Wednesday, 3 September 2014

பனியில் பூக்கும் மலர்கள்

ஆங்கில நாடென்னும் வாழ்வினிலே தமிழ்
ஆவல்பிறக்குது நெஞ்சினிலே
தூங்கும் மதியொளிப் போர்வையிலே சோலைத்
தென்றலெனத் தமிழ் தோன்றுகுதே
மாங்கனி கீறி நறுக்கியிட்டு- அதில்
மாவடு தேனையும் ஊற்றி வைத்து
தாங்கி மடிதனில் தாயிருத்தி உண்ணத்
தந்திடல்போல் தமிழ்காணுகுதே

பூங்கொடி புள்ளினம் பேசுமொலி ஆங்கு
புள்ளி மான் துள்ளுவ தான எழில்
தாங்கிய தாய்த்தமிழ் வீறெழுந்து எமைத்
தீந்தமிழ் பாடிடத் தூண்டிடுதே
மூங்கிலிலே துளை வண்டெழுப்பத் தென்றல்
மோதிடக் கேட்குமிசை யெனவே
தேங்கும் துயர்துளை கொண்டமனம் அயல்
தேசமொழிக் காற்றில் பாட்டெழுதே

வேங்கையதும் வில்லு மீன்கொடியும் இவை
வெற்றிகொண்டே அன்று வையகத்தே
பூங்கொடியின் நறு வாசமெடுத்தயல்
போகும் இளங்காற்றில் துள்ளியதாய்
ஓங்கிடு வானில் முகில் மறைத்த சுடர்
உள்ளிருந்து மெல்ல மின்னுவதாய்
ஏங்கி மனமதும் இன்பமுற்றுத் தமிழ்
எண்ணிப் படபடத்தாடிடுதே

தூங்க முகிலிடை பாய்விரித்து மேலைத்
திக்கில் படுத்திடும் சூரியனும்
ஆங்கிலம் பேசிடும் வீதியிலே பொரித்தாறும்
கிழங்குடை வாசனையும்
பூங்கொத்து ஏந்துகை புன்னகைகள் மொழி
பேசப்புரியாத கைகுலுக்கல்
டாங்கெனும் தேவனின் ஆலயத்தின்மணி
ஓசை எதிரொலி கேட்கையிலே

ஏங்குது உள்ளமும் எண்ணித்தமிழ் இங்கு
எங்கள் குழந்தைகள் என்னசெய்யும்
ஆங்கில மோகம் அழித்தவரின் உள்ளே
அன்பைத் தமிழ்மீது குன்றவைத்து
தேங்கியநாக ரிகச் சுழலில் இவர்
தீமைகள் கொள்ளத் தமிழ் மறக்க
வாங்கிடுமோ உள்ளம் விற்றவரும் மேற்கு
வானவில்லைநம்பி வாழுவரோ
********************

பொங்கி யெழுங்கடி


பொங்கி யெழுங்கடி பொங்கிஎழு இனிப்
போதும் பொறுத்தது பொங்கியெழு
எங்களினம் மொழி காக்க இனித் தமிழ்
ஏற்ற மடைந்திடப் பொங்கியெழு

சங்குமுழங்கிடக் கேட்குது பார் அங்கு
சந்தியிலே கொடி ஏற்றினர் காண்
பொங்க முழக்கிய ஓசை முரசொலி
பின்னே யெழுந்தது பொங்கியெழு !

இல்லமெங்கும் உணர்வோடிக் கொதிக்குது
எத்தனை வேகம் இதை வந்து பார்
வெல்லவென ஒளி வானில் எழுந்தது
வீரியம் கொண்டனர் பொங்கியெழு

சொல்லப் பெருந்தொகை மாந்தரெனப் பல
செந்தமிழர் குலம் வந்தது காண்
வல்லவராய்த் திரண்டோடி எதிர்கொள்ளும்
வாழ்வில் துயர்நீக்கப் பொங்கியெழு

மெல்லத் திரும்புது எங்கள் இனித்தமிழ்
மேன்மைக் குலத்துடை வாழ்வதுகாண்
கல்லை கரைத்தனை கச்சிதமாய் இனிக்
காலமெமதடி பொங்கியெழு

அல்ல லிழைத்த அரண்மனையில் அவர்
ஆட்டம் ஒழிந்திடக் கொள்ளையரும்
பல்லுல கும்பழி செய்தவரு மெங்கள்
பைந்தமி ழர்முன்னே மண்டி யிட்டார்

சொல்லை யிழந்தவர் பேச்சிழந்து பணி
செய்தலெனப் பல பொய்யுரைத்து
நல்லவர் கண்களை ஏய்த்தவர்கள் இன்று
நாணிக் குனிந்தனர் பொங்கியெழு

நெல்லைவிதைத்தவர் நெல்லறுப்பர் -கடும்
சொல்லை விதைப்பவர் சீரழிவர்
நல்ல விதைத்தவர் நாமல்லவோ - இதை
நானிலம் கண்டிடப் பொங்கியெழு

