Saturday, 5 July 2014

கனவோ கற்பனையோ

(ஏக்கம் பெண்களுக்கு மட்டும்தானா இல்லையே)

பூப் பறித்தேன் மாலைசெய்தேன் பூவைக்குச் சூடப்
பொன்னிழையில் கோர்த்துவைத்தேன் பூவெழில் கூட்ட
தோப்பினிலே மாலையிளந் தென்றலும் வீச
தேவியவள் முன்நடந்தேன் சேதியும்கூற
காப்பிருந்த கைகளிலே காயமும் சேரக்
காணொருநாள்  கூடுமென்ற கற்பனைவாழ
மூப்பெடுத்த மனதுடனே மாலையும் சூட்ட
முன்னிருந்த தேதுமில்லை மாலை மண்வீழ

காற்றினிலே வந்த குரல் கானமும் பாடக்
கண்கள் முன்னே காண் அழகோ ஓவியமாக
விற்றிருந்தாள் வண்ணமலர் பொய்கையும் ஆட
வெற்றிஎன்றே தோன்றியது வேதனை போக
ஈற்றினிலே கண்டவளை என்வசமாக்க 
இன்ப உணர்வோடி மனம் இச்சையில் பூக்க
ஏற்றிடுவாய் என்றணைக்க எந்திழை கொள்ள
ஏதுமில்லை நீரில் விழுந் தேன்குளிர்மேவ
கோவிலிலே நின்றவளைக் கண்டதும் மாயை
கொள்ளைஎழில் கோணுமிதழ் குறுநகை பூக்க
ஏவிமனம் கேளெனவே என்னையும் தள்ள
ஏதெனநீ  ஏய்ப்ப தென்றும் இல்லை இன்றாக
பாவிமனம் பட்டதுயர் பனி யெனக் காய
பார்த்திடடி எழும்கதிரே பட்டெனும் கன்னம்
தாவியதில் கிள்ளிவிடத்  தென்றலில் கூடி
தேய்ந்துருவில் மாறிநின்றாள் சிற்பமென்றாகி

வெள்ளி மணிப் பொற்சதங்கை விண்ணிடைஆக்கி
வீதியெங்கும் பட்டு விரித் தின்பமும் கூட்டிக்
கொள்ளையெழில் பூநிரவிக் குங்குமம்  வாங்கி
கூடிவரும் வேளையவள் கன்னமும் ஆக்கி 
வெள்ளைப் பசும் பால்கொதிக்க வைத்ததும் ஆற்றி
வீடுமனை தூய்மை செய்தே விளக்கொளி யேற்றி
அள்ளி யணைத் தானந்திக்க ஆசையும் கூட்டி
அந்தி வரக்காத்திருந்தேன் அன்பதைக் காட்டி

கள்ளநிலா முற்றத்திலே காய்ந்தெனை வாட்டக்
காணும் எழிற்தென்றல் மணம் கற்பனை சேர்க்க
முள்ளெனவே நோகுமுடல் முப்புரமாக்கி 
மூவிழியோன் புன்னகையில் முற்றிலும் தீய்த்த
உள்ளெரிவில் உன் நினைவில் உன்மத்தமாகி
உயிரையும் நீ வாட்டுவதென் உன்நிழல் வேண்டி
கொள்ளைஎழில் கொண்டவளே கங்கையில்கூடிக்
கொள்ளும்,குளிர் விட்டெரித்துக் கொல்வதென் போடி


**********************

குறுக்கலின்றி நீட்டாய்

   நீரலைக் குள்மாறி மாறி  நீச்சலென் றசைத்த தாயே
நிர்மலத் தில்நெஞ்சை விட்டதேனோ
தீரலைக் கவிக்குள் காணும் தித்திக்கும் இனித்தமாயம் 
தென்றலை நிகர் அசைத்தல் ஈந்தே
சாரலைப் பொழிந்த மேகம் சட்டெனும் இடிக்குமோசை
சத்தமும் இழந்த்திருப்பதுண்டோ
சேரலைக் கொடுத்த தாயே செந்தமிழ் பிணைத்த வாழ்வில் 
சொற்கவித் திறன் அளித்து மேவாய்

