Tuesday, 30 April 2013

விட்டுக்கலை வினைதீர்

கட்டுக்கலை மொட்டின்மலர் யெட்டுத்திசை கிட்டும்வரை
தொட்டுத்தரும் தென்றல் மணமே  -அது
கொட்டும்மது பட்டென்மலர் பக்கம்நடை கட்டும்முறை
குற்றமென இட்டாற் தகுமோ
குட்டிச்சிறை ஒட்டிக் கிட சட்டம் இது விட்டோம் இலை
பட்டுத்துடி என்றோர் வாழ்வேன்  -இவர்
விட்டுப்பெரும் வெட்டைவெளி  கட்டுக்களைந் திட்டப்படி
எட்டி நடைகொள்ளல் வருமோ

மட்டுப்பட இட்டத்துடன் விட்டுப்பெரு விண்ணில் எழு
பட்சிச் சிறகிட்டாய்  இறைவா - அதை
முட்டுப்பட நெட்டுக் கிளை வட்டில்கூடு கட்டித்துயில்
கொட்டிக்கிட என்னத் தகுமோ
சிட்டுக் குருவிக்குத் தரை  விட்டுச்செல ரட்டைச் சிற
கொட்டக் குறு வெட்டக் கருதா
விட்டுப்பற வெட்டைவெளி அட்டப்பெரு  திக்குக்கிடை
கட்டுப்படும் எல்லையிலதாய்

பட்டுத் துணி கட்டிப் பெரும்  இரட்டை மனை ,கட்டில் துயில்
மட்டத்தினில் வாழ்ந்தான் தமிழன் - அதை
விட்டுப் பெருங்கொட்டும் மழை வெட்டுமிடி மின்னலிடை
பட்டுக் கொளும் துன்பம்பெரிதே
பெட்டை யவள் நெட்டை நுதலிட்டோர்சிறு பொட்டேயென
கொட்டும்நில வெட்டும்சுகமும் - தனில்
பட்டுங் குளிர் சொட்டும் மழைஇட்டுத்திரி பஞ்சென் முகில்
எட்டுஞ்சு தந்(தி)ரம் வேண்டும்

எட்டுத்தொகை மற்றுங்கலி வெட்டும்தனம் தட்டும் முறம்
சொட்டும் மறவீரம் எமதே - அவன்
கட்டையுடல் வெட்டிச் சிறு காட்டில் விறகிட்டுக் கரி
கொட்டச் சுடும் சாம்பல் தனையே
 கட்டுத் தடையின்றிக் கரை தொட்டுத்திரிவட்டத் திரை
குட்டை நதிநீருள் கரைக்கும்
திட்டமுடன் பட்டப்பகல் வெட்டுங்கொடுங் கத்திகொளப்
பட்டென்றெம துள்ளே நுழைய

விட்டும்மொழி பற்றும்இலை நட்டமெது இற்றைவரை
பெட்டிப்படம் கண்டோமெனவே
மொட்டுக் களைச் சுட்டுக்கதிர் விட்டுபிரிந் திட்டோர் இதழ்
தொட்டு மலர் நின்றேயாடும்
வட்டசுனை நீரில்முக விம்பம்விரல் தொட்டுகொள
விட்டுசெலும் வாழ்வென் றெண்ணா
அட்டமதில் தொட்டோர்சனி  அன்னதுயர் செய்வோர்தமை
விட்டுக்கலை தீராய் வினையை!

Monday, 29 April 2013

என் மகளே கூறாய்...!

தேகமதில் நீதுடித்துச் சோகம் கொள்வதென்ன
தேசழிந்த தாய்விசும்பி தோன்றுவதேன் மகளே
நாகமொன்று சீறுவதாய் நேரும்பெருங் கோபம்
நீயெடுத் தேன்மகளே நெஞ்சில் நிறை சோகம்
தாகங் கொண்ட தேதுவெனத் தண்ணிலவே கூறாய்
தந்துனையே சந்தணமாய் தண்மையுறக் காண்பேன்
ஆகவென்ன செய்வதிடுவேன் அன்புமனம் காணும்
ஆனந்தமும் வந்திடவே ஆணையிடு மகளே

மேகமதிற் பாரொளிரும் தாரகைகள் பொன்னா
மின்னுமவை நான்பறித்து மாலை செய்து தரவா
ஏகமதில் வாசமெழ யில்லையெனிற் காற்றில்
ஏறிக் கடல்தாண்டி மலை உச்சிமலர் கொளவா
தாகமெனிற் தேடிச்சுவை தேன்கனியின் சாறு
தங்கமது கிண்ணமிட்டு தின்னவென்று தரவா
மேகம்விடும் தண்ணிலவை மெல்ல நீருள்வைத்து
மென்விரலால் தொட்டிடவே என்மகளே செயவா

கத்துங்கடல் ஆர்ப்பரித்துக் காணுமதில் உலவும்
கரையெழுந்து விழும்அலையால் கால்கள் ஈரமிடவா
சத்தமிட்டுக் கூடுமெழிற் சோலைமரக் காவில்
சேர்ந்தயினக் குருவிகளைச் சுற்றியாட விடவா
மெத்தையெனப் பஞ்சுமுகில் பிய்தணைகள்கட்டி
மெல்லவுந்தன் மேனிதொட்டு மீதுறங்க விடவா
முத்தமிட ஆழ்கடலில் மின்னுமொளி சந்திர
மங்குமெழிற் சூழ்நிலையில் மடியுறங்க விடவா

புத்திரியே பள்ளியிலே பல்கலைகள் கற்றுப்
பேர்புகழிற் தேவதைகள் போற்றும் வகைசெயவா
சித்தமெல்லாம் அற்புதமே செங்கரும்பில் சிந்தும்
சாற்றினிலு மில்லையெனும் தேனினிமை தரவா
சத்தமிட்டு நீசிரித்தால்சிந்தனை யானந்தம்
சந்தமிடும் செந்தமிழில் பொங்குகவி தரவா
அத்தனையோர் அன்புளமே ஆகிடும்வானுதயம்
ஆதவனின் கதிரெனவே என்றுமுனைத் தொடவா

மெத்தையெனும்மேகங்களின் மெல்லியதோர் ஓட்டம்
மேலெழுந்து வான்பறந்த பட்சிகளின் கூட்டம்
முத்தமிட மலைமுகட்டை மேகம்வந்துகூடும்
முட்டிவழிந் தோடும் நதி மெலச்சிணுங்கி வீழும்
சத்தமிடுங் குயிலினிசை சலசலக்கும் பொழில்நீர்
சாரல்தரும் மழைவிழுந்து சிலுசிலுக்கும் இலைகள்
அத்தனையும் கொள்ளும் சுகம் அன்புவழிப் பெண்ணே
அட அடடா மெய்மறக்க அள்ளியுனை அணைப்பேன்

Saturday, 27 April 2013

கடலலையும் என்மனமும்

தூரத்திலே அலைதுள்ளிவரும் ஒரு
நேரத்திலே எழும் வீரத்திலே
பாரத்திலே அது பாய்ந்து கணம் விழும்
ஓரத்திலே மணல் ஈரத்திலே
ஆரத்திலே மணி கோர்த்ததென ஆங்கு
ஆடிவரும் அலைத் தூறலிலே
சாரலிலே  அதனோசையிலே  எந்தன்
சஞ்சலமும் விட்டே நின்றிருந்தேன்

மேலையிலே ஒளிபோகையிலே மின்னும்
மாகடலில் மூழ்கும் ஆதவனும்
மாலையிலே வரும் காற்றினனையும் கொண்டு
மங்கைதரு வாசம் மோந்து நின்றேன்
சேலையிலே நீலம் கொண்டவளாம் கடல்
சில்லென் றிருப்பினும் சீறுவளாய்
பாலையிலே மணல் போல் நெளிந்தும் -  அதன்
பார்வை குணம்மாறி இன்பமிட்டாள்

வாழ்க்கையிலே பல சோடிகளாய் பலர்
வந்திருந்தே கதை பேசிடவும்
ஆழ்மனமோ எனை யாரெனவே காணும்
அற்ப நினைவு வந்தாளக் கண்டேன்
சூழ்ந்தவிரி  நில வாழ்வினிலே இவன்
செய்வதென்ன வரை செய்ததென்ன
தாழ்வுணர்வும் வாழும் தன்மையிலும் மனம்
தாவும் குரங்கொப்ப ஆவதென்ன

