Thursday, 13 March 2014

கடவுள்

கடவுளைத்தேடும் உள்ளங்கள் மீதே
கடவுள் இருக்கின்றான்
கருவினில் தோன்றி கருகிடும் வரையும்
கலந்தே இருக்கின்றான்
உடலின்காணும்  ஒவ்வொரு திசுவில்
உயிராய்த் துடிக்கின்றான்
உள்ளத்தினுள்ளே  உன்னத ஒளியாய்
ஓங்கி மிளிர் கின்றான்

இடமென எதுவும் இறைவனுக்கில்லை
 எங்கும் இருகின்றான்
இருப்பது ஏனோ எம்முள் இதனை
ஏற்றிட மனமில்லை
கடப்பது ஞானம் கருவினுள் வாசம்
கடவுள்   என்றாகும்
கடவுள் காணின் கட உள் கண்டால்
கருத்துகள் நிறைவாகும்

நடையினிலாடும்  நம்முடை தேக
நெளிவில் அசைகின்றான்
நடமதைப் புரிவோன் நரம்பினில்  கீதம்
நாவொலி ஆகின்றான்
தடம் புரள்வின்றித் தருமத்தை ஓதும்
தண்ணொலி நாதமெனும்
விடையறு கேள்வி விரவிடும்சப்தம்
விந்தையில் கலக்கின்றான்

நடந்திடும்போதில் உயர்ந்திடும் உதிர
நிறைவினில் உறைகின்றான்
கடந்த எம்வாழ்வின் காரணமானான்
காரிய மினியாவன்
கிடந்திடும்போது  கிறங்கிடும் மனதில் 
கேளிக்கை புரிகின்றான்
கேட்பது கொண்டே  கிளர்ச்சியைத் தந்து
கீழ்மையில்  சிரிக்கின்றான்

உயர்வதும் அவனால் தாழ்வதும் அவனால்
உலகதும் அவனாலே
தயவொடு சினமும் தரும் மகிழ்வுணர்வும்
தரணியில் அவனாலே
கயமையின் அழிவு கடமை நல்நீதி
காப்பதும்  அவன்தானே
நியதியும் அவனே நிகழ்வுகள் அவனே
நேர்ந்திடும்  முடிவவனே

நினைப்பதோ ஒன்று நடப்ப தின்னொன்று 
நியதிகொள் உலகமய்யா
நினைந்துளம் ஆற்றும் நிகழ்வுகள் திரிந்தே
நடந்திடும் நேரிலய்யா
வினை செயல் நாமே  எனநினைந்தெம்மை 
வேறிடத் துடித்தாலும்
வனைந்திடும் பானை வடிவது அவனே 
வகுப்பது முரணாகும்

எண்ணங்கள் மீது  இழைபவ னவனே
எதிலும் அவனய்யா
கண்ணிடை தோன்றும் காட்சியின் கர்த்தா
காரணம் கடவுளய்யா
வண்ணங்கள் கொண்டு வரைந்திடு மெங்கள்
வாழ்க்’கை’ என்றாலும்
எண்ணங்கள் கொள்ளும் இருப்பின் கருவோ
இறைவன் எனவாகும்

பிறப்பதுமில்லை பிரிவதுமில்லை
பிறிதென ஏதுமில்லை
இறப்பதில் முடிவாய் இருப்பதுமில்லை
இயற்கையின் சுழற்சிவகை
திறப்பதுமில்லை மூடுவதில்லை
திக்கில் எட்டும் நிறை
நிறமெனும் உருவம் இறைவனுக்கில்லை
நிர்மலசக்தி  நிலை

*

1 comment:

  1. // நினைப்பதோ ஒன்று நடப்ப தின்னொன்று
    நியதிகொள் உலகமய்யா //

    உண்மையாகவும் முடித்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete