Tuesday, 25 June 2013

கண்டிட வேண்டும்

நல்லதொரு வாழ்வு கண்டிட வேண்டும் - அந்த
நீள்பெருத்த வானிடையே நீந்திச்சென்றிட வேண்டும்
எல்லையற்ற தூரம் சென்றிருந் தாலும் - நல்
இன்பமுடன் வாழவொரு உலகம் கண்டிட வேண்டும்
தொல்லையற்ற சூழல் கொண்டிட வேண்டும் - அதில்
துன்பமற்று நான் தனியே சுற்றிவந்திட வேண்டும்
பல்விதப்பூங் காவும் சிற்றோடை நீரும் - அதில்
பங்கயமல்ர் பூத்தழகில் புன்னகைத்திட வேண்டும்

நில்லென்றெனை மனம் இருத்திடவேண்டும் - சோலை
நறுங்கனிகள் சுவைமிகுந்து பொலிந்த தருவேண்டும்
எல்லையற்று விரிந்திருந்திடவேண்டும் - அங்கு
இளங்குயில்நான் இசைபடித்தே இன்பங் கண்டிடவேண்டும்
இல்லையென்றே துயர் இருந்திட வேண்டும் - கொடும்
ஏழ்மையுடன் இயலாமை இடமிழந்திடவேண்டும்
வல்லதொரு  மனமெடுத்திட வேண்டும் - இனி
வருவதெலாம் இன்பமெனும் வளங்கொழித்திடவேண்டும்

கற்கும்மொழி தமிழ் நிறைத்திட வேண்டும் - பல
காவியங்கள் இலக்கியங்கள் கரைகடந்திட வேண்டும்
பொற்சிலையாய் தமிழ் ஜொலித்திட வேண்டும் - ஞான்
பூஜையென்று கவிதையெனும் பூச்சொரிந்திட வேண்டும்
பற்றினிலே நானிழைந்திட வேண்டும் - தமிழ்
பாவையுந்தன் காலடியில் பணிபுரிந்திட வேண்டும்
உற்றதுயர் ஒன்றிலை யெனவாகும் - என்
உள்ளமதில் உனைநினைத்தே ஓங்கிடும் நிலைவேண்டும்

அன்னையுந்தன் ஒளிபரந்திட வேண்டும் - அங்கே
அகத்தினிருள் போயொழிந்திட ஆணவம் கெட வேண்டும்
என்னைச்சுற்றி இளமலர்களும் மான்கள் - இனும்
இன்ப ஊற்றும் அருவியாகி எனைநனைத்திட வேண்டும்
தேன் தமிழில் சுவைநிறைந்திட நாளும் - நான்
தீந்தமிழில் பாவளித்திட நீமகிழ்ந்திட வேண்டும்
வான் எழுந்து நான்பறந்திடும் இன்பம் - இவ்
வையகத்தில் வாழுகின்ற வேளை கண்டிட வேண்டும்

ஏன்தமிழே எனை வருந்திடும் வாழ்வில் - யாவும்
அன்பு காணும் உயர்வு கொண்டு ஆனந்தமெழவேண்டும்
என்பிடையே நேர்மைகொண்டொரு நீளும் - என்றும்
ஏற்றமுள்ள வாழ்விலுயர் இன்பங் கண்டிட வேண்டும்
ஊன் உயிரும் சேர்ந்துழன்றிடும் நாளில் - என்
உடல்தனிப்பின்  உயர் ஒளியில் ஒன்றுசேர்ந்திட வேண்டும்
வானிடையே மின்னும் தாரகையாகப் - பின்
வாழ்வையெல்லாம் உன்நினைவில் வாழ்ந்துகண்டிட வேண்டும்

என் பெயரை கரிகாலன் என தவறி ஒருவர் அழைக்க

பொங்கி யெழுந்தன கால்கள் -மனம்
புத்துணர்வோ டயல் காணும்
தங்கமுடி தலை கொள்ள -கை
தவித்தே வாளினைத் தேட
சங்கொலி வானிடை மேவ - அதில்
சடசடத்தொலி முரசோங்க
எங்கென் பகை எனத்தேடும் - என்
இருவிழி துரு துருத் தசைய

தொம் தொம் என நடை யதிரும்  - சிறு
தொலைவினில் காலடி யோசை
பூம் பூம் எனப் போர் முழவும் - பல
புதுப்படை யணி வகை சூழ
நாம் நாம் நம்முடை நிலமென் - றோர்
நடைதனில் அதிர்வெழச் சோழர்
வீம்புடை  கொடிதனும் விரிய - அது
விசைபட காற்றினில் ஒலிக்க

வாள்வாள் எனச் சில குரலும் - இலை
வாழ் வாழ் வென மறு ஒலியும்
வீழ் வீழ் எனப் பகை அணியும் - இடை
வீல்வீல் என ரதம் உருளும்
ஆள் ஆள் படைகள் முன்னேற -இனி
ஆள்வோம் என நிலம் மீள
தோள் தோள் தினவெடுத்தாட -இனித்
தோல்வியே எனப்பகை ஓட

மாள் மாள் எனத்துயர் மாளும் - அந்த
மங்கள வெற்றியின் ஓசை
ஆள்பவனாய் எனைப்போற்ற - யான்
அதிசயத் தரண்மனை ஏக
தோள்களில் வாகையைச் சூடும் சில
தோழியர் கூடியும் வாழ்த்த
ஆழ் கனவொன்றிடை ஆழ்ந்தேன்  ஆ...
அழைப்பினில் ஆனந்தமாமே

வாழ்வினில் மகனே/மகளே !!

இசைகொண்டு தமிழ்பாட எழுந்தோடி வா - எங்கள்
அசைகின்ற விழிகாணும் அருஞ்செல் வமே - என்றும்
விசைகொண்டு நடமாடி வருந்தென்ற லாய் - காணும்
திசையெங்கும் மலர்தூவும் திறன்கொண்டு வா

மலர்கொண்டு தலைசூடி மகிழ்ந்தாட வா - அன்பு
உலர்கின்ற நிலைமாறி உறவென்று வா= எங்கும்
பலர்கண்டு புகழ்பாடிப் பணிகின்ற தாய் - காலை
புலர்கின்ற பொழுதோங்கும் பிரகாசந் தா

வளர்கின்ற மனம்மீது வடிகின்ற தேன் - சிந்த
இளகின்ற பாகாகி இனிப்பென்று வா - அந்த
தளர்வின்றி நடைபோடுந் திரைமூடும் வான் - செல்லும்
இளந்திங்கள் எனவென்றும் எழில்சேர வாழ்

சுவைகொண்ட கனிபோலும் சுகங்கொண்டு வா - கற்ற
அவை யென்னில் முதலென்ற அணியென்று காண் - இருள்
துவைகின்ற பொழுதாகத் துயர்நீங்கி வாழ் - கண்ணே
குவை கொண்ட கரமாகக் குறைவற்றுக் கொள்

மிகையன்பு தான்பெற்று மெருகோடு வா - இந்த
வகையெந்த நிலைகொண்டும் வளர், இன்பம் தா - எண்ணப்
புகைகொண்டே அகம்மூடும் புரியாமையால் - எந்தப்
பகைகொண்டும் வாழாமல் பழிநீங்கி வாழ்

மனமென்ன சொன்னாலும் மதிகொண்டு காண் - சின்ன
வனமாக்கள் வகையன்ன விதிசெய்யும் மெய் - கொண்ட
சினமாக்கும் உணர்வென்ப தீண்டாது காண் - என்றும்
தினமோங்கும் உதயத்துச் சூரியன் நீ !

