Monday, 16 June 2014

ஒன்றுமே யில்லை

உலகம் என்பது ஒன்றுமில்லை -ஓரு
ஒளியின் பிம்பங்கள்
கலகம்  என்பது வேண்டாமே - அவை
காட்சிக் கனவுகளே
விலகும் உயிரின் வீடெங்கே -அதன்
வேண்டிச் செல்வதெங்கே
உலவும் வரை நாம் காண்நிழலோ - வெறும்-
உலகக் கனவுகளே

உண்மை யென்றால் பிணமாகும் - போ
துள்ளோர் வெம்மைதனும்
தண்மை கொள்ளப் போவதெங்கே - அதன்
தலைமைத் தீயெங்கே
பெண்மை செய்யும் பிறப்பென்றால் - அப்
பிறப்பின் கட்டளைகள்
விண்ணில் இருந்தே வருகிறதா - அதன்
வெம்மைத் தொடர்பெங்கே

கண்ணில் தெரிவதென் ஒளிபாய்ந்தே - உள்
காணும் திரைமீது
எண்ணத் துளிகள் இயக்கிவைக்கும் - ஒரு
இன்பக் காட்சிகளே
வண்ணக்கோலத் திகழ்வெல்லாம் - ஓர்
வானத்தெரி வில்லாய்
வார்த்தை ஜாலத்தெறி சத்தம் -சேர்
வாக்கும் மாயைகளே

பிறப்பும் இறப்பும் ஏதறியோம் - இப்
பாசங் கொண்டன்பில்
கிறங்கும் பருவத் தெழில்மேனி - மதன்
கைவில் மலரம்பும்
உறங்கும் மேனிப் பிணைப்புடனே - நாம்
உருகும் சிற்றின்பம்
திறமை புகழும் தேசமெனும் - நம்
தேகக் கிளர்வெல்லாம்

முதுமை கொள்ளக் கனவாகி - நம்
முடிவை நோக்குகையில்
பதுமை யாகிக் கிடப்பதுவும் - தீ
பரவச் சாம்பலென
வதுவை செய்தே வாழ்ந்திட்ட - பல்
வகையாய் தித்தித்த
மதுவாய் இன்பம் துய்திட்ட - மலர்
மேனிக்காவதென்ன

படகில் செல்லும் பிரயாணம் - நம்
பக்கத் துணையுடனே
கடக்கும் ஆற்றின்நடுவினிலே-  அது
கவிழ்ந்தே போனாலும்
திடமாய் ஒருவர் பிழைத்திடுவர் - தேர்
என்றே விதிகூறின்
விடவும் உயிரைத் துணிவார் யார் =- துணை
வாழச் சிதைவாயா

பாசம் என்றால் பற்றுதலும் - தீ
பற்றிக் கொள்மேனி
வாசம் கொள்ளும் தீச்சூட்டின் - வகை
வீச்செழும் தொழிற்பாடே
நாசம் செய்யும் நிலையென்னில் - அந்
நாட்டம் கொள்ளுறவின்
வேசம் கலையும் வெறுப்பாகும் - தன்
வழியை திடமாக்கும்

யாவும் போலிநாடகமே - இந்
நாளில் நாம்காணும்
மேவும் இன்ப வாழ்வெல்லாம் - ஒர்
வெள்ளித் திரைக்காட்சி
தூவும் மழையின் மின்னலிடி - அங்கு
தோன்றும் பெரு வெள்ளம்
தாவும் நதியாய்க் கடல்சேர்ந்தால் -இடி
மேகம் பொய்யன்றோ

ஆடும் கலைஞன்

ஆட்டமென்ன ஆடும்வரை ஆடுவேன் -நான்
ஆண்டவன் கைப் பம்பரமாய்  சுற்றுவேன்
கூட்டமென்ன கூறினும் நின்றாடுவேன் - நான்
கொப்பிருந்து கொப்பில் தாவி ஓடுவேன்
நாட்டமென்ன ஞானமதின்  கூட்டுத்தான் - அந்த
நாள்வரையும் கேலி கூத்து ஆட்டம்தான்
வீட்டினிலே வெறுமை கண்ட வேட்கைதான்-  இன்று
வேதனையில்  விதி நடத்தும் வேட்டைதான்

கோட்டையிலே கூத்தடிக்கும் மன்னவன் - நான்
கொண்டதிலே சூனியத்தின் காவலன்
போட்டியிலே  புலமையற்ற நாவிலன் இன்னும்
பொய்மை கூறும் ஆற்றலற்ற கேவலன்
பாட்டினிலே ராகமின்றிப் பாடுவோன் -அவை
பார்த்திருக்கத் தப்புத்தாளம் போடுவோன்
வாட்டியவர் வெஞ்சினங்கள் கூட்டுவோன்  கொண்ட
வாழ்க்கையிலே  வேடிக்கைசெய் விநோதனன்

நாட்டியத்தில் நானு மோர்கோ மாளிதான் - நல்ல
நாலு கலை தேர்ந்திடாத  பாவிதான்
பூட்டிவைக்க ஏதுமில் லப்பாவிதான் - என்
புன்னகையில்  கோணும் மனம் நூறுதான்
சூட்டினிலே சோதிபெற்ற  மீதிநான்  - பதில்
சொல்ல வந்தால்நாஉழறும் பேடிதான்
ஆட்டிவைக்கும் சக்தி கொண்ட அன்புதான்  - அவள்
அரவணைக்கும்  வரையிலாடும் பொம்மைதான்

எந்தன் நெஞ்சம்

சொல்லக் கொதிக்க வில்லை நெஞ்சம்  - ஒரு
சூடும் உணர்வுக் கில்லைப் பஞ்சம்
செல்லக் கருதும்வழி தேடும் - மனம்
சேரக் காலில் வலிவேண்டும்
மெல்லக் கறுக்கும் அடிவானம் -  அந்த
மேகத்திடை ஒளிரும் திங்கள்
இல்லைக் கருமை கொண்டதேனோ  - இது
ஏனோ அமாவாசை தானோ

பல்லைக் கடித்தும் சினமில்லை - இந்தப்
பார்வை அனல்பறக்கவில்லை
வெல்ல நிலையெடுக்கும் தன்மை - அந்த
வீறின் எழுச்சியிங்கே இல்லை
பொல்லைப் பிடித்தகுனி நடையும்  - அங்கு
பேசுந் திருமொழியில் குழைவும்
கல்லை நிகர்த்த மனம் மீது  - இறை
 காணக் கொடுத்து வைத்ததேது

மல்லுக் குகந்த இளமேனி - அது
மாறிக் கிடக்கு துயில்மேவி
வில்லுகிணை கூரின்பார்வை  - அது
வெளுத்துக்கிடப்பதென்ன, மேனி
வல்லோர் எரியுந் தீகொள்ள  - உடன்
வாவென் றழைக்கும் விதி சொல்ல
கொல்லக் கணங்கள் எண்ணும்போது இங்கு
கொதிப்ப தெப்படியோ கூறு

முல்லைக் கொடிபடர்ந்து பூக்கும்  அதன்
மோகமலர் வழிவை நோக்கும்
செல்லக் கிளி யிருக்கும் கூட்டில் - அங்கு
திறக்கும்  கதவுமொருநாளில்
அல்லல் படும் உயிரென்றோடி  - அது
அடுத்த பெருவெளியை நாடி
இல்லம் எனும் உயிரின் ஜோதி  அதில்
இணையும் வரை கொதிக்கும் நெஞ்சம்

இடது வலதும் என ஓடும் -  பின்
இடமும் மாறிமேல்கீழும்
தொடவும்  உணர்வு குதித்தோடும் - பின்
தொலைவென் றிழுத்து  எங்குமோடும்
குடமும் எனக் கொள்ளும் குருதி அதை
கூட்டி இழுக்கும் விசை தூண்டி
நடமும் கொள் இதயம் சூட்டில் - ஒரு
நாளில் கொதித்திணையும் தீயில்

தென்றலே புயலாகும் தீரம் தா

தென்றலே வாராயோ தேடுவதென் எனைத்
  தீண்டவும் மாட்டாயோ -பக்கம்
நின்றவ ளன்னையும்  நீவிய கூந்தலை
  நீதொட்டுச் செல்லாயோ - இன்று
சென்றதென் வாழ்வினில் சீரிய தாம்மனச்
   செம்மையும் காணேனே - இங்கு
ஒன்றென நின்றனள்  உள்ளத்தில் மெல்லியள்
   உன்துணை கூடாதோ

