Monday 26 August 2013

வாழ்வீயா வகையேன் ?

சில்வண்டே சொல்லாய்நீ  செழித்தோர் வனத்திடையே
நில்லென் றுனைநிறுத்த நேர்ந்தசெய லுண்டோ, ஏன்
இல்லென்று ஆகுவையென் றெள்ளித்  தமிழினத்தைக்
கொல்லென்று வந்தாரின் கொள்கை சிறப்பதுமேன்

கல்லென்ற உள்மனதைக் கனிந்ததாய்ப்  பூவாக்கி
நல்லெண்ணம் கொண்டேயிந் நாட்டின் நிலையறிந்து
சொல்கொண்டு பேசித்  சுதந்திரமே தீர்வாக்கித்
தொல்லைகொள்ளாதிந்தத் தூயமொழி காப்பார் யார்?

பல்வண்ண மாயைகளைப் பாரெடுத்த தேனடியோ
வெல்லென்று கூறியெழ வீரரையும் கொன்றுவிதை
செல்லென் றவர்வாழ்வைச் சீரழித்துப் போனவரும்
நல்லெண்ணத் தூதாய் நடிப்பதனை நம்பிடவோ

முல்லைக்கு வாசம் முகிலுக்குப் பெய்மழையும்
அல்லலுற ஈழமென் றனைத்துத் தமிழ்மாந்தர்
வல்லமைகொள் காலத்தில் வாள்வீசி ரத்தமெழப்
பொல்லா விதிசெய்தே போயழிய விட்டதுமென்

வல்லூறின் காலிடையில் வாழ்விழந்த சின்னதோர்
மெல்லியவெண் குஞ்சின் மேனிதனைப் போலாகிப்
புல்லாய் விதையாகிப் பூமிக்குள் போய்விடவும்
சொல்லா வதையுற்று சிதந்தழிந்து போகாமல்

பல்லோர் மனம்மாறிப் பண்பட்டும் ஒன்றாகித்
வல்லமை கொண்டே யுள்ளத் திறனோங்கித் தலைதூக்கிச்
சொல்லென்று நீதிதனை சுட்டொளிரும் வெய்யோனாய்
எல்லை யில்நின் றேகேட்க  ஏன் தயக்கம் எழுந்துவிடு

**************

Saturday 24 August 2013

பிரிவின் துயரம் ( கெட்ட கனவாக)

(தந்த தன தன்ன தந்த னானா - தன
தந்த தன தன்ன தந்த னானா)

வெள்ளி யொன்று நிலம் வீழக்கண்டேன் - அடி
வெட்டி மரமொன்று சாயக்கண்டேன்
கொள்ளிவைத்து மனை கூரையெங்கும் - எரி
கொண்டு தீயுமெழக்காட்சி கண்டேன் 
அள்ளிவைத்த முத்து இரத்தினங்கள் - தனை
ஆற்றில் எறிந்திடலாகக் கண்டேன்
தள்ளியெமை வைத்து தானுமுனைக் - கொள்ளத்
தெய்வம் விரும்பிய காலமிதோ

நள்ளிரவில் ஒருசூரியனும் - தோன்றி
நட்ட நடுவானில் நிற்கக் கண்டேன்
எள்ளி நகையிட்டு ஏறியெரு - தினில்
ஏழை உயிர் கொள்ளும் காலன் கண்டேன்
பள்ளியில் கள்ளம் பயிலக் கண்டேன் - ஒரு
பாதையில் முட்களைத் தூவக்கண்டேன்
கள்ளிச் செடி முற்றம் முற்றும்கண்டேன் - ஒரு
காகம் வெள்ளையில் கரையக் கண்டேன்

துள்ளிக் கோவில் வலம், சுற்றுகையில் - ஒரு
தேளும் அரவம் துரத்தக் கண்டேன்
புள்ளியிட்ட வாசல்கோலத்திலே - யின்று
பேயின் முகமொன்று  தோன்றக் கண்டேன்
அள்ளியிட நீரில் ஆயிரமாய்ப் -  புழு
அங்கு மிங்குமென ஓடக்கண்டேன்
சுள்ளிவிறகு பொறுக்கியொரு - வனும்
தீமூட்டி உள்ளே படுக்கக் கண்டேன்

பொன்னி லங்கவில்லைப் பூக்கவில்லை - மனம்
போன இடத்திற்சந் தோசமில்லை
மின்னவில்லை மழை மேகமில்லை - எங்கும்
மெல்ல முளைத்திடும் புல்லுமில்லை
அன்ன முண்ண மனம் கூடவில்ல - அந்த
ஆவின் நறும்பாலும் நஞ்சின் சுவை
என்னே! பிரிந்தனை எங்குசென்றீர் - அம்மா
எப்படிமறந்து வாழுவமோ

காற்றில்வாச மில்லைப் பூக்களில்லை அங்கு
கட்டவிழ்க்கும் இதழ் ஊறவில்லை
தூற்றப் பெரு நெல்லு மூட்டையிலே கொள்ளத்
தோன்றிப் புயலிட்டு ஆற்று நிலை
வேற்றுமை கொண்டில்லம் வீதிவந்து உள்ளே
நாட்டில் நுழைந்தது மிச்சமில்லை
பேற்றென அன்னையும் பேசிமகிழ்ந்திட்ட
பெண்ணின் வாழ்வுமெங்கே, ஏங்குமன்னை!!!

***

Sunday 18 August 2013

தெய்வத்தைத் தேடு (ஈழத்திற்காக)

  

தெய்வத்தைத் தேடியும் காணவில்லை - யெந்தத்
திக்கிலும் நல்லருள் தோன்றவில்லை
உய்வதற் கோர்வழி எங்குமில்லை - யெந்த
ஊரினில் தேடியும் பாசமில்லை
செய்வினை சாபங்கள் கேடு தொல்லை - யிவை
சேர்ந்து இடர் தரும் பார நிலை
மெய்வருத்தம் சாவு மேலும் வதை - யிவை
மீளப் பிடித்தெம்மை ஆட்டும்நிலை

கையைப் பிடித்தனல் கொண்ட உலை - தன்னில்’
காயம் எரிந்திடத் தள்ளும் நிலை
நெய்யை மொண்டு ஊற்றிமேலும் தீயை - ஊதி
நீள வளர்த்திடு தீயின் எல்லை
பொய்யைப் படைத்தயிப் பூமியிலே - ஏனோ
மெய்யைப் படைத்ததை வேக வைத்தே
தொய்யப் பையில்  காற்றும் போகவிட்டால் - அதில்
தோன்றும் நிலையென்ன ஆனந்தமோ

செந்தமிழ்த் தேனடை பொற்தமிழோ - எங்கள்
தேவை உயிர் கொள்ளும் வாழ்வுடைமை
தந்தவளே, இனி உன்படைப்பைக் - காக்க
தாமதமின்றியே செய்கடமை
மந்த மாருதமும் வீசிவர - மாலை
மாந்தர் சுகமெண்ணிக்  கூடிவர
அந்தர வான்வெளி கண்டிருக்கு - மெங்கள்
அன்னையே ஆனந்தமாக்கிவிடு

கன்னங்கருங் காக்கைக் கூட்டமென - இங்கு
காணுமெருதுக ளோட்டமென
பென்னம் பெருஞ்சோலைப் பூமரங்க - ளிவை
பேசரும் நல்லுணர் வோவியங்கள்
உன்னத ஒற்றுமைக் காணயிவை - சொல்லல்
உன்னரும் வாழ்வினில் காணும்வகை
நன்னெறிகற்று நல்லொற்றுமையில் - மனம்
நாளுமுயர் வெண்ணி வாழ்வையெடு

ஒற்றுமை யற்றவர் வாழ்வினிலே - என்றும்
உண்மைச் சுகந்தன்னைக் காண்பதில்லை
பற்றுமிகக் கொள்ளும் சுற்றமெனில் - அது
பாரில் பிழைத்திடும் முன்னைநிலை
மற்றும் எதுவின்பம் சேர்ப்பதில்லை - ஒரு
மந்திரமில்லை உன் வாழ்வு முறை
கற்றறிவாய் கூடி ஒற்றுமையைக் - கொள்ளக்
காணும் வெற்றி எனும் சக்திநிலை

கனவும் களிப்பும் கற்பனையும்

நான் விரும்பும் உலகம்

இருட்டில்லா உலகத்தில் எரியும் வெய்யோன்
எப்போதும் மிளிர்கின்ற இளமை மீண்டும்
கருப்பில்லாப் புவி,பச்சை பசுஞ்சோலைகள்
காற்றோடு மலர்வாசம், குருவிச்சத்தம்
நெருப்பில்லா உணவோடு நேசம்மட்டும்
நிலைக்கின்ற நெஞ்சங்கள், நிகழ்காலத்தின்
உருக்கொல்லும் மன்னர்கள் அரசே அற்ற
ஒன்றாகிக் களிக்கின்ற மாந்தர்கூட்டம்

