Saturday, 8 March 2014

நான் என் செய்தேன்?


பிறந்தேன் வளர்ந்தேன் பெரிதென் றின்பம்
 பெற்றே னல்லேன் இதுதான் நல்
அறம் தேன் எனவும் அறியாதேனோ
 அகத்தென் இருளைக் கொண்டேன் நான்
சிறந்தேன் பருவம் இளந்தென் புடைத்தேன்
 செழித்தேன் எழுந்தே சிரித்தேன் அப்
புறந்தேன் கொள்ளும் புன்னகை கண்டேன்
   பொய்த்தேன் அவளுள் புகுந்தேன் ஏன்

மறந்தேன் என்னை மலரின் தேனை
 மதுவை யுண்ணும் வண்டானேன்
துறந்தேன் தேசம் துடித்தேன் அரண்டேன்
 துணிவை மட்டும் கொள்ளாதென்
பறந்தேன் உயிர்கள் பிரிந்தென் றாகிப்
  பரந்தென் இனமும் அழிந்தேகாண்
இறந்தே னென்போர் இழப்பைக் கண்டும்
 இருந்தேன் ஏதும் செயலற்றேன்

நறுந்தேன் உலகில் நடந்தேன் நலிவை
 நாளும்கண்டேன்  நினைவெல்லாம்
அறுந்தென் எண்ணம் அழிவென்றாக
   அடைந்தேன் பிணியும், தமிழன்னை
குறுந்தேன் கவிதை கொள்ளென் றாள் நான்
 குளிர்மை கொண்டேன் கலைபோற்றிப்
பொறுத்தே னன்றிப் புரிந்தேன் கடமை
 புகழ்ந்தேன் தாயே சக்திதனை

கருந்தென் றலதும் காணா அண்டம்
 கருவின் உயிராய்காண் அன்னை
வருந்தென் படையும் வாழ்வில் செய்யும்
 வருத்தம் தன்னைக் குணமாக்கி
மருந் தென்றாகும் மண்ணின்வீரம்
 மலரச் செய்யும் நாள்மட்டும்
இருந்தென் வாழ்வில் எதுசெய்தாலென்
 இரந்தேனன்றோ  இதுவாழ்வோ?

No comments:

Post a Comment