
கூடிக்களித்திடும் மனதோடு
அள்ளக் குறைவில அதிபோக -  எழில்
அணங்கைக் கண்டவன் அறிவின்றித்
தள்ளி திணறிடத் தொட்டார் போற்-  தன்
தகிக்கும் கதிரால் தொட்டிருக்க

அன்னோர் அழகிய காலையிலே -  விதி
ஆக்கும் வினைதான் பொழுதாக்க
இன்னோர் நாள்வீண் என்றோர் தாள் கை
எடுத்தே கிழிக்கும் நாட்காட்டி
முன்னே நடப்பதும் அறியாத பல
மொழியிற் பிளவுறு நிலமாந்தர்
தன்னைத் தான்பெரி தென்றெண்ணி -  இத்
தரையை உதைக்கும் கால்கொண்டு

இல்லத்துணை நலம்பெரிதாக  - இவர்
எண்ணிக் கொள்ளினும் பிறிதோர்பெண்
செல்லாத் தகவிழந்துருள் காசாய் -  இச்
செகம்மீ தவருயிர் வெறும் காற்றாய்
கொல்லத் துணிவுடன் கைகட்டி - அவர்
காணும் தூய்மையைக்  கெடுத்தவர்கள்
இல்லதரசியின் விழிமுன்னே  - இவர்
எப்படி  காணுவர் இயல்பாமோ

சொல்லத் தகையில வெறும் வாழ்வில் - முடி
சூடும் பூவென அழிதேகம்
இல்லை எனமுடி வுறும் நாளும் - இவ்
வியற்கை எனுங்குறுங் கனவோடும்
நெல்லைத் தின்றதில் வளர்தேகம் - தனில்
நீரை வார்த்திடும் உணர்வேகம்
தொல்லை தருகினும் சுகம்தேடி - இத்
தொலையும்  இருளிடை சுழல்பந்தில்

கண்ணைக் குருடென வைத்தண்டம் அதில்
காணத் தனை மறை சக்தியவள்
பெண்ணிற் சுகமெழ அவள்போற்றிப் பின்
பேசற் கிழிதெனும் கொடுமைசெய
வண்ணக் குலமாம் விழிமாந்தர் தனை
வாழக் கண்டனள் எதனாலே
மண்ணிற் கலியொடு மென்மேலும் இம்
மாதர் குலம்கெட என் செய்வோம்

மென்மைப் பூவெனக் காணிதயம் - அதில்
மின்னல் போலிடை எழுங்காதல்
தன்னைப் பெரிதென மனமெண்ணும் - கடுந்
தகிக்கும் வெய்யோன் செயலாகி
பின்னிப் படர்கொடி மீதுள்ள  - பல
பூவைக் கருக்கிடும் வெய்யோனாய்’
வன்மைப் புயலெனும் வீச்சத்தால் - அவ்
வாழ்வைக் கருக்குதல் எதனாலே

பொன்னும் பொருளும் பூவேண்டாம் = இப்
பூவைதானும் பொன்னேர் காண்
தின்னத் திகட்டா தேனமுதம் - என்
தேவை இவளென் றுயிர்காத்து
இன்னோர் பெண்மற் றினமென்றால்  - அவள்
இம்சைசெய்து சீரழித்து
சின்னப் பாவைஉடல்குறுக - அவள்
சிதைவில் ஆனந்தம் கொள்ளுவதென்.