Wednesday, 31 July 2013

உயிர்ப்பு

ஓடிவிட வாஎன்றே உயிர் எழுந்து கேட்கும்
ஓவிடுவே னாஎனவே உடல்சினந்து நிற்கும்
தேடிவர வாஎன்று தீகடைக் கண் பார்க்க
தேவையிலைப் போவென்று தென்றலதை ஊத
ஆடிவிழ வாஎன்றே அசையுமிரு காலும்
ஆனந்தமாய்  நடனமிடும் அழகுடலும்கண்டும்
பாடிஒரு கவிஎழுத பாவியிவன் முனையப்
பாருங்கடா இவனையெனப் பரிகசிக்கும் விதியோ

மூடிவிடவா என்று மூச்சுப்பை கேட்கும்
மோகமுடன் ஆசைவிழி மூச் சென்று அடக்கும்
மாடியினில் வாழுபவன்  மதியிழந்து தூங்க
மாயமனம்கூறுங்கவி மழையும் நின்றதாக
வாடிவிழும் பூஎனவே வாழ்வில் இதுகண்டால்
வசந்தம் மலர் தேடியிவன் வானம் புகுவானோ
நாடி விழுந்தாலென்ன நடை தளரவில்லை
நான் வணங்கும் சக்தியவள் நலம் பெற்று வருவேன்

காலைமலர் பூக்கவில்லை கனவுகளும் வெறுமை
கனியிழந்த சோலைமரம் காக்கை பட்சியில்லை
சோலைக்குயில் கூவவில்லை சுற்றிவருங் கோவில்
சுடர்தீபம் ஆடுவது சுழல் காற்றின் தொல்லை
வாலைமகள் பாடுங்குரல் வயற் காற்றிலில்லை
வந்த இளங் காற்றும்முகம் வருடும் குணமில்லை
மாலையிருள் சூழின்ஒளி மறைவதென்ன புதுமை
மறுபடியும் உதயம்வரும் மகிழ்வுகொள்ளக் காலை

காலம் சொல்லட்டும்

சிரிக்கட்டும் சிந்தைதனுள்
  சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
எரிக்கட்டும் ஏங்குமுளம்
  இடர்படவே எரிக்கட்டும்
கரிகொட்டும் வகையாய் என்
  கவி சமைந்துபோனாலும்
சரிகெட்டும் போவேனோ
  சரித்திரமும் முடிவாமோ

விரிக்கட்டும் விண்ணிற்பல
  விழிசிமிட்டும் தாரகைகள்
சரிக்கட்டும் சஞ்சலங்கள்
   சாய்ந்தலைந்து வீழும்வரை
வரிக்கட்டும் விதிபலவும்
  வாழ்முறையில் வரைகோடும்
இருக்கட்டும் இவையெதுவும்
  என்னுலகிற் கில்லையம்மா

உரைக்கட்டும் உள்ளறிவோ
  உன்னதமும் யாதெனவே
அரைக்கட்டும் அதில் அன்பை
  அற்றதென ஆற்றிடையே
கரைக்கட்டும் கரையுடைந்து
  காட்டாறு வெள்ளமென
விரையட்டும் விரைந்தாலும்
  வீறழிந்து போகாதே

புரைகட்டும் புண்ணாயின் 
  புதுமருந்து போடட்டும்
அரைக் குட்டும் அனல்பேச்சில்
  அழுந்திமனம் வேகாது
முறைகெட்டும் நடைகொண்டால்
  முழுதா யணைத்துவிடில்
மறை காட்டும் அன்னையவள்
  மடிதூங்கி எழுவேனே

உறைக்கட்டும் உண்மை மனம்
  ஓடியொரு நாள்தெளியத்
திறைகட்டும் செயலொப்ப
  தேவைகளில் நலங்காண
உறையெட்டும் வாளெடுத்து
  உண்மைகளைத் துயில் கலைத்தால்
அறங்கொட்டும் வாழ்வமைந்தே
  அன்னைவரங் கிட்டாதோ

சத்தியதீயே என் அன்னையே

சக்தி சக்தி சக்தி என்று கத்திக் கூறடா - அந்தச்
சத்தியத்தின் ரூபமுந்தன் பக்கம் பாரடா
பக்தி பக்தி பக்தி கொண்டு நித்தமோதடா - உந்தன்
பக்கம் நிற்கும் பாவமோடிச் சித்தியாமடா
எக்கதிக்கும் அன்புகொண்ட அன்னைமேலடா - நின்னை
சக்தியுள்ள நற்கதிக்குள் சேர்ப்பளாமடா
திக்கனைத்தும் ஆளும்தெய்வம் புத்திவேண்டடா அன்னை
தக்க அன்புகாட்டி உன்னை காக்கும் தீயடா

