கண்ணைத் தந்தே காட்சிகள்செய்தார்
கானல் விம்பங்கள்
மண்ணைத் தந்தும் மானிடவாழ்வில்
மாயக் கனவுகளாய்
எண்ணச் சொல்லி நினைவுகள் வைத்தார்
எழுமாம் விகாரங்கள்
புண்ணைக்கொண்டோர் தேகமும் தந்தே
புனிதம் போற்றென்றார்
வண்ணங் கொண்ட நிலவைத் தந்தார்
வீசும் பொன் னொளியில்
தண்மை நீரில் தலையை ஆட்டும்
தாமரை நடமாட
விண்ணைக்கட்டி நீலவிதானப்
பட்டில் மணி வைத்தார்
உண்ணக் கழியும் உடலைத் தந்தே
உயிர்கொள் வலிசெய்தார்
வட்டப் பரிதி வந்தே ஏறும்
வானத்தின் வெம்மை
விட்டுத் திரும்பிச் செல்லும் முகிலோ
விண்ணிற் பஞ்சணைகள்
நெட்டைப் பனையும் தென்னைகளூடே
நிரவும் ஒளி செய்தார்
கட்டிப்போடும் பாசமென்னும்
காயப் பிணைப்பு வைத்தார்
மட்டும் அவற்கே உரிதாம் என்னும்
மண்ணை பறித்திடுவர்
எட்டும் வரையில் தெய்வம் கேட்டும்
எதுவும் அசைவுன்றி
கட்டும் மரத்தில் காணும் கடலில்
காற்றில் பிரயாணம்
விட்டே திசைகள் வீணே அலையும்
விம்பத் திரைக் காட்சி
No comments:
Post a Comment