ஆடலை மறந்த தோகை ஆற்றலை இழந்த போலும்
ஆக்கலைத் துறந்த எண்ணம் வேண்டா
கூடலைச் செந்தீயின் வெம்மை கொண்டனன் இத்தேக வன்மை
கொஞ்சமில் குவிந்ததாக ஈந்தே
வேடிக்கை பாரென்று யாக்கை வீதியில் கிடந்த குப்பை
வீசிடக் குறிக்கும் எண்ணம் வேண்டா
பாடலை இசைக்கும் நெஞ்சம் பைந்தமிழ் குடித்த உள்ளம்
பக்குவம் இழத்தலற்ற சீர்செய்

சோடியைப் பிரிந்த அன்னம் சுற்றமும் விட்டோர் ஏகாந்தம்
சுற்றிலும் தனிதத வாழ்வு வேண்டாம்
சாடியை விடுத்து மூடி சட்டெனப் பிரித்து ஊற்றி
சஞ்சலப்படுத்தும் தன்மை விட்டே
கோடியைப் பெருத்த பொன்னைக் கொட்டியும் கிடக்கும் வைரம்
கூட்டியும் அள்ளென்று வீசலின்றி
ஆடியும் கொள்ளென்று  தொட்டில் ஆட்டியும் அணைத்துக் கிள்ளி 
ஆவெனக் கத்தென்றும் ஆக்கலின்றி 

தேடியும் நான் கண்டதில்லை தீயிலும் பெருத்த  சோதி
தீண்டியும் கொள்ளிச்சை நெஞ்சில் இல்லை
பாடியும் நான் கண்டஇன்பம் பஞ்சமும் இருந்ததில்லை
பட்டினை யொத்தோர் பளிங்கென் றாக்கி
ஆடிடும் பேராழி போலும் ஆக்கினும் அசைத்து என்னை
அண்டமும் கண்டாடும் மின்னல் வெள்ளம்
நீடிடுமென் றன்பு வாழ்வில்  நித்தியம், பொறித்து மின்னும் 
நேரலைக் குறைத்தலின்றி நீட்டாய்

**************** 

அவள் சோகத்தின் ஏதென்ன?

(தலைவனும் தலைவியும்)


அவள் கூற்று:-’

அந்திவெயி லாறமலர் ஆடுமலை நீர்க்குளத்தில் 
வந்து விரி பேரழகைக் கண்டிருந்தேன் - அங்கு
விந்தையதோ எம்பிவிழும் வேலெனும்கண் விளைகயலும்
சொந்த இடம் விட்டு நிலம் வாழ்ந்திடுமோ

எந்த நிலை யான்மறந்து நின்றவளோ ஆள்நிலமும்
அந்தோ கதி யாயழிந்து போகையிலே  [  துயர்
செந்தணலும் பட்டதுவாய் சின்னவள் இங்கூற்றும்விழி
வந்தனல் நீர் வீழருவி யாவதுமேன்

வந்து விதி வாசலிலே வாரிமணல் வீசியபின்
எந்ததிசை போனதென நானறியேன் - இனி
சுந்தரமா தென்றலது சேரவும்கு தூகலித்து
நொந்த உடல் தான் துயர் விட்டாவதென்ன ?


அவன்:-

மேற்கடிவான் சூரியனும் மேவுமலை ஆழியிடை
தோற்றதெனக் காண் விழுந்திம் நாள்மறைய- அச்
சேற்றினிலே தாமரையும் சென்றதவள் காதலனின்
சீற்றமெழும் செங்கரமென் றேங்கியழ

சிந்தனையில் பூத்தவளே செங்கரும்பின் கீழ்ப்புறமே
சந்தமெழ வந்து நடை கொண்டவளே  - இச் 
சுந்தரமென் பேச்சினிலே சிக்கியவன் பித்தெனவே
இந்த மொழி உந்தனிடம் கொஞ்சுவதென்?

நேற்றிருந்த ஆனந்தமோ நிலையிருள கருமையெழும்
ஆற்றலென அருகிவிட ஆனவளே  - உன்
கூற்றினிலே உள்ளகுறை கேட்டுளமோ புரியவிலை
ஊற்றும் விழிகண் டுழன்று கொள்வதென்ன?

மந்திரமோ  போட்டவள்நின் மோகமழைக் குள்நனைந்த 
தந்திரமும் சூழ்கலியைத் தந்திடுமோ  - இவள்
செந்தழலின் ரூபமதில் சின்னவளாம் நீ மகிழப்
பந்தமுடன் உன்பதிலை பார்த்தவன்நான்

அந்தி யிருள் சூழுலகில் ஆனந்தமென் ஓசையிடும்
நந்தவன மாமலர்கொள் சோலைமரம் - இன்று
வெந்தெரியும் காற்றினிலே  வேதனையில் பூப்பொசுங்க
எந்தவிதி காரணமோ சொல்லிவிடு

Blank


இனித் தீருமா ??

