Saturday, 8 March 2014

கரம் கோர்ப்போம


ஓடிநடந்து மென்ன செல்லமே செல்லம் - தினம்
உண்டுங் களித்துமென்ன சொல்லடி செல்லம் - ஒரு
ஆடிவந்தான பின்னர்  ஆவணி வரும் - எங்கள்
அன்னை நிலத்தில் என்றும் துன்பமே வரம்- இன்பம்
தேடிநடந்துமென்ன  பாரடி செல்லம்  - எங்கள்
திக்கில் இருளடர்ந்த பேய்களின் வாசம் - வந்த
பேடி பிறத்தியர்கள் கொண்டனர் நிலம் -நெஞ்சு
பித்துப் பிடித்தழிந்தோம், கொஞ்சமோ வஞ்சம்

நாடிபிடித்து மென்ன தங்கமே தங்கம் - அவர்
நாளை பிழைப்பரென்று சொன்ன சாத்திரம் - இங்கு
ஓடி நிலம்பறிக்கும் புல்லரின் கரம் - எங்கள்
ஓசை  வழியிறுக்க கொள்ளுமோ உரம் - இவர்
கோடி உழைத்து மென்ன தங்கமே தங்கம் -  உயர்
கோபுரக்கள் சுற்றியென்ன  தங்கமே தங்கம் - இங்கு
கூடி உழைத்து உண்ட நெல்வயல் நிலம் - நாமும்
கொண்டோர் பொருள் கவர்ந்து போயினர்எல்லாம்
\
மாடி மனைகள் கட்டி வாழுவர் செல்லம் - உயர்
மன்னர் குலத்தரென்று பேசுவர் தம்மை- கொடும்
பேடி மனத்தரிவர்  செய்யும் இழிமை இந்தப்
பூமி பொறுத்தேனோ பொய்மை வாழவும் - உண்மை
மூடி மறைக்க வில்லை செல்லமே செல்லம்  - ஒரு
மூடர் இருக்கும்  இனம்  சொல்லவா செ ல்லம் - என்றும்
ஓடி ஒருகுலமென் றாவது மில்லை - அவர்
உய்யும் வழி இடையில் தோன்றலுமில்லை

வாடி நடந்துவழி  காணுவோம்  தங்கம் - எங்கள்
வம்சம் எடுக்கும் வீரம் வெல்லது திண்ணம் - அந்தச்
சூடிப்பிறை யுடையோன் கொண்டவள் நெஞ்சம் - வந்து
சுட்ட உதிரம் வலு ஊட்டுவள் இன்னும் -இனித்
தாடி உனது கரம் தங்கமே தங்கம் - நாங்கள்
தன்னந் தனியே இல்லை தங்கமே தங்கம் -வரை
கோடிஎன இழந்தும்  உள்ளவர்  சேரின் - இங்கு
கொள்ளும்  துயர் மறையக்  காணுவோம்  தேசம்

No comments:

Post a Comment