ஒன்றாம் ஒன்றே உண்டென்றார்கள்
ஒன்றைத் தேடிக் காணேன்யான்
ஒன்றே துயரம் கண்டேன் வாழ்வில்
ஒன்றாநெஞ்சம் கொண்டேனாம்
ஒன்றும் இல்லா அந்தந் தானே
ஒன்றாம் முடிவில் தோற்றுவகை
ஒன்றில்லாத ஒன்றாய் ஆகும்
உயிரின் முடிவில் ஏது நிலை
ஒன்றே காணும் எண்ணம் கொண்டே
ஒன்றைக் காண ஒன்றிக்கொள்
ஒன்றோ டொன்றாய் ஆகும் தன்மை
ஒன்றுண்டானால் வாழ்வோங்கும்
ஒன்றில் ஒன்றும் இல்லை யென்றே
ஒன்றை எண்ணில் மாயைதனும்
ஒன்றே கடையாம் ஒன்றே எண்ணு
ஒன்றில் ஒன்றைக் கொள்ளென்றார்
ஒன்றே தெய்வம் என்றால் உலகில்
ஒன்றாய் மனிதர் ஏனில்லை
ஒன்றை ஒன்று கொல்லும் வேட்கை
ஒன்றில்தானே மனித நிலை
ஒன்றை யொன்று அன்பாய் காணின்
ஒன்றும் தீமைக் கிடமில்லை
ஒன்றாய் காணும் தெய்வம் ஏனோ
ஒன்றும்செய்யா துள்ளநிலை
ஒன்றை கருதீர் பொன்னில் மண்ணில்
உள்ளம்கொள்ளும் பெண்ணாசை
ஒன்றைக் கொண்டோர் வாழ்விலின்பம்
என்றும் தோன்றா துன்பநிலை
ஒன்றும் உண்மைஇன்பம் இல்லை
ஒன்றும் வேண்டா உள்ளமதில்
ஒன்றாம் தெய்வம்வாழும் அப்போ
துலகம் கொள்ளும் சொர்க்க நிலை!
ஒன்றும் வேண்டா தெய்வம்ஏனோ
ஒன்றென் றெம்மை ஆக்கிவிடின்
ஒன்றேதேவன் ஒன்றேகுலமாம்
ஒன்றே மொழிநாம் ஓரினமாய்
ஒன்றே யெண்ணி ஒன்றின் மீது
ஒன்றாய் அன்பை உயிர்கொண்டு
ஒன்றை யொன்று ஒடிச் சுற்றும்
உலகில் இன்பம் கண்டிடலாம்
No comments:
Post a Comment