ஆண்டவனைக் காண எங்கும் ஓடினேன்
ஆலயத்தின் உள்ளும்புறம் தேடினேன்’
நீண்டவழிநேர் நடந்து வாடினேன்
நிற்குமிடம் சுற்றிவந்து தேடினேன்
கூண்டினிடை நின்று கிளி பேசவும்
கோகிலமும் மாமரத்தில் கூவவும்
தாண்டியெழும் தாமரைப் பூஏரியில்
தாவுமலைப் பேரழகில் தேடினேன்
சீண்டிமலர் உண்ணும் சிறுவண்டடெனச்
செந்தமிழின் இன்சுவைத்த பாதையில்
நீண்டவழி நேர்நடந்து தேடினேன்
நிர்ம வான் நோக்கி நினைந்தேற்றினேன்
தூண்டிமனம் கொள்மலரின் பூவிதழ்
தொட்டு மதுகொட்டியதார் தேடினேன்
ஆண்டுபல அருகிமுது மையிட
ஆற்றலிழந் தன்பை எங்கும் தேடினேன்
பூவினங்கள் புன்னகைத்துப் பார்த்தன
பொன்னழகின் சூட்சுமத்தைக் காத்தன
ஆவினங்கள் அன்புதனை காட்டின
அருகிருந்த கன்றணைந்து நீவின
தாவினபூங் குருவிக ளின் போதையில்
தருவின்கிளை தனிலிருந்து ஆடிட
ஏ விநோதம் என்றியற்கை கண்டும்நான்
எமைப் படைத்த தார் உருவைத் தேடினேன்
நீங்குமிருள் காலையொளி நேர்வதும்
நேரடிவான் செந்நிறத்துக் கோலமும்
தேங்கு மலைநீரருவிப் பாய்ச்சலும்
துள்ளிவிழும் போதிலிடும் கூச்சலும்
பாங்கினிலே தெய்வத்தனம் பார்ப்பினும்
பாரினிலே உண்மையுருப் பார்த்திட
ஏங்கி மனக் கற்பனையில் ஓடினேன்
எத்தனை நாள் இம்சையுற்றும் வாடினேன்
‘
தேடியுளம் நான்களைத்த போதினில்
தேவகுர லொன்றயலில் கேட்டது
நாடியெனைத்தேடும் வல்ல மானிடா
நானிருப்பதென்றும் அயல் பாரடா
கூடியுந்தன் மேனிசுடும் வெம்மையில்
கோபுரத்தின் தீபமெழும் காட்சியில்
ஓடியெழும் உதயவேளை ஆதவன்
ஒங்கி வெடித் தீபரவும் மாமலை
தாயவளின் அன்புகொண்டபூமனம்
தாங்குமந்த தாயுதரத் தாமரை
போயுறங்க மேனிசுடும்தீயிலும்
புதுமை காணத் தொட்டவர் கைச் சூட்டிலும்
பாயும்மழை கொண்ட ஒளிமின்னலும்
பாரறிய உண்டுசெய் மின்சாரங்கள்
தூய்மையுடன் தீயும் கொண்டதோற்றங்கள்
தெய்வசக்தி யின்வடிவம் தெரிந்துகொள்
No comments:
Post a Comment