கோட்டையிலே கொடிபறக்கப் பாரடா - அங்கு 
கொட்டும் முர சோங்குவதும் கேளடா
வாட்டமுறும் தீமைகளைக் காணடா - அவர்
வாழும் துயர் நாம்கொடுத்த தல்லடா
சூட்டினிலே பனி மறையும் ஏதடா - அது 
சொல்லிவைத்த விதி இயற்கை யாகுமாம் 
காட்டுமலர் பூத்தமணம் காற்றிடை - அது
காவிவரும் நாளிதுவாம் கொள்ளடா

தீட்டியவாள் கையெடுத்த வாழ்வடா - அதைத்
தீண்டியவர் தானுமழி  வாரடா
நீட்டிய நல்மென்னிழைத்த நூலதும் - அது
நேர்மையெனில் நேர் இரும்பு பாரடா
சூட்டி
ய பொன்முடி யெடுத்த நாளடா - அதில்
சோர்ந்து தவழ் தென்றல் புயல் ஆகுமா
வாட்டிய நம் நெஞ்செழுந்து வீங்குமா - நம்
வாழ்விருளை ஒளியெழுந்து மேவுமா

மூட்டியசெந் தீயெரியக் காண்கிறோம் - அதில் 
மூச்சிரைந்து நாம் நடந்தும் தேய்கிறோம்
காட்டிய வர் நீதி கரையேற்றுமா - ஓர் 
கரமெழுந்து நேர்மைதனைக் கேட்குமா
பாட்டினிலே துன்ப இருள்போகுமா - இனிப்
பக்குவமாய்க் காய்கனிந்து வீழுமா
வேட்டியினை தூக்கிமடித் தேறுவோம் - அந்த
விதிமலையாம் நாம்கடந்து ஓடுவோம்

கேட்டினிலே ஊறியவர் எம்மிடம்  - இக் 
கீழ்நிலலைக்கு தள்ள வைத்த காலமும்
சாட்டினிலே ஊருலகம் தேற்றினார் -  இச்
சாட்டையடி கண்டுமஞ்சி  ஓடுவர்
நாட்டினிலே தர்மம் எழுந்தோங்குமா - இனி 
நாம் நடக்க ஒர்வழியும் தோன்றுமா
வீட்டை நினைந்தோர் மகிழ்வும் பொங்குதே - இது
வீதியுடன் நின்றிடுமா சொல்லடா

ஏன் படைத்தாய்

வானம் படைத்தாய் வட்டஒளிப் பரிதியிட்டாய்
கூனம்புலி வானில் குறைய வளர் கோலமிட்டாய்
தேனம் மலரிடையும் தீண்டிக்கள் ளுண்வண்டும்
ஆனதிவை நீபடைத்தாய் அற்புதமாம் சக்தியன்றோ

கானக் குயில் படைத்தாய் காற்றிலொலி சப்தமிட்டாய்
மானும் படைத்துவிழி மருளு மெழில் மென்மையிட்டாய்
தானமென வாழ்வும் தருக்களுடன் பச்சை வயல்
போன வெயில் திரும்பப் புதுமையிவை காணவைத்தாய்

தீயும் சுடர் படைத்தாய் தென்றலால் பெருக வைத்தாய்
வாயும் இனித்துண்ண வகையாய் கனிபடைத்தாய்
பாயும் நதி மீன்கள் பசும்புல் பாய் விரித்தாய் 
நோயும் பிடித்த உளம் நிறைமனிதம் ஏன் படைத்தாய்   

மாநிலமாம்  மேதினியில் மக்கள் தொகை படைத்தே
மேனியெழில் இனம்பிரித்து மேன்மை நிற வெறியூட்டி
போநீ இடம் விட்டுப் புலம்பித்தான் திரியென்றே
ஏனிதயத் துள்ளே இரக்கமற்ற வெறுப்பீந்தாய்

மேனி சிலையழகாய் மின்னுமெழில் மெருகேற்றி
ஏனிந்த மாதர் இளமைதனில் எழுச்சியுற்று
வாநீ என அழைக்கும் வண்ணவிழி கண்டதன் பின்
சாநீ எனக்கொல்லும்  சஞ்சலத்தில் ஆழவிட்டாய்