ஏன்பிறந்தாய் நீயும் எங்கிருந்தாய் இங்கு
ஏன் நடந்தாய் உந்தன் எண்ணமென்ன
தீன் கொரித்தாய் மனை தீண்டிநின்றாய் குலம்
தோற்றுவித்தாய் இன்னும்தேவையென்ன
ஊன் துடித்தாய் உயிர் தான் துடித்தாய் உணர்
வோங்கி நின்றாய் உன்னை விட்டவர்யார்
தேன்குடிக்கு மொருமந்தியென  நீயும்
தீமைக் கிளைதாவி தொங்குவதேன்

வானளவோ இல்லை வாழ்வறமோ - ஒரு
வீழ்நிலவோ தென்றல் வீசுவதோ
மானமதோ மரியாதைகளோ - இவை
மாறுவதோ  மனம் சோர்வதென்ன
தானமதோ தட்டிப் பற்றுவதோ - தலை
தாழுவதோ முடி சூடுவதோ
ஆனதென்ன அன்புபோனதென்ன - மதி 
ஆணவமும் கொண்டு மாவதென்ன

ஆழ்கடலா அதன்ஆழமதா  - அதன்
ஆரம்பமா  அந்தம் உண்டல்லவா
சூழுலகில் ஒரு தூசியிவன் - சுற்றுங்
கோள்களிடை யொரு சூனியமே
ஏழுநிறம் கொண்டவானவில்லில் இவன்
எந்தநிறம் மழை நின்றபின்னே!
வாழும்வரை  வந்த நீள்துயரம் எண்ணி
உள்ளழுதேன்  கடல் சேர்ந்தழுதாள்

Friday, 26 April 2013

மாறாத துயர்

கதிர்கள் நடமாடக் குருவி இசைபாடக்
கழனி எழில் காணுது
எதிரில் இளவானின் ஒளியைத் தரமேக
இடையில் வெயில் ஓடுது
புதரின் அயலோடு போகும்வழி தன்னில்
பயந்து முயலோடுது
விதமென் றுயிரஞ்சி விரைந்து வழிகாணும்
விடிவை மனம் தேடுது

மதியவெயில் கூடி மந்தி விளையாடி
மரத்தில் கிளை தாவுது
விதியும் பிழையாகி விடிவின் நெடுந்தூரம்
விரிந்து தொலையாகுது
பதிய வளைதென்னை பரவுமிளங் காற்றில்
பணிந்து தலையாட்டுது
புதிய அலைதோன்றிப் புரண்டு நதியோடப்
பொங்கி மனமேங்குது

எதிலும் குறையாத புகழின் மகன்போல
எழுந்து மலை நின்றது
முகிலும் நேரோடி இணைய மனம்கொண்டு
மலையின் மடிதூங்குது
அகிலம் தனைஆக்கி அனைத்து முயிர்வாழ
அவனும் படைத்தானன்று
பதிலுக்கிவை துணித்து எனது உனதுவெனப்
பரமன் சிரித்தானங்கு

உயிரைக் கொடுத்தேனும் உரிமை யுடன்வாழ
எளியோர் மனமேங்குது
பயிரை விதைத்தோனே பருவம்வரக் கொள்ளும்
பயனை விதி மாற்றுது
வயிறைப் பசியுண்ண விலங்கு உடல்கொள்ள
வாழ்வில் உயிர்போகுது
கயிறை எறி மாயன் கருதும் நொடிமட்டும்
காணும் துயரோ இது

Wednesday, 24 April 2013

கவிதை சொல்லும் காதலி

எந்தன் கவிதைக் காதலியாள்
   ஏட்டில் மட்டும் வாழுகிறாள்
சந்தம் போட்டுப் பாடுகையில்
   சற்றே எட்டிப் பார்க்கின்றாள்
சொந்தம் என்றோர் முகமறியாள்
    சொல்லும் பெயரும் யாதுமிலாள்
விந்தை அவளுக் குண்மையிலே 
   வாழும் வகையே  இல்லையய்யா