விரிகின்ற வானத்தைப் போலும் நெஞ்சம்
விளையாடிக் குதிக்கின்ற வெள்ளையுள்ளம்
சரிகின்ற வானத்தை தாங்கும் பூமி
சற்றேனும் பிரியாத நட்பின் சேர்க்கை
புரிகின்ற செயல்நன்மை புனிதக் காட்சி
புலம்பாத நல்லெண்ணப் போக்கில்மாந்தர்
தெரிகின்ற வருங்கால தோற்றம் மின்னும்
தேவையெனில் எதிர்நீச்சல் திளைக்கும் வெற்றி

கலையாத ஏகாந்தம் கன்னித்தீவு
கரைமீது விழுந்தாடும் கடலின் கூச்சல்
அலைநீவும் வெறும்பாதம் அதனால் சில்லென்
றசைகின்ற சுகமேனி அடங்காத் துள்ளல்
தலைமீது கனவாகும் தாகத் தேவை
தாம்தீமென் றாடும்நீர் தாவும் அலைகள்
மலைமீது உறைவேளின் மணிசொல் நாதம்
மகிழ்ந்தாடிக் குதிக்கின்ற மந்திக் கூட்டம்

மலர்ந்தாடும் மகிழ்வோடு மனதைக்கொள்ளும்
மனோ ரம்மியப் பூவாசம் மனதில்நல்லோர்
பலமான உறுதி வீண்போகா தன்மை
பகையின்றி எதிர்காலம் பசுமைத் தேக்கம்
வலதேகாண் இடமென்று வார்த்தைபொய்க்கா
வளம்கொண்ட பேச்சும்நல் வழிகாட்டும்கை
இலதாகும் கொடுஞ்சொல்லும் இளகாநெஞ்சம்
இளமைகொள் புனிதத்தை இழக்காப் பண்பு

குளம்மீது அல்லிப்பூ குதிக்கும் மீன்கள்
கொள்ளின்பப் பாங்கோடு கூடும்வதனம்
உளமெங்கும் பூத்தூவும் இனிதோர் மாலை
இசைந்தோடும் தென்றல்தொட ஏற்கும் உள்ளம்
அளவான அதிகாரம் அணைக்கும் மென்மை
அழகோடு விளைமேனி அருகில் பெண்மை
இளமைக்கு குறையற்ற இசையின் சந்தம்
இதனோடு எழுங்கவிகள் எழுதும்வேகம்

தணலாகிக் கொதிக்கின்ற தங்கச் சூரியன்
தாங்காத வேர்வை நிழல் தருமோர்சோலை
மணல்மீது நடைபோடும் ஆற்றின் போக்கு
மறுபக்கம் ஊற்றுமோர் மலைவீழ் அருவி
கணம் வாழ்வை மறந்தேநின் றாடும் இதயம்
காண்கின்ற இன்பங்கள் காட்டும் தெய்வம்
பிணமாகிப் போகும்நாள் பிறக்கும் மட்டும்
பேசும் இவ்வாழ்வின்பம் பெற்றிடாதோ

தினம் வாடும் மலரே சிரிப்பதெப்படி? (கருவண்டும் மலரும்)



 
(கருவண்டு)
கொட்டி யெழில்விரி சொட்டு மிதழ்மது
கட்டழகு முகத் தேன்மலரே
பட்டெனக் காணிலும் பூவேயுன் மேனியும்
விட்டதென் வாழ்வுமோர் நாள்தனியே
கட்டழ குமேனி பட்டகதிர் வெம்மை
சுட்டதென வரும் மாலையிலே
பட்டு விடமுன்னர் எப்படியோ இதழ்
கொட்டிச் சிரித்துநின் றாய்எதிலே?