பனிதூங்கும் இலைகொண்ட பசுமைதனும் - சோலைக்
கனி கொண்ட சாறென்னும் களிகொள்ளின்பம் - மேவ
இனியெங்கும் வாழ்வென்ப இதுபோன்றிலை -  என்னும்
தனியோங்கும் நிலைபெற்றுத்  தரைவாழ்வு காண் !

எத்தனை நாளின்னும்?

தொட்டுத் தொட்டழைந்து மெங்கள் தோலிற் சேறுபூசியெம்மைத்
திட்டித்தீர்க்க வாயடத்த தேனையா - நம்
தோலிற் பட்டதென்ன செய்யக் கூறையா
கட்டிக்கட்டி மெய்புரட்டிக் கால்பதித்துச் சீரழித்து
தட்டித் தாளம் போட்டவர்க்கு வாழ்வையா- நாமோ
தாழ்வுகொண்டு வாழும் ஈன சாதியா

எட்டி எட்டிக் கால்கள் வைத்தே ஏற்றங்கொண்டு நாம்நடந்து
கிட்டஏக உச்சிமலை பாரையா - அது
கிடுகிடுத்தே அனல்வெடித்த தேனையா
நட்டநடு வீதிவைத்து நாலுதேசம் பார்த்திருக்கக்
கொட்டி நச்சுக் குண்டெறிந்தும் மௌனமா - இந்தக்
கூட்டத்துக்குப் பேரும் என்ன கூறையா

பட்டுப்பட்டே உத்தரித்த பாவமின்னும் தீரவில்லைக்
கொட்டும் ரத்தம் இன்னுமின்னும் தேவையா - நாமும்
கொண்ட துன்பம் நிற்கும் ஆண்டு கோடியா
தட்டித் தட்டித் தீயிலிட்டுத் தாளமிட்டே ஆடவிட்டுத்
தட்டையேந்திப் பிச்சையுண்டு வாழவா - வீரன்
தங்கத் தமிழ் என்ற வார்த்தை தேய்வதா

நிட்டை மௌனம் நிர்மலத்தில் நீண்டதோர் தவங்கிடந்து
கட்டியழும் பெண்கள் பார்த்துச் சொல்வதா - இது
காலந்தந்த கோலமென்று கூறவா
செட்டை  இரண்டடித்து வானிற் செல்லுகின்ற பட்சிதானும்
வட்டமாகச் சேர்ந்து சுற்றக் காணையா - நாமும்
வானக்கூட்டம் போலஒன்று சேர்வமா

திட்டமிட்டுக் குருவிசுட்டு தென்னந்தோட்டந் தீயிலிட்டுக்
கட்டிவைத்த மனைசிதைக்கக் காணவா -எங்கள்
கையிலொன்று மில்லையென்று நோகவா
பட்டுரத்தி னத்தையிட்டுப் பாவிஎன்னைத் தம்பியென்று
கட்டிமுத்தம் தந்தபோது கண்களும் - மூடிக்
காலனின் கயிற்றை மாலை என்பதா

பொட்டுவைத்துக் காதிற்பூவைச் சுற்றிவிட்டுச் செல்வதென்ன
விட்டு நீயும் வீறெழுந்து கொள்ளடா - இந்த
விந்தையென்ப தெங்கள் பக்கம் வீணையா
நட்டுவைத்த சிற்பமென்று நாளும் சோர்ந்திருத்தல் விட்டு
எட்டிக்கால்கள் வைத்துசெல்லக்  கூடையா - நாமும்
ஏறுபோல் நடந்துவீறு கொள்வமா

என்ன கொடுமை தாயே

செங்கரும்பும் கைப்பதென்ன தேனருந்த பொய்ப்பதென்ன
செந்தமிழைத் தந்தவளே தாங்கிடுவேனோ
அங்கமெலாம் நொந்துருகி யான் எரியும் மெழுகெனவே
ஆவியென்று காற்றிடையே போய்விடுவேனோ
மங்குமொளி மாலையிலே மரம்நிறைந்த சோலை மலர்
மாறியிதழ் வாடிவிழும் காணுகின்றேனே
வெங்கனலில் வேகிடும் மெய் விட்டுயிரும்போவதெனில்
வேதனைஏன் விடியும்வரை விடைசொல்லு தாயோ


சிங்க நடை கொண்டிருந்தேன் செந்தமிழில் சந்தமிட்டேன்
செந்தணலில் போட்ட புழு என்றிடல் ஏனோ
எங்கும் இருள் செல்லும்வழி ஒன்றொளிர நீ இணைத்தாய்
இன்றுமனம் மாறியதேன் இடர் களைவாயோ
செங்கமலம் பூத்திருக்க செல்லும் அலை நீர்சுமக்க
சந்தணமாய் வாசமிடும் தென்றலும் நீவ
தெங்கினிடை சரசரத்து தென்னை யிலை ஆடமுகம்
திங்கள் இடைதான் மறைந்து சென்றிடும்வேளை

சங்கொலியும் சாமரையும், தந்துமலர் பூச்சொரிந்து
சங்கரரின் கோவிலிடை மந்திரமோத
அங்க மெலாம் மண்புரண்டு ஆடிவருந் தேரடியில்
ஆடவரும் பெண்ணும் நலம் கொண்டிட வேண்ட
பங்கினையே பாதிதர பாம்பணிவோன் மேனியிடை
பாகமதைக் கொண்டவளே பாசத்தினாலோ
இங்கிவனின் மேனியினை இததரைக்கு ஈந்துவிட
எண்ணியதால் இக்கொடுமை இழைத்திடுவாயோ

நோகுதடி மேனி உயிர் நொந்தழலில் வாடுதடி
நெஞ்சினிலே ஈவிரக்கம் கொண்டுவிடாயோ
போகுதடிஆவி பிரிந்தோடுதடி நான்மறுத்துப்
போட்ட தடைதானுயிரைக் காப்பதுமெய்யோ
வேகுதடி என்இதயம் வேதனையும் பெருகுதடீ
வெறிபிடித்து உயிர்வதைக்கு ஆவதும் ஏனோ
ஆகுதடிநாளிதெனின் அள்ளிஎடு என்றவன்யார்
எமனை விட்டு எனையெடுக்க இசைந்திடுவாயோ

தீப் பொறி

பயிரென்ப நீருண்டு மண்ணோடு சேர்ந்து
பசுமைகொண் டுயர்வளர்ந் தோங்கும்
உயிரென்ப இறைதீயின் பொறியொன்று மேனி
இணைந்தின்ப வாழ்வென்றும் ஆகும்
கயிரென்று பிணைக்கின்ற வகையாகும் பாசம்
கடலென்றே எமை மூடினாலும்
தயவென்று தான்சக்தி அவளேற்றிப் பாடு
தரும் வாழ்வில் படகென்ற மீள்வு

நிலம்மீது நின்றாலும் சுழன்றோடும் பூமி
நிலைபோலும் நாம் கொண்ட வாழ்வும்
அலைகின்ற தென்றாலும் அகங்கார எண்ணம்
அதைமேவி இருள்கொண்டு மூடும்
வலைகொண்டே நாமள்ள வரும்மீனைப்போலும்
வரையின்றி கோபங்கள் தாபம்
தலைகொண்டு ஒளிமங்க புலனாசை தூண்டும்
தவித்தோடி செய் துன்பமாகும்

உலகென்ற துருவாக்கும் இறைசக்தி அன்பால்
எரிகின்ற நெருப்பென்ற சூடு
பலம்கொண்டு தீபொங்கி வெடிக்கும் கண்ணூடு
பாய்ந்தோடும் எரிகுன்றின் நீறு
நிலந்தானும் நீள்வானம் பேரண்டமெங்கும்
நெருப்பொன்றே நிறைசக்தி யாகும்
கலங்காதே உன்மேனி தீகொண்டபோது
காணும் உன் னுயிர்சக்தி யோடு

அன்னை கொண்டா ளந்தத் தீகொண்ட வெம்மை
அகங்காணும் ஞானத்தின் செம்மை
இன்னும் உன்னுடல்மீது சுடுகின்ற தேது
இது இன்றில் பிணமாகும் கூடு
தன்னாசை சிற்றின்ப தணிவென்ற தோடு
தகர்வாகும் உடலென்றபேறு
பொன்னாசை, பெண்ணாசை மண்ணாசை சுட்டு
புகழ்மேனி அழியும் பூப்போன்று

உள்ளத்தில் நல்லாசை நேர்மைக்கு பாதை
உருவாகும் அறம்கொண்டமேன்மை
கள்ளத்தில் மனம்நாடும் காட்டற்றுவெள்ளம்
கயமைக்கு துணைபோகும்நெஞ்சம்
வெள்ளத்தில் புகழோடு விளையாடி மோதி
விரயத்தில்உயிர்கொல்லும்யாவும்
அள்ளிச் சென்றாலும் உன் ஆத்மாவின்சோதி
அதுகாணும் அந்தத்தின் கூறு 

Friday, 14 June 2013

யார் பயங்கரவாதி ?

மனிதனை  அழித்து   மனிதனே வளரும்
மாபெரும் உலகமடா - இதில்
புனிதமும் கொன்று பெருந் தமிழழித்து
பேய்நின்று சிரிக்குத்தடா
தனியுரம் கொடுத்து தலை கொள்ள விட்டான்
தருமமும் கயவனடா  அட
இனியிதைக் கேட்க எவரிடம் செல்வோம்
இறைவனும் திருடனடா
சிறுவனை அழித்து சிறுமியைக் கெடுத்து
சிரம்கொள்ளும் அரசொன்றடா - அது
அறுப்பதுகழுத்து அருந்துவதுதிரம்
இது அவர் இறைமையடா
உறுப்பது உடலில் இருபது தமிழர்க்
குரிமையே இல்லையடா - இதில்
பொறுப்புள்ள  உலகம் புன்னகை பூத்துப்
பெருமையும் கொள்ளுதட்டா

சிரிப்பதை மறந்து  சிறியவர் கிடந்து
சிறைகள்   வாடுகிறார் - தோல்
உரித்தவர் கொன்று ஒளிப்படமெடுத்து 
உரிமையென்றாடுகிறார்’
அரியணைமீது அமர்ந்தவன் கண்டே
ஆனந்த போதைகொள்ள - மா
விரிந்திடு உலகோர் வெறிகண்டுமேனோ 
விடையின்றி நாணுகிறார்
பாலகர் சிறுவர் பாடங்கள் பயில
படைவதை கூடங்களா - இவர்
ஓலமும் அழுகை ஓசையில் கேட்க 
உயிரெழுத்(ந்) தோடுவதா
காலனின் கையாள் கருதவதேது
கைக் குண்டு குழந்தைகளா - இந்த
பாலறு  வாயர் பாருலகே யார்
பயங்கர வாதிகளா?

தமிழே! உயிர்த் தமிழே!!

இலைதொடும் மலர்விடும் தென்றலும் ஒரு
இமைதொடும் துயில்மறு விழிகளும் - விரி
வலையிடை பிடிபடுங் குளிரலை- இதழ்
விரியிதழ் மணம் கெடும் மலர்வனம் - உரு
கலையினும் எழிலறு கருங்குழல் -இனி
கனிகளை மறந்திடும் பறவைகள் - இவை
நிலைகொள்ளல் புவிதனில் நேரலாம் - உயிர்
நிறைதமிழ் உணர்வின்றி வாழ்வுமோ

மலைநதி வரும்வழி அணைகளும் - விண்
மதியொளி மறைத்திடுங் கார்முகில் - கற்
சிலையெனில் இழந்திடும் நடையெழில் - ஒளி
சிதறிடப் பிரிந்திடும் இலைபனி - தன்
குலைதனை இழந்திடு முதிர்கனி - மெய்
குவலயம் கொளுமெனில் எமதுடை - உயிர்க்
கலைதனும் எழுமியல் தமிழினி - ஓர்
கணம்தனும் பிரிவுண்டோ வாழ்வினி

தமிழெனில் எழில்தரு இளமலர் - தனில்
தருமது இனிதெனும் சுவைநிகர் - விரி
குமிழ் எழு அலைமுகம் தொடு மிளம் -உடல்
குலவுதென் றலின் சுகவருடலும் - உயர்
நிமிர்தரு நிழல் தருஞ் சோலைகள் - அதில்
நிறைகனி மணமெழக் குருவிகள் -கிளை
அமர்களியுற வரும் குரலொலி இவை
அமுதெனும் தமிழிசை பொழியுமே!

விடிவுக்காக...

நீலத்திரைகள் ஆடும்கடலின் நெடிதோர் கரைமீது
கோலத் தரையின் முடிவை எண்ணி மணலில் கிடக்கின்றேன்
சேலை மாதர் சிறுவர் குழந்தை சிரித்தார் கரையெங்கும்
மாலை வானச் சூரியன் போலும் மறைந்தே போனதெங்கே

யாரைக்கேட்பது யாரிடம்சொல்வது யாரை நம்புவதோ
நீரை நிலமும் நெடுவான் பரப்பை நெஞ்சில் பூசித்தோர்
ஊரைக் காத்து உண்மை போற்றி உலகை நேசித்தோர்
வேரைக்காணா வீழும் மரமாய் வீழ்ந்தார் எதனாலே

தூரத்தெரியும் அடிவானத்தில் தோன்றும் நட்சத்திரம்
ஓரம் நின்றே என்போல் நெஞ்சம் ஏங்கித் துடிப்பதுவோ
சூரத்தனமும் போனால் காணும் சூன்யம் இதுவென்று
நேரத்தனையும் எங்கும் இன்பம் நெகிழ கிடக்கின்றேன்

வந்தார் நின்றார் கொண்டார்  போனார் வாசல் கதவாலே
செந்தீ கொண்டார் கொன்றார்  உலகம் சிறுமைப் பட்டதிலே
நொந்தோர் தம்மை நேர்மைகொண்டே நிலைவிட் டுதவாமல்
சிந்தும் குருதி தெரியா வண்ணம் சொல்லி விஷமீந்தார்

இந்தப் பெரிதோர் உலகும் சுழலும் பொய்மைவழிநின்று
வந்தே விதியும் வாயை மூடி ஒட்டும் பசைகொண்டு
சிந்தும் உதிரம் செவ்வானத்தில் செழுமை நிறங் கொள்ள
அந்தோ வானச் சூரியன் உதயம் கண்டால் விடிவுண்டு