மத்தியன்றி அண்டமேவி நிற்பளாமடா - என்றும்
மாலைகாலை தோன்றும் வீழும் சூரியன்களில்
வைத்திருக்கும் வெம்மை சொல்லில் தேவிதானடா - நின்று
வஞ்சம்தீது வாழ்வில் தீய்க்கும் அன்னை யாமடா
சித்தி மேன்மை செல்வம் யாவும் சக்திதானடா அன்பு
சொத்து வாரிக் கொட்டுமின்ப வாழ்வின் தாயடா
பக்தி யோடு நீநினைக்கக் கற்றுக் கொள்ளடா - உன்னைப்
பார்க்கும் அன்னை சக்தி கண்கள் பாசம் கொண்டடா

நீர்தெறித்த போது நிற்கக் காணும் தண்மையும் - பின்பு
நீவும் காற்று மேனிதொட்டுப் பேசு மின்பமும்
யாரெழுந்தும் செந்தமிட் சொற் பாவிசைக்கவும் - அங்கு
நானும் மெய் மறந்துமாவி சேர்திருக்கவும்
போர்எடுத்த வாழ்வில்போது  போற்றி அன்னையும் - வீரம்
பொங்கும் நேரம் பொங்கப் பொங்கப் புத்துணர்வையும்
மார்பில் வைத்துப் பாட்டிசைத்து தூங்கு மன்னையும் - கொண்ட
மாமகாநம் சக்திகொண்ட மாற்ற மல்லவோ

மத்(தி)யவான மண்டலத்தின் மாபெரும் ஒளி - மேற்கு
மஞ்சள் வண்ணத் தீகுழம்பின் மாலை காணொளி
வித்தைகள்பு ரிந்துகாணும் வெள்ளைத் தீயொளி - இன்று
வேகமென்னி லோடும் சூர்யப்பாதை போம்வழி
சித்தங் கொண்டு சேவித்தன்பு சொல்லு பாரினி - இந்தச்
சுற்றும் பூமி அற்பவாழ்வில்  செல்லும் நோய்பிணி
உத்தமிக்கு உன்மனத்தைப் பக்தியோடளி - இனி
ஓங்கும் வாழ்வில் உண்மைகாணு மில்லை வேறினி!!

விட்டுச் செல்வனா யான்?


சொ ல்லவிலைச் செல்வனெனச்
  சொல்லறியாச் செல்வனிவன்
  சொல்லதனைச் சொல்வதில்லை இன்று
செல்வரெனச் சொல்வதெலாம்
  செல்தனத்தைக் கொண்டவரோ
  செல்லும் வரும் நிற்பதில்லை யொன்று
செல்வனெனச் சொல்லுதலைச்
  செல்லாதென் றாக்கியும் நாள்
  சொல்லின்பல சென்றுவிட்ட திங்கு
சொல்லை விலை கொண்டதெனச்
  சொல்லுகிறார் சொல்வதனால்
  சொல்வதில்லைச் சொல்லதல்ல தின்று

செல்லும்வரும் செல்வமது
  செல்வந்தரென் றாக்கிடினும்
  செல்வர்களாம் வந்தவழி கண்டு
சொல்வருள்ளே சொல்லுவதில்
  வல்லவரென் றாகிவிடில்
  சொல்லினுக்கே சொல்லுமர்த்தம் வேறு
சொல்லுலகும் சொல்லிமகிழ்ந்
  தள்ளுசுவை கொள்வதெனச்
  சொல்லின்வகை இன்தமிழி லுண்டு
செல்வதினி இல்லையெனச்
  சொல்லுறுதி கொண்டவனாம்
  சொல்லுடையாச் சொல்லுடைத்தேன் இன்று

Friday, 19 July 2013

நான் நானேதானா?

