Sunday, 5 July 2015

தேவைகளை ஈய்பவளே!

கூவுமிளங் குயில்பாடக் குழலேன் யாழுமேன்
கொப்பிருந்தால் போதாதோ
தூவுமழை மேகமின்றித் தோகைநட மாடவெனத்
துள்ளிசையும் தேவையாமோ
தாவும்சிறு மான்குட்டி தான்குதிக்கத் தாளஒலி
தானுமங்கு தேவையாமோ
ஆவின்மடி பால்கறக்க ஆட்டமென்ன பாட்டிசையேன்
அதன்கன்று வந்திடாதோ

மாவின்கனி பழுக்கவென மந்திரமேன் தந்திரமேன்
மழையிருந்தால் போதாதோ
நாவில் தமிழ் சிறக்கவெனில் நூல்படித்து காணவில்லை
நெஞ்சில் அவள் நின்றதாலோ
பாவின் அடி சந்தமிடப் பார்த்துக் கனம் கொள்வனல்ல
பாமொழிந்த தவளேயன்றோ
தேவியவள்  பார்த்திடுவள்  தீயின்தகிப் பேற்றமுறத்
தீமைகளும் ஒழிந்திடாதோ

பூவினெழில்  சிறப்பென்னில் புகழ்வேது புனைவேது
பூங்காற்றின் வேலையன்றோ
மேவுங்கட லலைநீரும்  மிதக்கும் படகாடிடினும்
மீண்டும் கரை சேர்க்குமன்றோ
தூவும் மலர்கொண்டருளும் தெய்வத்திடம் கேட்டுவிடு
தேவைகளைத் தந்திடாளோ
ஏவுமவள் சொல்லினுக்கு ஏற்றவழி நாம் நடக்க
இன்பமது கூடிடாதோ

தேவியவள் வரமீயத் திகைப்பில்லை விழிப்பில்லை
தேன் தமிழும் ஒழுகிடாதோ
சேவித்தவள் திருப்பாதம் தலைவைத்துத் தொழுதுமெழ
துன்பமெலாம் கரைந்திடாதோ
கேவியழுதாலென்ன கீழ்மைதனை மனங் கொள்ளின்
கிடைப்பதெது கேடுதானே
ஆவியது உள்ளவரை அனல்நீங்கிக் குளிரும்வரை
அவள் மூச்சி னுயிர்ப்பு நாமே

தூற்றுபவர் தூற்றட்டும் துணிவெடுத்து நேர்நின்றால்
துயரழிந்து போய்விடாதோ
காற்றடித்து மரம்வீழல் கற்பனையே நாளுமவள்
கருணைவிழு தாங்கிடாதோ
மாற்றமில்லை அனபினிலே மனங்கொள்ளும் மதிகொல்லும்
மயக்கமது தீர்ந்திடாதோ
ஊற்றிதனை தந்தவளே உன்பெயரில் பாடுகிறேன்
உள்ளதெலாம் நீயேயன்றோ

Monday, 1 June 2015

அன்பர்களுக்கு
இன்னும் கவிதைகள் தொடர்கின்றன...

www.kuyilkeetham.blogspot.co.uk

ற்குச் செல்லுங்கள் குயில்கீதம்

Monday, 9 February 2015

இரவா பகலா ?

மனமது உயிர்தனை வாட்டும் - விழி
மலர்களும் நீர்த்துளி ஊற்றும்
கனமென இதயத்தில் தாக்கும் - சுமை 
கவலைகொண்டுளம் இருந்தாலும்
தினமது மலர்களும் பூக்கும் - அது
துயர் கண்டும் இதழ்கள் விரிக்கும்
வனமதில் வீழ் எழிலருவி - அதன்
வகையினில் கொள் மனம்மருவி
நினைவுகள் கொண்டது வாழ்வு - அதில்
நினைப்பது நடக்கும் முயன்றால்
புனைந்திடும் கலயமும் செய்வோன் - விரல்
பிடித்திடும் வகையுருவாகும்
சுனைமலர் ஆடும் சிற்றலைகள் - தன்
சுதந்திர மெனப் பரந்தோடும்
வினைபடு கலங்குமுன் உள்ளம் - அதன்
விரைவெடு தெளிவுறக் கொள்ளும்’
துயரங்கள் நிலைப்பது மில்லை - அது
தொடர்கதை எனும் மரபில்லை
உயரமும் தாழ்வும் ஓர் பாதை - நடை
உருண்டு வீழ்ந் தெழுவதுன் பயணம்
துயரமும் மகிழ்வொரு தாயின் - மடி
தோன்றி வளர்ந்திடும் பிள்ளை
சுயநிலை மாற்ற முன் வருவர் கணம்
துள்ளி யெழுந்து பின்மறைவர்
வருவதும் போவதும் இயற்கை - நம்
வாழ்வினில் இரவுகள்பகலாய்
தரும் நித மாற்றம் ஓர் பாடம் - இத்
தரணியின் நிலை நிலையாமை
துரும்பென இரும்பதை எண்ணு - உன்
துயரத்தில் கனமில்லைப் பஞ்சு
அரும்பெரும் வாழ்விதை நம்பு - பெரும்
அதிசயம் தரும் இதன் பண்பு
***************

எங்கள் தேசம் என்று மாறுமோ?

நீரெழுதும் சித்திரமோ நிழல்வரைந்த ஓவியமோ
நெஞ்சங் காணும் வாழ்வழிந்து போகுதே
ஊரெழுந்தே ஓடியதும் உறவு கண்ட தாழ்நிலையும்
உற்ற துயர் நீக்கமின்றிக் காணுதே
ஏரெடுத்து நிலம் உழுது இன்பங்கொண்டு வாழ்ந்தவர் கை
ஏந்தி வாழும் இன்னல் நிலையானதே
பேரெடுத்த வீரர்தமிழ் பேசும் பலகாவியங்கள்
பேணுந்தமிழ் மாந்தர் நிலை மாறலேன்
மாரடித்துஅழுதுமென்ன மாதர் குலம் கதறியென்ன
மானம்தன்னை இன்னல் கொண்டுபோகுதே
யாரடித்துப் போவதெனும் நீதியற்ற கூட்டத்திலே
யாருமற்றவன் நிலைபோ லானதே
வேரடிக்கு வீழ்ந்த மரம் விலங்கடித்து போட்ட உடல்
வேட்கை கொண்டு சுற்றும் ராஜ பட்சிகள்
கூரெடுத்த பார்வையிலே கொள்ளும் உணவாக எங்கள்
குலம் இருக்க விட்ட நீதி கொள்ளவோ
சீரெடுத்த பழமைமொழி செம்மொழியென்றாகுந் தமிழ்
சிதையுதொரு பக்கம் கண்கள் மூடவா
நீரெடுத்த விழி சிவந்து நிற்குதொரு குலமுணர்ந்து
நிம்மதியை காணும் எண்ணம் தேய்வதா
தேரெடுத்தும் ஓடி நிலம் தீரம்கொண்டு மீட்டகதை
தேறியும் கிடக்கும் சங்கநூலிலே
ஊரையும் ஏமாற்றித் தமிழ் உள்ளங் கோழையாக்கி நலம்
உள்ள பக்கம் சாயும் இந்த உலகமே
நான் நடந்தால் மென்மலர்கள் நீ நடந்தால் செந்தணல்கொள்
நேர்மையிதே நீதியென்றே கூறுவர்
தேன் சுரந்த பூஎனக்கு சீழ்வடியும் புண்ணுனக்கு
தீர்வு இதோ கொள்ளென்றன்பை ஓதுவர்
வான் எடுதத வண்ணம் புகழ் வாய்த்து மலை ஏறுகையில்
வாரிக்காலை கீழ்விழுத்தி ஆடுவர்
கோன் பிடித்த கோலில் கறை குருதி பட்ட வேளை அதை
குற்றமில்செங் கோலென்றுண்மை மூடுவர்
ஆனதென்ன நீதியெங்கே ஆகும் வீரத்தோளுமெங்கே
ஆட்சிசெய்த மன்னர் கதையான தின்றே
மானம்காக்க மங்கையரும் மஞ்சள்பூசி பொன்னிலவில்
மன்னர்வீர மார்பில் சாய்ந்த நாளுமெங்கே
தேனை மாந்தி கொள்வதென தீந்தமிழில் பாடிநடம்
தெய்வ கோவில் மண்டபங்கள் காண்பதென்றோ
ஆனை படை கொத்தளங்கள் அரச பரிவாரமென்றே
அன்னைதமிழ்த் தேசம்,ஆகும் நாளுமென்றோ ?
Like ·

Thursday, 5 February 2015

காலத்தின் கோலம்

காலம் மாறிப்போச்சுதையா காலம் மாறிப்போச்சுது
கண்ணியமாய் காவல்செய்யும் காலம் மாறிப்போச்சுது’
கோலமின்று கூடிநின்று கொள்கைதனைத் தள்ளுது
கோணல்மனம் முன்னெழுந்து கூர்மதியை வெல்லுது
சீலமெனும் தேர்சரிந்து திக்குமா|றி ஓடுது
செவ்வடிவான் காண்கதிரும் தேயும் பிறையாகுது
ஆலமெலாம் அழகுபூசி அருங்கனி போலாகுது
ஆகமொத்தம் மின்னொளியில் அகல்விளக்கு அணையுது

காத்திருக்கும் மனமழிந்து காந்தசக்தி ஓடுது
கைப்பிடிக்குங் கருவியிலே காணுலகும் சிறுக்குது
பத்திரிகை நாளைவரும் பார்க்கலாம் என்றானது
பச்சையாக நேரொளியில் பாதிக்காட்சி ஓடுது
சாத்திரங்கள் போயிருக்கச் சத்திரங்கள் தேடுது
தத்துவங்கள் மேடைவிட்டு தம்வழியைப் பார்க்குது
ஆத்திரங்கள் கோபம் எல்லாம் அன்புதனை வெல்லுது
அத்தனையும் உள்ளமதை ஆட்சி கொண்டு பார்க்குது

மாற்றமிது மாற்றமில்லை மற்றப்பக்கம் புரளுது
மந்திரத்தை ஓதிவிட மாங்கனிகள் வீழுது
தேற்றவழி தோன்றவில்லை திரும்பி நிற்கச்சொல்லுது
தேவையெல்லாம் மின்னொளியில் தேகவண்ணம் மாற்றுது
ஆற்றலெல்லாம் கூகிளிலே ஆலவட்டம் போடுது
ஆக எங்கள் பேர்மறந்து அதையும் தேடச்சொல்லுது
நாற்றுநட்ட வயலினிலே நாம் விதைக்கப் போவது
சோற்றரிசி நெல்லையல்ல தீமைகொண்ட வாழ்வையோ

Thursday, 22 January 2015

இயற்கையின் அழகும் எமதுவாழ்வும்

கண்ணைத் தந்தே காட்சிகள்செய்தார்
கானல் விம்பங்கள்
மண்ணைத் தந்தும் மானிடவாழ்வில் 
மாயக் கனவுகளாய்
எண்ணச் சொல்லி நினைவுகள் வைத்தார்
எழுமாம் விகாரங்கள்
புண்ணைக்கொண்டோர் தேகமும் தந்தே
புனிதம் போற்றென்றார் 

வண்ணங் கொண்ட நிலவைத் தந்தார்
வீசும் பொன் னொளியில்
தண்மை நீரில் தலையை ஆட்டும்
தாமரை நடமாட
விண்ணைக்கட்டி நீலவிதானப் 
பட்டில் மணி வைத்தார்
உண்ணக் கழியும் உடலைத் தந்தே
உயிர்கொள் வலிசெய்தார்

வட்டப் பரிதி வந்தே ஏறும் 
வானத்தின் வெம்மை
விட்டுத் திரும்பிச் செல்லும் முகிலோ 
விண்ணிற் பஞ்சணைகள்
நெட்டைப் பனையும் தென்னைகளூடே 
நிரவும் ஒளி செய்தார்
கட்டிப்போடும் பாசமென்னும்
காயப் பிணைப்பு வைத்தார்

மட்டும் அவற்கே உரிதாம் என்னும் 
மண்ணை பறித்திடுவர்
எட்டும் வரையில் தெய்வம் கேட்டும் 
எதுவும் அசைவுன்றி
கட்டும் மரத்தில் காணும் கடலில் 
காற்றில் பிரயாணம்
விட்டே திசைகள் வீணே அலையும் 
விம்பத் திரைக் காட்சி

Tuesday, 20 January 2015

கனலொளியே காவாய்

           
ஞானத்தை வேண்டி நடக்கிறேன் யானும்
நான் தவிர வேறதையுங் காணேன்
ஊனதைப் பிடித்தே உந்திடும் சக்தியென்
உள்ளத்தில் சொல்வதைச் சொன்னேன்
தேனதைத் தந்தாள் தித்திக்க நெஞ்சில்
தேவையா சஞ்சலம் ஈந்தாள்
நானாக கேட்கா நலிந்துள்ளம் வற்றி
நட்பிலே பகையெண்ண விட்டாள்

மோனத்தில் ஆழ்த்தி மூச்சினை அடக்க
முனைகின்ற விதியையும் நோக்கி
தானன்பைக் கொண்டு தடையங்குபோட்டு
தரணியில் வாழ்ந்திடச்செய்தாள்
ஞானத்தைத் தந்தால் நானின்பங் கொள்வேன்
நாடாது தடுமாற வைத்தகே
கானத்தைப் பாடும் கற்பனை தந்தும்
கடல்மீது ஒடமென் றிட்டாள்

பூநக்கும் வண்டும் பூமியில் காணும்
பூவெங்கும் தேடியே திரியும்
தேனுக்கு ஆசை திகட்டாது என்றும்
தேடியலைந் திடும் வாழ்வு காணும்   
வானுக்குள் கோடி வண்ணத்தீ சுற்ற
வையத்தை செய்தெம்மை வைத்தும்
எனென்னைச் சுற்றி எங்கெல்லாம்தேடி
இதயத்தில் நிறைவின்றி விட்டாள்
வானத்தி னொளியே  வாழ்வுக்கு அதிதி
வார்த்தை தந்தே கூறச் செய்தாய்
கூனுக் கென்றாகும் கொள்கையில் இன்றி
கொண்டுபல இன்னுறவு காப்பாய்
வீணுக்கு நானும் வெளியெங்கும் தேடி
விரைகின்ற முகில் மட்டும் கண்டேன்
காணுள்ளத்தூடே கனலென்றுஆக்கும்
கடும் உணர்  விட்டென்னைக் காவாய்

ஒளி விளக்கு

எத்தனை எத்தனை தெய்வங்கள் கண்டோம் 
அத்தனையும் ஒன்றுதானே
நித்தமும் காலையில் கண்விழித்தால் முன்னே
நிற்பதோர்  சூரியன்தானே
மத்தியில் உச்சியில் மாலயில் காலையில்
மாறிக் கோலம் கொண்ட போதும்
அத்தீயில் காணும் அனல் விளக்கு எங்கள்
அன்பெனும் வாழ்வுக்கொளியே

சத்தியமும்கொண்டு நித்தியமாய் ஆதி 
சக்தியென்று நம்புகின்றேன்
புத்தியறிந்த வரையிலும் கண்டவன் 
பக்தியும் கொண்டதனாலே 
சித்தி கொண்டேயவள் சொல்லுங்கருத்தினை
செந்தமிழில் கவிசெய்தே 
உத்தம இன்பங்கள் காணுகிறேன் இது
ஏற்றிய தீபத்தொளியே

வற்றியும் போவதே யில்லை உலகினில் 
வாழ்வி லன்பெனும் நீதி
கற்றிருந்தும் பயன்கொள்வதில்லை அக
கண்களை மூடிடும் வேளை
உற்றதும் பெற்றதும் உள்ளவலிகளே 
ஓடிச்செல் தெய்வத்தைநாடு
சற்றுப்பொறு கூறு சஞ்சலம்  போக்கிட
சக்திதானே வேண்டும் சக்தி

நீ இருக்கும் வரை நானிருப்பேன்

              நேற்றிருந்தேன் இன்றிருந்தேன் நாளை நானில்லை
நின்று சுழல் பூமிகொண்ட நிழலு மங்கில்லை
தோற்றவனாய் திரும்புவதே ஈற்றில் என்னிலை
தூய்மைகொண்டே தூரத் தெரியும் தீயென் சக்தியை
நீற்றென உடலாக்கிய பின் நேரும் நற்சுகம்.
நிர்மலவிண் நீந்துகையில் நினைத்துப் பார்இதை
நாற்றம் கொண்டிட தேகமிட்டவள் ஊற்றித் தீயினை
நாளதில் நெருப்பாக்கிட நான் நீங்குவேன் உனை

சேற்றெனும் மணல் கொண்டுசெய்யுடல் சிந்தனைதனை 
 சீரழித்திடும் யாக்கை என்கிற தீமையுமில்லை
போற்றிட விண்ணில் போவதி லெந்தப் புதுமையும் இலை
 பூத்துக்கொண்ட இப்பொய்யுடல் விட்ட போது இன்நிலை 
ஏற்றிடுமவள் ஈற்றினிலெமை கொள்ளும் நாள்வரை
 இவ்வுலகினில் காண்பது மெய்யுணர்வின் பொய்நிலை
சீற்றம் கொள்ளுணர் ஆற்றலுமற்ற பேய்களின்நிலை
சிந்தி இந்நிலம் தந்தபின்கொள்ளும் குருதிக்கூட்டினை

காற்றினைக் கொண்டு ஊதிய இக்காமப் பையினை
கட்புலனொடு காட்சி விம்பமும் ஏற்றும் காதலை 
வேற்று எண்ணங்கள் வேண்டி மெய்யினில் ஆக்கும்வேட்கையை
விட்டொரு விதம் வெளியில்சென்றிட விரும்பினாலுனை
ஆற்றென அகமோடி கண்டந்த அன்புச்சோதியை
ஆக்கிடும் அகவேதனை தரும் நெஞ்சத்தோசையை
கூற்றென மெய்யைக் கூறின் யாக்கை தீயில் போம்வரை
கூடி உன்னுடன் நான் இருப்பது திண்ணம் வேறில்லை

நான் இருந்தால்...?


ஏழு வண்ண மாளிகைமுன் இரவினிலே விளக்குமின்றி
எப்படியோ நானவனைக் கண்டேன்
தாழுமுயர் மேகமிடை தானும் விளையாடியவன்
தான் ஒழிக்கத் தேடியறி என்றான்
வாழுமுல கென்னிலவன் வந்தொழியும் இடமறிவேன்
வானத்திலே எப்படி நான் என்றேன்
தாழும் முகி லோடுமட்டும் தன்னிடத்தி லில்லையெனத்
தலையசைத்து நான் மகிழ்வுகொண்டேன்

ஓடியெழுந்தே மறைய உடனெழுந்து தேடுகிறேன்
ஒர்முகிலும் நேருருவம் காட்டா
நீடியைந்த ஊர்வலத்தில் நேர் பறந்துசெல்ல மனம்
நிர்கதிகொண்டென்ன செய்ய என்றேன்
தேடியும்நான் காணவிலை திசையெதனப் புரியவிலை
தேவிமனங் கொண்டுதவாய் என்றேன்
நாடி யொருதீ யெழவும் நல்லொளிர்ந்த சோதியிலே
நான்மயங்கக் காதில் ஒன்று சொன்னாள்

பூஇருந்தால் தேனிருக்கும் தேனிருந்தால் பூவினுக்கும்’
தேடும் வாழ்வில் ஆசைகொள்ளத் தோன்றும்
நாவிருக்க ருசியிருக்கும் நானிலத்தில்  ஈதுவிதி
நானிருக்கும் போது சொல்லிப் போனாள்
நீயிருக்க நானிலையேல் நின்னுருவம் காணுவனோ
நானிருந்தால் தானறிவேன் என்றே
நானில்லையோ நீயில்லையோ நானறியேன் காணவில்லை 
நானிருப்பதோ இல்லையோ என்றேன்

நானில்லை நான் எங்குமிலை என்னையும் நீ காண்பதென
நேருவதும் இல்லையென்று சொன்னான்
தானிருக்கும் இடமறிந்தேன் நேர் நடந்து கண்டவுடன்
தான்மனதில் கோபங்கொண்டு நின்றான்
நான் இலையே நன்கறிவேன் நீயுமெனைக் கண்டதென்ன
நானறியேன் என்றவனைகண்டு
நீயிருக்க நான்இலையேல் நெஞ்சில்தெய்வம் காணுமங்கே
நிசப்தமே நிகழ்ந்திருக்கும் என்றேன்

பூசிரிக்கும் புன்னகைக்கும் போதில் ஒலி தோன்றுவதில்
போலிருக்க வேண்டும் நினதுள்ளம்
வாயிருக்கும் வார்த்தைகளில் வந்துமௌனம் குடியிருக்கும்
வாழ்வி லுன்னை விட்டுநானும்போனால்
தேய்விருக்கும் உயர்வுவரும் தேடும் விழி சாந்தமெனும்
தெய்வசுகம்  ஒன்றுமட்டும்காண
தாயெனவே அன்பிருக்கும் தமிழ்கனிந்த மொழியிருக்கும்
தாங்குமனம் தெய்வ மன்றோ என்றாள்

அருள்வாயே!


நிறைமதி முழுதென நினைவுகள் பெருகிடும்
நிலைதனை நிதமெழ அருள்தாயே
குறை மனதிடை இல கொடிதெனும் பிணிகெடு
குவலயம் மலர் என மடிதூங்க
மறை துயர், மகிழ்வெனும் மணியொலி நிதமெழ
மருவிய சுகமென மனமீதில்
இறை மழை எனஅருள் இலங்கிட மதி திறன்
இயல்பெழ நிறையன்பு தருவாயே

கருணையில் பெரிதென கரமெடு அருளென
கவலைகள் பொடிபட உடைதாயே 
வருவன வளம்மிகு தமிழுடன் இனிகவி
வரமிது எனஅளி இனிதாயே     
தரும் பொழுதினி லவை தவறிடும் வகையின்றித்
தகைமிக உடையவன் எனமாற
ஒருமையில்  துணிவெழ இயற்கையில் உரம் பெற
எனை நினதொளி தந்து அருள்வாயே

இருள் பல அறிவனென்  இரந்திடு நிலையெனும்
இரவுகள் இனியெனும் இலதாக
துருப்பிடி இரும்பெனும் துரும்பெனும் இழிவதும்
தொடஎன விடுநிலை அறுத்தெயென்
குருவென அறிவதைக் கொடு உளம் தெளிவுற
குருதியின் கொதி சினம் குறைவாக்கி
‘மெருகிடு மனமதை மகிழ்வுற தணிவெனும்
மிருதிடு மனம் கனிந்தெனை நீ`யே !

துரதிஷ்டம்



நீலமலையினின் சோலைக் குயிலொன்று 
   நின்று பாடுது - அது 
நேசமுடன் கூவ வானமழை மீறிச் 
    சோவெனக் கொட்டுது
மேலடி வானிடை மேகம் சிவந்திட  
   மேன்மை கொள்ளுது - அதை 
மாலைக் கருமிருள் மங்கிடச் செய்துமே    
   மாயம் கூட்டுது
கோலம் அதிவிரை கொஞ்சும் கடலலை 
   கூடி ஓடுது  - அது
கொள்ளுங் கரைமணல் துள்ளி விழுந்தபின் 
  கூசித் திரும்புது
சீலத்தொடு மனம் செந்தமிழ்ப் பாட்டினில் 
  சேர்ந்து காணுது - அதைச்
சோக மிழைந்தொரு சேதிவந்தே மனம் 
   சோரக் காணுது

வாலைக்  கொண்டோரினம் வந்து கிளைதொற்றி 
  வளைந்து தூங்குது  - அந்த 
வேளை கிளை முறிந்தாடி மண்ணில் வீழ 
   வெகிழும் குரங்கது
சாலை நடை பாதை தன்னந் தனியொரு 
  சீவன் போகுது - அது
சார்ந்து செல்லும் திசை மூங்கில் துளைகாற்று 
  சூவென் றூதுது
மூலைத் தெருவினில் கோவிலடிக் கடை 
   மாலை தொங்குது - அந்த
மாலைகள் சாமியின் தோளையெண்ண மங்கை 
     கூந்தல்  ஏறுது
நாலைக் குணம் கொண்ட நாரிகையின் நடை 
  நளினம் போடுது - அதில்
நீளக் கிடந்த கல் நேர்விழி. ஏய்த்திட 
  நடை தள்ளாடுது

முயன்றிடு நாளும்

ஊர் நிரம்பவும் ஓடுது பார் வெள்ளம் - இதில்
உனக்கு மட்டும்  வரண்டிருப்பதென் நெஞ்சம்
பார்முழுவதும் மண் படர்ந்திட்ட தோற்றம் - இதில் 
பார்த்து வைத்தும் உன் காலில் குத்துதே முள்ளும்
தேர்ந்தது மென்ன மேற்படிப்புடன் பட்டம் - அவை 
தேவையற்றுமே வாழ்க்கை ’கண்டது  வட்டம்
வேர் குடித்திட நீர் இறைத்திடும் தோட்டம் - அங்கு
வெயில் மறைந்தும் பின் பூக் கருகிடும் வாட்டம்