மிடுக்காய் எழுவோம்

மீண்டும் தொடங்கும் மிடுக்காய் -பெரும்
மின்னல் இடியென திடமாய்
ஆண்டும் எத்தனை காத்தோம்- இனி
ஆனந்த பூமியைக் காண்போம்
வேண்டும் நமக்கொரு வாழ்வு - இதை
விட்டால் மனிதமும் ஏது
தூண்டும் உணர்வுகள் பொங்க - நீ
தூக்கம் மறந்தினி திரள்வாய்

தீண்டும் மனதினில் தெய்வம் அது
தீரம் மனதிடை சேர்க்கும்
சீண்டும் எதிரியைக் கேட்போம் -எச்
செல்லும் திசையென பார்ப்போம்
கூண்டுக் கிளியென வாழ்வு - இக்
இக் குவலயம் வெளிதனில் மீட்பு
தாண்டும் படிகளும் நூறு இது
தாவும் வேங்கையின் நாடு

திருப்பம் வேண்டும்

காற்றடிக்க கொடிபறந்த திசையும் மாறும்
கழனியிடை கதிர் முற்ற வானம் நோக்கா
நாற்றூன்ற வளர்நிலத்தைக் குனிந்து பார்க்கும்
நாளெல்லாம் கதிரோடத் கமலம் நோக்கும்
ஏற்றிவிட்ட காற்றாடி இழையை விட்டு
இதுவேண்டும் திருப்பமென அறுத்துஓடும்
மாற்றமிலை ஆழிதிரை மண்ணில்வீழ்ந்து
மனம்மாறித் திசைமாறித் திரும்ப ஓடும்

கூற்றதனை மனம்மாற்றிக் கொள்கைமாற்றிக்
கூடும்பல கட்சியினர் திருப்பங்கொள்வர்
தாற்பரியம் பேசுபவன் தண்ணி போட்டு
தலைமாறி நடக்கையிலே குணம்மாற்றுவான்
சோற்றினிலே வளர்ந்த உடல் திருப்பம் என்று
தோள்நிறைய பொன்னடுக்கும்,  திசையை மாற்றி
போற்றி யொரு வாழ்வளித்த சக்தி தெய்வம்
பொய்த்த இப் பூமிதனைத் திருப்பிடாதோ

இற்றைவரை நானிருந்த இயல்பை மாற்றி
எடுத்தெழுது கவிதையென ஆற்றல்தந்து
சேற்றினிலே தாமரையைச் செழிக்க வைத்தாள்
சிந்தனையில் தன்அருளை விதைத்த தெல்லாம்
நேற்றுவரை இல்லாத எண்ணம் இன்று
நெருப்பாகத் தீப்பற்றி  எரிவ தென்ன
ஆற்றுமவள் திண்ணமிது அன்பினாலே
அன்னையவள் எனைமாற்றித் திருப்பஞ்செய்தான்

ஓடிவருங் கார்முகிலும் மலையில் கூடி
ஊற்றுகின்ற நீர்மழையாய் திருப்பங் கொள்ளும்
ஆடிநடை போட்டுநதி அகன்றே யோடி
அடுத்தநிலை அருவியெனத் திருப்பங்காணும்
தேடிவரும் பிறமொழிகள் தமிழில்கூடி
தீந்தமிழில் திரிபுற்று திருப்பஞ்செய்யும்
கூடிவரும் எதிர்காலம் கணினி கேட்டு
குழந்தை மடிபிறந்தவுடன் மவுசைகொள்ளும்

வாழ்க்கையிலே மனிதகுலம் திருப்பம் வேண்டி
வாழவழி தேடிய நற்குடிகள் மீது
காழ்புணர்வே காட்டிமனம் கருணையற்று
காற்றினிலே வாக்குகளை  விட்டோர்தன்மை
பாழ்படவே இனமழிக்கக் கண்டோமன்றோ
பாதையிலே பெருமாற்றம் திருப்பம் ஈதே
வீழ்வதற்கு வேற்றுபலம் வெளிநாடென்று
விசமெடுத்த செயல் அழிவு திருப்பங் கொடிதே

மாற்றமென வாழ்கையிலே வந்ததெல்லாம்
மலையலவு திருப்பங்கள் ஆக்கிவைக்க
காற்றலையி லோடும்வா னொலிமுன்னதும்
கண்டதுபின் வாழ்வில்தொலை காட்சியுமாகி
நேற்றுவரை ஆதிக்கம் செய்தவைபோய்
நெட்என்றும் இணையமென நிலைத்தவாழ்வு
பாற்குடியர் விட்டுமறு படைப்பில் மனிதம்
பற்றிய செல்பேசிஎனப் பலதாம் உண்டே

மாற்றமென்ப வாழ்க்கையின்நற் திசைகள் மாற்றி
மறுபடியும் மறுபடியும் திருப்பஞ்செய்து
வீற்றிருந்து சிறுவர்களை வேகம்கொண்டே
வேட்டை என உயிரற்ற உருவம்கொல்லும்
ஆற்றல்தரு கணனிகளின் விளையாட்டெல்லாம்
அகத்தினிலே வெறித்தனமும் வெறுப்பும் ஆக்கி
மாற்றுகின்ற செயல் நாளை உலகில் செயும்
மாற்றமதை மாற்ற ஒருதிருப்பம்வேண்டும்

விளையாட்டுத் தொல்லை

என்தம்பி என்அன்னைக் கோர்செல்லப் பிள்ளை
இளமையில் தமிழன்னை தனைவேண்டி அன்பை
தன்னென்று கொள்ளவும் தமிழ்வந்துமுன்னே
தரை வீழும் மழை என்று நனைகின்ற தென்ன
பின்னும் தமிழ்பேசும் பெரியோரின் முன்னே
பிழைகொண்டு தமிழ்பாடும் மழலைக் குழந்தை
இன்னும் நற்கலைவண்ண எழில்பூத்த  சோலை
இதிலாடிக் களிக்கின்ற இவன் செல்லப் பிள்ளை

பள்ளிக்குச் செல்லாத பாங்கோடு  நின்றும்
பருவத்தே பயிர்செய்து வளம்காணும் பிள்ளை
அள்ளித்தா என்றாலும் அள்ளியே தருவான்
ஆகா இனிப்பென்றால் அதனையும் இடுவான்
துள்ளித்தான் ஓடுவான் தொலைதூரம் செல்வான்
தீந்தமிழ்ப் பாட்டொன்று தினம்கொண்டு வருவான்
கள்ளத்தனம் ஏதும் கொண்ட நெஞ்சில்லை
கற்பனை மட்டும்தான் காண்கின்ற தொல்லை

எண்ணத்தில் எண்ணற்ற எண்ணுவான் இன்னும்
இல்லையென்றால் அங்கு இருக்குதா மென்பான்
வண்ண த்தில் பேச்சாயும் வார்த்தையில் ஜாலம்
வைத்து ஒன்றுள்ளதை இல்லை யென்றாவான்
திண்ணம் இதோ சொன்ன பொய்தானே என்றால்
பொய்யில்லை அன்றுண்டு இன்றில்லை யென்பான்
கண்ணுக்குள் காண்பதோ கனவென்ற கோடி
கற்பனைகள் நிஜமென்று கதைகூறும் சேதி

மண்ணாக பொன்மேனி மாறு என்று வந்தால்
மகனென்று தாயிடம் கரமேந்தி நிற்பான்
எண்ணெண்று எண்ணாமல் தந்தாள் நிறைந்து
இளமைக்கு ஒருபிடி உரம்கொண்டு சேர்ப்பாள்
அண்டத்தைக் காக்கின்ற சக்தியின் பிள்ளை
அதனாலோ தீகொண்டு எரிகின்ற உள்ளே
மண்மீது வாழ்நாளில் செய்பாவம் தானோ
மலருக்கு தேனின்றி தீசுட்ட மெய்யோ