அதிமதுரச் சுவையெழவும் அழகிலொரு மலர் எனவும்
அகிலமதில் வாழவிட்டதாயே
பதிமனதில் இதுவெதெனப் பழகுதமிழ் புதியதெனப்
பருவமதைத் தந்தவளும் நீயே
கொதியுலையில் கிடவெனவும் குளிருறையப் படுவெனவும்
குவலயத்தி லென்வாழ்வை யீந்து
விதியதனை விளக்கமின்றி வெறுங்கரத்தில் திணித்துவிட்டு
வேடிக்கை பார்ப்பதுவும் நீயே

மதிபுரள மயக்கங்களும் மனதில் நிழல் மறைவுகளும்
மருளவென உயிரிட்ட தாயே
சதிஎனவும் கதிஎனவும் சஞ்சலத்தி லாழ்ந்துவிட
சரித்திரமும் எழுதிவைத்ததேனோ
புதிதுஎன எதுவுமிலை பொழுதுவரும் அதுவுமெல்லை
புகட்டிஎனை புதுமனிதம் ஆக்கி
முதிர்பருவ மதிற்தெளிவு எதுவுமின்றி இது வெனது
முகமெனவே காட்டி யருள் சேர்த்தாய்

கதிஇதுவோ எனதெனவும் கரமெழுதும் கருவிதனும்
கடைவழியில் நிற்குமிவன் ஏந்தி
துதிதமிழைப் பாடுஎனத் தூரிகைகொள் ளாதவனை
துணி வண்ணம்தீட்டுவென வைத்தாய்
நதியெனவே பொங்கக் கவி நிதியளித்த தேவியுனை
நிறுத்தி ஒரு வரமிதனைக் கேட்டேன்
எதில் இவனும் மூழ்குவது எதை விடுத்தே ஏகுவது
இதை அறியு மாற்றல்தனும் தாநீ

வதியும்பல அறிஞரிவர் வளமுடைய கலைநிதியர்
வருமழகு சோலைதனில் நானும்
எதிலும் மனஇயல்புதனை ஏற்றவிதமாக்கியருள்
இதமுடனே வாழ வழிசெய்வாய்
அதிதொலைவில் இல்லையிவன் அகமுழுதும் நிறைந்தவராம்
அதனில் ஒரு குறையெதுவுமில்லை
பதிலிதெனில் பச்சைவண்ண பாம்பிலுறை வோனையன்று
பார்க்கச் சென்ற குசேலர் உணர்வானேன்

இமயமலை கண்டவரை எனதயலில்காணுகையில்
எதை பொருளென் றெடுத்தியம்பக் கூடும்
சமயமதில் ஏதறிவும்  தனதுடைமை இல்லையெனில்
சற்று மனம்கோணும் குரல் திக்கும்
இமைநழுவும் விழியெதுவும் இலக்கியங்கள் அறிந்ததில்லை
எதையெடுத்து பேசமுனைவேனோ
அமைதி கொளும் நெஞ்சினிலே அவளிருந்துசொல்வதின்றி
அவைதனிலே எழ மனதுகூசும்

அந்தமும் ஆடிவருதோ?

மரணத்தேவன் அழைக்கின்றான் - என்
மனதுள் கீதம் படிக்கின்றான்
இரவும் பகலும் சுமக்கின்றேன் - அவன்
எழுவான் திசையில் விழிக்கின்றேன்
பரவும் நோயைப் பெருக்கின்றான் - தன்
பாதம் கொண்டே உதைக்கின்றான்
தரவும் துயரை வகுக்கின்றான் - என்
தவிப்பில் இன்பம் களிக்கின்றான்

வானம்மீது மஞ்சள் நிலா - முகில்
வந்தே மூடச் சென்றதில்லா
தானம் மிருளில் தடதடப்பு - கருந்
திசையாம் எங்கும் ஒளிமறுப்பு
ஏனம் மழையோ இடைத் தோன்றல் - அதில்
ஏறும் மின்னல் ஒளிச்சீற்றம்
ஓ..நம் உயிரைத் தேடுகிறான் - இவ்
உலகை சீண்டி உளம்சிலிர்த்தான்

பூக்களை வாரி இறைப்பவர் யார் - அப்
போகும் வழியைத் திறப்பவர்யார்
தீக்கல் எரிந்தே சிதறுவதேன் - அத்
திங்கள் மங்கித் தேய்வது ஏன்
பாக்கள் பாடும் தேவதைகள் - தம்
பனிநீர் வழியும் விழியூடே
ஆ..க்கள் ளுண்ட அரைவிழியில் - எனை
அன்போ டழைக்கும் வகையென்ன

ஆண்டவன் அருகில் நிற்கின்றான் - என்ன
ஆணவமென்றே நகைக்கின்றான்
ஆண்டவன் புவியிடை பாவங்களே - நீ
அன்பினைப் படியெனச் சிரிக்கின்றான்
ஆண்டவன் எத்தனை அறியானோ - நான்
அனுபவித் துழன்றவை விதிதானோ
ஆண்ட வன்அரசுடை நிலைதானோ - இதில்
ஆனந்தம் இழந்தவை நிழல்தானோ