சேர் உளத்திடை திண்மை கொண்டெழு - உந்தன்
தேர் அசைந்திடும் தெருமுழுவதும் நின்றன்
பேர் துலங்கிடப் பெரிது முந்தனைச் சொல்லும் - புகழ்
பிறை வளர்ந்திட முழுமதியு மென்றாகும்
காரிருட்டது விலகி யோடுமே கங்குல் - எழும் 
கதிர் வெளிப்பென்று நின் கனவுகள்  மின்னும்
நேர் நடந்திட்ட பாதையும் உனதாகும் - எங்கும் 
நிழல் தருக்களும் மலிந்திடச் சுகம் சேரும்

வார் இறைத்திடக் கொட்டுது நீரோட்டம் - அது 
வாழ் செடிதனுக் குயிரளித்திடும் ஊட்டம்
போர்முடிந்திடக் கூடிடும்நி சப்தம் - அதில் 
புன்னகைகளின் பொய்நிறைந்திட்ட பாவம்
யார் எடுத்திட்ட வாளும் பையினுள் செல்லும் - உன் 
ஞானம் கண்டிடும் வீரம் சுகத்தை நல்கும்
கூர்மதிகொண்டு ஆளுமைதனும் கொள்வாய் - உன் 
குரல் பெருத்ததொரு மனம் இகத்தினை வெல்லும்

நம்பிக்கை யுடன் நடந்து செல்லும் வாழ்க்கை - அது 
நாளும் அன்புடன் காணும் வாய்மை நேர்மை
செம்மனத்தில் கொண்டு சென்றிடு என்றும் - இனம்
சேர்ந்து வாழ்ந்திடு சுதந்திரமே வேண்டும்
எம்மிடரிலும் காணல் விட்டிடு சோர்வும் - அது
உன்நிலைதனில்  கொண்டு தந்திடும் தாழ்வும்
எம்மினத்திடை காணுமின்னலும் தீர்க்கும் - அந்த
நாள்தனை யும் நீ எண்ணி யங்குதல் வேண்டும்

Monday, 19 January 2015

அழகே அழகு!



அழகும் இன்பமும்

குடும்பத்தில் மகிழ்வை பெருக்கலும் கூட்டலும் பெண்ணுக்கழகு
வரும் இடர்களை வகுத்தலும் கழித்தலும் ஆடவர்க்கழகு என்று நட்பை
உடைய ஒரு பாவலரின் தொடக்க அடியை வைத்து எழுதினேன்


பெருக்கலும் கூட்டலும் பெண்மைக் கழகு
பேச்சினில் இனித்திடல் நாவினுக் கழகு
வகுத்தலும் கழித்தலும் ஆடவர்க் கழகு
வருந்துயர் நீக்குதல் வீரத்தி னழகு
உருக்கலும் மெருகிடல் பொன்னிற் கழகு
உடுத்தலும் சிறுத்தலும் உடல் தனுக் கழகு
வருத்துதல் நிறுத்திடின் வலியோர்க் கழகு
வாய்மையைப் போற்றுதல் ஆளுமைக் கழகு

கருத்தினைப் பகிர்வது சான்றோர்க் கழகு
கணித்திடல் ஆய்வுகள் கொள்மதிக் கழகு
பெருத்த நற் சோலையில் பூக்களும் அழகாம்
பெய்மழை அருவியும் வீழுதல் அழகு
கருமுகில் நீங்கிடக் காணடி வானும்
கன்னியின் நாணத்தின் செம்மையும் அழகே
சரிந்துயர் வானத்தில் சென்றிடும் பறவை
சேர்ந்தெழில் வரைந்திடும் கோலமும் அழகு

நீடுறை வான்தொடு கோபுர உச்சி
நேர்செல்லும் வெண்முகில் நீந்தலு மழகே
காடுகள் மாவனக் காட்சிகள் தோன்றும்
கற்பெரு பாறைகள் அற்புதம் அழகே
போடு நீர்த்தூறலில் வானவில் அழகு
பூமழை தூவிடும் சோலைகள் அழகு
தேடும் எம் தெய்வமும் திக்கெங்கும் ஓடி
திசை பல போயறி ஞானமும் அழகே

நாடும் நல்வாழ்வினில் நல்லரசாள
நாமும் சுதந்திர தேசமென்றாக
கூடும் உறவுகள் கொள்வதும் அழகே
கொள்கை சிறப்பதும் நேர்மையு மழகே
பாடுமிசை மகிழ்வாக்கிடும் இதயம்
பள்ளிச் சிறார்களின் துள்ளொலி இன்பம்
வாடும் மலர்களின் வாழ்வினைக்காண
வந்தே மலர்ந்திடும் சுதந்திரம் அழகே!

கணினி உலகம்

கண்விழித் தோடியே காலைக் கடனின்றிக்
 கைகொண்டு மவுசைத் தூக்குகிறேன்
எண்ணமும் கூட்டலில்  ஏழும் எட்டும் சேர
  என்னவரும் கூகுள் தேடுகிறேன்
பண்ணிசைத் தேவாரப் பாடல் யூரியுப்பினில்
  பாடக் கைகூப்பிவ ணங்குகிறேன்
மண்ணிடை வாழ்வதும் மாற்றமெடுத்திட
 மாறி எங்கே நானும் பாதை கொண்டேன்

பக்கத்து வீட்டுக்குப் போகவென்றே பாதை
  பார்க்கக் கூகிள் மப்பில் தேடுகிறேன்                   
      
செக்கச் சிவந்தவள் தன்னை ஏகாந்தமும்
  சென்று கொள்ளத்துயர் சூழவைத்தேன்
சிக்கி நெட்டில் தோன்றும் அற்புதங்கள் கண்டு
  சிந்தைதொலைந்திட வாழுகின்றேன்
சொக்கிமனம் இது சொர்க்கமென்றே சொல்லிச்
  சீற்றமும் பெண்மனம் கொள்ளவைத்தேன்

வைரசு வந்துள்ளே பேரழிவு செய்ய
  வாடி உடல்நொந்து சோருகிறேன்
தைரியம் கொண்டின்னல் தன்னை அழித்திடத்
    தங்கக் காசை அள்ளி வீசுகிறேன்
வாரம் ஒன்றுபோக வந்திடும் செய்திகள்
  வாழ்க்கையில் கொண்ட விதம் முடிந்து
கோரக் கொலைகளும் குற்றங்களும் இன்று
  நேரில் கண்டு மனம் வேகுகிறேன்

சின்னதொரு சந்தும் இவ்வுலகின் காணச்
  சென்றுதிறீ டீயில்முன் நிற்பதுபோல்
பன்நல்வ ளங்களைக் கொண்டிருந்தும் மனம்
  பாசமிழந்திடத் துன்பங்கொண்டே
யன்னல் ஏழும் எட்டும் உள்நுழைந்தே அந்த
 யந்திரத்தோடு நான் வாழுகிறேன்
மின்னும் மின்சாரத்தின் மாயைவலைக்குள்ளே
  மென்னிருட்டுப் பாதை கொள்ளுகிறேன்

கற்பனை உலகம்


வண்ண விளக்குகள் மின்ன ஒளிர்ந்திடும்
வாசலில் நின்றிருந்தேன்
எண்ணமதில் இன்ப ஊற்றெடுக்க வீதி
எங்கும் வனப்பைக் கண்டேன்
கண்ணுக் கழகெனும் வண்ண அலங்காரக்
காட்சியில் மெய்சிலிர்க்க
தண்பொழில் ஒன்றயல் மண்டபமும் எழில்
தாங்கியோர் தோற்றம் கண்டேன்

என்ன நடப்பது என்றறிய மனம்
ஆவல் கொண்டும் தவிக்க
சின்ன அடியெடுத் துள்ளம் தயங்கிடச்
சென்றுள்ளே காணுகிறேன்
மன்னன் அரண்மனை போலிருந்த  ஒரு
மண்டபத்துள் நுழைய
அன்னதோர் காட்சியைக் கண்டே மனம் சொக்கி
‘என்னை மறந்துவிட்டேன்

பொன்னெழில் மின்னுஞ்சரங்கள் பொலிந்திடப்
பூவின் நல்வாசமெழக்
கன்னியர் ஓடி நடனமிடும் ஒலி
காதினில் கேட்டு நிற்க
மின்னிய வண்ண விளக்கெரிய அதில்
மேனி சிலிர்த்துமெழ
என்னது காண்பது சொப்பனமா என
எண்ணி வியந்து நின்றேன்

உள்ளே நுழைந்தவன் கண்களை மூடியே
ஓர்கணம் மெய் சிலிர்த்து
கிள்ள விரல்பற்றக் கையில் வலித்தது
கொல்லென வோர் சிரிப்பு
தள்ளி ஒருநகை பூத்த முகத்துடன்
திங்களின் தங்கை நின்றாள்
எள்ளி நகைக்கு மப்பெண்ணவள் மீதினில்
ஏனோ சினமெடுத்தேன்