அன்பொடு வாழ்வோம்

குலவும் தென்றல் தருநல் மணமும் குருவிச் சலனமதும்
நிலவும் கலையும் முகிலும் அழகில் நெடுவான்  நீள்விரிவும்
அலரும் மலரும் இளமைத் தனமும் அதனின் காண்பொலிவும்
புலரும் பொழுதும் புதுமைச் செவ்வான் புதிதாம் ஆதவனும்

வளையும் பிறையும் மறையும் முகிலும் வானக் கருமையதும்
துளையும் மூங்கில் நுழையும் வளியும் தொடரும் ஒலிதானும்
முளையும் வளரும் பயிரும் வயலும் கதிரும் கண்டுமனம்
விளைவும் எளிமை சுகமும் மனதில் மகிழ்வும் நாம்கொள்வோம்

பலரும் பணிவும் பயனும் பதிலும் பழகும் நட்புதனும்
உலரும் விறகும் எரியும்     அனலும் அதுகொள் வெம்மையென
நலமும் அறியா நிலையும் செயலும் இலையாம் எனவாக்கி
உலகம் புகழும் உணர்வும் உரிமை எமதும் எனவாழ்வோம்

வலமும் இடமும் அறியும் மனதும் வரவும்  இளமையொடு
பலமும் பதிலும் பலரின் மனமும் தெளியும் உணர்வோடு
கலகம் சுழியம் கணமும் சினமும் களங்கம் இலையென்றே
விலகும் இருளும் விடியும் உதயக் கிளர்வும் மனங்கொள்வோம்

மனமும்  எளிதில்  மருளும் கணமும் துயரும் தனதென்றே
கனமும் கடிதும் கருவம் கயமை காணும் பொருளாக்கி
வனமும் வளரும் உயிரின் குணமும் காணின் அதைப்போக்கி
தனமும் எழிலும் தகைமை பொருளும் தாங்கிச் செழிப்புறுவோம்

மாற்றங்கள்

செழுமடி வானறு கொடுமழல் மேலிடை
விழும்பொழு தெழுமதி போலும்
பழுவடு மாவிடை பிளகனி போலினி
எழுமொரு வாழ்வது வேண்டும்
குளமிடை நீந்திடு வலையிட தான்பிடி
படுமுயிர் தான் படும்பாடும்
உளமதுநோபட  உணர்வதுதேய்பட
உரிமைகள் குழியிடை மூடும்

மனமது மாஇருள் தொடுமடர் காடிடை
வருமுணர் வாகியபோதும்
கனவது நாளொரு தினமதில் பூத்திடும்
இனமென போய் விரிந்தாடும்
நனவினில் தேன்மழை பொழிநிலையாவது
எமதிடை மனமெடு ஞானம்
சனமுமாகிட விடிவெள்ளி தோன்றிடும்
சகலதும் சுதந்திரம் காணும்

முதுமலை மேவிய மழைமுகில் தூறென
விழிபொழி நீரெழும் போதும்
புதுமலர் தூவிட பெரிதெனும் வீரமும்
அது தர விடிவெழும் காலம்
எதுகுறை தாவியே பலதிசை ஓடிய
எமதவர் கூடிடவேண்டும்
இதுநிறை வேறிட எழுவது வீரமென்
றியல்பிடும் மாற்றங்கள் வேண்டும்

கவிதையும் கற்பனையும்

கற்பனைகள் கவிதையென ஆகாவிட்டால்              
கட்டுரைகள் ஆகிவிடும் கவிதைஎன்றால்
சொற்பதங்கள் சிந்துநடை போடல்வேண்டும்
சொல்லடுகில் அற்புதங்கள் செய்தல்வேண்டும்
விற்பனையை கவிதையிலே காட்டல் என்றால்
விலைமதித்துப் புத்தகத்தை விற்றல் அன்றி
கற்றவகை இலக்கியங்கள் காணும் எல்லாம்
கற்பனையை விட்டதெனில் நிற்குமாமோ

தண்டலையில் மயில்கள் நடமாடிநிற்கத்
தாமரைகள் ஒளிவிளக்கு தாங்குதென்னில்
கண்டதுமென் கவிதையிலே கற்பனைகொள்
களிப்புறு சொல்லடுக்கிலிது காணுதாமே
வண்டினத்தை கண்களென இன்றாசொன்னோம்
வண்ணமுகம் நிலவுஎன்றே கவிதைசொன்னார்
அண்டங்காக்கா கண்ணில் மைதீட்டவா
அழகுமலர் மல்லிகையை அம்புலியேதா

என்பதனை விட்டொழித்தே இலக்கியத்தை
எடுத்தாளின் இன்சுவையை நீக்கியன்றோ
நன்பழுத்த மாங்கனியை உப்பிலிட்டு
நறுக்கிப் புளியிட்டபின் காரம்சேர்த்து
இன்பமென் றுண்ணென்றால் இல்லையென்பேன்
இனிப்பு எனில் அது இனிக்க இனிமைவேண்டும்
என்னளவில்  திசைமாற்றும் திருப்பமானால்
என்கவிதை கற்பனைகள் இழைந்துநிற்கும்

கவிதை போர்

காட்டு மலர்களும் பூத்திருக்க - அந்தக்
கானகத்தில் இளம் மாலையிலே
கூட்டி மணம் கொள்ளும் காற்றுவர -  அதன்
கூட இசையொன்று கேட்டிருந்தேன்
நீட்டிப் பரந்திட்ட வானத்திலே - எந்தன்
நெஞ்சுக் குதிரையை ஓடவிட்டேன்
பாட்டுப் பிறந்தது கற்பனையில் -  அதைப்
பார்த்து நகைத்திட்டாள் காலப்பெண்ணே

ஏட்டில் எழுதும் உன் கற்பனைகள் - அட
எப்போதும் நற்கவி யாவதில்லை
போட்டுக் கிழித்தெறி குப்பையிலே - எனப்
பார்த்தே எனைக்கேலி செய்திருந்தாள்
வீட்டு அனுபவம் வீதிகடை - இன்னும்
வேறு சமூகத்தின் வேற்றுமைகள்
கூட்டி எழுது கவிதை என்றாள் - இந்தக்
கோலம் உன்கற்பனை வேறு என்றாள்

என்ன இதுவென்று ஏங்கி நின்றேன் - எந்தன்
எண்ணம் வடிப்பது இல்லையென்றால்...
வண்ண மலர்களும் உண்மையில்லை - அந்த
வானத்து வெண்ணிலா பொய்வடிவே
மண்ணும் மரமதும் கற்பனையே - இந்த
மாடும் குருவிகள் மாயங்களே
கண்ணில் காணுகின்ற வாழ்விதுவும் - வெறும்
காலம் செய்த மாயக்கற்பனையே

சங்கப் பலகையும் கற்பனையே - அதில்
சார்ந்த தமிழ் சொற்கள் கற்பனையே
பொங்கும் மொழிவளம் கற்பனையே -இந்த
பூமியும் யாவுமெம் கற்பனையே
கண்கள் காணும் வழி வாழுகிறோம் - அந்தக்
காட்சிப் பதிவுகள் மூளையிலே
எண்களும் கூட்டல் கழித்தலென -  அது
ஏற்படுத்தும் விம்பம் வாழ்க்கையன்றோ