அன்றோர் மாலை நானிருந்தேன்
   ஆற்றங் கரையின் ஓரத்திலே
நின்றேன் தென்றல் நீவுசுகம்
  நிலவின் ஒளியோ போதைதர
மென்றே விழுங்குங் கனிசுவையும்
   மதுவின் இனிமை மனங்கொள்ள
நின்றாள் பக்கம் நான் கண்டேன்
   நிலவின் தங்கை  வாஎன்றேன்

செந்தேன் வழியும்  சிறுகுரலும்
  செல்லக் கிளியின் வளைமூக்கும்
வந்தேன் என்றே வலைவீசும்
   வட்டக் கரிய விழிகளையும்
கொந்தேன் என்றே அணில் தாவிக்
  கொள்ளா காக்கும் கொய்யாவாய்
பந்தாய்ச் சுவரில் பட்டலையும்
  பார்வைகொண்டே சுட்டெரித்தாள்

சிந்தை கண்டு சிறுமகளே
  சொல்லாய் யார்நீ நீயென்றேன்
உந்தன் கவிதை சிற்பியெனில்
  உணர்வில் வடித்த சிலையென்றாள்
முன்னே என்னை அறியீரோ
    முழுதாயுள்ளம் கொண்டீரே
என்னைத் தொட்டுப் பாரென்றால்
    எதுவுமில்லை காற்றானாள்

தேகம் இல்லாத் திருமகளோ
  திங்கள் வதனம் பொய்யானால்
ஆகும் வார்த்தை அத்தனையும்
  அகத்தே யெழுந்த கற்பனையோ
வேலும் வில்லாம் விழியென்றால்
   வீசும் கலையும்  வேடிக்கை
நாலும் நாலும் இரண்டாமோ
  நற்தமிழ் சொல்லும் பொய்யாமோ

வானில் வெய்யோன் வலம் கொள்ள
  வார்க்கும் வெம்மைத் தகிப்பாலே
கானல் நீராய் தொலைதோன்றும்
   காட்சி  காணும் கலைமான்போல்
வேனில்காலத்  தாகத்தை
   விருப்பைக் கொண்டு கலைந்தோடி
தானிப் புவியில்  தடுமாறும்
   தணலில் பொழியும் மழையாமோ

எந்தன்  மனதில் கவிவானில்
   எண்ணப் பஞ்சாம் முகிலாவாள்
தந்தோம் என்றே கவிபாடத் 
    தோகையாக நடம்செய்வாள்
சந்தத் தமிழின் தங்கையவள்
    சாரீரத்தின் உருவுடையாள்
சிந்தையென்றோர்  சிற்றூரில்
     சொல்லும் கவிதைக் குறவானாள்

ஊனும் உடலம் இல்லாள் காண்
  உண்ணும் அன்னத் தோற்பையும்
தானும் கொள்ளாள் தண்ணிலவாள்
   தனியென் விழிமுன் நிழலாவாள்
தேனும்பாலும் போற்கவியில்
   திகழ்வாள் அவளைக் காணவென
வானும் வாழும் தேவர்களும்
 வந்தாற்கூட  வடிவாகாள்

Monday, 22 April 2013

எமனே இது ஏனோ?

  வேட்டையாடு மெண்ணங் கொண்டு   வீரனென்று சூலமேந்தி
 வீதியோரம் வந்துநின்ற கூற்றா
ஆட்டமென்ன அன்னை சக்தி ஆளுமிந்த மேனிமீது
ஆசை கொண்டு நீயிருப்ப தாகா
போட்டி போட்டு நீயழிக்கும் பூமிமீது யாருயிர்க்கும்
போதுமென்றதோர் கணக்குப் போடு
போட்டதென் கணக்கு வேறு பொற்றமிழ் விளைக்க அன்னை
போட்டதே நிலைக்கும் விட்டு ஓடு


நாட்டிலே இவன்தனக்கு  நாளுமிட் டுயிர்தனுக்கு
நாட்களை வகுத்த தன்னை கேளாய்
பாட்டிலேயென் வாழ்வமைத்த பார்வதிக்கு மூத்த அன்னை-
பார் வதைக்கின்கேட்பள் விட்டு வாளாய்
கூட்டிலே உயிரிருத்தி கூடவே உணர்வமைத்து  கோடிகோடி
சூட்சுமங்கள் செய்தாள்
நீட்டியே நடந்துலாவி நின்றனம் இச் சிக்கலான
நீளுடல் அழிப்பதென்ன சொல்லாய்

