Thursday, 20 February 2014

மின்னல் பொறி

வெட்டவெளி கட்டையிலே வேகுதடா மேனிசுட்டுக்
கட்டிவைத்த கோட்டைகள் தான் காற்றில் போனதோ - நல்ல
கற்பனைக் கெட் டாதசுகம் கண்ட சூன்யமோ
தொட்டெடுத்த மேனிதனும் தொல்லை எனக் கண்டதுவோ
வட்டவளை வானவில்லின் வண்ணம் போன்றதோ - அங்கே
வந்து நின்ற மேகத்துடன் வான்மறைந்ததோ

மெட்டமைத்துப் பாடிவைத்தேன் மேதினியில் காற்றெழுந்து
திட்டமிட்டுக் ஊதி ஒலி தேயச் செய்யுதோ - அது
தென்றலெனும் பேரில் திக்கும் மாறி வீசுதோ
சுட்டும் புத்தி தோன்றவில்லை சொல்லிமனம் கேட்டதில்லை
சட்டியை வைத்தாடுகிறேன் சாய்ந்துபோகுமோ - என்ன
சஞ்சலத்தில் விட்டுகரம் சற்று தூங்குமோ

கட்டிவைத்த பெண்ணவளும் காதல் நதி கொட்டிவிழும்
வட்டமலைப் பாறை தூவும்சாரலின் நிலை - அங்கு
வந்து விழும்தூறல் மேனி தொட்டபின் இல்லை
வெட்டிக்குறை விட்ட நிலா விண்ணெழுந்து காணுதடா
திட்டமிட்டே ஓடும்முகில் தேடிமூடுதோ - வீசுந்
தென்றல் தொட விட்டலைந்து தூரமானதோ


பொட்டுவைத்த பூமகளிர் புன்னகைக்கு ஒத்தவளம்
சொட்டுமலர்த் தேனின் சுவை கொண்ட வாழ்விதோ - இன்று
சொப்பனத்தில் கண்டதுவாய்ச் சோர்ந்து போனதோ
மொட்டவிழும் பூமறைந்து முற்றிவிட்ட காய்வெடித்து
கட்டவிழக் காற்றிலோடும் பஞ்சென்றானதோ - அதை
கைபிடிக்கக் காற்றினோடு காலம்போனதோ

தட்டிவைத்த  பஞ்சணையும் தாங்க மனமில்லையெனில்
விட்டகுறை நித்திரைக்கு வேளை தோன்றுமோ - அந்த
வெண்ணொளியும் வந்தகணம்  விடியலானதோ
நட்டமில்லை விட்டவனும் நாள்முழுக்க தந்துநின்றான்
சட்டெனத் தா என்றபோது  சட்டம் பார்க்கவோ - அவன்
சற்றுப்பொறு வென்றுசொன்னால் விட்டுப்போவனோ

முட்டி மழைபெய்கையிலே முற்றமதில் நின்றவனைத்
தொட்டுமின்னல் பார்ப்பதென்ன தேகம் யாவுமே - அந்த
சுற்றும்சுழல் சக்தியவள் தந்த மின்னலே
அட்டதிக்கு மாமலைகள் ஆழிபெரும் வானவெளி
விட்டதிசை  யெங்கும்நிறை விந்தையாகவே - அவள்
விண்நிறையக் கண்டுநின்றேன் வெள்ளை தீபமே

No comments:

Post a Comment