அன்னை அளித்தஇப் பூமியிலே நாமும்
ஆடி முடித்துப்பின் போகும்வரை
மின்னி மறையும் ஓர் கற்பனையே இந்த
மேனி அழிந்திடப் பொய்க் கனவே
சொன்ன விதிமுறை பார்ப்பதென்றால் இந்தச்
சோதி இணையு மக்காலம் வரை
சின்னசின்ன மனக் கற்பனைகள் வாழ்வில்
சொல்லும்கவி யாவும் பொய்ப் பதமே

Tuesday, 11 June 2013

தமிழால் இணைந்தோம்

பனிவிழும் இரவில் படரொளி நிலவில்
பதுமையென் றயலிருந்தாள்
கனிவிழும் தருவின் கலகல ஒலிபோல்
கலந்தொரு மொழியுரைத்தாள்
தனித்திடு முணர்வைத் தறித்ததில் மகிழ்வைத்
தழைத்திட வழி சமைத்தாள்
புனிதமென் மனதுள் புகுவழி அறிந்தாள்
பொறுமையை ஏன் இழந்தாள்

வெளியிடை இரவும் விடிந்தொளி பரவும்
வரை இணைந்துயர் பறந்தோம்
ஒளி நிலவேறி முகில்களில்தாவி
உலகமும் மறந்திருந்தோம்
களிமனங் கூடிக் கதைபலபேசிக்
கனவுகள்தனை வளர்த்தோம்
நெளிமலர் வாசம் நிரவிய தென்றல்
நிலையதில் அலைந்திருந்தோம்

தெளிமழை முகிலும் திணறிட இடியும்
தரைபட வரும் பொழியும்
துளியுடன் மின்னல் தொடும் புவியென்னில்
துடிபட உயிர் பிரியும்
ஒளிவர உறவில் எழும் வெளிபெரிதாம்
இரவதின் எதிர்வடிவம்
உளிபட பிரியும் இருவகை  கல்லின்
உடைவென நாம்பிரிந்தோம்

நிலவுகள் சுடவும் மலர் தொட வலியும்
நனைபொழி லலைமனமும்
பலவித உணர்வும் படபட முறிவும்
பலியிட நிலை சரிந்தோம்
குலமகள் நினைவில் குறுகிய பார்வை
கொழுந்தெனத் தீபரவ
உலகமும் கொண்ட உயிர்வெறி போலும்
உழன்றிட உளம் துடித்தோம்

வகை யிதுவாக வசந்தமில் வாழ்வை.
வளமுடன் உருவமைக்க
பகைகொண்ட மனதில் பரிவெழும் வகையில்
பயனுறப்  புதுமை செய்ய
முகைவிடும் மலராய் மறுபடி மலர்வில்
மனமதை தெளிவெடுக்க
புகையனல் அடங்க புனலெழும் குளிராய்
பெருந்தமிழ் தனில் இணைந்தோம்

தகைமையைக் கொண்ட தமிழெனும் அழகைத்
தரும் கவிதைகளைப் படித்தோம்
பகைமையும் மறந்து பைந்தமிழ் ஊற்றில்
பலசுகம் கொண்டலர்ந்தோம்
தொகையெனக்  கவிகள் துலங்கிடும் கலைகள்
தொடரென தொடத் தொடவே
மிகையென மகிழ்வும் மின்னிடும் ஒளியும்
மெருகெழ கரமிணைந்தோம்

****************

தா வீரம் தாயே!

தேன் சுவைத்த நா திகட்டிப் போனதுவோ - அன்றி
நான்குடிக்க ஊற்றுந்தமிழ் நலிந்தனவோ
மீன்பிடிக்கப் போடும் வலை வீழ்வதென்ன - இன்று
ஏன்துடித்துக் காணுதிந்த ஏழைமனம்

தேள்கடிக்கக் காலருகில் வைத்தனனோ - அன்றி
வாள்பிடித்த கைவளத்தில் நின்றனனோ
தூள்பறக்கச் சாம்பலிடும் தீயெழுந்தே - இந்த
நாள்தனுக்கு மேல்நிலைக்கக் காரணமென்

ஏழையிவன் கணக்கெழுத ஏடில்லையோ - ஆயுள்
கூழையென்று தான்முடிக்கக் கூடுதுவோ
வாழை யிவன் ஈந்தகனி தீர்ந்தழிவோ - ஓர்
பேழைதனும் ஆறடிக்குப் பூரணமோ

தூறும் மழையூடு மின்னல் காணுதய்யா - தூர
ஏறுமிருள் வான்பிளந்தும் ஆடுதய்யா
மாறுநிலை என்றுமனம் வேகுதய்யா - ஆயின்
கூறும்விதி கோலமென்று நோகுதய்யா

பேதலித்துக் கொள்ளுமனம் பொய்மையிலா - அன்றி
ஆதரித்த சக்திமனம் போதுமென்றா
காதருகே கவிபடித்த வாழ்விருந்தே - எனை
ஓதரும்பொற் தமிழ் பிரிக்க உற்றதென்ன

நாளிருக்கு தின்னும் என்னை நாடுவிட்டே - உந்தன்
தாளிருக்கும் பக்கம்தலை வைத்திடென
கேளிருக்கும் நாட்களிதைக் கேடுசெய்யா - நீயும்
தோளிருக்கு முரம்பலக்க செய்திடம்மா

உயிர் கொண்ட சிலையொன்று

செந்தமிழில் இசைப்பாட்டெழுதி வைத்துச்
   சித்திர மாடம் சென்றேன் - அங்கு
வண்ணம் இழைத்தநல் லோவியங்களிடை
  வார்த்த சிலைகள் கண்டேன்
சுந்தரமாய்ப் பலசித்திர ரூபங்கள்
  சேர்ந்த அழகிடையே - எந்தன்
சிந்தனையில் கவிகொண்ட உருவத்தை
   செய்ய உளி எடுத்தேன்

சந்தமெழக் கவிசொல்லிச் சிலை செய்து
  சித்திரமாடம் வைத்தேன் - அதில்
தந்த எழில்மேனி கொண்ட நங்கையவள்
  தன்னை வடித்தெடுத்தேன்
விந்தை முகமதில் கொண்ட விழிகளில்
  வேதனை தோன்றிடவே  - அது
எந்தமுறைமையோ சந்தண மென்முகம்
  குங்கும மானதென்ன

வெண்ணிலவும் குளிர் வீசும் இரவிடை
   வியர்வை முத்தெழவும் - அவள்
கண்ணழகில் கருவண்டு துடிப்பெண்ணி
  கைகள் கொண்டே கலைத்தேன்
எண்ண அதிசயம் அங்கவளின் இதழ்
  எள்ளி நகைப்பது போல் - நல்ல
வண்ண உதடுகள்: வார்த்தையின்றி யொரு
  புன்னகை பூத்ததடா

மூங்கில் வனத்திடை  தீயெழுந்த வகை
   மேனி எரிந்திருக்க -அவள்
தூங்கும் குழல் தனில் பூவிருந்தே எழில்
  தேங்கிடச் செய்ததடா
மாங்கனிக் கன்னம் சிவந்ததனால் உயிர்
  மாதெனத் தோன்றியதும் -அவள்
பூங்கை இரண்டினில்  பூத்தமலர் கொண்ட
  புத்தெழில் கண்டுநின்றேன்

