அன்பென்ற தொன்றிலை யாயின்
ஆகும் வாழ்வும் என்னதாகும்
தென்றலும் தன் நிலை மாறும்
தீமை எழுந்து நின்றாடும்
பொன்னெழில் சிந்தும் நிலாவும்
போய்முகில் மூடுதல் போலும்
தன்னெழில் விட்டிருள் கவ்வும்
தாய்மனம் கல்லென ஆகும்
அன்பே உயிர்களின் சக்தி
ஆளும் உணர்வலை பற்றி
புன்னகை கொண்டுள்ளம் பூக்கும்
போதைமது வின்பம் சேர்க்கும்
தன்னலம் அற்றதாய் நெஞ்சம்
தான்கொண் டுலாவிடும் எங்கும்
நன்மனம் மேன்நிலை கொண்டே
நாளும் புதுமலர்வாகும்
அன்பே அகத்திருள் போக்கும்
ஆணவம் நீக்கும் மெய்ஞானம்
தன்நிலை ஏற்கும் உள்ளெண்ணம்
தாங்கும் அகங்காரம் போக்கும்
பொன்னை உருக்கிடும் தீயும்
போலும் கல்லாம்மனம் ஈரம்
தன்னைக் கொள்ளும் வகையாக்கும்
தாயின் கருணையை ஒக்கும்
மின்னலென் றுள்ளத்தில் பாயும்
‘ மேகமழைக் குளிர் வீசும்
அன்பினைக் கொள் உலகாளும்
ஆற்றல் திறன் உனைச் சேரும்
தென்புதரும் செல்லும் பாதை
தேடும் உயர்வினைத் தாரும்
அன்பினைக் கொள்ளின் நின்வாழ்வோ
ஆகா என்னே விந்தை சொர்க்கம்
No comments:
Post a Comment