(மலர்)
கட்டை கரும்நிறக் கொட்டும் வலியெழத்
துட்ட குணமுங் கொண்டான வண்டே
திட்டமிட்டே யெனைத் தொட்ட பின்புவிட்டே
எட்டிச் செல்லும்நிலை நானறிவேன்
சட்டமிட்டே யுன்னைக் கட்டிவைத் தலில்லை
மொட்டி லிருந்து கண் காணுகிறேன்
வட்டமிட்டே எமைத் தொட்டழித்த பின்பு
சொட்டும் கவலையின் றாவதுமென்

வண்டு:
முட்டு மிதழ்களில் மென்மை தொடுந்தென்றல்
பட்டுவிடச் சொட்டும் தேன்மலரே
எட்டி ரசிப்பதோ கிட்டவந்தே உண்ணா
விட்டுக் கிடந்திட வோதனியே
கொட்டும் மழையுடன் சட்டசட இடி
வெட்டு மின்னல் வரும் வேளையிலும்
சுட்டு விடவில்லைப் பட்டுவிழும் உன்னை
தொட்டதில்லை யெனில் வீண்மதுவே

மலர்:
அட்டமியி லுன்னை அன்னை படைத்தனள்
அத்தனை கும்மிருட்டோ எழிலே
பட்டுமலர்களைக் குட்டை குளமெங்கும்
தொட்ட ழித்தகதை நானறிவேன்
கட்டு மலர்இதழ் விட்ட மணம் மட்டும்
தொட்டுக் கொள்ளுதென்றல் போலில்லையே
பட்டே உளம்கொள்ளும் அச்சம் துயர்தனை
விட்டுமிருப்பது தான்அழகே

தட்டுங் கதவுகள் சொர்க்க மெனிலதைத்
தட்டுவது சரியாம் உயிரே
பொட்டென் றழிவது விட்டவிதி யெனில்
கட்டி யழுதென்ன போமுயிரே
வெட்டு மிருவிழி நட்ட நடுநிசித்
திட்டென் றிருள்தனில் காண்பதுண்டோ
பொட்டு மிட்டபூவை பற்றியிழுத் தென்னைக்
கட்டி மாலையிடல் ஏனறியேன்

கட்டை வயலினில் முற்றும் புதுநெல்லு
வெட்டிக் கதிரடித்தார் பின்னரே
கொட்டும் வெயிலிட்டு சுட்டுலர்ந்த பின்னர்
தட்டிலிட்டுப் பதர் நீக்கிடவே
எட்ட வீசி வருங் காற்றுள்ள போதினில்
விட்டு மிருப்பரோ வேளையதே
நட்டமின்றித் தூற்ற வேண்டுமன்றோ அதை
நாமுங்கொண்டே இன்பங் காணுகின்றோம்

முட்டி வெள்ளம் வரும் நட்டமிடும் இங்கு
முற்றும் பறிதெங்கும் வீசிவிடும்
கட்டி யிழுத்தவை வெட்டி மின்னலிட்டுத்
தொட்ட மரம் சாய்த்துக் கூச்சலிடும்
விட்ட விதியென்ன தட்டியெவர் கேட்கத்
தொட்டதை விட்டுச்சென் றாவதுண்டோ
மட்டும்நீ வாழென விட்டதே நாளெனில்
மிச்சமென சிரித் தாடலன்றோ

******************

எல்லாம் பெண்தானே!

 

மெல்லச் சிவந்திடும் அடிவானம் - அதில்
மேலே எழுந்திடும் கதிரோனும்
சொல்லக் கடிதெனும் பெரும்பாவம் - நிறை
சுற்றும் புவியிடை வர அஞ்சி
வல்லப் பெரிதொரு மலையோரம் - அதன்
வீசும் கதிர்களைப் சிறிதாக்கி
முல்லைப் பூநிறம் காண்முகிலுள் -  தன்
மூளும் தீயினை மறைதெழுந்தான்

வல்லோர் சிறகொடு நெடுவானம் - தனில்
வாழ்வைச் சுவையெனத் தினம்காணச்
செல்லும் குருவியின் விழிதானும் - அச்
செவ்வா னழகைக் கண்டஞ்சி
அல்லல் தருமொரு ஆவேசம் -  தனும்
அடிவான் கொள்ளக் காரணமென்
இல்லைப் புவியென ஆக்கிடவோ -  என்
இடர் நேரும்என விழிமூட