கன்றென ஆவினைக் காணத் துடித்திடும்
  காலமும் கொண்டேனோ - இதில்
வென்றவர் செய்கையில் வீணில் கொடுமையை
  வீரமென்றார் நீயோ -அன்று
தென்றல் என்றாகிடத்  தேசம் நடந்ததென்
   தீப்புயல் ஆகாயோ -  அவர்
சொன்னது பொய்மைகள் சுடெழவோ புன்மை
 சுக்கு நூறாக்காயோ

மென்னலைப் பொய்கையின் மாமலர்மீதினில்
மேவிடும் மாலை யிருள் - அதைப்
பொன்னென ஆக்கிடப் போதை தரு மாலைப்
போதினில் மஞ்சள்வெயில்  நின்று
வென்றனர் இன்றென  வீரத்தமிழினம்
வெற்றியைப்  போற்றி மனம் - கொண்ட
துன்பியல் நீங்கிடத்  தோழமை  கொள்ளுமோர்
தோற்றமும் காண்போமோ

மின்னிடும் வானத்துப் பொன்னிழை  தாரகை
முற்றும் ஒளிர்ந்துநிற்க- தெய்வ
சன்னதியில் கரம்  கூப்பித் தொழுதிட்டு
சேர்நுதல் நீறுமிட்டு  - நல்ல
பன்மலர்வாசமும் சந்தனமும் எழப் 
பாடியே இன்பமொடு - இனி
செந்தமிழ் நாவில் திறன் கொள்ளுமோ வந்து
தென்றலே கூறிவிடு

மென்றவர் உண்டதோ எங்கள் சுதந்திரம்
மீண்டும் பிறப்பதெப்போ  -  இனி
ஒன்றெனக்கூடிட  எம்தமிழ் வீரமும்
ஓங்கி யொளிர்வதெப்போ - நீயும்
தென்றலே வன்புய  லாகிட தேசத்தின்
தொன்மைத்  தமிழினத்தை - இன்று
நன்றெனக் காத்திட நாட்டில் சுழன்றிடு
நன்மையைத் தாராயோ

இன்று தவித்திடும்  என்னுயிர் தன்னதில்
ஏற்றமும் தந்து செல்லாய் - அந்தக்
குன்றில் உதிக்கின்ற சோதியும்போல்முகம்
சிந்திடும் புன்னகையில் - மனம்
ஒன்றிடல்போலிவள் மங்கைமகிழ்ந்திட
மாபெரும் தூய்மைகொண்டு- சுழல்
தென்றலே வந்தெனைத்  தீண்டிச்சிலிர்த்திடத்
தீரமும்  தாராயோ

குரல்கள்

எங்கிருந்தோ சில பல குரல்கள்கேட்கின்றன:

காதலைப்பொ சுக்குவோ மெம்
 கண்கள் மூடிக் கொள்ளுவோம்
பாதகத் தருக்கள் மீது
  பாவை யென்னும் பூக்களை
மேதகைப் படுத்துவோரை
  மோதியும் முன்னேறுவோம்
பூ`தகத் தக`ப் பொன்மேனி
  பேசுவோரைச் சாடுவோம்


(கூட்டத்தில் ஒரு பெண் பாடுகிறாள்)

தட்டி இருகைகள் ஆடுங்கடி யிந்த
தாமரைப் பாதங்கள் தூக்கியடி தன்னை
எட்டி வைத்தே சுழன் றாடுங்கடி யிந்த
ஏந்திழை பூவையர் ஈனமென்றே யெண்ணிக்
கொட்டி நகைப்பவர் கூற்றினையே என்றும்
கொண்டவர் ஞானமும் குற்றமென்றே விரல்
சுட்டி கலந்திங்கே ஆடுங்கடி யவர்
சொல்லை மறுத்தின்னல் போக்குங்கடி

ஒட்டியுறவாடி கொண்டதென்ன ஒரு
உற்ற வலியுயிர் கொள்ளுதெனத் துணை
எட்டிக்கரம் கொண்ட இன்பமெலாம் இன்று
இல்லையெனில் இழிவாகிடுமோ சுயம்
விட்டு மறந்தொரு வாழ்வினையே கொண்டு
வீணில் கிடந்தனம் சேறுஎனில் அதை
கட்டி உடல்செய்த தெய்வம்மென்ன அதன்
காரணம் தன்னை இகழ்வதோடி


(அங்கே நிற்கும் ஒருஆணின் குரல் தொடர்கிறது~)

தேடிமுதுமையும் வந்திடலாம் இளஞ்
தென்றல் மறந்த பூவாகிடலாம் மனம்
ஆடி மகிழ்ந்திட்ட காலங்களை இன்று
ஆகாத தொன்றெனில் ஏதுநினை வதில்
சூடிமகிழ்ந்து வண்டாளும் மலர் தனைக்
கொண்டவள் கூந்தல் நுகர்ந்து மணம் அது
நாடியதேது என்றானந்தமும் கொண்ட
நாளும், மறப்பரோ ஞானப்பெண்ணே

தேகமதை நினைந்தாலும் பிழை அதை
தேடும் உணர்வினைக் கூறல்பிழை யெனில்
ஆகத் தமிழ் காதல் சொல்லவிலை யெனில்
ஆன முழுமை இழந்ததென்பேன் உமை
பாகனும் காதலை கொண்டவனே அவன்
பாசமகன் வேலன் தேடியதில் பக்கம்
ஏகமல்ல இரு தெய்வத்துணை கொண்ட
தேது இது குற்றம் குற்றமதோ

கூடிய தேவர்கள் இந்திரனும் அங்கு
கொண்ட ஒளிமுகச் சந்திரனும் பக்கம்
நாடியணைத்தது பெண்களன்றோ அவர்
நம்மில் உணர்வினை தந்தாரன்றோ நாமும்
ஆடிக் களைத்துடல் சோர்ந்திடலாம் அதன்
அற்புத சக்தியும்போய் விடலாம் உள்ள
மோடி வெறுப்பதில் நியாமுண்டோ அதன்
உன்னத சக்தியை தூற்றிடவோ

எங்கு மிருப்பது காதலொன்றே அதை
உள்ளம் நினைத்திடல் அன்பு ஒன்றே அதை
இங்கு படைத்தவர் தெய்வங்களே உயர்
வின்றி  காதல்கொளும் இச்சைதனை இழிந்
தங்கு பச்சைபச் சொல்லடுக்கி அதில்
தன்னும் மனம் கூசச் செய்வதெனில் அதை
நீங்குஎன நீதி கொண்டரைத்தல் தனை
நெஞ்சில் கொளல் நீதி என்றுரைப்பேன்

காந்த உணர்வெடுத் தோடிப் பசி கொண்டு
கைப்பிடித்தே இல்லம் தான்புகுந்து அவள்
கூந்தல் கொண்ட நறு வாசமெழும் தன்மை
கொண்டது ஏதென யாமறிந்து சில
மாந்தர் குலமெழ நாம்படைத்துப் பின்னர்
மாபெரும் வாழ்வினில் ஓய்வுகொண்டு மனம்
சாந்தமுறுமிந்த வேளையிலே காலச்
சக்கரம் ஓடிய பாதை தனில் கொண்ட

கூறும் உணர்வது  குற்றமெனில் அது
கொண்டபிழை வந்த சொல்லினிலா அங்கு
ஆறிக் கிடப்பது சாம்பலெனில் அதன்
ஆழத்திலே பூத்த தீயிருக்கும் அதில்
ஏறிநடக்கும்கால் தீய்க்குதெனில் அதில்
எந்த திசையினில் குற்றமென்பேன் வழி
மாறிநடப்பவர் மேற்பிழையா அங்கு
மாவெனப்பூத்த நெருப்பினிலா ?

விதியை மாற்றி எழுது

வெளுத்து வானடி சிவக்கின்றதே - அட
விழித்தே யெழு தமிழா
பளுத்த முகிலயல் விரைகின்றதே - அது
பதைத்த துடிப்பெடு வா
கழுத்தில் எதிரியும் கயிறிடவா - விழி
கறுத்து மழிவதுவா  
விழுத்து முடல் தனி உயிரெனவே - இவர்
விருப்பம் எனவிடவா

குளித்து விட எமதுதிரமதா - அதைக்
கொடுக்க மனமிசைவா
அளித்ததெது துயர் அகவலியா அதை
அடுத்துப் பிரிஉயிரா
களித்துஅவர் குலம் குதியிடவா அங்கு
கிழிப்பதெம துடலா
இளித்து சரியென இரந்திடவா  இது
இயற்கை யறமெனவா

விழித்தும் எழுவது எதுதினமோ அது
வரைக்கும் துயில் கொளவா
பழித்துக் கிடப்பது இறைமையதோ - அவர்
பறித்துச் செலவிடவோ
கொழித்து நிறைவது கொள் நிதியோ - அவர்
கொடுத்த வலி வதையோ
சுழித்து விழிகளைப் பெறுவதுவோ - உடல்
சிறுத்த உணர்வுனதோ

தெளித்த நீர்த்துளி அலையெனவே - மன
தெடுத்து நிரையினில் வா
பழித்த நிலை தமிழ்க்கேன் மனிதா - நிலம்
பறித்த வகை  சரியா
செழித்த தமிழ்நிலை சிறுத்திடவும் - நாம்
சிரித்துக் களித்திடவா
அழித்து மெழுத எம்தலை விதியை - நாம்
அடுத்து செயலிட வா

சக்தியின் ஊற்றே !!!

வித்தகிதேவி விதைத்தவள் நிற்கையில்
  வித்தினைக் குறையிடலாமோ
சத்தமும் தந்தவள் சத்தியமாகிட ச்
  சித்தமு ரண்படலாமோ
செத்தவனாகிக் கிடந்தவன் மீதொரு
  சக்தியைத் தந்தவள் தானே
எத்தனை நாளெனஎண்ணிய மேனியும்
  இத்தரை காண்கையி லேனோ

குத்தகை தந்தவள் கேட்கவிலை யெனிற்
 கொண்டதும் என்னுடை யாமோ
புத்தொளிக் கூடமும் பற்பல கீதமும்
  போய்க் கொள்ளென் றாக்கிய தேனோ
வித்தைகள் யாவையும் வேடிக்கையாக்கிட
  வேதனைப் படயிவன் யாரோ
நித்திய வாழ்விலை  நிற்கிறவரையிலும்
  நீயென்ன யாரெனலாமோ

புத்தகமோ பல பொற்கிழியோ இவன்
  போகும் வழிக்கினி இல்லை
சுத்தமெனும் மனம்கொண்டதென்ன ஒரு
  பித்தனைப் போலிவன் கல்லை
வைத்தவன் தட்டிச்சிலை வடித்தான் அந்த
 வானமே கலைதனுக் கெல்லை
எத்தனை எண்ணினும் ஏடுதனில் அவள்
  இட்டவை தானே கற்கை

பத்தெனக் கூறிப் படித்திடும் வேளையில்
  பத்தை யுணர்ந்திடவேண்டும்
புத்தியிலே ஒளி பட்டுவிடா தெனின்
  பத்தும் இருள்கொளப்  பார்க்கும்
சக்தியின் விண்ணொளி பட்டுவிடாதெனில்
  சந்திரனே மதி யென்றும்
எத்துறை யாயினும் ஏதுநடப்பினும்
  எம்மனம் சக்தியின் ஊற்றே !

சந்தம் கண்ட விந்தை

பொருள் தந்தாள் பொருமிடவும் செய்தாள் - எனைப்
பூ தொடுத்து மாலை செய்ய விட்டாள்
அருளிலையே ஆயினும் யான் கண்டேன் ஒரு
அற்புதத்தை உள்ளுயிரில்கொண்டேன்
வருமொழிகள் வார்த்தை கண்டு நொந்தேன் - தலை
வாசற்படி மீதடித்து வீழ்ந்தேன்
அருமை அதில அழுதழுது சொன்னேன் - ஆகா
அத்தனையும் பூக்களென்று கொண்டேன்

பெரு உணர்ச்சி உள்ளமதில் ஓட  -  ஓர்
பிரளயமும் என்னிடையே ஆக
கருமை என இரவு கொண்டபோதும் - என்
கால் நடந்த பாதையிலே தீபம்
திருவென வோர்தெய்வம் காத்த போதும்  ஒரு
திருடன் என்றுபயம்  அளித்த வேறும்
உருகியதே நெஞ்சமதில் உண்மை-  அங்கு
உதிர மலர் கொண்டதென்ன நன்மை

உணர்வுகளில் தீயை ஏற்றி வைத்தாள் -  என்
உருவமதில் பேர் இணைத்து விட்டாள்
மணமெடுக்க பூவில் காற்று வீசும்  - அந்த
மாலைவெயில் கூடச் சுட்டுஆறும்
கணக்கினிலே கூட்டும் விதம் வேறு ஆயின்
கண்டபதில் ஒன்றுதானே கூறின்
துணி எனவே தெய்வம் தந்த சக்தி அதில்
தோன்ற வைத்ததோ இதற்கு நன்றி

நட்பெனப்படுவது

நட்பெனப் படுவது* நன்மைக ளானால்
  நட்புடை படுவது நன்மையைத் தாரும்
நட்பெனப் படுவது நன்மையென்றானால்
  நட்புடன் திகழ்வதில் நம்நிலை யோங்கும்
நட்பெனப் படர்வன நஞ்சென ஆனால்
  நட்டமும் நம்முடை நல்லுயிர்போக்கும்
நட்புடை தோழரு மல்ல ரென்றானால் **
 நாட்டினில் தீமைகள் நம்பலி கேட்கும்

நட்புடை தோளரும் மல்ல ரென்றானால்***
  நல்லவராகிடின் நம்முயிர் வாழும்’
நட்புடைத் தோளரும் வல்லமை கொள்ளின்
   நாட்டினி லின்பமும் நம்மினம் கொள்ளும்
நட்புடைத்தோழரின் ஒன்றிய மனதால்
   நாட்டமும் அன்புடன் நன்மை திகழ்ந்து
நட்டு வளர்பயிர்  காப்போன் அன்ன
    நாட்டை வளம் பெற நாமும் காப்போம்

நட்பெனப் படுவன மாக்களும் நாட்டில்
  நட்புடைத் தோழமை நாடியும் வந்தால்
நட்பெனப் படுவதை நல்குவர்  நாமும்
  நாட்டையிழந்திட நாதிகளாகி
நட்ட நடுத்தெரு காடென சொந்தம்
  நாட்டைப் பிடித்தவர் விட்டகுகைக்குள்
நட்பெனப் படுவன வஞ்சமிழைக்க
  நம்பியதால் பெறும் நிலைதிரி பெண்ணி

நட்பெ னுடுக்கை யிழந்தவன் கைபோல்
  நாட்டையிழந்திடும் வேளையில் பற்றி
நட்ட நடுங்கிய நாட்களும் போக
 நட்டமில்லைஎன நம்முயிர் துஞ்சி
நட்ட  மலர்ச்செடி பூத்த விதத்தில்        
  நட்பொடு குழுமிய நல்மனக் கூட்டம்
நட்புடைத்தே விரிதோளுடை நெஞ்சோர்
  நம்முடைத்தே எனக்காட்டி மண்மீட்பாய்


************************
இங்கே பிரித்துப் பொருள் கொள்க
* - நட்பென  படுவது (பட்டுப்போவது-- அழிந்துபோவது நன்மைகளானால்)
அதே அடியில்  === நட்பு உடைபடுவது

** நட்புடை தோழரும் அல்லர் என்றானல் - தோழமை அற்றவர்களானால்
 -  அ
***நட்புடை தோளரும் மல்ல ரென்றானால்-- நல்ல புடைத்த தோளைக் கொண்டவர்கள் மல்லர்களானால்

அடுத்த அடி
நட்புடை தோள் அரும் வல்லமை கொள்ளின்


நட்பெனப் படு ’வனமாக்களும்’ நாட்டில்
  நட்புடைத் தோழமை நாடியும் வந்தால்
நட்பெனப் படு ‘வதை’ நல்குவர்  நாமும்
  நாட்டையிழந்திட நாதிகளாகி