ஆநீ செய் அகிலமதில்  அழகு மலர்ப் பூஞ்சோலை
தேனின் மலர்ப் பொய்கை திரியுமிளம் பூங்காற்று
வானிற் கலைந்தமுகில் வண்ண ஒளி இசைநாதம்
வேனிற் குடைவான வெயிலால் விரி கமலம்

நாணக் குறும்பார்வை நயனமதிற் பொய்க்கோபம்
கோணற் குவியிதழும் கொட்டிவிட்ட குங்குமமும்
பேணர் கரியதெனும் பெண்மைதனும் நீபடைத்து
ஆணிற் கொடியவரால் அணைப்பதென சாகவிட்டாய்

சூது பகை வஞ்சமுடன் சினங்கொண்ட சூழ்ச்சிமயம்
மாதுன்பம் மயங் கியொரு மரணத்தின் மூச்சிழுக்க
காதும்தான் கேட்டிழியும் காதகரின் கொச்சை மொழி
யாதும் இகம்வைத்தாய் எம் வாழ்வில் ஏன் இணைத்தாய்

தாயும் படைத்தளித்தாய் தாயுதரத்துள் கருவாய்
சேயும் படைத்தாய்பின்  சேருடலும் பிரித்தழுதும்’
மாயும் வகைசெய்து மனமழவும் செய்ததுநீ
போயுமிவ் வாழ்வுதனைப் பூமியிலே ஏன் படைத்தாய்

நீதிக்குப்பின் பாசம்

துட்டரும் தீயரும் கூடுகிறார் - அதி 
தீவிரமாகவே தேடிவந்தார்
வெட்டவரும் செங் குருதிகண்டே அவர் 
வேடிக்கையாகவே ஆடுகிறார்
சட்டமும்கீழே கிடக்கின்றது - அதில் 
சத்தியம் ஏங்கி தவிக்கின்ரது
கட்டிய நீதியின் கோட்டையிலும் - அந்தோ 
காரிருள் கண்ணை மறைக்கின்றது

பட்டவர் செந்தமிழ்ப் பாவைகளும் - சிறு
பாலகரும் இளங்காளைகளும்
சுட்டவர்  மாஅரி வெட்டவரும்  - ஒரு 
தோற்றம் பொறித்த `கொடி`யவரே
கட்டியவன் கட்டக் கொண்டவளும் - அவள்
கண்மணியும் மண்ணிலீந்தவரும்
தொட்டிலிட்ட புதுக்கைக் குழந்தை - அதன்
சொந்தங்களும் சுற்றம் உள்ளவரே

நட்டநடு வீதி விட்டவரைச் - சொந்த 
நாடுபறித்து நல்லாடை விட்டு
தொட்டிழுத்துப் பெண்ணைக் கால்மிதித்தும் - அவர் 
தூய உடல் தன்னிலிச்சையுற்று
முட்டக் குடித்துக் கும்மாளமிட்டும் - இவர் 
மூச்சை இழப்பதைத் தான் சுகித்து
வட்டமாக நின்று வாய் பிதற்றிக் - கெட்ட
வார்த்தைகள் பேசியே புல்லரித்தார்

அட்டையென ஒட்டி ரத்தமதை - இவர்
அத்தனை செந்தமிழ் மாந்தர்களும்
கொட்டி இழந்திடச் சொத்தைவிட்டு - நல்ல
கோலங் கெடுத்துக் குழியிலிட்டே  
வெட்டிமண் போட்டதை மூடியபின் - அதில் 
வீடுகட்டிக் குடியேறுகிறார்
எட்டுத்திக்கும் ஏவும் கண்ணிருந்தும் - புவி
ஏதும் அறியாதார் போற்கிடந்தார்

சட்டியுள்ளே ஒரு ஓட்டையிட்டே - அதில் 
சற்றும் குறையாமல் நீரைவிட்டு
விட்டு விடுகிறேன் மூச்சையென்றும் - அதில் 
வீழ்ந்துயிர் நீக்க விளைகையிலே
கட்டி அழுகிறார் தேசங்களும் -= அவர் 
கைங்கரியம் இவர்கொள்கை யென்றே
எட்டியெமைக் குட்டிஓடுஎன்றார்  - ஏனோ
ஏய்த்து நிலம்  கொண்டவர்க்களித்தார்