நல்லின் கனிபிழி திராட்சைமது - அதன்
நடுவே மிதக்கும் உருள்பனியும்
மெல்லச் செவ்விதழ் வாய் வைக்கும் - முகில்
மேலைகுமரியும் உண்ணல்போல்
அல்லிக் குளமிடை அணைதென்றல் - அதன்
ஆசைத் தழுவலில் தரு இலைக ள்
சல்லச் சலசல என்றாட  - அச்
சலனம் கண்டே மேற்கினிலே

வெள்ளைச் செறியதி பிரகாச - மனம்
வெந்தே தகித்திடும் வெய்யோனும்
கொள்ளை எழில்தரும் புவிமாதின் -  கண்
கூடிக்களித்திடும் மனதோடு
அள்ளக் குறைவில அதிபோக -  எழில்
அணங்கைக் கண்டவன் அறிவின்றித்
தள்ளி திணறிடத் தொட்டார் போற்-  தன்
தகிக்கும் கதிரால் தொட்டிருக்க

அன்னோர் அழகிய காலையிலே -  விதி
ஆக்கும் வினைதான் பொழுதாக்க
இன்னோர் நாள்வீண் என்றோர் தாள் கை
எடுத்தே கிழிக்கும் நாட்காட்டி
முன்னே நடப்பதும் அறியாத பல
மொழியிற் பிளவுறு நிலமாந்தர்
தன்னைத் தான்பெரி தென்றெண்ணி -  இத்
தரையை உதைக்கும் கால்கொண்டு

இல்லத்துணை நலம்பெரிதாக  - இவர்
எண்ணிக் கொள்ளினும் பிறிதோர்பெண்
செல்லாத் தகவிழந்துருள் காசாய் -  இச்
செகம்மீ தவருயிர் வெறும் காற்றாய்
கொல்லத் துணிவுடன் கைகட்டி - அவர்
காணும் தூய்மையைக்  கெடுத்தவர்கள்
இல்லதரசியின் விழிமுன்னே  - இவர்
எப்படி  காணுவர் இயல்பாமோ

சொல்லத் தகையில வெறும் வாழ்வில் - முடி
சூடும் பூவென அழிதேகம்
இல்லை எனமுடி வுறும் நாளும் - இவ்
வியற்கை எனுங்குறுங் கனவோடும்
நெல்லைத் தின்றதில் வளர்தேகம் - தனில்
நீரை வார்த்திடும் உணர்வேகம்
தொல்லை தருகினும் சுகம்தேடி - இத்
தொலையும்  இருளிடை சுழல்பந்தில்

கண்ணைக் குருடென வைத்தண்டம் அதில்
காணத் தனை மறை சக்தியவள்
பெண்ணிற் சுகமெழ அவள்போற்றிப் பின்
பேசற் கிழிதெனும் கொடுமைசெய
வண்ணக் குலமாம் விழிமாந்தர் தனை
வாழக் கண்டனள் எதனாலே
மண்ணிற் கலியொடு மென்மேலும் இம்
மாதர் குலம்கெட என் செய்வோம்

மென்மைப் பூவெனக் காணிதயம் - அதில்
மின்னல் போலிடை எழுங்காதல்
தன்னைப் பெரிதென மனமெண்ணும் - கடுந்
தகிக்கும் வெய்யோன் செயலாகி
பின்னிப் படர்கொடி மீதுள்ள  - பல
பூவைக் கருக்கிடும் வெய்யோனாய்’
வன்மைப் புயலெனும் வீச்சத்தால் - அவ்
வாழ்வைக் கருக்குதல் எதனாலே

பொன்னும் பொருளும் பூவேண்டாம் = இப்
பூவைதானும் பொன்னேர் காண்
தின்னத் திகட்டா தேனமுதம் - என்
தேவை இவளென் றுயிர்காத்து
இன்னோர் பெண்மற் றினமென்றால்  - அவள்
இம்சைசெய்து சீரழித்து
சின்னப் பாவைஉடல்குறுக - அவள்
சிதைவில் ஆனந்தம் கொள்ளுவதென்.