தீமழை யாகப் பொழிகிறது - அதில்
தேகமும் கருகிக் காண்கிறது
வாமனதெடு கொள் விரைந்தோட்டம் - என
வழிதனில் பளபள ஒளியூட்டம்
போமனிதா எனும் உயிர்வாட்டம் - இனும்
பிறவித் தோழமைப் பிரிவேக்கம்
பூமணம் சூழலில் விழிமயக்கம் -அதில்
பொன்னொளி கூடல் புதுவாக்க

Tuesday, 16 July 2013

தேவைகளை ஈய்பவளே!

கூவுமிளங் குயில்பாடக்
    குழலிசையேன் யாழிசையேன்
    கொப்பிருந்தால் போதாதோ
தூவுமழை மேகமின்றித்
     தோகைநட மாடவெனத்
     துள்ளிசையும் தேவையாமோ
தாவும்சிறு மான்குட்டி
     தான்குதிக்கத் தாளஒலி
     தானுமங்கு வேண்டுமாமோ
ஆவின்மடி பால்கறக்க
     ஆட்டமென்ன பாட்டிசையேன்
     அதன் கன்று உண்ண விட்டாலே

மாவின்கனி பழுக்கவென
     மந்திரமேன் தந்திரமேன்
     மழையிருந்தால் போதாதோ
நாவில் தமிழ் சிறக்கவெனில்
     நூல்படித்து காணவில்லை
     நெஞ்சில் அவள் நின்றதாலோ
பாவின் அடி சந்தமிடப்
     பார்த்துக் கனம் கொள்வனல்ல
     பாமொழிந்த தவளேயன்றோ
தேவியவள்  பார்த்திடுவள்
     தீயின்தகிப் பேற்றமுறத்
     தீமைகளும் ஒழிந்திடாதோ

பூவினெழில்  சிறப்பென்னில்
     புகழ்வேது புனைவேது
     பூங்காற்றின் வேலையன்றோ
மேவுங்கட லலைநீரும்
    மிதக்கும் படகாடிடினும்
    மீண்டும் கரை சேர்க்குமன்றோ
தூவும் மலர்கொண்டருளும்
     தெய்வத்திடம் கேட்டுவிடு
     தேவைகளைத் தந்திடாளோ
ஏவுமவள் சொல்லினுக்கு
     ஏற்றவழி நாம் நடக்க
     இன்பமது கூடிடாதோ

தேவியவள் வரமீயத்
     திகைப்பில்லை விழிப்பில்லை
     தேன் தமிழும் ஒழுகிடாதோ
சேவித்தவள் திருப்பாதம்
    தலைவைத்துத் தொழுதுமெழ
    துன்பமெலாம் கரைந்திடாதோ
கேவியழுதாலென்ன
    கீழ்மைதனை மனங் கொள்ளின்
    கிடைப்பதெது கேடுதானே
ஆவியது உள்ளவரை
     அனல்நீங்கிக் குளிரும்வரை
     அவள் மூச்சி னுயிர்ப்பு நாமே

தூற்றுபவர் தூற்றட்டும்
    துணிவெடுத்து நேர்நின்றால்
    துயரழிந்து போய்விடாதோ
காற்றடித்து மரம்வீழல்
    கற்பனையே நாளுமவள்
   கருணைவிழு தாங்கிடாதோ
மாற்றமில்லை அனபினிலே
   மனங்கொள்ளும் மதிகொல்லும்
   மயக்கமது தீர்ந்திடாதோ
ஊற்றிதனை தந்தவளே
     உன்பெயரில் பாடுகிறேன்
    உள்ளதெலாம் நீயேயன்றோ

******

விட்டு விடலாமோ?

புன்னகைப்பூ சென்றதெங்கே பொன்னிலாவே- நீயும்
போகும்பாதை இன்னலென்ப  கொள்வதாலே
என்னகத்தில் வாடும்பூக்கள் கொள்ளக் காணே - இனி
என்னசெய்தும் மீண்டும்பூக்க வைப்பேன்நானே
கண்ணசைக்கக் காவியங்கள் நூறு காண்பை - இன்று
காலமென்னும் மேடை கண்டும் ஆடுகின்றேன்
பண்ணிசைக்க பாதம் தூக்கி ஆடுவேனோ - இல்லை
பட்டதுன்ப மெண்ணி மூழ்கித் திக்குவேனோ

சின்னவன்கொள் என்னிருந்தும் வெண்ணிலாவே - நீயும்
செல்லும் எந்தன்பாதை கண்டு சேர்ந்துவந்தாய்
மின்னல் கொண்ட மேகம் நின்னை மூடிநின்றால் - அதை
மெல்லத் தள்ளி விட்டுத் தென்றல் ஒடுமாமோ
மன்னனேம ரகதப்பொன் மஞ்சள்வானில் - அந்த
மாலையின் நிலாவென்றாகிப் பொன்ரதத்தில்
இன்பமே கொள்ளென் றுபூமி உன்னதத்தில் - மேலும்
ஏற்றம் கொள்ளச் செய்குவை ஒளிச்சரத்தில்

தண்ணிலாவே என்ன உண்டோ என்கரத்தில் - நானும்
தந்துவாழ அன்பொன் றுண்டு யென் மனத்தில்
கண்ணிலாத கால்கள் செல்லும் கல்லிடிக்குள் - அந்தக்
கண்கள் சேரின் காண்வழிக்கு முன்னிருட்டி(இ)ல்
எண்ணும் பாதை நான்நடக்க உன்னொளிக்குள் - எண்ணம்
இல்லையென்ற வாழ்வே யில்லை என்வரைக்குள்
மண்ணுலாவும் எந்தன்வாழ்வு மானுடத்தில் - என்றும்
மாளுமட்டும்  உண்டே உண்டு நின்னொளிக்குள்

********************

பலம் கொள்வோம்

புத்தொளிக்குக் கீழ் நடந்து செல்வோம் - நாம்
போகுமிடம் எங்குமிருள் போகிடவே செய்வோம்
சத்தமிட்டு சாதனைகள் செய்வோம் - இனிச்
சத்தியத்தைக் கையெடுத்துச் சாத்திரத்தை வெல்வோம்
உத்தமரே ஒன்று கூடிவாரீர் - இனி
ஒங்கியே ஒலிப்பதென்ன ஒற்றுமையே கொள்வீர்
சத்துருக்கள் கொள்பகைக்கு எல்லை - வைத்து
சாத்துவீகம் என்னவென்று சற்றுரைத்து நிற்போம்

முற்றம்மீது பூமரங்கள் வைப்போம் - அவை
முற்றும் மக்கள் காண்சுதந் திரத்தைப் பூக்கச்செய்வோம்
கற்று நீதிகொண்டு காவல் செய்யும் - அந்தக்
காரியத்தில் கண்கள் வைத்துக் காதல் பூமி கொள்வோம்
சொற்பதத்தை நற்பதத்தில் கொள்வோம் -அந்தச்
சுந்தரப் பனித்துளிக்கு துள்ளும் மேடை பூவாம்
நிற்பதற்கு நாணிஓடும் தன்மை - கொண்ட
நீசம்செய் மொழிக் கலப்பை நீக்கி மொழி காப்போம்

மற்றவர்கள் எத்துணைக்கு மேன்மை - அதை
மட்டுமின்றி மேலும்நாம் உயர்ந்து உச்சி செல்வோம்
பற்றெடுத்துப் பாசம் அன்பு காதல் - இவை
பற்றவில்லை என்பதற்கே அர்த்தமில்லை ஆவோம்
விற்பதற்கு மானம் என்ற கீழ்மை - கொல்லும்
வித்தை கற்றுக் கொள்ளவைத்துப் பெண்ணினத்தை வீரம்
பெற்று மென்மை மேன்மை கொள்ள வைப்போம்-  எந்தப்
பீதியற்றும் நாட்டை மீண்டும் சொர்க்கமாக்கி வைப்போம்

பொற்றிரைகள் மேவும் ஆழிமீது - அந்தப்
புத்துணர்வுச் சூரியன்செய் பொற்பளிங்கு மேடை
அற்புதத்தை ஆக்கும் சக்தி போற்றி - நாமும்
ஆணவத்தை நீக்கியன்பு மூச்சில் வாழ்ந்து கொள்வோம்
கொற்றவர்க்கு ஆளும் நீதிசொல்லும் - மேன்மை
கொண்ட ஆட்சி செய்விதத்தை கற்றுக்கொள்ள வைப்போம்
புற்றரைக்கு கீழ்மை கொள்ளும் நாட்டை நாம்
புன்மை கொள்ளப் பார்த்திருக்கா போய்திருத்தி வைப்போம்