வெள்ளி மணிச்சரம் கொட்டிய தாயவள்
வேண்டு மென்றே நகைத்து
அள்ளித் தருமெழில் அங்குநிறை மின்னி
ஆடும் சரங்களூடே
உள்ளம் உவகை கொண்டென்னுடன் பேசிட
ஓடியருகில் வந்தாள்
துள்ளும்நடை தனில் வந்தவள் மன்னவா
தாமதமேனோ என்றாள்

தங்கள் வருகைக்குக் காத்திருந்தோம் மனம்
தன்னில் உவகைகொண்டோம்
செங்கதிரின் விடி வேளை உதயத்தில்
சேருவீர் என்றறிந்தோம்
எங்கும் மலரினை இட்டுவைத்தோம் ஆயின்
ஏனோ வரவு பொய்த்தீர்
பொங்கும் அவள்மொழி கண்டேன் விநோதமே
பேச்சறியாது நின்றேன்

சட்டென மேளமும் கொட்டு மொலியெழச்
சந்தண வாடையெழ
பொட்டு வைத்த தமிழ்ப் பூவையராடிடப்
பூமழை தூவி நிற்க
கொட்டி முழக்கக் கைதட்டும் ஓசையெழக்
கொண்டனன் ராஜநடை
எட்டி நடக்கத் தேன் சொட்டும் மலர்த்தமிழ்
கொத்தொன்று கையளித்தாள்

மெல்லத் திரும்பியென் அண்மை விட்டேயவள்
மீண்டும்செல்ல விழைய
நில்லுபெண்ணே இங்கு என்ன நடப்பது
நேர்நிலை மாதவறாம்
சொல்வதென்ன வரும் எண்ணம் எனக்கில்லை
சொப்பனம்போல் நுழைந்ததேன்
மெல்ல உள்ளேவந்த என்னை நிறுத்தியிம்’
மாலை கழுத்திலிட்டாய்

என்ன சொன்னாய் என்னை மன்னவனே என்றும்
எப்படி நீயழைத்தாய்
சொன்ன தமிழன்றி சொல்விதி மேவிடும்
சுந்தர ஞானமற்றேன்
என்னவித மிங்கு வந்தனன் என்றுயான்
எண்ணி மயங்குகிறேன்
கன்னிமகளே நீயாரெனக் கேட்டேயென்
கண்கள் வியந்து நின்றேன்

அங்கவள் மீளவும் புன்னகைத்து என்னை
ஆழ விழித்தவளாய்
தங்கத் தமிழ்க்கவி செய்பவரே இது
தங்களின் இராட்சியம் காண்
இங்கு தினம் தினம் எண்ணக் குதிரையில்
ஏறியித் தூரம் வந்தே
பொங்கும் தமிழ்க்கவிக் கென்று பொருள்கொண்டு
போகும் வழமை கொண்டீர்

இங்குள யாவுமே உங்கள் மனங்கொண்ட
எண்ணத்தின் கற்பனைகள்
எங்கள் நிலையுண்மை ஏதுமிலை உங்கள்
எண்ணத்தின் ஏவலர்கள்
மங்கும் இளமாலை மாமலர்ச் சோலையில்
மன்னவன் நீயிருந்தே
சங்கத் தமிழ்மணம் பொங்கும் நினைவொடு
சற்று விழி அயர்ந்தீர்

இந்தவி நோதம்கொண் டெண்ணம் கிளர்ந்திட
எம்மை உருவகித்தீர்
சந்தமு டன்கவி செய்திடவே யிந்தச்
சாகச எண்ணங் கொண்டீர்
சுந்தரமாய் இந்த சூழ்மன லோகத்தை
சொல்லின் சுவையெடுத்தே
வந்திருந்தே வளம் ஆக்கிவிட அந்த
வார்த்தையில் வாழ்ந்திருந்தோம்

செந்தமிழிற் சுவை சேர்த்திடவே இந்தக்
செய்கையெலாம் அறிவோம்
இந்தக் கணமென்ன ஆனதுவோ உங்கள்
எண்ணம் மயங்கக் கண்டேன்
அந்தோ விடைபெற்றுச் செல்லுகிறோம் எங்கள்
ஆக்கம் விரும்பும் கணம்
சிந்தை கொள்ளும்நாமும் வந்திடுவோமெனத்
சொல்லி மறைந்தனள்காண்!

போகும் பாதை

நிலமீதில் உயிர்கொண்டு நெடுவானத்திடைநின்று
   நிலைகொள்ளப் புவி மீதிலே
குலமாதின் வயிற்றோடு குடிகொண்டு விளைந்தங்கு
   குரல் கொண்டு அழுதேவந்தேன்
பலமான உதைபோட்டு பணிவின்றித் தாயோடு
  பலக்காலம் துயர் ஈந்தபின்
நலமான தெனஎண்ணி நானோடிப் பிரிந்தேன் இந்
  நாள்எங்கு நான் செல்கிறேன்

ஓராண்டு புவிவாழ்ந்த உயர் மனத் துணிவோடே
  எழுந்து நான் நடைபயின்றேன்
சீராகக் கால்வைத்து திடமாக இல்லாமல்
  தினம்தினம் விழுந்தெழுந்தேன்
வாராயோ செல்வமே வளர்நிலா வாவென்று
  வார்த்தையின் அன்புகாட்டி
ஆராரோ தூங்கடா அன்பேயென் அமுதேயென்
  றன்னை யின்மடி கிடந்தேன்

வீராதி வீரர்களின் வெற்றியும்  தோல்வியும்
   வெள்ளி நிலவில் இருத்தி
சேராத அறிவூட்டச் சிந்தனை விளங்கிடத்
   சிறப்பான  கதைகள் கூறி
நேராக வழிகாட்டி நிறை ஐந்துவயதிலே
  நில்லென்று தமிழ் குழைத்து
சீராக ஊட்டினள் தேனெனும் தித்திப்பைத்
 தேகத்தில் சேர்த்துவிட்டாள்

நீராகும் விழிகொண்ட நேரங்கள் அறியேன் என்
  நெஞ்சத்தில் மகிழ்வேகொண்டு 
வேராகத் தமிழ்பற்றி விளைந்தேன் என் வானத்தில்
  வெகுவான கனவுக்கோலம்
தேராய் நற்கற்பனை தீட்டியதைக் கொண்டேநான்
   திக்கெங்கும் பறந்துமோடி
சேராத பொன் எண்ணிச் செல்வந்த ரூபனாய்
  தினம்தினம் மகிழ்ந்தாடினேன்

பூவெனும் மங்கையும் பொன்மேனி கொள்ளெழில்
  புன்னகை சொர்க்கம் என்றே
பாவெனும் மொழிகூறிப் பக்கம் நெருங்கிடப்
  பைந்தமிழ் இனித்த தன்றே
வாவெனும் பூஞ்சோலை வண்டென வாழ்வெண்ணி
   வலிந்து நான் போனபாதை
நோவெனும் உணர்வோங்க நெஞ்சத்தில் பிழையாக
   நேரற்ற பாதை கொண்டேன்

வேதனைத் துயர் வீட்டு வெறுமையும் ஏழ்மையும்
  விதி தந்து பரிகசிக்க
சாதனை யேது நல் தருமத்தின் துணையின்றித்
  தமிழ் மீது கோபங்கொண்டேன்
தீததைத் தந்ததேன் திசைமாறிச்சென்றதேன்
  திரும்ப வழி இலை என்றதும்
ஏததை மாற்றவென் றியற்கையின் பொன்மொழி
  என் தமிழ் மூடிவைத்தேன்

வாழ்விலெவை உண்மைநிலை வழிஎன்ன பொருள்என்ன
  வரும் செல்வம் ஒன்றேயெண்ணி
தாழ்வில் வழி செல்லாமல் தரைமீது வீழாமல்
  திசைவேறு நோக்கி நடந்தேன்
ஏழ்மையெனை விட்டகல எடுத்த அடி பூமலர
   இருந்தவோர் பாதைகண்டும்
ஆழ்மனதில்  இன்பமிலை ஆனந்த உணர்வுமிலை
  அகத்திலே வெறுமைகொண்டேன்

சூனியத்தில் நின்றேனோ சுதந்திரம் இழந்தேனோ
  துடித்துமனம் விழிசிவக்க
நானிதயம் கொண்டேனோ நம்பாமல் எப்போதும்
  நாடியுணர்ந் ததிசயித்தேன்
பாநிதமும் கொண்டாலும் பைந்தமிழை மறந்தவனே
  பாவநிலை விடுமா எண்ணி
வானின் இடி பெய்தமழை வந்தொழிய காணமைதி
 வாய்த்தநிலை கொண்டயர்ந்தேன்