எனு கொள்க

சக்தியே தா சக்தி

சிந்தையிலே வந்த கவி சொந்தமுமல்ல -  அதை
விந்தையிதே தந்தவிதம் எந்தனுமல்ல
நந்தவனம் கொள்மலர்கள் தந்தவள் தானே   -இன்று
இந்தவகை சொல்லிடவும் செய்தவள்காணே
சந்திரனும் செங்கதிரால் மின்னுதல் போலே - சக்தி
தந்திடயான் இங்கொளிரும் தன்மை கொண்டேனே
அந்தகனும் கொண்டவிழி கண்டிடல் போலே - கவி
சந்தமெனக் கொண்டதிவன் ஒன்றெனக் காணே

எந்த ஒளி இன்றியிருள் சென்றதுமில்லை - அதை
தந்தசுடர் என்றுமுள தந்தமுமில்லை
பந்தமதில் நின்றதுதீ யணைந்தது போலும்   -ஒரு
அந்தமதை  யெங்களுடல் கொண்டிருந்தாலும்
சிந்தனையால் செந்தணலாய் வெந்திடுந் தேகம் -  உயிர்
வந்தவழி சென்றுயர்வான் சங்கமமாகும்
அந்தரவான் கண்டதுவென் சிந்தனை கூடும் - உயிர்
விந்தையெனும் செஞ்சுடரில் ஒன்றிடப் போகும்

மின்னுமொளி அன்னை உரு அற்றவளாமோ - அவள்
இன்னுமொளிர் சூரியனில் பற்பல தீயோ
கன்னங் கரு அண்டமதில் `கற்பனைக் கெட்டா - ஒரு
பொன்னுருவோ பூகம்பமோ பூந்திரிதானோ
வன்மைகொளோ மென்மையெனும் வெள்ளொளிர் தீயோ -உயர்
தன்மையிலே எண்ணங்களின் வெம்மை கொண்டாளோ
என்னகதிர் காண்விழியும் கண்குருடாகும் -  எனில்
பென்னம்பெரு தீயவளைக் கண்டிடலாமோ

சந்தணம் நல் வாசமிடும் இவ்விளை மேனி - வெறும்
கந்தகமாய் தீப்பிடித் தெரிந்திடும் வாசம்
சொந்தமில்லை என்றபின்பும் சந்தணம் பூசி - உயர்
சுந்தரமென் றாகுவிதம் சிந்தனைக்காமோ
மந்தமிதே இந்தநிலை விட்டிருள் நீங்க - ஒளிர்
உந்து சுழல் அண்டமதை ஆக்கிய சோதி
முந்தியவள் கொள்ளமுதல் இன்பமேவேண்டின் - அன்னை
சந்தமெழ  வாழ்வினிமை தந்திடுவாளே

துயரும் விதியும்

மாலை ஒன்று கோர்த்தெடுத்தேன் மங்கும்விடி காலைவெயில்
மாவுலகை ஆளமுன்னே மங்கலமாக
காலைவேளை கண்விழித்து கைதொழவே கோவில் சென்றேன்
கையிருந்த மாலைகொண்டு கடவுளை வேண்ட
நூலையன்றி ஏதுமில்லை நெஞ்சம்நிறைந் தன்புடனே
நின்றவனின் கையுதிர்ந்து பூக்களும்போக
பாலைவனம் மீதுவந்தே தாகமுற்ற மானின்நிலை
பரிதவிப்பு நெஞ்சிடையே பாதகஞ் செய்ய

சோளம்கொண்டு  வயல்விதைத்து சுற்றிவேலி கட்டிவைத்து
சூரியனை வேண்டிநின்றேன் என்பயிர்வாழ
நாளும் நீரை விட்டிறைத்து நல்ல கதை பேச்சுரைத்து
நாளும் எண்ணிக் காத்திருந்தேன்  உண்பதற்காக
வேழமொன்று கோபப்பட்டு வேலியதை தாண்டிவந்து
வேகமுடன் சுற்றிவர என்பயிர்மாள
தாளமிடும் என்னிதயம் தன்னிலையும் கெட்டழுது
 தவிக்குதய்யோ  முற்றிலும்சூழ் துன்பமென்றாக

மூளவென்று தீயுமிட்டு மூடுபனிக் கூதலுக்கு
முன்னிருந்தேன் தீயிலெழும் வெம்மையில் காய
மாளவென்று நீரையிட்டு     மேகவந்து தூறியதென்
மாறிப்புயல் காற்றடித்து மெய்கிடந்தாட
கேளடி ஓர் சென்மம் என்று கீழுரைக்கும் பேச்செடுத்து
கிட்டநின்றே புன்னகைப்போர் என்னயல் போக
வாழவென்று ஆசைபட்டு  வந்தவனை நோகவைத்து
வேடிக்கையும் பார்ப்பதுமென் என்விதிதானோ

பெண்களே வாழ்மின்!

காற்றும் காற்றுடை வாசம் கனிகளின் கூட்டம்
  கனவெனும் மனவுணர்வும்
ஊற்றும் குளிர்தரு மோடை உறைபனிக் கூட்டம்
  இயற்கை யென்றாக்கியவள்
மாற்றம் மனதுகொள் வேட்கை மலர்வினில் நாட்டம்
  மகிழ்வெழ இன்பமிட்டும்
தோற்றும் துயரெழும் தாக்கம்  துடித்திடும் இதயம்
   துவளென உணர்வளித்தாள்

நாற்றம் மதுமலர் தேக்கம் நனையிதழ் ஊட்டம்
  நாடிடும் வண்டினமும்
போற்று மெழில்சுனை ஆட்டம் புதிதெழும் காற்றும்
  புரள் அலையோட்டமென
சாற்றும் மொழிதரும் பாட்டும் முழவொலி கேட்டும்
  மனமெழும் தீரமுடன்
நேற்றும் இன்றுடன் நாளை நிகழ்வது யாவும்
  நிலைகொள வழிசமைத்தாள்

சீற்றம் இடியொளி மின்னல் சொரிமழை வானம்
  சிதறிடும் மர இலைகள்
ஆற்றும் செயலிவை யாவும் அவனியில் சேரும்
  இயற்கையின் கடமைகளே
ஏற்கும் உடைகளும் உண்ணும் உணவுடன் இனிமை
  உறவுகள் அவள்தரவே
கூற்றன் கொடிதெனும் பாசக் கயிறிட கொள்ளும்
   கணம்வரை உயிரளித்தாள்

ஏற்றம் எழவிழும் தாக்கம் இழிமையின் துச்சம்
  இவைதரும் உணர்வழிய
மேற்கும் மறைகதிர் போக்கும் மதியின் பொன்கீற்றும்
   மகிழ்வுள்ளம் ஆக்கிவிட்டு
நூற்கும் நூலிழை சேர்க்கும் நாற்குணப் பெண்மை
   நினைவுகள் இனிமை யென்றாள்
போற்றும் செயலதும் புகழும் இயற்கையின்
  புலமை கவிஞரின் வழக்கமன்றோ

பெண்ணும் பெண்ணவள் பேச்சும் பேச்சினில் மாற்றம்
  பெரிதெழ ஆக்கியவள்
மண்ணும்  மண்விழை பொன்னும் பொன்முடி அரசும்
  படையுடன் போரெனவும்
எண்ணும்  மனதினில் இன்பம் இளமை யின் எண்ணம்
  இவைகளில் சாம்ராஜ்ஜம்
திண்ணம் விழநிலை கொள்ளும் திறனுடை0 பெண்ணும்
  தேர்ந்திட அழகீந்தாள்

முன்னும் கண்விழி அம்பும் மெய்யிடை போரும்
  மூளென தீயிடுவாள்
என்னும் வலிமையும் கொண்டால் இகமதில் இன்னும்
  எழும் வலி இவள் கொண்டால்
தன்னும் தன்நிலை- பேணுந் தன்மையில் ஆளும்
   தகமையைக் கொள்வளெனில்
மின்னும் தாரகையல்லள் மேதினி கொள்ளும்
   இன்னொரு சுடராவாள்

ஒன்றுமில்லாத அந்தம்

நீ நடந்த பாதையெங்கும் நிலவெறித்தது - அது
நெஞ்சில் மீண்டும் இன்சுகத்தை நேரெறித்தது
தீபரந்த வேளையென்று வான் ஒளிர்ந்தது - அங்கு
தேடிவந்த செங்கதிரால் திங்கள் போனது
பூ நிறைந்த சோலையெங்கும் போயலைந்தது - தென்றல்
பூமணத்தைக் கேட்டு வாங்கிப் போட்டழித்தது
நாவினிக்க ஒர் சுகத்தைத் தேன் கொடுப்பது - போலும்
நாடிவந்து  ஓர் இதத்தைப் பா கொடுத்தது

சூனியத்தில் ஓர் பெருத்த தீ எரிந்தது - அது
சுட்டபோது மேனியெங்கும் சூடெழுந்தது
ஆநிசப்த வான்பரப்பு ஆற்றல் கொண்டது - அது
யார் வகுத்ததோ மனத்தில் ஞானம் தந்தது
வானிலோடும் பூமியெங்கும் பாசம் பொங்குது - அது
வந்து மீண்டும்  ஏன்மனத்தைப் பின்னிழுக்குது
ஏநிகர்த்த தேது அன்பு என்றும் நல்லது - அது
ஏறிவந்த ஏணிபோலும் வீழ்த்த வல்லது

கூவி நிற்கும் கோகிலத்தின் கீதம்கேட்குது - அது
கொண்டதென்ன யார் கொடுத்த தேனினிக்குது
ஆவின் பாலைப் போலஉள்ளம் ஆசைகொண்டது - அது
ஆகவெண்மை யாயிருக்க மாசு கண்டது
தாவிஓடும்மானினத்தின்   தன்மைதோற்குது - பாரில்
தன்மை மாறி வெஞ்சினத்தின் கேடு வெல்லுது
பூவினாலே வாழ்வுகொள்ள காடு என்பது - மட்டும்
போதுமாம்  சுதந்திரத்தைப் பார்த்தளித்தது

வாய் சிரிக்க உள்ளம்போலி வாழ்வு கண்டது - அது
வண்ணம் கொண்ட பூவைப் போலும் வாடிப்போனது
தூய வெண்கதிர் நினைந்து சுற்றும் உலகிது - தானும்
தோன்றும் மாயகற்பனைக்குச்  சொந்தமானது
தாய் நினைத்ததென் இருத்தி வாழ்வளித்தது - பின்ன
தாய் நினைத்ததென் கருக்கி வாழ்வழிப்பது
பாய்விரித்த போது முன்னர் பூக் கிடந்தது - பின்னர்
பார்த்தபோது பூமறைந்து நோய் பரந்தது

மாயவாழ்வில்  மந்திரத்தை யாருரைத்தது - அங்கு
மங்கை என்று பேரெடுத்துத் தோளிணைந்தது
சாயவென்று தோள்விரிப்பில் சார்ந்துகொண்டது - கூந்தல்
சாமரைக்கு நேர்நிகர்த்த சாயலானது
காயமிட்ட நெஞ்சில் தீபம் யார் வளர்த்தது  - வானம்
காணும் தீயின் வெம்மை பட்டுத் தீபமாடுது
தோயும் இன்பம் தோல்விகண்டு தீயில் வேகுது - இந்த
தேகம் கொண்ட ஞாபகங்கள் என்னவாகுது

நிலவின் கோபம்

மன்னவன் பஞ்சணை தூங்கிய நெஞ்சினில்
மஞ்சம் கசக்கக் கண்டான்
அன்ன மென்மையுடன் ஆடுந் தோகைநடம்
யாருக்கு வேண்டுமென்றான்
புன்னகை மாதரின் கையிடை பந்தெனப்
பட்டுத் துடித்ததெல்லாம்
என்னவை இந்திர லோகத்தின் ஊர்வசி
ரம்பையோ என்றழிந்து

மென்னகைப் பூவிதழ் ஓத்தடம்கொண்டது
மேனி சிலிர்த்த தெல்லா0ம்
பின்நகை பூத்துச் சிரித்தபடி அவன்
பின்வழி மாடம் சென்றான்
பொன்னெழில் வாரிப் பொழிந்த நிலா வானிற்
பேசல் எதுவுமின்றி
தன்னொளி வீசுமப் போதினிலே உடல்
தன்னில் தவிப்பெழவோ

மின்னிடும் வெண்ணொளி கொண்டும் துயர்பட்டு
மேனி மெலிந்ததுவாய்
தன்னிலை யும்கெடக் கண்டவன் நெஞ்சினில்
தாபம் நிறையக் கண்டான்
சின்னவளே நீயும் தென்றல் தொடும்வேளை
செல்லநடை கொள்ளினும்
என்னது காணலில் துன்பநிலை கொள்ள
ஏதுண்டோ ஏகாந்தமோ

உன்னெழில் விட்டுமுன் மன்னவன் செல்லிடம்
ஏதென் றுரைத்திடுவாய்
அன்னவன் எங்கணும் உள்ளனனோ என
அற்பனைக் கண்டு கொள்வேன்
பொன்னொளி தேயும் நிலை கடந்தே உன்னைப்
பூரண தோற்றமுடன்
தன்னந்தனி வானில் செல்லும் துயர்களைந்
துன்நிலை மாற்றிடுவேன்

சொன்னதும் வானிடை வந்தமுகில்மடி
சென்று விழுந்தநிலா
என்னவிதம் நீயும் எண்ணமெ டுத்தனை
என்று சிரித்தவளோ
கன்னமிடும் மனம்கொண்டு மாதரெழில்
கண்படக் கொள்வதன்றி
வன்மை மனங்கொண்டு வாழுங்குடி கொல்லும்
வக்கிர மானவன்நீ

என்னுடை மக்களை கொன்றதுண்டோ உந்தன்
எண்ணம் பிழைத்ததென்றான்
அன்னிய தேசத்தில் ஆசைகொண்டே அதை
ஆக்கிரமித்தவுடன்
மென்மைகொள் பெண்டிரின் மேனி வதைசெய்யும்
மேன்மையுடை அரசே
என்ன புதுமை நின்பஞ்சணையில் மட்டும்
இச்சை தவழ்வதென்ன

பொன்னும் மணியுடன்  பட்டிலுடை கொண்டு
புன்னகையில் மயங்கி
தின்ன மதுகொண்டு செல்வமெனக் கொஞ்சி
தேன்நில வென்றவளைத்
தன்னலம் கொண்டு தவிததவள் பார்வையில்
தன்னை யிழக்கும் உன்னை
என்னொளி தந்துமுன் தேசம் திகழ்வது 
எத்தனை பாவம் என்றாள்

சின்னஇடை மாதர் சூழுலகெங்கணும்
சென்றிடும் தேசமெல்லாம்
அன்னை படைத்த ஒர் அற்புதச்  சித்திரம்
ஆக்கி உயிரளிப்பர்
பன்மடங்காகிட பாலர் குழந்தைகள் 
பல்கிப் பெருகவைக்கும்
உன்னத மாதரை உன்கொடு வாள்கொண்டு
எப்படி நீயழிப்பாய்

என்ன விலங்கினம் ஆயினும் தன்னினம்
என்னில் அழிப்ப தில்லை
சின்ன றிவுதனைக் கொள்ளினும் ஓரினம் 
சென்று அதனினத்தை
வன்மை எதிரணி வாழும்நிலம் எந்தன்
விட்டொழி என்றலறி
மென்மை கொண்டவரைத்  தாய் தங்கை பிள்ளையர்
மேனி கெடுப்பதில்லை

மன்னவனே உந்தன் மாசுகொண் டோர்படை
மண்ணில் பெரும் இழிமை
தன்னலப்  பேய்களின் தாகம் உதிரம் கொள்
தன்மையில் பேய்கள்படை
புன்மைகொள்ளும் உந்தன் தேசம் வந்தேகொண்டேன்
பாரில் பெரும் பழியை
சின்னவனே நின்றன் பாவ மண்ணில்காய்ந்து
கொண்டேன் மென்மேலுங் கறை

தமிழ் வளர்ப்போம்

நாட்டில் நலிந்தோடி நாமுழன்று 
  நலம்தேடி நாளில் வந்தோம்
கூட்டாய் பலமெடுத்தே வென்றிடவும் 
  கொள்கைதனை கொண்டோமா சொல்
தேட்டமெனுங் கல்விதிசை திக்கெதெனத் 
 தெரியாது தொலைப்போமா சொல்
நாட்டின் எதிர்கால நம்மிளைய 
  வீரர்களே நற்றமிழ் கொள்வீர்

பூக்கள் சொரியட்டும் புன்னகையும் 
  பரவட்டும் பொலிந்தே இன்பம்
நாக்கில் சுவைத்தமிழே நல்லுணர்வாய் 
  விரியட்டும் நலிந்து துன்பம்
போக்கில் தமிழ்வளர்ந்து பெருவளமும்
  கொள்ளட்டும் புகழ்ச்சி கொண்டே
நோக்கில் சிறப்போங்கி நிற்கத் தமிழ் 
   நிலையத்தை நெஞ்சே வாழ்த்து!

