Tuesday, 26 August 2014

ஆற்றாமை தீர்


தென்றலை ஊதென்று தள்ளியவள் இந்த
தேகத்தை ஊதியும் கொள்ளென்றவள்
இன்றலை என்றென்னை விட்டது மேன் - உள்ள
இன்பங்களைக் கொன்றும் விட்டது மேன் 
குன்றலை பூந்தென்றல் கொண்டுருத்தி - பல
கோடிமலர்களை  புல்லிறைத்து
அன்றில்லை இன்றும் அயரவைத்துப் -பின்னர்
ஆதவன் கொண்டடல் சுட்டது ஏன்

மன்றினில் சொல்தமிழ் மாறியதோ  - இல்லை
மாபெரும் அண்டத்தின் மாயவளோ
கொன்றிடில் ஓர்தினம் கூச்சலெழும் -இது
கூடியெனைத் தினம் கொல்வதுஏன்
தின்றுமே தொண்டையில் சிக்குமன்னம்  உள்ளே 
சென்றிடவும் இல்லை வந்ததில்லை
என்றும் உயர்துன்பம் தந்துவிட்டாள் இது 
இப்படி யென்னையும் வாட்டுவதோ

வாழ்வதும் மேலுயர் வென்பதெல்லாம் ஒரு
வண்டியின் சக்கரம் சுற்றுவதாய்
வீழ்வதும் வீழ்ந்து மெழுந்த பின்னர் ஒரு 
வேடிக்கையாய் சுற்றக் காணுகிறேன்
ஆள்வதும் அன்னையென் றாகிய பின் அந்த 
ஐவிரல் கள்குவித் தாதரவாய் 
வேள்வியில் இட்டொரு நெய் உருகும் தன்மை
வீட்டெனைக் காத்திட வேண்டுகிறேன்

அள்ளவும் நேரற்றுப் போகவில்லை அந்த 
ஆழ்கடலும் குறைகாணவில்லை
துள்ளும் இதயத்தின் உள்ளநிலை  அது
துன்பமெனச் செயல் கொள்ளும் நிலை
புள்ளினம் போகின்ற வானத்திலே  எங்கு 
போயிருந் தாளோகண் காணவில்லை
அன்னையென என்னை அன்புகொண்டேயவள்
ஆற்றாமை தீர்த்திட வேண்டுகிறேன் 

No comments:

Post a Comment