***************

Monday, 1 September 2014

கனவுகளின் காதலன்

எண்ணங்களின் இளங் காதலியே - நீ
எப்போ வருகின்றாய் 
தண்ணிலவின் ஒளி மின்னலிலே - நான்
தவிக்கும் நிலைகாணாய்
உண்ண மனம்கொளும் இச்சையில்லை - என்
உள்ளத் தவிப்பறிவாய்
மண்ணுலகில் என் மனமகிழ்வே - நீ
மறுபடி வாராயோ

வண்ணங்களின் ஓர்வடிவழகே - என்
வாழ்வின் கற்பனையே
கண்களின் முன்னால் வருவதில்லை விழி  
காணாக் கோலமுமேன்
எண்ணங்களின் துயில் இடருறவே அதில்
என்றும் இணைபவளே
மண்ணுலகின் பெரும் மர்மமடி - நீ
மாயை உருவமடி

பொன்மணிகள் போற்கலகலத்தே, - எனைப்
புத்துணர் வாக்குகின்றாய்
புன்னகையை எனில் போர்க்கின்றாய் - பின்
பேசா தழிக்கின்றாய்
தென்பினை உடலில் தருகின்றாய் - கணம் 
தேம்பியும் அழவைப்பாய்
என்னசெய்வேன் நீ இல்லையெனில் - எனை
இதயம் நிற்குமடி

எப்பொழுதும் நீ வருகின்றாய் - பின்
இடையில் மறைகின்றாய்
தப்பெனதோ ஒரு தவறுதலோ - உனைத் 
தழுவிக் கொள்கின்றேன்
முப்பொழுதும் என் கற்பனையில் - உன்
மூச்சை உணர்கின்றேன்
செப்படியேன் துயில் கொள்கையிலே - எனை
சேரத் துடிப்பதென்ன

ஓடும் நதிக்கரை ஓரத்திலும் - மலர் 
உதிரும் சோலையிலும்
ஆடும் கடல் அலைக் காற்றினிலும் - அந்த 
அல்லிக் குளத்தடியும்
நாடுமிருள் வரும் மாலையிலும் - ஏன் 
நண்பகல் நேரத்திலும்
வாடும் மனந்தனில் கனவுகளே  உன்
வண்ணம் எழுகிறதே

நனிசுவை தேனும் இனிப்பதில்லை - நீ
நாடுங் கணங்களிலே
பனியிழை புல்லும் குளிர்வதில்லை உன்
பாசத் தழுவலிலே
இனியொரு வாழ்வே இல்லையடி - நீ
இல்லை என்பதிலே
புனிதமுடன் எனை இணைவதிலே என்
பிணிகள் தொலையுதடி

தனிமையிலே நான் இருக்கையிலே எனைத்
தழுவும் வேகமென்ன 
இனிமையுடன் மனம்நிறைவதிலே என்
இடர்கள் மறைவதென்ன
மனிதன் எனுமுணர் வெழஉடனே - மனம்
மயங்கித் தவிப்பதென்ன
கனியெனவே தினம் இனிப்பவளே - என் 
கனவுகளே சுகமா?

பாராட்டுக்கள் இன்பம் தரும்


மகிழ்வான இதயங்கள் கண்டு - என்
மனமோ நல் இசைமீட்டி பாடும்அன்போடு
முகிழ் மாலைமலர் மென்மைபோலும் - என்
முகம்மீது புன்னகை இழைந்தோடச்செய்யும்

குழைவான கனிவான எண்ணம் - அதைக்
கொள்வதே பலகோடி வரமான தொன்று
மழையோடி மணல்மீது சென்று - அது
மறைந்தோடி இருந்தாலும் மண் ஈரமன்றோ

குழல் ஊத விரல் மூடல் வேண்டும் - அக்
குரலான திசைகூட்டி அதனூடு ஓடும்
அழலான தெரிந்தாலும் அன்பு -  என்றும்
அதனாலே புடம்போடபொன்னென்ப தாகும்

விழிகூறும் கதை நூறு பொங்கி - அதில்
விழுகின்ற துளியான தொரு சேதிசொல்லி
அழியாது அன்பெனும் வேள்வி -இன்று
அதைமீறி எழுகின்ற தீயாகி நில்லு

தொலையாது நிலவான தெங்கும் . - அது
தூங்கிடும் மறுநாளில் துள்ளி வானோடும்
கலையான தொருமூச்சு என்றும் -இக்
கலையான நிதம்வந்து கற்பனைகூட்டும்

மலரான தெழில்மாலை பூக்கும் -இதில்
மனமின்பம் கொண்டிட இளங்காற்றுவீசும்
சிலராகம் செவியின்பம் கூட்டும் - வரும்
சில்லென்ற தென்றலில் மனம்நின்று தோற்கும்

பெருவானில் குயிலோசை கேட்கும் - அது
பிறைவானில் எழுந்தோடி அது என்ன பார்க்கும் 
நிறைவான ஒளிதந்து நாளும் - நிலா
நின்றிடும் சுற்றியே உலகோடு வாழும்