ஆர்க்கும் முரசொலித்தே  அறம்தன்னைக் 
  கூட்டட்டும் அன்பு கொண்டே
சேர்க்கும் கலைத்திறனும் கல்வியதும் 
  சிறப்புடனே செறிந்து காண
கோர்க்கும் மணியாரம் கொள்ளும் 
  எழில் முத்தேபோல் குழந்தையுள்ளம்
தேர்ச்சி பெருமளவில் சிறக்கவெனத் 
  தமிழென்ப தினம் படிப்பீர் 

கற்கும் மாணவர்க்கும் கற்பிக்கும் 
  ஆசிரியர் கடமை கொண்டோர்
உற்றோர் வழியினிலே உருவாக்கி 
  வழிநடத்தும் உயர்ந்தோர் உள்ளம்
சற்றும் நெறிவழுவா சத்தியத்தின் 
  நேர்வழியில் செல்லென்றோதும்
முற்றும் ஓர்குடைகீழ் கொண்டார் 
  பெருந்தகை நம் தலைவர் தானும்

ஐயா பெரியவரை  அகமகிழப் 
  போற்றினோம் அன்புகொண்டு
மெய்யாய் உடல்வருந்தி மேதினியில் 
  தமிழ்தன்னை மிளிரவைக்கும்
செய்யக் கடுமை எனும் செயல்களையும் 
  சீருறவே செய்தளிப்பார்
கையை பற்றியவர் கனவெதுவோ
  இலக்கதனை காணச்செய்வோம்

வையகமும் புகழ்ந்தேத்த வெய்யவனாய் 
  ஒளிர்வாழ்வு விளங்க வாழ்த்தி
மெய்கொண் டிலங்குதமிழ் மேன்மையுறச் 
  செய்கநற் பணிகள்தானும்
எய்யும் ஓர்அம்போடி இலக்கடையும் 
  ஈதேயாய் இலங்கும்வண்ணம்
தெய்வச்சுடரொளியாம் திகழ்வல்ல 
  தீபத்தை தொழுது நின்றேன்

Friday, 13 June 2014

தாயின் பெருமை

கடல்தன்னில் அலைஒன்று புரள்கின்றது - அது
களிகொண்டு உயர்வாகி எழுகின்றது
திடங்கொண்டு கரைவந்து உருள்கின்றது - என்றும்
தெளிவோடு மணல்மீது குளிர்தந்தது
நடங்கொண்ட அலையென்ப உயர்வாகையில் - அதன்
நளினத்தின் எழில்தன்னும் எதுகொண்டது
கடலான தாய்கொண்ட கருவல்லவா - அலைக்
கரமென்ப பெருமாழி  உருவல்லவா

உடலிங்கு புதுராகம் இசைகொண்டதோ - அது
உயிர் கொண்ட புதுவாழ்வின் வரைபல்லவா
இடமென்ப குளிர்கொண்டு மழைகண்டபோ -தென்
இடி மின்னல் கருமேக முதிர்வல்லவா
சடமென்ற சிலைநின்று நடமாடினால் - இச்
சரிதமதி சயமென்று சிரம் கொள்ளவா
கிடவென்று விதிசெய்த கொடும் வேளையில் - இலைக்
கொடு யின்பத்தமிழ் என்ற குரல்அல்லவா

தடுமாறி மனமென்ப அலைகின்றபோ - தெனைத்
தரமாக்கி இவள் தந்த வாழ்வல்லவா
முடமாக்கி இதுபோதும் முடிவென்றிட - இலை
முனை யென்று மகிழ்வாக்கி முழுதாக்கினாள்
அடர்வான முகிலூடு வெயில்தோன்றவும் - இவ்
அறிவான தொளிகொள்ள அறமீந்தவள்
திடம்கொண்டு தமிழ் பேசி கவிசெய்யவும் -இத்
திறம் தந்த தவள் சேரும் புகழ்யாவையும்


கடைகொண்ட நிலை யின்று முன்னேறவும் - இக்
கதியென்று களைகொள்ளக் கரம்தந்தவள்
மடையாக புதுவெள்ள மனம் தந்தவள் - என்
மனதுக்குள் பிரவாகம் உடை என்றவள்
நடைகொண்டு வழிசெல்ல நலமாக்கியும் - என்
நிலைகொண்ட குறைபோக்க நடுவந்தவள்
விடைகொண்டும் உயிர்போகும் வரைநிற்பவள் - அவ
விடை சொல்லப் புதிருக்குள் பதிலாகுவேன்

குடைதந்து மழையென்றும் வெயில்தன்னிலும் - நில்
குறையின்றி வாழென்றும் அறம்செய்தவள்
படைகொண்டு முடைசெய்யும் பகைகொண்டவன் - அங்கு
புரிகின்ற துயர்தன்னை முடிவாக்கவும்
இடைவந்த விதியாலே எமதன்பினர் - தமை
இலையென்றே உயிர்கொல்லும் இவ்வேளையில்
தடையின்றித் தமிழ்பேசும் இனம் காக்கவும் - எம்
தமிழ்ஈழ உயர்வுக்கும் வரம்வேண்டினேன்

சக்தியை நினை

நீலக்கடல் துடிக்கும் நெளிதிரைகள் அலைந்து கெடும்
காலச் சுழலினிலே காயம் உயிர் கலந்தழியும்
ஞாலத் திருமனிதர் ஞாபகங்கள்  சக்தியெனும்
கோலத்திரு’ நினைந்தால் கொள்ளுமெழில் வாழ்வன்றோ

பச்சை மரங்களிலும் பார்க்கும் மலர்ச் செடிகளிலும்
இச்சை கண்டுமணம் ஏந்திவரும் தென்றல் எழும்,
அச்சம் நிறைவெளியும் அண்டமெனும் சூனியமும்
உச்சம் கொண்டுறைவாள் எண்ணு துயர் நீக்கிடுவாள்.

சிவந்தே வான் கொதிக்கும் செங்கதிர்வான் உதயமெழும்
உவந்தே மண் சிரிக்கும் உணர்வுகளும் நிறமெடுக்கும்
இவள்தாள் பணிந்தவர்க்கு இன்பமெனும் வரங்கிடைக்கும்
தவழ்ந்தே வருந் துயரம் தாயிவளால் தொலையாதோ

மஞ்சள் நிலவொளியில் மனதிலெழும் குளுகுளுப்பால்
கொஞ்சம் மதிமயங்கும் குளிர் நிலவின் தண்மையுளம்
தஞ்சம் வந்தவரின் துன்பநிலை போக்குமெனில்
நெஞ்சில் கொள்வர்தமின் நிலையுயரச் செய்யாளோ

கருமை இரவுதிரக் கதிர் முகத்தின் தெளிவெழவும்
வருமை விழியுடையாள் வாழ்க்கை நலம் ஈந்தவளை
பெருமை  யத்திருந்து பிரபஞ்ச தோற்றமெழக்
கருவென்றா னவளைக் கரம் கூப்பு கருணை எழும்

வண்ணக் கலவைகளின் வான்வெளிகாண் சாகசங்கள்
எண்ணக் கருவாக்கி இத்தரையில் பிறவி எனும்
மண்ணைப் பிடித்துடலாய் மாயசக்தி ஏற்றியவள்
கண்ணில் ஒற்றியெடு கைகொடுப்பாள் காத்திடுவாள்

புத்தாண்டு வாழ்த்துக்கள் போகுமோ

சூரியன் மேற்கில் உதிக்கின்றது - வண்ணச்
சோதிநிலா சுட்டு வேர்க்கின்றது
காரிருள் காலை குவிகின்றது - நிலம்
கொள்ளும் அரவிந்தம் பூக்கின்றது
ஏரியை விட்டு மீன் போகின்றது - அவை
ஏறிமரம் தாவி வீழ்கின்றது
வேரினில் நின்ற மரங்களுமோ - இன்று
வீறு நடைகொண் டசைகின்றது