வையக வாழ்விதனில் வாய்த்தநல் லனுபவமே
  வாழ்நெறி ஆசிரியனாம்
மெய்யகத் தெளிவோடு  மனமோநல் லறிவோங்கி
  முழுவாழ்வு முறையுங் கற்போம்
ஐயகோ என்ன விதி அத்தனையும் கண்டறிய
   அடையுமே வாழ்வின் முடிவும்
பொய்யுடலைக் கொள் ஆயுள்  போயினவென் றுயிர்பற்றிப்
  பிணமாக்கும் விதியின்கரங்கள்

போகின்ற பாதைதனும் புரிவதேயில்லை நாம்
  புவிமீது வாழும்வேளை
ஆகின்ற வேளையதில் அறிவென்ப உணர்வோடும்
  அடிக்கடி சண்டை போட்டு
வேகின்ற உடல்மீது வெண்ணையை வார்த்தழலை
  விரைந்துமே கூட்டிவிட்டே
சாகின்ற வேளைவரை தர்மத்தின் விழிகளினை
  தடுத்தின்பம் கொள்ளுமன்றோ

எங்கே நான் போகின்றேன் இதைஅறிவ தல்லேன்  யான்
  எடுக்கின்ற காலடிதனும்
அங்கவளின் சக்தியருள் அகநோக்கில் அமைகவென
   அன்னைதனை வேண்டுகின்றேன்
பொங்குமென் மனம்மீது புன்னகைச் சரம்கொண்டு
   பூசித்து வேண்டிநின்றேன்
எங்கு நான் செல்கின்றேன் இருட்காட்டில் நடக்கின்றேன்
   இறையே உன்னொளி வேண்டினேன்

பயணத்திசை

ஆழப் பரந்த அண்டத்தில்
 ஆகாயத்தின் நீலத்தில்
வாழக் கிடைத்த புவிமீது
 வந்தே வாழ்வைக் கொண்டாலும்
வேழப்பிழிறல் செய் வான
 விரைநட் சத்திர வெடியூடே
மாழக்கிடந்த கருங்குழியின்
 மையம்நோக்கி போகின்றேன்

(நான்)
சோழப் பொரியாய் ஆனவளே
  சுற்றும் உலகே சொல்லாயோ
நீளத் தெறித்த ஒளி கண்டே
  நீயும்  அதன்மேல் மோகத்தில்
வாழச் சுமந்த மனிதருடன்
  வானத் தூடே நகர்கின்றாய்
ஏழை இவனுக் கோர்வார்த்தை
  ஏதென் றெடுத்தே சொல்லாயோ

தாயின்மடியில் பிள்ளைக்கோ
  தகுமோர் வெப்பம்தருவள் போல்
நீயின் பத்தை நெகிழ்வோடு
  நெஞ்சில் சூடும்  கொள்ளத்தான்
காயின் வெப்பக் கனல்வீசும்
  கதிரின் பின்னால் நீசுற்றிச்
சாயின்பொழுதின் வரை தந்தே
  சற்றேஇருளக் குளிர்வித்தாய்

மேகத்திடையே நான்காணும்
   மின்னும் தூரத்தப்பாலே
ஆகச் சொன்னார் அண்டத்தில்  
   ஆடிச் சுற்றும் நின்வாழ்வும்
வேகும் வெயிலும் ஓர்நாளில்
  வீணாகத்தான் கருங்குழியில்
போகும் என்றார் சொல்லாயோ
   போவேனா நான் பிழைப்பேனா

(பூமி)
நானே தெளியேன் நல்லுயிரே
  நடக்கும் பாதை இருள்மூட
ஆனேன் அன்பில் ஆதவனை
   அகத்தில் துணையாய் வரிந்திட்டேன்
ஏனோ எதுவும் தெரியாமல்
   இரவியைச் சுற்றி ஓடுகிறேன்
தேனே மனிதத் திரவியமே
  தேவையற்றேன் கலங்குகிறாய்

வானில் தெய்வ ஒளியுண்டு
   வாழ்க்கை தந்தாள் வழிசொல்வாள்
மானில் துடிப்பும் மலர்வண்ண
   மகிமைசெய்தாள் அருள்வேண்டின்  
தேனில் இனிமை ஊற்றியவள்
    திங்கள்மீது பொன்னொளியும்
வேனிற்கால தென்றலையும்
   விசையும் காந்தம் தந்தவள் காண்

ஊனை உடலை உன்னுயிரை
   ஒட்டும் பாசக் கட்டினையும்
மானின் மருளும் விழிகொண்டாள்
   மக்கட் பேறென் றிட்டவளோ
வானில்  வைத்தே உருளென்றே
   வட்டப்பாதை தந்தவளாம்
ஏனில் வாழ்வில் இனிதென்றே
   ஏகும்பாதை காட்டாளோ

ஆக்கும் விதிதான்  இயற்கைதனும்
  அசைவும் வட்டச் சுழல் ஆகும்
ஏக்கம் கொண்டே இரந்தாலும்
  எடுத்தோர் வாழ்வில் முடிவுண்டாம்
போக்கும் உடலும் பின்தங்கிப்  
  பிறிதோர் உடலை உயிர்கொள்ளும்
நீக்கும் உலக வாழ்வோடி
   நிகழும் பின்னோர் சுழலாகும்

காலம் சக்கரம் போல்யாவும்
  காணும் மறையும்  கதி யோட்டம்
நீலப் பெருவான் எழும் நீரும்
   நின்றே வானப் பொழிமழையாய்
ஞாலத்திடையே மீளும்காண்
    நாளும் இரவும் நடத்தல்போல்
கோலமிதுவே இயற்கையெனில்
  கொண்டோர் வாழ்வும் திரும்பாதோ?
            ***
எங்கேயான் போய்க்கொண் டிருந்தேன்
  இரவின் கருமைப் பிரபஞ்சம்
மின்னு மொளியில் எல்லையற்ற
  மேனிக் குளிர்வில் அசைந்தோடி
தன்னில் ஒளியைக் கொண்டவளின்
   தருமத் தேராம் யாக்கைதனைப்
பின்னிப் புவியிற் சிக்குண்டே
  போகும் பயணம் திசையறியேன்

எங்கே போய்க்கொண்டிருக்கிறேன்

நதியோடும் திசைதானே மீனோடும்
நடுவானின் ஓளிர்கின்ற நிலவோடும்
கதிகொண்ட காற்றோ தன் திசைமாறும்
கனவொன்றே வாழ்வோடும் முடிவாகும்
மதிகொண்டே உணர்வோடு மயங்காமல்
மனங் கொண்டு நற்பாதை சென்றாலே
புதிதென்ற நல்வாழ்வும் உருவாகும்
புவனத்தில் நம்முள்ளம் இருந்தாளும்

கருவாக இருந்திங்கு புவிகண்டேன்
கனவோடு பெருகும்நற் சுகம்கொண்டேன்
இருகாலும் விழிமூடி யிருள் சென்றேன்
இடருக்குள் நடந்தோடி வலி கொண்டேன்
தெருவீதி கிடந்தும் உள் திமிர்கொண்டேன்
தினவோடு பழிகொண்டு தொலைகின்றேன்
ஒருநாளில் ஒளியொன்றின் திசை கண்டேன்
இன்றும் மெய் உணர்வோடு தொடர்கின்றேன்

சதிகொண்டு பதிகாணும் இல்வாழ்வில்
சமமின்றி மனம்யாவும் துயர்காணும்
விதிகண்டு விளையாடி இடம் மாற்றும்
வேகங்கள் கொண்டுள்ளம் தடுமாறும்,
நதியோடிச் செல்பாதை பலவாகும்
நாளுமிப் புவிமீது காற்றோடும்
புதிதென்ற வழிநூறு தெரிந்தாலும்
போகின்ற ஒருபாதை விதிகாட்டும்

மொழியின்றி இனம் வாழ வழியில்லை
முயலாத செயலுக்கு முடிவில்லை
பழிகொண்ட பாவங்கள் உடன்கூடும்
பார்த்தே எம்வழிசேரும் துயர்காணும்
எழில்கொண்ட மலர்தூவி இறை வேண்டின்
இதயத்தின் நிலை இன்பவழி மாறும்
பொழில்நீவி வருந்தென்றல் பரந்தோடும்
போலும் நான் போகின்றேன் இருந்தாலும்

முதிர்கின்ற கனிதூங்கி நிலம் வீழும்
முற்றுங் காய் வெடித்தே பஞ்செழுந் தோடும்
மதிவானில் பிறையாகி மறைந்தாலும்
மலரங்கு நிலை வாடிச் சோர்ந்தாலும்
கதியன்றி எனதுள்ளம் அலைந்தாலும்
கால் ஓடும், உள்ளன்பு இருந்தாளும்
புதிதாக அலைவந்து புகுந்தாலும்
போகாது மனமிங்கு மிதந்தாடும்

