Tuesday, 26 August 2014

இன்னும் கொஞ்சம் கொஞ்சம்


பொன்னெடுத்துப் போடச் சொன்னதில்லை - வாடும்.
பூத்தொடுத்த மாலை கேடகவில்லை
மின்னுகின்ற பட்டில்ஆடை கொண்டே - எந்தன்
மேனியெங்கும் போர்க்கக் கேட்கவில்லை
தின்னவென்று வெல்லமிட்டுப் பொங்கி - அதில்
தேனை வார்க்கக் கேட்கவில்லைத் தாயே
என்னை யிந்தப் பூமி கொண்டு சுற்றும் - போதில்
இன்னலை உவக்கும் வாழ்வு கேட்டேன்

தென்றல் வீசும்சா மரைகள் கொண்டே - இந்தத்
தேக வெம்மை ஆற்றக் கேட்கவில்லை
மன்றம் ஒன்றமைத்து மன்னனாகி - வாழ
மண்டபங்கள் ஏதும் கேட்கவில்லை
ஒன்றி ஆசை கொண்டு தேக இன்பம் - காண
ஓர்கிழத்தி யன்றிக்கேட்டதில்லை
வென்று பூமி என்னதென்று  ஆடும் - அந்த
வேடிக்கை உணர்வு கேட்டதில்லை

குன்றின் மீது கோபுரங்கள் கட்டி - அங்கு
கொண்டு வைத்துகூடி யாடிக்கண்டு 
நின்ற தேரில் தூக்கிவைத் துருட்டி - சுற்றி
நீளுருண்ட பாதை  ஓடவிட்டு
சந்தசமு மிசைத்த பாடல்  சொல்லி - உன்னைச்
சற்றிணைத்த கைகள் கூப்பி நிற்கும்
விந்தையை மறந்ததாலே இன்று - என்னை
வேதனைக் கென்றாக்கினாயோ சொல்லு

அன்பு கொண்ட ஆவியொன்று தந்தாய் - அதில்
ஆவிநோத சூட்சுமங்கள் செய்தாய் 
தென்பு தந்து தேடு வாழ்வையென்றே - எட்டு
திக்குமோடி தெய்வம் காணச் சொன்னாய்
என்பின்மீது இச்சை தந்திறைச்சி - அதில்
ஏறியோடும் இரத்தவாடைபூசி
நன்மையோடு தீது செய்யும் எண்ணம் - தந்து 
நானிலத்தில் வாழவிட்டபின்னர்

புன்னகைத்து நானுவந்த போது - என்னைப்
போயிருந்து கூறு வார்த்தையென்றாய்
என்ன கைத்து இச் சிறப்பை விட்டாய் - நீயும்
ஏழைமீது வன்முகத்தைக் கொண்டாய்
சின்னகை துடித்து காற்றில் ஆட - ஓர் 
சித்திரம் வரைந்து காட்டு என்றாய்
பன்முகைத்த பூவின் வாழ்வென் றீந்து - என்னை
பரிகசித்து நின்றதேனோ சொல்லு

தன்னலத்தில் கேட்கவில்லைத் தாயே - நேர்மை 
தாண்டியும் நடக்கவில்லை பாரேன்
முன்நிலத்தில் சுற்றும் பம்பரத்தை - எந்தன்
மேனிகொண்டு ஆடவிட்ட பின்பு
மென்குளத்தில் நீரலைந்து காண - அதில் 
மீண்டும் கல்லெடுத்து வீசக் காணும்
இன்னலுக்கு என்னை ஆக்கவேண்டாம் - தேவி 
இன்னும் கொஞ்சம் வாழ்வென் றீயக்கேட்டேன்

*************

No comments:

Post a Comment