வாரியடித் தலைபொங்குநதி - கடல்
விட்டு மலையேறப் போகின்றது
சேரியில் கன்றோடித் துள்ளுகுது - அது
தேடும்பசு அப்பா என்கிறது
பாரினில் மாற்றம் தெரிகின்றது - அவை
பாவங்களைக் கொண்டு சேர்க்கின்றது
தேரினில் தெய்வம் குறைகின்றது -எங்கும்
தேடியும் பஞ்சம் விளைகின்றது

போரினில் இச்சை பெருகின்றது - அது
பூமியில் நாசம் விளைக்கின்றது
பாரினைச் சூரியன் சுற்றுகுது - அதைப்
பார்த்து மனம் திக்கு திக்கென்றது
தூரிகை வண்ணம் மறக்கின்றது - அது
தீட்டியதோ கருப் பாகின்றது
பாரிய துன்பம் விளைகின்றது - அதைப்
பைந்தமிழே விலை கொள்கின்றது

வாடிய பூவிதழ் நெக்குவதும் - கண்டு
வண்டு அரண்டோடிச் செல்லுவதும்
நாடிய தென்றலும் கண்டதுவோ -அது
நாற்ற மெடுத்திடப் போகிறது
பாடியதோர் குரல் சிக்கியது - அவர்
பாடுமிசை காதில் குத்தியது
கூடியவள் நடமாடுகையில் - சிறு
கோணலில் காலும் சுளுக்கியது

கோடையில் பேய்மழை ஊற்றுகுது -அது
கூடிச் சிவப்பபெனக் காணுகுது
ஆடையற்ற விதம் வீதியிலே - பெண்கள்
அம்மண மேனி கிடக்கின்றது
கூடையில் பாவம் நிறைகின்றது இதைக்
கோவின் திறைசேரி கொள்கின்றது
பாடைகளின் தொகை கூடுவதும் - புவி
பார்த்துப் பரவச மாகின்றது

மேடையில் பூக்கள் சொரிகின்றன - அங்கு
மன்னன் நடையொலி கேட்கின்றது
ஜாடையில் பேசிய தேசங்களின் - இனம்
யந்திரங்கள் கொண்டு போடுகுது
பேடைகள் ஆடவர் பூங்கிளிகள் = கத்தப்
பேய்களின் இராச்சியம் ஓங்கியது
காடையர் கைகள் உயர்கின்றது - அதில்
காமப்பசிக் கிரை நம்மவரோ?

ஓடையிலே மலர் கூடையிலே - எழில்
கூடுமலை பொய்கைச் சோலையிலே
மேடையிலே மணிக்கோவிலிலே - நல்ல
மென்னிசை கோலம் கொள் பள்ளியிலே
சோடைப் பனைமரக் கூடலிலே - எங்கும்
செல்லு மிடமெங்கும் நாட்டினிலே
காடையர் கைத்திறன் காண்கிறது - எங்கள்
கன்னித்தமிழ் இனம் சாகிறது

போலிகள் ஆளுமுலகமிது - இதில்
போவன யாவும் தலைகீழிது
தாலிகள் மெல்ல அறுகின்றது - துயர்
தாங்கும் தமிழ்பெண்கள் காணுலகு
காலில்லா மேனி நடக்கிறது - அதைக்
காணச் சுவைத்திடும் பூமியிது
மேலிடத்துப் பெரு இராச்சியங்கள் வாழ்த்தி
மின்னஞ்சலில் சபாஷ் போட்டிடுமோ

குளிர்காற்றும் கொடுங்கோலனாக

ஊதிவீசுங் கூதல்காற்றே ஒருமுறை என்னைப் பார்
.உள்ளம் நொந்தே ஓடும்போதேன் ஓசையிடுகின்றாய்
பாதி தேயும் சந்திர ரூபம் பார்த்தே மகிழ்வாயா
பாவம் என்றே பால்வெண் நிலவின் பக்கமி ரங்காயா
நீதித்தேவன் நிம்மதியாக நித்திரை கொள்கின்றான்
நீலக்கடல்மேல் காக்குந் தெய்வம் நெஞ்சம் கல்லானான்
ஆதிப் பரமன் அங்கையற்கண்ணிக்  அரைகொள் ளென வீந்தான்
யாரைக் கேட்போம் யாரும் தேடாப் பாலைவன மானோம்

சேதிசொல்லும் சங்கும் ஊதித் தென்றல் கொண்டோடி
செய்யும் விளைவும் தீதும் நன்மை சொன்னோம் கேட்டார் யார்
ஓதிவேப்பங் குழைகொண்டாடி ஓடச்சொன்னாலும்
ஏறும் எண்ணம்  இல்லாப்பேயில் இரக்கம் கொள்ளல்போல்
சோதிக் கனலாய் சூழ்ச்சிநுட்பம் சற்றே பெரிதாக 
சொல்லாப் பொய்மை சொல்லிக்  காதில் சுற்றும்பூவாக
போதித் தருவின் கீழேகண்ட புண்ணிய மாநாமம்
புன்மை பொலியப் பொழியும் உதிரப் புனலில் நீராட

நீயும்காற்றே நெஞ்சம்கொண்டு நினந்தே எம்மைப் பார்
நெற்றிவியர்வை நிலம்மீ தூற்றி நிதமும் சோறுண்டோர்
காயும் பஞ்சாய் கடுவெம்பசியில் கைகொள் நீருண்டு
சாயும் வேளை சற்றேதூங்கச் சஞ்சலம் செய்தாயேன்
சேயும் இன்றித் தாயோ நிலவைக் கண்டே விழிஊற்றிச்
சோறும் ஊட்டப் பாலகனின்றி சுற்றும் நிழல் பார்த்து
நாயும், காணா நலிவைக்கொண்டே நாளும் தூங்குங்கால்
நீயுமகுளிராம் நீசக்கரமின் நிலையில் தொடலாமோ

ஓலைக்குடிசை உரிமைசத்தம் உல்லாசச் சிறுவர்
ஓடியாடி உழுதுண்வயலில் உழைப்பின் வழிகண்டும்
வேலை அசதி விட்டேகணவன் விருப்பில் மலர்வாகி
வேளை விடியல் முன்னே எழுவாள் விளை செந்தீகண்டும்
காலைக் கதிரைக் காணும் கமலம் கனவில் நிறைகொண்டு
கையில் வேலை கடமைஎன்றே காணுமின் வாழ்வில்
காலை கட்டி காதற்பெண்டிர் காயம்  சுவைகொள்ள
காணும் காட்சி வீரத்தமிழ் இற் றைப்புறமோ அகமோ சொல்

தூண்போற் தோளும் வேளத்திமிரும் தொலைவான்அதிர்வோடு
தொட்டால் மலையும் தூளென்றாகும் தொன்மைத் தமிழ்வீரம்
’வீண் எம்மெண்ணம் வீரத் தமிழே  வெற்றிச் சங்கூதும்
வேண்டாமென்று விடியல் முன்னே  விரைந்தே பகையோடும்
மாண்பும் மறமும்  மனதில் தீரம் மங்காப் புகழ்கொண்ட
மரபுத் தமிழா மறந்தா போனாய் மதியைக் கொள்ளாது
கேண்மை என்றே கூடாப்பகையின் கூடாரத்துள்ளே
கூடிகொள்ளக் கோழையல்ல கொள்ளாய் வீரம் கொள்!