வனமோடும் விலங்காக மனமோடும்
வழிகண்ட உயிர்கொன்று விளையாடும்
சினம் கொண்டு பகையென்று உருவாகும்
சிரங் கொண்டமுடிமீது  கறைபூசும்
தினமோடும் வயதோடு திடமோடும்
திரும்பாமல் முடிவாக உயிரோடும்
தனங் கொண்டு போனோமா தனிபோகும்
தருணத்தை நோக்கிநான் போகின்றேன்

மதியும் விதியும்


நில வொளிர்ந்திட வெண்முகிலதை மூடும் - நல் 
  நினை வெழவொரு விதி யெழுந்ததைச் சாடும்
பலமிருந்திடும் போதிலு முயிர் தானும் - ஒரு
  பழிசுமந்தெமை பாரென உளம் வாட்டும்
நிலமிருந்துமென் வாழ்வதிலென்ன லாபம் - எனும்
  நினை வெழுந்துயிர் விடமனமதும் நாடும்
குலமழித்திடப் போய் முடியெனும் தாகம் - வந்து 
  குமைந்தழியும் அவ் வேளையில் ஒளிவேண்டும்

மதி மறைந்திடக் கதிர் விடியலில் தோன்றும் - நம்  
  மதியிழந்திடும் வேளையில் ஒளிவேண்டும்
புதிதென அடிவான் சிவந்தொளி ஏறும்  - அங்கு
  பூவிதழ் தொடப் போய்வரும் தென்றலோடும்
முதிர் அலைசுனை தனில்சலவென ஓடும் -  ஒளி
  முகமதில் நதி யெனப் புரளு முற்சாகம்
கதியிழந்த தன்  நிலை திரிந்திடும் போதும்  - அங்கு
  காண் மனதிடை ஓங்கிடும் பெரு ஞானம்

அறிவென்ப தெது மனதிடை எழும்சூர்யன் -  அது
  எழ விடிந்திடும் இருள் மறைந்திடும் வாழ்வும்
நெறிகொளும் நெஞ்சில் நிறைவொடு வரும் காலம் -அது 
  நெடுவிரி பெருவானிடை  அளவாகும்
குறிகொண்டு பெரும் அறிவெனும் இறைதானும் - இந்தக்
  குவலயமதில் நினை அறிவினை ஈயும்
பொறிமனதினில் உணர்வுகொண் டுமெந் நாளும் - நீ
  பொலிந்திடும் சுகம் வேண்டி நில் கரம் சேரும்

அறியென மனங்  கூறிடு மொளிதானும் - அந்த 
அருள்தரு மொளி பெரிதெனும் சக்தியாகும்
பொறி பறந்திடும் எரிமலையதன் வேகம்  - இன்னும்
புதுமலர் பெறும் எழிலெனும் மெருகோடும்
எறிதுளிவிரி பேரலை யெழும் ஆழி - அதில்
ஒளிபட அலைமினுங் கிடும்  எழிற்காட்சி
அறியிவை செயும் அருங்குணம் கொண்ட ஆட்சி - அது
அகிலமென் னுமிந்  நிலமிடை வருங்காட்சி

உயிர்தனும் எமதுடலுட னொன்று சேரும் -  நிலை
  உணர்வெனு மொருசூடெழு மசைவாகும்
பயிரென வளர்பாங்குடன் எமையாக்கிப் - பின்
 பறித்திடும் வரை நடந்திடும் செயலாற்றி
வயிற்றிடைப் பசி வெந்திடும் தீயூற்றி -  அதை 
  வழிந்திடும்தேன் சுவைகனி கொண்டும் ஆற்றி
கயிறென அன்புக் கட்டிட ஊஞ்சலாட்டி - அதில்
 கனவொடு  வாழ் கணி எனும்  நிலையாக்கி

ஓளியென நமதறிவினை மிஞ்சும் அறிவே - அந்த 
  உயர்வெழு பெரு வெளி யெனும்பிர பஞ்சம் 
ஒளிர்வது திண்ணம் உள்ளிடை அன்புகொண்டே - அதை
  உயிரென நினை ந்தெழு தொழு நிதமென்றும்
களிகொள்ள நின தரிதெனும் புவி வாழ்வில் - அருள்
   கரம்கொடுஎன  தரும் வரமதைக் கேட்டால்
ஒளிபெறும் நல முயர்ந்திடும்  புகழ் ஞானம் - உடன்
  ஒருபெருமறி வெனும் இறை வரம் நல்கும்

Wednesday, 14 January 2015

துன்பத்தில் இன்பம்

இன்பமலர்த் தோட்டமென்றே இவ்வுலகாக்கி - அதில்
.  ஏரியொடு ஆறு மலை புல்வெளி கூட்டி
மென்மலர்கள் பூவனமும் மாமரச்சோலை - யென
.  மேதினியில் இன்பம் நிலைக்காட்சி யமைத்தாள்
அன்புவழி செல்லும்வலைக் காந்தமமைத்து - அதில்
.  ஆடியோடும் போதுமுள்ளே பாசமிழைத்து
தன்னுணர்வில் கூடுமொரு இனபமும்செய்தாள் - பின்
.   தவித்திருக்கப் பிரியுமொரு வேதனைதந்தாள்

எங்கும் ஒளி பாயும் இளஞ் சூரியோதயம் - பின்
.  ஏகாந்த நிலவொளிரும் பொன்னெழில் தோற்றம்
மங்கைமனம் சேர்ந்திசைக்க மன்மதராகம் - என
.  மாற்றங்களும் மாறுதலில் மாமகிழ்வீந்தாள்
பொங்கிவரும் ஆறெனவே பூம்புன லூற்று - அது
.  போகும்வழி கூடல்மரம் பூந்தளிர் நீட்சி
தொங்கும்சுவை மாங்கனிகள் தின்றிடும் பட்சி - கூட்டித்
   தேமதுர கோலமென வாழ்வை யமைத்தாள்

சிங்கமொடு சீறும்கொடுபாம்புகள் காணும் - இன்னும்
.   சொல்லடங்கா கோரமுக தோற்றங்கள்தானும்
பங்குபெறும் காட்டிடையே புள்ளியிட்ட மான்
.   பதுங்கி வாழச் செய்யும் வகை அச்சமு மீந்து
இங்கவைகள் ஒன்றெனவே வாழவும் விட்டாள் - அதில்
.  இனிமைதனை. தேடும்வழி இடர்களும்செய்தாள்
அங்கம் அறுத்தழிவில் இன்பம் காண்பர் தம்மைக்
.   ஆதரித்துக் காப்பதிலே  ஆனந்தமுண்டோ

எங்கெதுதான் இல்லையென்றால் ஏக்கமுண்டாகும் -மனம்
.   எண்ணியது கையில்வர இன்பமென்றாகும்
பொங்குமின்பம் கண்டுமனம் ஆனந்தம்மேவ - இந்தப்
.   பூமியிலே துன்பம்தனை கொஞ்சமாக்கினாள்
தொங்குமுயர் வானிடையே தோரணங்களாய் - முகில்
..  துரத்தமதி ஓடியொளித் தேகவிட்டவள்
கங்குல் விடி காலையிலே கதிரினை ஓட்டி -ஒளி
.   காணும்பல மாற்றங்களாய் கணித்தபின் ஏனோ

தோற்றம் பெறும் மேனிதனும் இன்பம் காணவே என்று
,.  துன்பம் தனை கொள்ள விடக் குவலயமாந்தர்
தூற்றியேவே றினமழித்து துடிதுடிக்கையில்`
.   துன்பமுறும் வலிமரண ஓலம்கேட்டதில்
வீற்றிருக்கும் மன்னர் படை குடிகள்யாவுமே
.   வெறிபிடித்து இன்பங்கண்டே வெற்றியென்றாறடி
ஆற்றும்செயல் அகிலமதில் எப்படி வந்தே
.  அன்பழித்து இன்பமும்கொன் றெழுச்சிகொண்டதோ

Tuesday, 13 January 2015

ஒளியானவள்


ஒளியொன்று பெருவானில் உருவானது - அது
உலகென்ற ஒருவிந்தைப் பொருள்செய்தது
வெளிதன்னில் அசைந்தோடும் சுழல்செய்தது - பின்
விருப்போடு அலைகாந்த வலைகொண்டது
வளிபோலும் நிலையற்ற அசைவோடது - புவி
வாழென்றே உயிர்த் தீயை வளர்க்கின்றது
நெளிகின்ற அலைபோலும் நிற்காதது - ஓர்
நெடுவானின் இயலோடு நெறிகண்டது