தேட்டமென்று பாரில்நானும் தேடிவைத்த தொன்றுமில்லை
தேவி கூறும் வார்த்தை மட்டுமுண்டு
பூட்டியென்னை அன்பினாலே  பூமியில்நிலைக்க வைத்து
புன்னகைக்க வைத்த அன்னை கண்டு
காட்டியுன் குணத்தை நீயும்  கையிற்கொள் சுருள்கயிற்றைக்
கட்டியென் கழுத்திற்போட எண்ண
நீட்டியென்  அருள் கொடுக்கும் நீள்வலித்த சூலமேந்தி
நின் செயல் சினப்பளன்னை பாரு

தோட்டமும் பயிர்வளர்க்க துள்ளி யுன் எருதழிக்கத்
தோல்வியென்று நாமும் பின்னர்கண்டு
வாட்டமும் இழந்து வாயில் வார்த்தைக ளொறுத்துவாழ
வையகம்  நிறுத்தினாளோ சொல்லு
போட்டவன் வினை அறுப்பான் போனவர் வகுத்தநீதி
புல்லருக்கும் நல்லவர்க்குமொன்று
ஏட்டிலே இருக்கும்சொல்லும் இன்பமே விதைத்தவர்க்கு
இன்பமே அறுத்தெடுப்பர் எண்ணு

காலச் சுழல்


 காலச் செடியினில் நாளென் மலர்தினம்
காற்றிலுதிர்ந்து விழும் - அதைப்
போலும் வயதென்னும் பூக்க ளுதிர்வதைப்
பொன்முகம் காட்டிநிற்கும்
பாலனென வந்து பாயிற் கிடந்திடும்
பக்குவமாகு மட்டும் - இந்த
ஞால முழுதிலும் நன்மை தீமையெங்கள்
நாளைப் பிரித்தெடுக்கும்

ஓலைக் குடிசையும் ஒட்டும் வயிறுடன்
ஓர்சில பேரிருக்கும் - கொடும்
காலைப் பசியெனும் காதகனின்பெரும்
கைவரிசை சிறக்கும்
பாலை வனமென பாழுமுயிர் வெம்மை
பட்டுத் துடித்திருக்க - அவர்
ஆலைக் கரும்பினைப் போலப் பிழிந்திட
ஆசைமனம் இருக்கும்

நாளைப் பிரிந்தொரு ராத்திரிவேளையும்
நாடி வருவதில்லை - இனி
நாளைநடப்பது வேறு அது இற்றை
நாளைப் போலாவதில்லை
கூழைக் குடிப்பவர் நாளை இருக்கலாம்
கோடி பணத்திடையே - அதே
வேளை பணம் மாடி வீடென்றிருப்பவர்
வீதி மரத்தடியே

நீலக் கருவானில் நீந்தி முகிலோடும்
நீண்ட வழியிருக்கும் - அந்தக்
கோலத் தெளிவிண்ணில் காணும் மாசக்தியும்
கூடி எம்முள் இருக்கும்
மேலே திகழொளி மேன்மைப் பெருஞ்சக்தி
மேவியுடல் அசைக்கும் - அந்த
மூலசக்தி மனம் வேண்டித் தொழுதிடு
மேனியிற் சக்தியெழும்

******************

வாழ்வின் வண்ணம்


சொல்லெண்ணம் சொல்விதம் இன்பந்தரும் அதில்
நல்லெண்ணம் பின்னிடின் நன்மைவரும்
சொல்லெண்ணம் கல்லென்னும் வன்மைகொளின் - அது
எல்லையில் துன்பங்கள் தன்னைத் தரும்

பல்வண்ணம் கொண்டுள்ளம் பார்த்துநிற்கும் - அது
இல்லெனும் அன்பினில் ஏற்றமுறும்
வெல்லென வாழ்வினில் வேகம் வரும் - எழும்
தொல்லைகளில் அதுசோர்ந்துவிடும்

கல்லென்ன மாமதி கற்றொழுகும் - பல
நல்லனக் கற்றிட மெல்லஎழும்
செல்லெனும் வல்லமை சேர்ந்துவிடும் - உள்ள
புல்லெனும் கேடுகள் நீங்கிவிடும்