முதுமை படர் மேனி ( பெண்ணும் நானும்)

அழகுறு குழலும் அலைமுகில் வடிவாய்
மெழு கதன் வண்ணம்  மிக நரை கொள்ள
குழலுடை இனிதாய் குரல்தரு மென்மை
வழுகிட மெலிதாய் வாயசை வாக
நிழல்தரு தண்மை நிகரிளம் மேனி
பொழிலுடை அலையின்  பொலிவடிவேந்த
கழலுறு மணியின் கடுநடை யோசை
முழுதென இலதாய் மெதுநடை பழக

சுழலொரு புயலின்  செறிவலி குறுகி
தழலெழ மனதை தகித்திட வைத்தாள்
முழமொரு பூவை குழலிடை சூடி
விளைவினி ஒடியும் வெறுமிடைஎன்னும்
தளதளமேனி தகையிளந் தாடும்
துளைவிழி யம்பு தொடுவலி குன்றி
சுளை பலகனியின் சுவையிவள் அதரம்
விளை வெனும் புகழும் விரயமென்றாகி

தடிகரம் கொண்டே தவழ்ந்திடும் மழலை
அடியெடு நடையும் அருகிட விழல்போல்
துடிப்பது மடங்கித் துறுதுறு பார்வை
வெடித்திட முயலும் வெறியுணர் வோய
கடித்திடக் கனியும் கணை மதன் மலரும்
வடித்திடு மதுவாய் வந்தவள் இன்றோ
அடித்திட அரவம் அதன் கிடைபோலே
நடித்திட வைக்கும் நயன் கெடுவாழ்வில்

எடுத்திட முடிவாய் இளமையை நம்பி
துடுப்பிழந் தோடம்  திசைநேர் விடும்போல்
தடுப்பிழந் தலைகள் தொடத் தொலைவாகி
கொடுத்தோன் பறிக்கும் குயவனின் கலயம்
அடுத்தெனும் உடலை அமுதுகொண் டேற்றி
விடுத்து நீரூற்றி வீம்பினில் திழைத்துப்
படுத்திடக் கனவும் பகலினில் தினவும்
எடுத்துண்மை அறியா இருளிடை வாழ்ந்தோம்

வெய்யிலில் காய்ந்து விழுமழை புரவி
பொய்யினில் வாடி புறந்தள்ள ஓடி
செய்குணம் வஞ்சம் திரிந்திடமொழிந்து
கையினில் களவும் கனிமலர் பேச்சும்
மைவிழி மாதர் முனைந்தயல் கொண்டு
மெய்யிடை  ஈரம் மிகச் சுவைகண்டு
தெய்வம் மறந்து திருமலர்ப் பாதம்
உய்வது விட்டே உலகிடை நலிந்தோம்

இதயம் அழுமோசை

எங்கள்வானம் ஏனோ இன்னும் இருண்டே கிடக்கிறது
இதயம் எல்லாம் இரும்பாய் கண்டே ஏங்கித் தவிக்கிறது
பொங்கும் கடலும் புரண்டே ஓடிப் புலம்பித் திரைகிறது
போதில் அலையும் காற்றும் புயலாய் பொங்கித் தணிகிறது
கங்குல் போயும் காலை தோன்றக் கதிரும் மறுக்கிறது
கருமை இருளும்கயவர் நெஞ்சில் கனலை எரிக்கிறது
மங்கும் அறிவும் மதமும்கூட மனிதம் அழிகிறது
மாமணி தேசம் மலர்கள் கொன்று  மகிழும் அவலமிது

திங்கள் தோன்றும் வானில் மேகம் தனியே திரிகிறது 
தோன்றும்,மதியும் தேயும் பிறையாய் தினமும் குறைகிறது
தங்கம் என்றால் தரையில் வீசும் தன்மை பெருகிறது
தாங்கா நெஞ்சும் தவித்தே அழுதும்  தலைதுண் டாகிறது
அங்கம் வெட்டி அழித்தோர்  கேடு அறமென் றாகிறது
அன்பைத் தேடும் உள்ளம் நொந்து அழிவில் முடிகிறது
சிங்கம் முயலை தினமும் கொன்று தின்றே களிக்கிறது
சொல்லும் விதிகள் சட்டம் ஆக்கிச் சுழலும் உலகமிது

சங்கம் கண்டோர் தமிழும் தலையைக் குனியக் காண்கிறது
செங்கள வீரச் செம்மல் ஏற்றும் செய்யுள் சிரிக்கிறதே
அங்கம் வெட்டி அழிவேன் என்றாள் அன்னை பாலகனும்
அரும்போர் கண்டோன் இதயம்ஏற்கா அம்பென் றாகும்கால்:
மங்கை மேனி மரணப் பாயில் மாற்றான் வீழ்த்தக்காண்
மானம் கெட்டே மருளும் மனமும்  மடமை நிலையன்றோ
எங்கும் துன்பம் ஏகம் ஆகி  இயல்பில் பிறழுங்கால்
ஏனோ எம்மால்  இயலாதென்றோர் எண்ணம் சரியாமோ

பங்கம் இன்றிப் பனிநீரோடை பரவும் இனிகாற்றும்
பகலில்  ஒளியும் இரவில் கனவும்  பார்த்துத் கொண்டேபின்
தெங்கும் ஆடத் திங்கள் மிளிரும் தென்றல் கதைபேசும்
தினமும் எழிலார் திகட்டா துய்க்கும் தேனில் இனிவாழ்வை
மங்கும் இனமும் மாண்டேபோகு மதனின் முன்காண
மனமும் வேண்டில் மனதில் என்றும் மதிநுட் பத்துடனே
பொங்கும் அருவிப் புனலென்றோடிப் போற்றும் புதுவாழ்வை
பொன்னேர் தமிழும் தன்முடிகொள்ளப் பாரா துயிர் போமோ

வாழச் செய்வாய்நீளப்பரந்த வானத்தின் நிர்மலதோற்றத் தொலைவூடே
தாழக்கிடந்த வெண்மேகம் தேகம் சுட்டுச் சிவந்ததனால்
வீழக் கிடந்த வெய்யோனின் வெம்மை தங்கா கன்றியழ
மேளத் திடுதிடு சத்தமுடன் மேகத்திடி மின் னல்கூட்டம்

ஆளப் பிடித்த அரசனவன் அயல்நாட் டுள்ளே விதிமீறும்
வேழப்படையின் விரையோசை விதமென்றாகி மதங்கொள்ள
மீளப் பிறிதோர் நாள்வருவேன் மின்னல் மாயம் பொழிமழையாய்
வீழ்த்தான்நீ வெகுண்டாயோ விடியும்காணென் றொளிர்தீயும்

ஆழக் கடலில் அடிவீழ்ந்தே அனலைத் தீய்க்கும் அறங்கண்டே
மாளச் செய்வதில் முனைவாக மாலை யிருளன் போதையிடு
சூழச் செறிந்த விதங்கண்டு சுற்றிச் சுழன்றே புவியோட
நாளப்போதில் நிலைநோக்கி நடைகொள் மாந்தர் மனையேக

நாளும் பறந்தே இரைதேடி நன்றாயுண்ட பறவையினம்
கீழும் மேலும் திசைகண்டு  கிளர்ந்து விரைந்து மேகுங்கால்
கோளும் செழித்த தீயுலவிக் கூத்தா டும்விண் ணாழத்தில்     
வாழுமுலகில் வாழாது வதைபட்டுழலென் றாக்கியவள்

ஆழும் முறைமை சீர்கெட்டே அநியாயத்தில்  வீழ்ந்தோரின்
தாழும் வாழ்விற் கைதந்தே தருமம் என்றே நிலைகொள்ளா
கூழுங்குடித்துத் திண்ணையிலோ கூடிவீரர் கதைபேசி
வாழத் தந்தாய் வாழ்வென்றே வாசல் புகுந்த வேளையிலே

நீளப் பெருத்த பாம்புகளும் நீள்கூர் கொள்ளும் கொம்புடனே
காளைப் பெருமா டோடிவரக் காலைச் சுற்றும் கருநாகம்
தேளின் கொடுவால் தீண்டிவிட தீயில் உயிரோ டெரிபோகும்
ஆளைக் கொல்லும் உயிர்வாங்கி அனைத்து மொன்றாய் அணிசேரின்

பேழைகுள்ளே பிணமாகிப் போதலன்றிப் பிறிதுண்டோ
தூளைத் தூசைத் துரும்பென்றும் தேவர்குலமாம் இவையாவும்
மூளைத்திறனில் மானிடமும் முழுதும் இயற்கை வளமாக்கி
ஏழை மனதோ டெம்தமிழர் இயல்பென் றிங்கே செய்தாய் ஏன்

பூவைப் பூக்கச் செய்தாய் பின் போதில் வாடும் தகையீந்தாய்
ஆவைக் கன்றென் றன்புடனே  ஆக்கி யணைக்கு மன்பீந்தாய்
மாவைக் கனிகொள் மரமாக்கி மண்ணில் பசிபோம் வகைசெய்தும்
சேவைக்கென்றோ தமிழீந்தாய் செல்லாக் காசாய் இருவென்றாய்

நாவிற் தேனாய் இசைபாட நல்லோர் தமிழைத் தந்தாலும்
பாவை இனமென் றோர்பாதி பட்டுத் துடியென்று டலீந்தாய்
சாவைத் தந்தேன் சதிபோலும் சரிதம் செய்தாய், மானிடனைத்
தேவைக் கென்றோ மானிடனே தீண்டிக்கொல்லும் குணமீந்தாய்