சத்திய வேதனை கொள்ளுகிறோம் - இது 
சாத்திய மானது எப்படியோ
புத்தியைக் கொண்டவர் பார், அதமும் =- செய்வர்
பின்னாலிருப்பது நீதியென்றோ 
நித்தமுயிர் கொள்ளக் கண்டபின்னும் -இந்த 
நேரம் தவறுதல்  தன்னலமோ
கத்திஅழுதோம் ஏ..காந்தநிலை - கொண்டும் 
காசில் காணும் அன்பு பொய்த்ததுவோ

********************

சக்தி யீந்தனள்

ஒளியென வெளிதொலை யுயர்விடை எழிலுற
உறைந்திருப் பவளுனையே
அளிபெரு வரமென அனுதினம் உருகினன்
அறமொடு வழி யமைத்தே
தெளிவெடு மனதுடன் திடமெடு நடைகொளத்
தருவதுன் வலிமையதே
களிகொள எழுவது கருமையில் ஒளியெனும்
கருணையுன் திருவருளே

செழிமலர் இதழ்கொளும் சிறுமையில் மெருகினைச்
செறிவெழ எமக்களிப்பாய்
பொழிமழை குளிர்சுகம் புது நதியெனும்விதம்
பொலிந்திடும் உணர்வளிப்பாய்
எழில்மலர் சிரித்திடும் இளமையின் சுவடுகள்
இனும்பெரி தென அமைப்பாய்
தொழிலுனைத் தொழுவதும் தமிழினி கவிதைகள்
தினமெனப் பெருக வைப்பாய்

குலமிவன் தமிழ்தனும் குறைவின்றிப் பெருகிடக்
குவலயமதில் சிறப்பாய்
நிலமதில்  பெருந்துயர் நிகழ்வினை நிறுத்தியெம்
நினைவினில் சுகம் கொடுப்பாய்
கலகமும் பிணிகளும் கடும் வினைப் பயன்களும்
கருகிட இனிமை ஒன்றாய்
உலகமும் எமை ஒரு உயிரென மதித்திட
உணர்வுகள் பெறவும் வைப்பாய்

இலையொரு உயர்வினில் இதைவிட ஒருஇடம்
எனுமொரு தகையளிப்பாய்
கலையுடன் பெருந்தமிழ் களைபெற அறிவினைக்
கணமிதில் எமக்களிப்பாய்
அலைகடல் பெரிதெனும் அதைவிடப் பெருந்தொகை
அமைதியில் எமை இருத்தாய்
தலைதனில் முடிகொளும் தகுதிகொண்டிவர் நிலை
தருமத்தின் வழிநடத்தாய்

************

சோர்ந்து போகிறேன்

சின்னச் சின்ன வாசப்பூக்கள் தொட்டுப் பார்க்கிறேன் - அதில்
சேர்ந்தமென் னிதழ்கள் கண்டும் சோர்ந்து போகிறேன்  
என்ன வாழ்வில் இன்பமென்றே ஏங்கி நிற்கிறேன் - பூவில்
ஏது மிச்ச முண்டு நாளை எண்ணிப் பார்க்கிறேன்
தின்னவென்று தேகம்கொண்டு என்ன செய்கிறேன் - நாளும் 
தீமைநாடித் துய்த்து மேனி தீய்ந்துபோகிறேன்
நன்மையேது வாழ்வில் என்றும் துன்பமே வதம் - இங்கு
நானும்வாழ வந்ததென்ன சோர்ந்துபோகிறேன்

வட்டமான பொட்டுப் போலும் வான வெண்ணிலா - அது
வந்துபோகும் என்ன உண்டு வாடிப் போகிறேன்
சுட்டகாலை தோன்றும் அண்ட சூரியன்களும் - ஒன்றைச்
சுற்றும் பூமி கொண்டதிங்கு ஏனென் றெண்ணினேன்
வெட்டி வேலையற்றுத் தெய்வம் வீம்பில் செய்ததோ -இல்லை
விற்பனைக்கும் உட்படாத வீசும் குப்பையோ
கட்டிக் காக்க  யாருமற்ற கேடுபெற்றதோ - இங்கு
காணும் மாந்தர் கட்டவிழ்த்த காட்டு மாக்களோ

மெட்டிகாலில் கொண்டமாதர் மின்னும் நேர்விழி - கொண்ட 
மேனி என்ன நாய்களுண்ண போட்ட மச்சமோ
அட்டகாசமிட்டுக் கொல்ல ஆன வர்க்கமோ - தேசம்
யானை சென்ற பூவின் தோட்டம் ஆனதென்னவோ
விட்டதென்ன பூமியென்ப வேதனைகளின் - வான
வீதியோடும சூனியத்தின் விம்பமானதோ
சொட்டி வீழ்வதென்ன நீதிக் கண்ணில் இரத்தமோ - இதை
சற்றும் கண்கள் காணவில்லை தெய்வ சக்தியோ

மொட்டலர்ந்த பூக்கள் தன்னை வெட்டிவீசிடும் - இந்த
மாயன் காலன் செய்வழக்கை உள்ளம்ன் காண்பதோ
தொட்டிலிட்டுக் காத்தபிள்ளை தோள் வளர்ந்ததும் - இந்தத்
தூயமண்ணில் வேரறுத்து வீழச்செய்யவோ
மட்டி மா பெருத்தமூடன் மற்றவர்களும் - இந்த 
மேதினிக்கு காவலிட்டு மேன்மை கொண்டிட
அட்டமாதிக் கெங்குமேகி ஆதியாம் தமிழ் என்றும்
அல்லலுற்றும் இன்னற்பட்டும் ஏழையாவதோ

சுட்டபொன்னும் சட்டியும் துலங்கும் தோற்றத்தில் - இங்கு
சுட்டதும் கலங்கி வீழும் தேகம் அல்லவோ
தட்டியும் அடித்தகத்தி கூர்மையாகிடும் - எம்மைத்
திட்டியு மழிக்கும் கூட்டம் தெய்வ சித்தமோ
முட்டியும் விழுத்தும் மாட்டில் அன்புகொள்ளவோ - கெட்ட
மூர்க்கரும் தமிழ்குலத்தை இல்லென்றாக்கவோ
கட்டியும் வதைக்கக் கைகள் கட்டிநிற்பதோ - இந்த
காதகர் தமிழ் இனத்தைக் கட்டியாள்வாரோ

குட்டியும் குழந்தைமேனி கொல்ல யாரிவர் - இந்தக்
கோலமும் எடுத்த வாழ்வில் குற்றம்யாரதோ
எட்டியும் இனம் அழிக்க ஏது மௌனமோ - இந்த
இன்னலை இங்கீந்தவர்க்கு இன்ப வாழ்வதோ
ஒட்டியும் ஒன்றாகி நட்பு கொண்ட பாவிகள் - இங்கு
ஏகமும் இடர்விதைக்க தெய்வம் காத்திடா
விட்டதேன்  வியந்தும் பின்னர் சோர்ந்து போகிறேன் - மீண்டும்
வீரமும் விளைந்த வாழ்வை என்றுகாணுவேன்.


****************

மாயவன் நாமோ?

தீதோடித் தென்றலென்று வீசுகின்றதே - கெட்ட
தீமை புகுந் தினமழிவைக் கூட்டுகின்றதேன்
காதோடு தொட்டசையும் காற்றதுவும் தேன் -  கொண்ட
காமலர் பூ வாசம்விட்டுக் காணுகின்றதேன்
யாதோடிப் பருவவனப் பாக்கியதோ காண் - பெண்டிர்
யாக்கைதனை காக்கைகழு குண்பதற்கீந்தோம்
ஏதோடிச் சென்ற துயிர் இத்தனை கோரம் - காலம் 
எம்குலத்தை வேரறுக்க இத்தனை வேகம்

வாதாடிக் கிடைப்பதுண்டோ விடுதலை கூறு = இங்கு
வந்தாடும் விதியின் வலி வீழ்த்தவும் நின்று
போதோடிப் புலருமெனப் பலபல ஆண்டு நாமும்
பொறுத்தோமே உயர்வை யெண்ணிப் பேதமைகொண்டு
சூதாடித் தோற்றபஞ்ச பாண்டவர் அங்கே - இங்கு
சூழுலகும் சேர்ந்தாடிச் சூழ்ச்சியில் வென்றே
மாதோடிக் கலங்க அவள் மறை துகில் உருவும் - இந்த
மாகயவர் செய்கை  கண்டோம் மாதவன் யாமே