சல்லெனச் சத்தமிட்டோடும் நதி - அதில்
சில்லெனும் காலையின் நீர்க் குளிர்மை
நில்லென்னும் சூரியப் பொற்கிரணம் - எனக்
கொள்ளதி இன்பங்கள் கோடி பெறும்

செல்லன்ன நல்லெழில் சோலைகளுக் கதில்
மெல்லெனப் பூ விரி காட்சிகளும்
பல்லன்னப் பட்சிகள் நீந்துமெழில் கொண்ட
துல்லிய நீர்ச்செறி ஓடைகளும்

இல்லென வேளை என்றோதல்வீட்டு வாழ்வை
வில்லென நீவளைத் தெய்து விடு
வெல்லென  எண்ணித் துயர் கவிய நீயும்
கொல்லென தான்துயர் ஓட்டிவிடு

புல்தன்னில் நீர்துளிப் போர்வை கொள்ள- காலில்
இல்லென வெற்றடி பாதம்வைத்து
மெல்லெனப் புல்மிதித் தோடிநட அதி
சொல்லொண்ணா இன்பமும் தோன்றுமன்றோ?

வாழ்வீது!

 குளுகுளு  என மனம் கொளும்இளம் அனுபவம்
குறைதனைப் புரியாது
பழுபழு எனக் கனி பழுத்துமின் சுவைதனைப்
பலபல்லும் அறியாது
கொழுகொழு வயல்நிறை குலுங்கும் நெல் அறுவடை
கொளும் நிலை உணராது
உழு உழு என வயல் உழுதும் நெல் எருதுண்ண
உரிமையும் கிடையாது

அழுஅழு எனும் நிலை அகிலமும் பிழைபட
அளித்திடும் வாழ்வொன்று
வழுவழுஎனப்பல வகையொடு வசதியை
வழிகொள்ளும் நினைவோடு
கழுகழு வென இறை கடைசியில் தரும் இடம்
கடும் வலி அறியாது
முழுமுழு தவறுகள்  முடிவில தெனும்வகை
முயன்றனம் அவையாது

தொழுதொழு இறையவள்  அருள்தரும்வகையதும்
தொகை யதும் குறையாது
எழுஎழு வுணர்வுகள் எழும்புதிதெனில் மனம்
எதனிலும் சிதையாது
நழு நழுவென எதில் நழுவிய பொழுதிலும்
நடைமுறை வழுவாது
தழு தழுவிடும் உடல் தனைத் தடையிலதென
தரும் முடிவெனுமேது

கொளுகொளு எதனிலும்  குறையல்ல நிறைவினைக்
குவலய வாழ்வீது
வெளுவெளு வெனக் கதிர்விடுமொரு இரவது
விடியவே விடியாது
புளு புளுவென வெயில் படுகையில் வதைஎனும்
புவிகொளும் வாழ்வீது
முழுவதும் அமைதியில் முடிவுற வரும்   அந்த
முழுமையில் குறையேது?

Saturday, 20 April 2013

இரண்டில் ஒன்று

விழிகளில் உதிர்வது எமதுதிரம் - அதன்
விலை தமிழெனில் ஒரு சுழியம்
அழிவது தமிழ் இன வகை உடலம்  - அதில்
அக மகிழ்வது முழு உலகம்

கொதித்தெழச் சிலகரம் அமைதிஎனும். அது
கெடுநிலை விளைவெனச் சொல்லும்
பொறுமையில் விளைவதுதனி அனர்த்தம் - அதைப்
புரிந்திடில் விடிவது திண்ணம்

வழி நெடுகலும் பல நெளி அரவம் - அதில்
வகைவகை யெனப் பல விஷமும்
நெளிவதும் வழுகிடு மதன் இயல்பும் - எனில்
நெறி மறு உயிர் தனை வதையும்

பழிபல சொலும்பழந் தமிழெனவும் - அது
பரமனின் திருநடம் பயிலும்
அழி எனப் பெருவழி புக உதவும் - சில
அறிஞரின் இழிமனம் உதவும்

துளிஎன விழும்மழை யுடனிடியும் = பெருந்
துயரமும் எனப் பகல் விடியும்
வெளி யெனப் புகுஇல்லம் முழுதழிக்கும் - அதில்
விரும்பிய அரசுகள் இணையும்

குடிநலம் பெரிதெனும் விதிவகுக்கும் - அதில்
குழந்தைகள் இறைஎன்னும் பொருமும்
பொடிபட உடைஎனத் சிறுவரையும்- இந்தப்
புவி மறுகணம் உயிர் கொல்லும்

அழியினம் தமிழெனக்  கரமினையும் - அதை
அனுபவி எனமனம் ஒழுகும்
பொழுதினில் கருவிகள்பட விழியும்  கொளும்
பதிவுகள் தெளிவுடன் உமிழும்

அழகென அதிஉயர் ரசிகர் களும் - தமிழ்
அழிவதை விழிகொள மகிழும்
மெழுகென உருகிடுமின மெமதும் - இதை
மெதுவென விடஉயிர் பிரியும்

சரியென உனதிடை மனமெழவும் - இனி
சகலமும் பொருள் கொளும்முடிவும்
கரியென உடல் எரி சிறைவதையும்  -அது
கடவுளின் செயலென நினைவும்

இருந்திடு மெனில் உடன்விடுதோழா - தடை
இலையென எழுவுடன் நேராய்
பருந்துகள் பறக்கட்டும்  உயர்விண்ணில் - அவை
பருகிட உதிரமும் மண்ணில்

வரும் குறிகொண்டு சிறு உணவெண்ணி அது
வர எடு செயல் உடன் மெய்யில்
பெருகிடப் புயலென எழு விண்ணில் . இனிப்
பிரளயம் இடம் பெறும் தன்னில்

முடிவெது புதுநிலம் உருவாகும் - முன்
பொலிந்திடு தமிழுடை மண்ணும்
குடியிரு  யிது எவர் சொத்தாகு ம் - உன்
குலமதின் வழிவந்த முற்றம்
***************

ஒருநாள் வரும்செங்குருதி சீறிவிழச் சிரித்திடவோ மன்னா
எங்கிருந்து கற்றாய் இந் நீதி
அங்கு ருசி என்றுநிதம் ஆக்கஉடல் பாதி
எங்கள்விதி என்றிடவோ மீறி
தங்கமுடி கொண்டு தமிழ் ஆண்டவளே தேவி
சங்க குலஅன்னைதமிழ் காண்நீ
வெங்களங்கள் கண்டவர்கள் வெல்லுமிவர் சாதி
பொங்குதமிழ் எண்ணு அதைமீறி

உங்களிறை கண்ணயர்ந்து கீழுறங்க போதி
எம்கை தனில் ஏதுமற்ற நாதி
மங்கையவள் மானங்கெட ஆடைகளை வாய்நீ
எங்கள் கரம் போடவில்லை சோழி
வங்ககடல் பொங்கியெழும் எங்களினம் ஆதி
சங்கரனின் கண்ணெழுவ தாய்தீ
நங்கூர மிட்டுனது கோரம் முடிவாகி
பங்கு விலைபேசி வரும் நீதி

தெங்குவளர் செந்தமிழம் தெரியுமோர் சோதி
சங்கொலியும் முழங்குமொரு சேதி
பொங்குகடல் நீர்கடந்து  பேருதவி நாடியெழ
எங்களிடம் வந்துதவும் தேதி
அங்கொருநாள் தொங்குங் கனி பாலில்விழத் தேனில்
எங்கும் மழை தூறலெனப் பார்நீ
தங்கமுடி  தமிழ்சூடச் சோழர்வகை யாயுயர்ந்து
சிங்கமிலைக் கொடிபறக்கும் பார்நீ
*********

விழித்தெழு

   
விழித்தெழு தமிழா வியன்தரு வுலகில்
விளைவன துயராகும்
கழித்தனை காலம் கடுமிருள் நடுவே
கடையெனத் தமிழ் காணும்
பழித்தன ருணர்வைப் பறித்தன ருரிமை
பலப்பல அயல்நாடும்
அழித்தனர் இனமென் றாருயிர் தமிழர்
அடைந்தனர் பேரவலம்

