நீளப்பரந்த வானத்தின் நிர்மலதோற்றத் தொலைவூடே
தாழக்கிடந்த வெண்மேகம் தேகம் சுட்டுச் சிவந்ததனால்
வீழக் கிடந்த வெய்யோனின் வெம்மை தங்கா கன்றியழ
மேளத் திடுதிடு சத்தமுடன் மேகத்திடி மின் னல்கூட்டம்
ஆளப் பிடித்த அரசனவன் அயல்நாட் டுள்ளே விதிமீறும்
வேழப்படையின் விரையோசை விதமென்றாகி மதங்கொள்ள
மீளப் பிறிதோர் நாள்வருவேன் மின்னல் மாயம் பொழிமழையாய்
வீழ்த்தான்நீ வெகுண்டாயோ விடியும்காணென் றொளிர்தீயும்
ஆழக் கடலில் அடிவீழ்ந்தே அனலைத் தீய்க்கும் அறங்கண்டே
மாளச் செய்வதில் முனைவாக மாலை யிருளன் போதையிடு
சூழச் செறிந்த விதங்கண்டு சுற்றிச் சுழன்றே புவியோட
நாளப்போதில் நிலைநோக்கி நடைகொள் மாந்தர் மனையேக
நாளும் பறந்தே இரைதேடி நன்றாயுண்ட பறவையினம்
கீழும் மேலும் திசைகண்டு கிளர்ந்து விரைந்து மேகுங்கால்
கோளும் செழித்த தீயுலவிக் கூத்தா டும்விண் ணாழத்தில்
வாழுமுலகில் வாழாது வதைபட்டுழலென் றாக்கியவள்
ஆழும் முறைமை சீர்கெட்டே அநியாயத்தில் வீழ்ந்தோரின்
தாழும் வாழ்விற் கைதந்தே தருமம் என்றே நிலைகொள்ளா
கூழுங்குடித்துத் திண்ணையிலோ கூடிவீரர் கதைபேசி
வாழத் தந்தாய் வாழ்வென்றே வாசல் புகுந்த வேளையிலே
நீளப் பெருத்த பாம்புகளும் நீள்கூர் கொள்ளும் கொம்புடனே
காளைப் பெருமா டோடிவரக் காலைச் சுற்றும் கருநாகம்
தேளின் கொடுவால் தீண்டிவிட தீயில் உயிரோ டெரிபோகும்
ஆளைக் கொல்லும் உயிர்வாங்கி அனைத்து மொன்றாய் அணிசேரின்
பேழைகுள்ளே பிணமாகிப் போதலன்றிப் பிறிதுண்டோ
தூளைத் தூசைத் துரும்பென்றும் தேவர்குலமாம் இவையாவும்
மூளைத்திறனில் மானிடமும் முழுதும் இயற்கை வளமாக்கி
ஏழை மனதோ டெம்தமிழர் இயல்பென் றிங்கே செய்தாய் ஏன்
பூவைப் பூக்கச் செய்தாய் பின் போதில் வாடும் தகையீந்தாய்
ஆவைக் கன்றென் றன்புடனே ஆக்கி யணைக்கு மன்பீந்தாய்
மாவைக் கனிகொள் மரமாக்கி மண்ணில் பசிபோம் வகைசெய்தும்
சேவைக்கென்றோ தமிழீந்தாய் செல்லாக் காசாய் இருவென்றாய்
நாவிற் தேனாய் இசைபாட நல்லோர் தமிழைத் தந்தாலும்
பாவை இனமென் றோர்பாதி பட்டுத் துடியென்று டலீந்தாய்
சாவைத் தந்தேன் சதிபோலும் சரிதம் செய்தாய், மானிடனைத்
தேவைக் கென்றோ மானிடனே தீண்டிக்கொல்லும் குணமீந்தாய்
No comments:
Post a Comment