காற்றோடி ஓலமிடக் கத்திடும் ஆழி - அதன் 
காணலைகள் கரை விழமுன்கதறிய காட்சி
ஆற்றோடி வரும் நீரும் ஆழத்திநோக்கி- வீழ்ந்து
அருவியென கூச்சலிடும் அதிலெழும் ஓசை  
ஊற்றோடி வரும் முகிலும் இடியொலி போடும் - தூர
உறுமியெரி மலைவெடிக்கும் ஓசையின் தாக்கம்
ஆற்றாது புயல்மரத்தை அடியுடன் சாய்க்கும் - அது 
ஆவெனவே சத்தமிடும், அதிர்வதும் கேட்கும்

நேற்றோடு பெருமையிவை யிழந்தது காண்பீர் - இன்று
நேரும்வதை தமிழினத்தர் ஈழவர் தன்னும்
தோற்றோடிக் கதறுமொலி  பெரிதென ஆகும் - இவர்  
துயரபெருகித் துடிக்குமொலி தோன்றிடக் கேட்கும்
மாற்றானின் கைகளிலே மரணத்தின் ஓலம் இது
மறுபடியும் மறுபடியும் எழும் நிலை காணும்
ஈறறாக வருவதென்ன எம்முள வாட்டம் - இதில்
எத்தனை நாள் இன்னுமென  ஏங்கிடும் நெஞ்சம்

நூற்றோடு ஒருவரென நாம்  உயிர் ஈயா - இந்த 
நேர் விழிமுன் கொடுமைதனை நெஞ்சமே கேளாய்
வேற்றோடு பகைமையுள்ளம் விட்டொன்று சேராய் - எம்
விரல்கோர்த்து ஒர்வழியில் விரைந்திடக் காண்பாய்
சேற்றோடு பிறந்ததுதான் செழுமலர்க் கமலம் - அது
சிறுமையெண்ணி குறுகலின்றி செழிப்பது காண்பாய்
ஆற்றாமை கொண்டலைந்தோம் ஆனதுபோதும் - இனி
ஆற்றலுடன் சுதந்திரத்தின் அழகு கொள்வோம் வா

எழுவாய் தமிழ்(ச்) சொல்

பணிந்திடல் வேண்டாம் தமிழா இதுவோ 
பயனிலை விடு நீ எழுவாய்
தணிந்திடில்  நாளை தலமுறை வீரத்
தகைமை யிழப்பார் எழுவாய்
அணிந்திடு வீரம் அறிவொடு திறமை 
அலையென,எழுவாய் எழுவாய்
வணங்கிடில் உந்தன் வாழ்வது இழியும்
வரும்பகை எதிர் கொண்டெழுவாய்

துணிந்திடல் வேண்டும் துயரமும் கொண்டு
தூங்குதல் விட்டே எழுவாய்
மணிமகுடம் உன்முடிதனில் கொள்வாய்
மாசபை ஆள்வாய் எழுவாய்
அணிபடை கொண்டோர் அரசது வேண்டும் 
அதனையும் காண்பாய் எழுவாய் 
பணிந்திட வாழின்  பலமது போகும்
பயமிலை எழுவாய் எழுவாய்

ஒரு துளியேனும் உறக்கமும் இல்லை 
உயரிய நோக்கம் எழுவாய்
தரும் சுகவாழ்வில் தருமங்கள் பொலியத்
தாழ்வது விட்டே எழுவாய்
சிரமது தாழும் நிலையை விடுத்து 
சீறியே புயலாய் எழுவாய்
இரங்குதல் கொண்டே இருந்தது போதும் 
எடுகை உயர்ந்திட முயல்வாய்  

குனிந்திடக் குட்டும் குவலயமீதே
கூடிய மொழிகள் யாவும்
தனிநிலம் கொண்டே திமிருடன் வாழும்
தகமையைக் காண்பாய் எழுவாய்
நுனியினில் தன்மை உயர்திணை கொண்டே
நான் எனதென்றிடும் மொழிகள்
இனி மறந்தேனும் எழில் தமிழ் குறைவென் 
றெண்ணுதல் விட்டே எழுவாய்

எடு நடைபோடு ஏறென ஓடு
எதிரியை நட்பென் றேற்காத்
தொடு கணை போலும் தோல்வியைப் பகையின் 
துணைநலம் ஆக்கித், துயரம்
விடு எமதல்ல வீரத்தின் மைந்தர் 
வீறுகொண்டே வாழ்ந்திட்டோம்
தடு எவர்தானும் தமிழ்குறை வென்றால் 
தவறென உணரச் செய்வாய்

*******************