உளிகொண்டு சிலைசெய்யும் செயல்போலவே - உயிர்
உள்நிற்க உடலென்னும் பொருள்செய்தது
குளிர்மண்னில் அனல்சுட்டு குடமாகுது - இங்கு
குவிமண்ணில் ஒளிசுட்டுக் கருவானது
விழிதன்னில் ஒளிபட்டு உணர்வாக்கியும் - ஓடி
விலகென்ற புவிமீது அதிகாரமும்
மொழிகூறல் தனில்சப்த விசைகூட்டியும் - அவை
முடிவாக உருவாக்கி வழிசெய்தது

வெளிர் மேகம் விளையாடும் விண் மீதிலே - படர்
வெயில் என்று அவைவாழ ஒளி செய்தது 
அழி என்று பழமைகளைச் சிதைக்கின்றது - அதில்
அழகென்று மீண்டும் சிலபுதி தாக்குது
வெளியென்ற  பிரபஞ்சம் வியந்தோடிடும் - பல
விண்ணசைவுப் பின்னலென விதிபோட்ட பின்
களி கொண்டு வாழுருவம் உயிர் தன்னையே - ஒரு
காமஇசை போகமுனை வோடீந்தது 

புவிமீது பயிர் பச்சை மரமாக்கியும் - அதில்
புனல்பட்டு வளர்கின்ற வழிசெய்ததும்
குவிவானின் நிறையோட்டம் அசைவென்பதே - எனக்
கோடானு கோடிவகை அசைக்கின்றவள்
தவி யென்று தன்பாகம் தரைமீதிலே - விட்டுத்
தகும் வாழ்வில் துயர்தன்னைக் கொள விட்டவள்
செவி காணும் மொழி வகையில் பலவாகவும் அவை
செய்கின்ற துன்ப நிலை இடை வைத்ததென்?

********************************* 


தலைவியின் சோகம் (பொருளறியேன்)

‘மாலை மயக்குதடி தோழி - மன 
  மீறி யலை பெருகுதிந் நாழி
சாலை வழி இருளின் பயணம் - நிலை
  சற்றும் உணராத மௌனம் 
சேலை மறைத்த உடல்மேவித் - தனி
  செல்லும் குளிர்வாடைத் தென்றல் 
ஆலைக் கரும்பு பிழிந்தெனவே - வந்தே  
   ஆவி பிழிய விழி சொரிந்தேன்

தென்னை மரத்திரண்டு கிளிகள்   - தம்முள்
  தேனை யெடுத்த மொழிபேசிக்
கன்ன மிரண்டும் பட உரசி - அவை
  காதல்கொளும் காட்சிகண்டேன்
மின்னும் இருளெடுத்த மேகம் - எந்தன் 
  மேனி குலுங்க இடிபரவி
இன்னும் வருத்தல் என ஆகி - எனை
  ஏக்கம் கொள வதைப்ப தோடி

மன்னன் என வரிந்தேன் அவனோ - முழு
 மாயக் கதையிர வில்பேசி
சொன்னோர் மொழி வரைகள்மீறி .எனில்
 சொர்க்கமிருக்குதெனக்கூறி
தன்னில் எனைக் கொண்டேன் என்றும் - எனில்
 தன்னின் இதயமுள தென்றும்
முன்னின் றெனைக் காணப் பொய்கள் - சொல்லி
 மோகம் கொள வைத்துச் சென்றான்

ஆடும் மயில் நடனம் வெறுத்தும் - ஒரு
அன்னை அன்புமனம் இழந்தும்
கூடும் எழில் தருக்கள் பூக்கா - உயர்
குன்றில் மலையருவி துள்ளா
காடும் இயற்கை வனப்பிழந்தே - விடி 
கங்குல் பொழுதில் ஒளி பிறக்கா
நாடுமிருப்ப துண்டோ தோழி - இந்த
நாளில் எனக்கே னிந்தநீதி

பொன்னென் றழைக்க மகிழ்வுற்றேன் - தீயில்
போடக் கருதும் எண்ணமறியேன்
இன்பம் தருங்கிளியே என்றார் -என்னை
ஏனோ இலவங் கனிக் கேங்கும்
அன்ன வகையிருத்தி அன்னம்- நடை
அழகே எனப்போற்றி நின்றார்
பின்னை கதிரறுத்துத் தூற்ற எண்ணிப்
பேச்சில் அமுதமென மொழிந்தார்

தென்னங் குயிலினிசை குரலே - இவள்
தேம்பி அழும் பொழுதுமினிதே
என்னப் பலகதைகள்சொன்னார் - இவள்
ஏங்கிக் குரலிசைப்ப ளென்றோ
சின்ன விரலில் கணையாழி- கொண்டு
சேர்த்த நிலை மனதில் எண்ணம் 
நின்னைச் சகுந்தலைக்கு நிகராய் - என்றும்
நெஞ்சில் கொள்வனென உரைத்தோ

சொல்லில் பொருளுணர்ந்துகொண்டால் - என்
சோகம் தவிர்த்தும் வாழ்ந்திருப்பேன்
கல்லைப் போலிவளின் உள்ளம் - எனக்
கருதி எழிற் சிலை யென்றாரோ
முல்லை மலர் சிரிப்பு கமலம் - எனும்  
மோகம்விளை வதனம் என்றார் 
இல்லை எனும் வரையும்சுகித்தே - எழுந்
தோடும் வண்டினமென் றறியேன்

*************

தெய்வத்தைத் தேடி...!


ஆண்டவனைக் காண எங்கும் ஓடினேன்
ஆலயத்தின் உள்ளும்புறம் தேடினேன்’
நீண்டவழிநேர் நடந்து வாடினேன்
நிற்குமிடம் சுற்றிவந்து தேடினேன்
கூண்டினிடை நின்று கிளி பேசவும்
கோகிலமும் மாமரத்தில் கூவவும் 
தாண்டியெழும் தாமரைப் பூஏரியில்
தாவுமலைப் பேரழகில் தேடினேன்

சீண்டிமலர் உண்ணும் சிறுவண்டடெனச்
செந்தமிழின் இன்சுவைத்த பாதையில்
நீண்டவழி நேர்நடந்து தேடினேன்
நிர்ம வான் நோக்கி நினைந்தேற்றினேன்
தூண்டிமனம் கொள்மலரின் பூவிதழ்
தொட்டு மதுகொட்டியதார் தேடினேன்
ஆண்டுபல அருகிமுது மையிட
ஆற்றலிழந் தன்பை எங்கும் தேடினேன்

பூவினங்கள் புன்னகைத்துப் பார்த்தன 
பொன்னழகின் சூட்சுமத்தைக் காத்தன
ஆவினங்கள் அன்புதனை காட்டின
அருகிருந்த கன்றணைந்து நீவின
தாவினபூங் குருவிக ளின் போதையில்
தருவின்கிளை தனிலிருந்து ஆடிட
ஏ விநோதம் என்றியற்கை கண்டும்நான்
எமைப் படைத்த தார் உருவைத் தேடினேன் 

நீங்குமிருள் காலையொளி நேர்வதும் 
நேரடிவான் செந்நிறத்துக் கோலமும்
தேங்கு மலைநீரருவிப் பாய்ச்சலும்
துள்ளிவிழும் போதிலிடும் கூச்சலும்
பாங்கினிலே தெய்வத்தனம் பார்ப்பினும்
பாரினிலே உண்மையுருப் பார்த்திட
ஏங்கி மனக் கற்பனையில் ஓடினேன்
எத்தனை நாள் இம்சையுற்றும் வாடினேன்
தேடியுளம் நான்களைத்த போதினில்
தேவகுர லொன்றயலில் கேட்டது
நாடியெனைத்தேடும் வல்ல மானிடா 
நானிருப்பதென்றும் அயல் பாரடா
கூடியுந்தன் மேனிசுடும் வெம்மையில்
கோபுரத்தின் தீபமெழும் காட்சியில்
ஓடியெழும் உதயவேளை ஆதவன்
ஒங்கி வெடித் தீபரவும் மாமலை

தாயவளின் அன்புகொண்டபூமனம்
தாங்குமந்த தாயுதரத் தாமரை
போயுறங்க மேனிசுடும்தீயிலும்
புதுமை காணத் தொட்டவர் கைச் சூட்டிலும்
பாயும்மழை கொண்ட ஒளிமின்னலும்
பாரறிய உண்டுசெய் மின்சாரங்கள்
தூய்மையுடன் தீயும் கொண்டதோற்றங்கள்
தெய்வசக்தி யின்வடிவம் தெரிந்துகொள்