Tuesday, 18 February 2014

சொல்லு குயிலே!

வெல்ல வல்ல பெரும் வீரர் தமிழ்க்குலம்
வெல்லு மென்றே இசைத்தாய் குயிலே
வெல்ல வல்ல என இன்று யிருப்பதும்
வேதனை கொள்வதும் ஏன் குயிலே
சொல்ல வல்லமொழி செந்தமிழாம் என்று
சொல்லிக் களித்துநின் றாய்குயிலே
சொல்ல வல்ல சொலின் கொல்லும் மொழியெனச்
சொந்தங்கள் கொண்டது மேன் குயிலே

இல்லைக் குறைவற்ற செல்வம் தமிழெனும்
எண்ணம் கொண்டு நிமிர்ந் தார் குயிலே
இல்லைக் குறையுற்றுச் செல்வர் தமைவிட்டே
இன்னல் படுவென்ப தேன்விதியே
எல்லையற்ற பலதொன்மைக் கலைநூல்கள்
எங்கள் பெருந் தேட்டம் தீ எழவே
சொல்லி யினமொழி கல்வியழிக்கவும்
சும்மாயிருந்தது மேன் உலகே

கல்லை வைத்துப்பல கட்டும் சிற்பக்கலைக்
கூடங்களும் கலைக் கோபுரங்கள்
வல்ல கடவுளை வேண்டிய போதுள்ளம்
வற்றியதோ அருள் ஏன் குயிலே
நெல்லை விதைத்ததை நீர்விட் டறுத்ததன்
நீக்கி உமிகளைந் தாக்கிய தோர்
நல்ல அமுதமும் உண்ண வழியில்லை
நாடு பறித்தனர் ஏன் குயிலே

தொன்மை இலக்கியச் சங்கத் தொகைபாடல்
சொல்ல இசையெழ நாட்டியமும்
பின்னலிட்ட பெண்கள்கூடி அடித்திடும்
பண்ணிசை யோடுகோ லாட்டங்களும்
மென்மைஉள மன்பு கொள்ளுந்தமிழ் மாந்தர்
மேதினி யெங்கும்நல் ஆனந்தமாய்
இன்பமெடுத் தியல் பெய்திடும் வாழ்வதுவும்
ஏன்செம் மொழிதமிழ்க் கில்லை குயிலே

No comments:

Post a Comment