Wednesday, 31 July 2013

காலம் சொல்லட்டும்

சிரிக்கட்டும் சிந்தைதனுள்
  சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
எரிக்கட்டும் ஏங்குமுளம்
  இடர்படவே எரிக்கட்டும்
கரிகொட்டும் வகையாய் என்
  கவி சமைந்துபோனாலும்
சரிகெட்டும் போவேனோ
  சரித்திரமும் முடிவாமோ

விரிக்கட்டும் விண்ணிற்பல
  விழிசிமிட்டும் தாரகைகள்
சரிக்கட்டும் சஞ்சலங்கள்
   சாய்ந்தலைந்து வீழும்வரை
வரிக்கட்டும் விதிபலவும்
  வாழ்முறையில் வரைகோடும்
இருக்கட்டும் இவையெதுவும்
  என்னுலகிற் கில்லையம்மா

உரைக்கட்டும் உள்ளறிவோ
  உன்னதமும் யாதெனவே
அரைக்கட்டும் அதில் அன்பை
  அற்றதென ஆற்றிடையே
கரைக்கட்டும் கரையுடைந்து
  காட்டாறு வெள்ளமென
விரையட்டும் விரைந்தாலும்
  வீறழிந்து போகாதே

புரைகட்டும் புண்ணாயின் 
  புதுமருந்து போடட்டும்
அரைக் குட்டும் அனல்பேச்சில்
  அழுந்திமனம் வேகாது
முறைகெட்டும் நடைகொண்டால்
  முழுதா யணைத்துவிடில்
மறை காட்டும் அன்னையவள்
  மடிதூங்கி எழுவேனே

உறைக்கட்டும் உண்மை மனம்
  ஓடியொரு நாள்தெளியத்
திறைகட்டும் செயலொப்ப
  தேவைகளில் நலங்காண
உறையெட்டும் வாளெடுத்து
  உண்மைகளைத் துயில் கலைத்தால்
அறங்கொட்டும் வாழ்வமைந்தே
  அன்னைவரங் கிட்டாதோ

No comments:

Post a Comment