ஆங்கே அவளென்னை அன்புடன்மேவிய
  ஆந்தை விழியிரண்டால் - நல்ல
பாங்குடனே எந்தன் பக்கமணைந்திடும்
  பாவனை கொண்டிருந்தாள்
வாங்கு மதியொளி வார்த்த முகமதில்
 வாஞ்சையுடன் சிரித்தே - அந்த
ஏங்குமிளமதி ஏந்திழையாள் கரம்
 ஏந்திய மாலையிட்டாள்

பொன்னெழிலாள் மகள் மேனி நளினமும்
  பூங்கொடி தென்றல்தொட - அந்த
மன்னன் அரண்மனை மாடத்திலே  மின்னும்
  மாவிளக்கின் ஒளியில்
முன்னும் பின்னும் அசைந்தாடும் அழகுடன்
 மோகினி ஆடிநின்றாள் - இது
என்ன விநோதமென் கண்கள் வியந்திட
  எண்ணம் மயங்கி நின்றேன்

சொல்லத் தெரியவு மில்லை அவள்கொண்ட
   செய்கையும் அன்பெழவே -அந்த
நல்ல மனதெழு நங்கைதனை  இது
  வென்னவென்றே வினவ
சில்லெனு மோடைக் குளிர்பரவ நல்ல
  செந்தமிழ்ச் சொல்பவரே - இந்தக்
கல்லை கனிந்திட காணும் வகையின்னும்
  சொல்லு கவிதைஎன்றாள்

நில்லாய்நீ யுமெந்தன் கையில் உருக்கொண்ட
  கன்னிச் சிலையல்லவோ - இந்த
வல்லமை கொண்டுயிர் தந்தது யாரெனும்
  வண்ணம் அறியவுள்ளேன்
சொல்லு என்றேன் அவள் சுந்தரியோ ஒரு
  சின்ன நகைஉதிர்த்து - விந்தை
அல்ல அல்ல இந்தகல்லும் உயிர்பெரும்
  நற்தமிழ் பாவிலென்றாள்


இயற்கையின் காதலன்

நீலவிதானத்து மேகத்தில் பொற்துகள்
நாணிக் கண் கூசலென்ன - எழில்
கோலமுகத்துடை வெண்ணிலவு என்னைக்
கொஞ்சிக் களிக்கையிலே
காலமிட்ட விதி காற்றுவந்தே என்னைக்
கட்டித் தழுவுகையில் - இந்த
ஞாலமிட்ட சதி நள்ளிரவுக் குளிர்
நம்மைப் பிரிப்பதென்ன

ஆழியிட்ட அலை ஓடிவந்து என்னை
ஆசையுடன் தழுவி - சில
நாழிவிட்டு என்ன  ஆனதுவோ மனம்
நோகவிட் டோடலென்ன  
தோளைத் தொட்டு முகில் தூவும்மழை எனைத்
தொட்டு சுகம்மளிக்க - அந்த
வாளின் வெட்டு எனமின்னல்வந்து கொண்ட
வஞ்சம் பிரிப்பதென்ன

போம் வழியே எனைப்போற்றி மலர்தரு
பூக்கள் சொரிந்து நிற்க - ஒரு
பாம்புவந்தே நடுப் பாதைநின்று எனைப்
பார்த்து சினப்பதென்ன
தீம்பழங்கள் கிளை தூங்குவன எனைத்
தின்னென்று காத்திருக்க - ஒரு
பூம்பொதியாம் அணில் பொல்லா மனங்கொண்டு
போய்எச்சில் செய்வதென்ன

துள்ளும்கயல் பொழில் தூங்கும் மலர்தனைத்
தொட்டுத் திரியுமலை - இன்னும்
வெள்ளிமலை அதன் வீரமென்னும் திடம்
வைத்திருக்கும் கடுமை
தள்ளி முகில் நடைசெய்யும்வானின்வெளி
தங்கரத சுடரும் -பெரும்
கள்ளினை கொள்மலர் கன்னி இயற்கையின்
காதலன் நானேயன்றோ

உன்னை அறிவோமோ ?

அம்மையவள் அப்பனோவென் றறியேன் -  எனையீந்த
ஆதாரத் தீயினுரு காணேன்
செம்மையதோ வெண்ணொளியோ தெரியேன் - அண்டமதில்
சீறியுமிழ்  தீக்குழம்பின் வகையென்
இம்மைதனை இவ்வுலகில் கண்டேன் - இங்குதனும்
இருக்குமிடம் ஏதறியா தலைந்தேன்
எம்மையெது காரணியோ வைத்தாள் - இவ்வுலகில்
எல்லையற்ற பாசத்துள் பிணைத்தாள்

பெற்றவளும் தன்வயிற்றில் கொண்டே - மாதமென்ப
பத்துவரை சென்றலைந்து ஈந்தாள்
கற்றுவரக் கல்விபயில் கூடம் - காட்டியும்பின்
காணுலகில் கடமையறி வீந்தாள்
விற்றும்பல நன்மையொடு தீமை - வாங்கியதில்
வேடிக்கைகாண் விதியினோடு கூடி
உற்றதென்ன துயர்நிறைந்த வாழ்க்கை - முடிவிலிங்கு
உள்ளதென்ன வீணுழன்ற யாக்கை

மண்ணுடலில் மாயசக்தி ஏற்றம் - இறுதிவரும்
மரணமென்னும் மின்னுணர்ச்சி நீக்கம்
எண்ணமெனும் புரிந்திடாத அலைகள் - அவையுமீற்றில்
எங்குசென்று முடியுமென்னும் இருள்கள்
வண்ணம், இருள்  வார்த்துசெய்த உலகம் - ஓடிக்கண்ட
வானஜோதி சூரியன் குடும்பம்
கண்ணெதிரில் கலைந்துபோகு மோர்நாள் - நாமுமங்கு
காணுபவை மீதமென்ன சூன்யம்

பெண்ணுருவாம் பிரபஞ்சத் தாயே -  நீயும்வானில்
புன்னகைத்து நிற்பதெங்கு கூறேன்
உண்மைதனை வேலியிட்டு மூடி - இவ்வுலகை
உருளவைத்த மாயமென்ன கூறு
விண்ணிலொளி வீசவிட்டுப் பொய்மை - கொண்டதான
வெற்றுநீல நீள்திரையும் போட்டாய்
கண்ணெதிரே நீயிருக்கும் தோற்றம் - நாமதனைக்
காணுமொரு ஞானமதைத் தா தா

**************

சக்தியவள கோலம்


வெந்தெரியும் சுடுகாடெம் வீடு - அதில்
விளையாடும் பேய்களும்நம் சொந்தம்
செந்தணல்தீ எங்களது மூலம் -  அதில்
சேரவிடா மண்பிடித்த தேகம்
கந்தைதனும் அற்றதொரு காயம் அது
காற்றடைத்தே ஊதிவிட்ட மாயம்
சிந்தைஆசை மந்திரங்கள் ஓதும் அது
செய்வதென்ன ஒன்றுமில்லைப் பாவம்

அண்டவெளி அன்னையவள் தேசம் - காணும்
ஆதவன்கள் சக்தியினோர் பாகம்
கண்ணொளியோ காணும்பகற் கனவு - வகை
காலையொளி கற்பனையின் விளைவு
எண்ணங்களோ  மின்னுகின்ற விண்மீன் - அதற்
கேற்றவகை ஆக்குமெங்கள் மண்ணின்
வண்ணமெழ நாமமைக்கும் வாழ்வு - செயல்
வந்தளவை நிர்ணயிக்கும் வீழ்வு

