புழுவின் வதையும் புனலின் அலைவும்
மெழுகின் உருகும் மிதமென் தகையும்
கழுவின் அமர்வும் கரவின் கேடும்
பழுவின் சுமையும் பார்க்கின்றேன் நான்
எழுமின் இடியும் இடரும் தென்றல்
முழுவன் புயலாய் முயலும் விதியும்
தழுவும் தீயின் தகிப்பும் வாடும்
அழகின் மலராய் அடியே னாமோ
எழுதும் கோலை எடுக்கும் கைகள்
பழுதும் கொண்டோர் பயனைப் போலும்
தொழுதும் உள்ளம் துன்பம் குறையா
அழுதும் கண்கள் சிவக்கின்றேன் யான்
விழுதும் அற்றோர் பழமை தருவின்
விழுமோ என்றோர் வியப்பின் தரமும்
உழுதுண் மகனின் உரிமைத் தனமாம்
கழி மண் சேறாய் காணல் தகுமோ
நிழலுமற்றோர் நிலைமை தரவா
அழலின் உணவாய் அழியும்படியா
மழுவும் உடுக்கை மறுகைக் கொள்ளும்
தழலின் விழிகொள் தலைவா எண்ணம்
பழமும் கனியப் பனிமண் வீழும்
கழனிக் கதிரும் காலம் நீங்கும்
வழுவில் கணிதம்வைத்தே அண்டம்
சுழலும் சக்தி சொல்லாய் காப்பாய்
No comments:
Post a Comment