இரவின் மாற்றம் எழுமானந்தம்



புள்ளினங்கள் ஆர்க்குமெழிற் பூமணத்தில் காற்றிழையும்
வெள்ளிமலை மீதுறங்க வந்த முகில் நீர்பொழியும்
கள்ளமிலாப் பூக்கள்பல காற்றிலுதிர்ந் தாடிவிழும்
வெள்ளிரதம் ஏறிமனம் விண்ணலைந்து போதைபெறும்

தெள்ளெனும்நீ ரோடையதில் திகழுமெழிற் செழுமலர்கள்
அள்ளிவருந் தென்றல்குளிர் ஆக்கிடமெய் குளுகுளெனும்
துள்ளிவிழும் மீன்கள் தமைத் தூயமகள் வதனவிழி
எள்ளிநகை யாடுமென எழுந்தகணம் நீருள் விழும்

கள்ளியதன் முள்ளெனவே காரிகைதம் கூர்விழிகள்
உள்ளிருந்த மௌனமெனும் ஓர்மொழியின் ஓசை தர
நள்ளிரவின் திங்களொளி நாற்திசையும் பனிமலரின்
கொள்ளையிடும் வண்ணம் மனம் கொண்டிருக்கச், செந்தமிழின்

இன்னிசையும் காற்றில்வர எழும் ஒலியில் சிலுசிலுப்பு
புன்னகையைப் போலுதிர்த்த பெருமரங்கள் இலைச்சலனம்
அன்னம் சுனை நீந்துமெழில் அதன் அசைவில் எழுமலைகள்
சின்னஒலி செய்தலைந்து சோர்ந்து விழும் மண்மடியில்

பின்னிருந்து மீண்டுமெழும் பேதமைகொள் சிறுஅலைகள்
தன்னிழந்த வகைநடந்தும்  தவழுமெழில் பொய்கையிலே
மென்னிதழ்கள் வாடிமனம் விரகமுற்ற  தாமரைகள்
என்ன இவன் சென்றகதிர் எங்குளனென் றையமுற

மின்னுமொளித் தாரகைகள் விடியும்வரை கண்சிமிட்டும்
தன்னிலையும் விட்ட இருள் தலைமறைந்தும் உருவழிய
என்னவெனக் கேட்ட சுடர் எட்டியெழும் செவ்வானம்
தன்மையிலே செம்மைகண்டு தாவிஎழும் புள்ளினங்கள்

பொன்கதிர்கள் பூமியினைப் பொழுதணைத்துச் சேதிசொல்ல
அன்னை தமிழ் அருங் குறளும் அவ்வை சொன்ன நல்வழியும்
சின்னவர்சொல் குரலினிக்கத் தென்றலதை வாங்கிவர
தென்னையிடை நீள்இலைகள் இன்னும் மெருகூட்டிவிட

மன்னவரின் ஆட்சியிலே மாந்தர்குறை கேட்டொலிக்கும்
பென்னம் பெரு முரசொலிக்க பேசுங்குரல் விண்கலக்க
பன்னசாலை உள்ளிருந்து பரம்பொருளை வேண்டுபவர்
முன்னொலிக்கும் தெய்வ இசை முழுதெழவே ஆனந்தமே
****************

மீண்டும் குளிர்ந்தது காலை



மழைபொழியுது இடியிடிக்குது
  மனங் களிக்குதடி - இது
மாரி காலம் போலத் தூறி
  மலர் உதிர்க்குதடி
குழை பறிக்குது குருத்து டைக்குது
 குருவி கத்துதடி .- மெய்
கூதல் ஆக்கி ஊதுங் காற்று
  கோணச் செய்யுதடி
பழைய சாளரக் கதவு காற்றில்
  படப டக்குதடி - அதைப்
பார்த்துப் பூனை பயந்து நடுங்கிப்
  பதுங்கிச் செல்லுதடி
குழைந் துருட்டிய மணலை நீரும்
  கொண்டு போகுதடி - பின்
குறையில் விட்டுதன் கோலம் மாறிக்
   குதித்துப் பாயுதடி

தூறல் கொட்டுது தூர மின்னுது
  தொலைவிற் சத்தமடி - இது
தூக்கி வாரிப் போட்டு மனமும்
  துடிக்கச் செய்யுதடி
மாற லற்றது மலையில் நீரும்
  மீள்பெருக் கமடி - அது
மளம ளென்றிடை ஓடிப் பாறை
  மறைவில் துள்ளுதடி
கூற லென்னது குரங்கு மனதும்
  குறுகுறுக் குதடி - இந்தக்
கொட்டும் மழையில் குதித்தே யாடக்
   கொள்ளு தாசையடி
மீறல்கொண்டொரு காற்று வந்திடை
  மரம் உலுப்புதடி - அது
மிரள வைத்தொரு மனதி லச்சமும்
  மேவச் செய்யுதடி

சோலை மரங்கள் சிலுசி லிர்த்திடச்
  சொட்டும் நீரையடி -அவை
தோளிற் பட்டதும் சிறுவர் கூட்டம்
   துள்ளும் மான்களடி
காலைச் சுற்றிய சேலை பற்றிடும்
  கன்னிப் பெண்ணொ ருத்தி - அவள்
கவனம் நீரில் கால் சறுக்கிடாக்
  காக்கும் எண்ணமடி
நூலைப் போன்றிடை  வெள்ளிக் கம்பியின்
  நீளத் தூறலடி - அது
நெஞ்சிலாக்கிய இன்ப மென்னது
  நினைவுச் சாரலடி
காலை பூவெனக் காணும் மனதில்
   களிப்பை ஊட்டுதடி - மெல்லக்
காற்ற டித்திடக் கன்னம் சில்லெனக்
    காணும் முத்தமடி

வேலை செய்திடப் போகும் மனிதர்
  வியர்வை போனதடி - அவர்
வேகும்மனதில் விடியல் பூக்கள்
  விருப்ப மூட்டுதடி
சாலை பக்கத்தி லாடும் மரங்கள் 
  சற்று லுப்புதடி - துளி
சேர்ந்து வீழ்ந்திடப் பறவைகூட்டம்
  சீற்றம் கொள்ளுதடி
நாலை மூன்றொடு கூட்டிப் பார்த்திட 
   ஏழு வந்ததடி - இந்த
நாளில் மீண்டுயிர் கொண்டு வாழெனும்
  நேரம் வந்ததடி
பாலை வெம்மணல் நீர்பொழிந் தெனப்
  பார்க்க இன்பமடி - இந்தப்
பாவி யுள்ளமும் பாட்டெ ழுதிடப்
  பார்த்துக் கொட்டுதடி

---அன்போடு கிரிகாசன்

குயிலின் ஆசை

சோலைக் குயிலுக்கும் ஆசை பிறந்தது
சுற்றியெங்கும் பேரெடுக்க - அது
காலைக்கதிர் வரக்காற்றில் பறந்தது
காணும்படி ஊர்முழுக்க
சாலை மரத்தினில் சற்று இருந்தது
சோர்வெடுத்தே கால்வலிக்க - அது
மாலைவரை இசைபாடிக் களித்தது
மக்களெல்லாம் பேருரைக்க

நாளும் பொழுதிருள் கொள்ளப் பறந்தது
நாடித்திசை இல்லம் வர- அங்கே
ஆளூம் தனதன்பு தாயும்  இருந்தது
அஞ்சிமனம் நொந்திருக்க
மீளும்,செயலுண்டோ என்று நினைந்தனன்
மேதினியில் நீ பறக்க - அன்னை
மூளும் மனத்துயர் வேண்டியதேன் குயில்
மீளுமன்றோ ஆசைவிட

எங்கு பறப்பினும் சந்தமிடும் சோலை
இந்தகுயில் இல்லமன்றோ - அது
தங்குமிடம் இல்லம் சொர்க்கமெனும் போது
தாயை விட்டும் சென்றிடுமோ
பொங்கும் மனத்துயர் போதுமினித் - தாயே
புன்னகைப்பாய் என்ற குயில்
அங்கம் சிலிர்த்திடக் கொண்டபுகழ் தனும்
அத்தனையும் போதுமென்றாள்

வானிற் பறப்பினும் பட்டமது  மீண்டும்
வந்துதரை இறங்கிடுமாம்
தேனின் சுவைதேடி வண்டு எழும்புகழ்
தேன் திகட்ட வீடு வரும்
தானே தரைவிட்டு நீர்க்குளத்தே வாழத்
தாமரையும் சென்றிடுமாம்
ஏனோ இருப்பது மண்ணென் றுணர்விட
இட்டுவேரை பற்றிடுமாம்.

காற்று மலைவது பூவின்மணங் கொண்டு
கானகத்தே பேரெடுக்க
ஆற்றுவெள்ளம் மலை ஊற்றெடுக்கும் அது
ஆழிசெல்லும் ஊர்பசப்ப
சீற்றம்கொண்டே கதிர் சேர்த்துவைக்கும் அது
சுட்டேஆவி வானிலெழ
மாற்றமில்லை மழைமேகமென்றாகிடும்
மீண்டும், மலைசேர்த்தணைக்க