Thursday, 20 February 2014

சக்தியை நினை

நீலக்கடல் துடிக்கும் நெளிதிரைகள் அலைந்து கெடும்
காலச் சுழலினிலே காயம் உயிர் கலந்தழியும்
ஞாலத் திருமனிதர் ஞாபகங்கள்  சக்தியெனும்
கோலத்திரு’ நினைந்தால் கொள்ளுமெழில் வாழ்வன்றோ

பச்சை மரங்களிலும் பார்க்கும் மலர்ச் செடிகளிலும்
இச்சை கண்டுமணம் ஏந்திவரும் தென்றல் எழும்,
அச்சம் நிறைவெளியும் அண்டமெனும் சூனியமும்
உச்சம் கொண்டுறைவாள் எண்ணு துயர் நீக்கிடுவாள்.

சிவந்தே வான் கொதிக்கும் செங்கதிர்வான் உதயமெழும்
உவந்தே மண் சிரிக்கும் உணர்வுகளும் நிறமெடுக்கும்
இவள்தாள் பணிந்தவர்க்கு இன்பமெனும் வரங்கிடைக்கும்
தவழ்ந்தே வருந் துயரம் தாயிவளால் தொலையாதோ

மஞ்சள் நிலவொளியில் மனதிலெழும் குளுகுளுப்பால்
கொஞ்சம் மதிமயங்கும் குளிர் நிலவின் தண்மையுளம்
தஞ்சம் வந்தவரின் துன்பநிலை போக்குமெனில்
நெஞ்சில் கொள்வர்தமின் நிலையுயரச் செய்யாளோ

கருமை இரவுதிரக் கதிர் முகத்தின் தெளிவெழவும்
வருமை விழியுடையாள் வாழ்க்கை நலம் ஈந்தவளை
பெருமை  யத்திருந்து பிரபஞ்ச தோற்றமெழக்
கருவென்றா னவளைக் கரம் கூப்பு கருணை எழும்

வண்ணக் கலவைகளின் வான்வெளிகாண் சாகசங்கள்
எண்ணக் கருவாக்கி இத்தரையில் பிறவி எனும்
மண்ணைப் பிடித்துடலாய் மாயசக்தி ஏற்றியவள்
கண்ணில் ஒற்றியெடு கைகொடுப்பாள் காத்திடுவாள்

No comments:

Post a Comment