நடந்தனை நடையில் நாட்டினை யாளும்
நயமெழப் பெருமையுடன்
இடந்தனைத் தரவே யிலையிந்த உலகும்
எழுந்துனைப் பந்தாடும்
தடந்தனைப் போட்டும் தமிழ்இனம் வீழ்த்தி
தவித்திட உனையாக்கக்
கிடந்தனை இருளில் கலங்கிய நினைவில்
கனவுகள் மேலோங்க

பொழுதினி உதயம் புதுவொளி காண்பாய்
புலர்ந்திடு மதிகாலை
அழுதிட வருமே அவைபொடிபடவே
அறமெடு விழிமூடின்
எழுமனதடங்கி  இருந்திட எண்ணில்
இறுதியில் ஒருநாளில்
விழுவது நிகழும் வியன்தரு உலகில்
வல்லமை தான்வாழும்

இமையினுள் விழிபோ லெமதினி தமிழை
எடுத்தணைத் திடலின்றி
சுமையென விலகி சொலும் பிறமொழியில்
சிந்தனை பறிபோகா..
எமதினம் அடிமை எனவுறை உதிரம்
இனி. மெலச்சூடேற்றி
அமையொரு பாதை அடியெடு விரைவில்
அடுத்தது தமிழ் ஆளும்
*******************

Wednesday, 17 April 2013

காப்பாய் சக்தி !

நடந்தோடி நின்றதெது கால்கள்தாமோ
நாடி மனம் கூடியதென் னாவல்வீணோ
படர்ந்தோடி சுற்றுவது கொடிகள்தானோ
பார்முழுதும் பாசமுயிர் பிணைத்த தேனோ
கடந்தோடி வரும் புயலும்காற்றும் போலே
காலமெனும் ஆழிசுழன்ற லைந்த வாழ்வோ
விடந்தேடி உண்டதென வினைகள் சூழும்’
விதந்தானோ விடிவற்றுப் போமாம்நாளோ

உழுதோடி விதைத்தாலும் உரிமையின்றி
உண்ண வழி மண்ணிழந் தறமும் இன்றி
தொழுதோடி வாழவென வைத்தாய் சாதி
தமிழாடி வீளுதெனில் தகுமோ சொல்நீ
விழுதோடித் தாங்குமரம் வெயிலில் பாதி
வெம்மையகல் வித்தெம்மை வாழ்த்தும் போல் நீ
பழமோடி பாலில்விழ பாகும் வெல்லம்
பார்த்தினிமை சேர்த்தவிதம் படைப்பாய் இனிநீ

நுழைந்தோடி காற்றினிய கீதம்கொள்ள
துளை மூங்கில் வண்டினமும் செய்தாய் ஏனோ
எழுந்தோடி வந்தெமது இன்னல்தீர்க்க  
ஏதுவகை யில்லாதும் இருப்பதாமோ        
விழுந்தோடி நடந்தாலும் விளைக்கும்சக்தி
 வீரமதை விழவைக்க வேண்டாம்தாநீ
முழுதோடி நிற்குமிடம்  முடிந்தோர்வாழ்வும்
  முற்றுஅழிந் துள்ளநிலை மோசம் ஆகி

தலைமீறி எழுகின்ற அலைகொள் நீராய்
 தாங்காத  துன்பங்கள் போதும் தேவி. ‎
கலையூறி  எழும்பாடல்  கரும்பென்றானால்
  காணுமனம் நீகுளிரச் செய்வாய் தேவி
இலைமீறி வழிகின்ற பனியின் நீராய்
 எமையாக்கி வீழ்ந்துவிடச் செய்யாய் ஆநீ!
தொலைதூரம் நிற்காதே துணைதான் பாவி
 துடித்திங்கே கேட்பதெது தோன்றிக் காண்நீ

கிளைதேடி வந்தமரும் குருவிக்கென்றும்
 கேட்காமல் வந்தணையுங் காற்றா யாகி
அளைந்தோடி அன்னமதை உண்ணும் பாலன்
  ஆசையொடு உதைத்தாலும்  அன்னை போல்நீ
வளைந்தோடி தொலைவில் நின்றாலும் எம்மை
 வாழ்வழித் துள்லிமகிழ் வெய்தும் வண்ணம்
களைந்தோடு புன்மைகளைந் தன்பும் கொண்டே
  காலமினி ஆளுந்திறன் கொள்ளச் செய்நீ