மண்டபங்கள் மணிமகுடம் மஞ்சம் - இவை
மட்டுல்ல கொண்டதெலாம் சுழியம்
கண்டபடி ஆடுவதும்கனவும் - எங்கள்
காலமதைக் கணக்கெழுதக் காணும்
தண்டமெனத் தாயளிக்கும் நோயும் - நாம்
தரணிகொண்ட வாழ்வும்  சிறையாகும்
கொண்ட உயிர் வான்வெளிக்குப் போகும் - பின்
கூடுவதென் மாஒளியின் மூலம்

தங்கநிலா வீசுமொளித் தண்மை - அதை
தாங்கிமனம் பொங்கியெழுந் தன்மை
மங்கிவரும் மாலையிருள் அச்சம் -துயில்
மற்றவரின் மெய்கலக்கும்  இச்சை
கங்கையெனப் பொங்கி வடிந்தோடும் - பின்
காணுமுயிர்ச் சேர்க்கை புதுரத்தம்
இங்கிவைகள் யாவும் சக்தி யாக்கம் - இதில்
ஏதெனவோர் இயலபறியாத்  தூக்கம்

இங்கிருந்து செல்லுமிடம் நித்தியம் - அதில்
இணைவதுவே முடிவுகாணும் சத்தியம்
பங்கெனவே நிலம்பிரித்த வாழ்வும் - கொள்ள
பாரில் அதைப் பறித்தெடுக்கும் யாவும்
இங்கெமையே ஒட்டிநிற்கும் காந்தம் - அது
இல்லையெனில் வீழ்ந்திடுவோம் வானம்
பொங்குமெழில் இயற்கையுங் கொள் பாசம் - காந்தப்
பிடிப்பைவிட மனிதகுலம் சூனியம்.

*****************************

Saturday, 1 June 2013

வேண்டாமென்றால் வினையேன்!


வேண்டாமென்றால் வினையேன் என்னை
விடு நீ பறந்திடுவேன்
தாண்டேன் உந்தன் தர்மக்கனலை
தாயே செய் வதையேன்
மாண்டான் என்றால் மாந்தர் உலகில்
மறந்தே வாழ்ந்திடுவர்
ஆண்டேன் மாதம் வைத்தே என்னை
ஆக்கும் வேதனை சொல்

தோண்டேன் குழியை தூங்கேன் என்றே
தேகம் எனும்பாரம்
கூண்டே விட்டுக் கொள்ளே னென்று
சொன்னேனா யானும்
நீண்டே காணும் பிரபஞ் சத்துள்
நிற்கும் தெய்வத் தீ
மீண்டான் என்றே மின்னல் சுடருள்
மெல்லக் கருவாக்கு!

நாண்டே நானும் நின்றேனா காண்
நல்லோர் கவியென்றே
பூண்டேன் வேடம்புனைந்தேன் கவிதைப்
பூக்கள் தனைத் தூவித்
தூண்டேன் எனிலும் தீபத் திரியாய்
தாயே தமிழ் செய்தேன்
சீண்டேன் நின்னை சிரித்தே யிருந்தேன்
சினமேன் கொண்டாய் சொல்

ஆண்டேன் என்றே அங்கே ஒருவன்
அழகுத் தமிழ்கொன்றான்
பூண்டேன் புல்லேன் புழுவேன் எல்லாம்
போவென் றுயிர் கொன்றான்
மூண்டேன் தீயை முழுதும் பரவ
முற்றும் கரியாக்க
நீண்டேன் துயரம் நெடுத்தே போக
நின்றாய் சொல் சக்தி

வாழ்க்கை எனும் வழிப்போக்கு

பாசமும் பாவமும் இரண்டும்கலந்தே
  பால்வெளி வீதியில் கோள்களுமிட்டு
தேசமும் ஆழியும் தென்றலும்கொண்டு
  திங்கள் வலம்வரப் பூமியும்செய்து
நாசமும் தீமையும் நாடுகள் கொள்ள
  நாம்பெறும் மேனியை நீரொடு மண்ணும்
கேசமும் தோலுடன் கொட்டவும் இரத்தம்
  கூடிஎலும்புடன் கொள்ளப் பிணைத்து

ஆசை பொறாமைகொள் அகமென ஆக்கி
  ஆடித் துடித்திடும் அங்கமும்செய்து
பாசை ,வினோதங்கள், பயிலென ஆட்டம்
  பேசி மகிழ்ந்தவர் பெண்ணுடன் ஆணை
கூசும் குரோதங்கள் கொள்ளிழி வாழ்வில்
  கூடிக் குலாவென கோலமும் செய்து
பூசிமறைத்தொரு புன்மைகொள் மேனி
  பூஇதுவேயெனக் காதிலும் சுற்றி

கூடி இணைந்தொரு குழந்தையும் பெற்று
  கொண்டபெருஞ் சுக மென்று அழைத்து
மூடி விழித்திட மோகமும் பிள்ளை
  மெல்லச் சிரித்திட மேனி சிலிர்த்து
தேடிப் பொருள்கொள்ள ஆவெனக் கத்தி
  தென்றல் உடல்மணம் கொள்ள முகர்ந்து  
ஓடிநடந்திடும் செய்கை வியந்து
  ஒரடியில் விழ உள்ளங் கலங்கி

பாலைக் குடித்திடப் பரவசமாகி
  பார்த்து அழும்நிலை பதை பதைத்தேது
சேலை படுக்கையில் சிற்றெறும் புண்டோ
  செய்வினை செய்தெவர் விட்டமை தானோ
சூலை வயிற்றிடை செய் அழல்போலே
  சொல்லவொணா வலி சேர்ந்திடலாமோ
மேலை இருந்தருள் செய்கண நாதா 
   மென்மை வலித்திட செய்வது நீயா

என்று துடித்தவள் அள்ளிஅணைத்தே
  ஆற்றிடஎண்ணவும் அரும்பெனும் காலால்
முன்னே யுதைத்திட  முகமதில் பட்டு
 மெல்ல வலித்திட புன்னகை கொண்டும்
தன்னில் விடும்சிறு நீரில் குளித்து
  தலையிடைகேசமும் பற்றியிழுத்து
கூன்என மேனிகிடந்திட முதுகில்
  குதிரையு மோடிக் குலுங்கிச் சிரித்து

ஆயிரமாய் பல வேதனை கண்டும்
  அம்மா எனும் வாய் மழலையில் மயங்கி
போயுளம்  சூட்டினில் போட்டது வெல்லம்
 போலும் இனித்திடும் பாகென உருகி
நேயம்விடுத்தவன்  நம்மைப் படைத்தோன்
  நீட்டியகையினில்  தாயுயிர் கேட்டோன்
காயமழிந்திடக்  கருவதன் உயிரை
  கள்வனென் றேகவர் வேளையிற் கதற

மேனி கொடுத்திடு வானோ புலம்பி
   மீளக் கிடைப்பதோ மெய்யெனும்பொய்யே
மாநிலம்விட்டொரு மாபெரும்வெளியில்
  மங்குமொளிக் கரு மாயவிநோதச்
சூனிய வானிடை சோதியென் சக்தி
  சூட்டினிலே பெரும் சூடெனும் தீயை
தானிணைந்தே நலம் காணில் விடுத்தே
  தன்மை இயல்பெனப் பெண்ணே தேறாய்!