Saturday, 8 March 2014

பூமி பொறுத்தது ஆழி பொங்குமா?

நீலத்திரைக்கடல் ஓரத்திலே நானும்
நின்றிருந்தேன் வரும்பேரலைகள்
ஞாலத் தரையென்னும் மேடையிலே எழில்
`நாட்டியமாடிக் களித்திருக்க
ஓலத்தை ஒத்தொரு கூக்குரலில் கடல்
ஓங்கி ஒலிப்பதும் ஏனோ என்றே
கோலத்தைக் கூறிடும் காற்றினிடம் நானும்
கேட்டுவைத்தேன் அது ஆழியிடம்

காலைக் கருக்கலும் நாள்விடிந்தும் கடற்
காரிகையே இன்னும் அச்சமென்ன
மேலைத்திசை விழுந் தாதவனும் அதோ
மின்னிக் களிப்பில்மீண் டேறுகிறான்
சேலை கறுப்பிளம் மேனி விட்டும் உந்தன்
சிந்தை வருந்தி அழுவதென்ன
தோலைக் குளிர்கொள நீலமெனும் ஆடை
துள்ளும் எழிலுற நீயுடுத்தும்

ஆடும் இன்பம் விட்டு ஆனதென்ன செம்மை
யாகி அவ் வாதவன் போற்றுகிறாய்
மூடுவெயில் உந்தன் நீர்கவர்ந்தே அந்த
மேகவெளியினில் பஞ்செனும் வான்
ஓடும் அசைந்திட மென் துகிலாய் முகில்
ஓங்குவி தானத் திரை யமைத்தான்
கேடுதனைச் சொல்லி நெஞ்சலறியென்ன
கேட்டுநீதி எங்கும் வந்ததுண்டோ

என்றது மாழி நீர்தா னெழுந்து அலை
ஓங்கிய வேகத்தில் கீழ்விழுந்து
பின்னிப் புரண்டிடும் தென்றல்தனைச் சினம்
பொங்கப் புயலெனும் தீமை சொல்லி
மென்னுள்ளம் பீதியில் அல்லலுறச் செய்து
மீண்டும் மலர்வனச் சோலை சென்றே
கன்னம் தடவியும் பொன்மலரின்வாசம்
கண்டு கவர்ந்தோடும் தன்மை கொண்டாய்

எந்தன் கதையினைக் கேட்டதனால் வட்ட
இன்ப நிலவன்று தேய்ந்தழுதாள்
நந்தவனப் பூக்கள் சோர்ந்து விழ அதை
நாடிடும் வண்டு ரீங் காரமிட்டே
சிந்தனைகொண்டு திரும்பிவிட மழை
சோவெனக் கொட்டிக் கதறியதில்
என்துயர் எத்துணை இன்னல்தரும் அதை
இன்று மனங் கொள்ளப் பாருமய்யா

நித்தம் அலைந்தும் உயர்திரைகள் கொண்ட
நேரிய வாழ்வினைக் கண்டிருந்தேன்
சுத்தம் கொளப்பல நன்மைசெய்வேன் இந்தச்
சுந்தர பூமியில் மானிடர்கள்
ரத்தம் வழிந்திடச் செய்கொலைகள் தம்மை
ராஜமுத் திரையும் கொண்டவராய்
செத்துப்போ என்றே சிரசறுத்து தமிழ்
சொல்லும் இனத்தைப் புதைத்தெரித்தார்

உத்தமன் ஆதவன் ஓடிவிழுந்தெழும்
உன்னத பொன்னெழில் மாலையிலே
புத்துணர் வோடுயர் காலையிலே யிரு
போதிற் செம்மையடி வான்பரவ
எத்தனை இன்பமென் றாடியதும் இன்று
ஏனோ மறைந் துயர்மேவியதாய்
குத்தியழித்திடும் செந்தமிழர் உடல்
கொட்டும் உதிரம் கண்டஞ்சுதடா

அந்தியிலும் காலைப்போதினிலும் அந்த
ஆதவனின் எழில் செம்மைவண்ணம்
செந்தமிழர் வீரம் காட்டுதென நானும்
தேகம் மிளிர்ந்திட மின்னலுற்றேன்
சிந்திவிழுத்தது நற்தமிழர் கொள்சு
தந்திரம் வேண்டிய செம்மைகண்டு
அந்தியும் காலையும் ஏக்கமுற்றும் அது
ஆறாதெந் நேரமும் ஆர்ப்பரித்தேன்

சத்தியமே என்றும் வெற்றி கொள்ளும் எனச்
சாத்திரம் சரிதை நூல்களெல்லாம்
பத்திபல கொண்டு காண்கையிலே இந்தப்
பாரில் நிகழ்வது வேறல்லவோ
ரத்தக்குளிப்பினில் போதைகொண்டு இங்கு
வெட்டிக்களித்திடும் புல்லரினை
சத்தமின்றி காந்த பூமிவிட்டு அவர்
சுற்றும் விண்ணிற் போக கொட்டிவிடு

சுத்தமனங்கொண்ட பூமியென இந்தச்
சோதியெழும் அண்டமாவெளியில்
சித்தமெடுஎனச் சொல்லியென்ன அதைச்
செய்ததில்லைப் புவி புத்தியிலே
மொத்தமும் மண்ணெனப் போனதுவோ இந்த
மோச மிழைப்பவர் குற்றங்களை ’
அத்தனையும் புவிதாங்குதம்மா இந்த
ஆழக்கடல் ஓர்தினம் பொங்குமம்மா

***************

1 comment:

  1. சிறப்பான கவிதை வரிகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete