Saturday, 5 July 2014

எழுவாய் தமிழ்(ச்) சொல்

பணிந்திடல் வேண்டாம் தமிழா இதுவோ 
பயனிலை விடு நீ எழுவாய்
தணிந்திடில்  நாளை தலமுறை வீரத்
தகைமை யிழப்பார் எழுவாய்
அணிந்திடு வீரம் அறிவொடு திறமை 
அலையென,எழுவாய் எழுவாய்
வணங்கிடில் உந்தன் வாழ்வது இழியும்
வரும்பகை எதிர் கொண்டெழுவாய்

துணிந்திடல் வேண்டும் துயரமும் கொண்டு
தூங்குதல் விட்டே எழுவாய்
மணிமகுடம் உன்முடிதனில் கொள்வாய்
மாசபை ஆள்வாய் எழுவாய்
அணிபடை கொண்டோர் அரசது வேண்டும் 
அதனையும் காண்பாய் எழுவாய் 
பணிந்திட வாழின்  பலமது போகும்
பயமிலை எழுவாய் எழுவாய்

ஒரு துளியேனும் உறக்கமும் இல்லை 
உயரிய நோக்கம் எழுவாய்
தரும் சுகவாழ்வில் தருமங்கள் பொலியத்
தாழ்வது விட்டே எழுவாய்
சிரமது தாழும் நிலையை விடுத்து 
சீறியே புயலாய் எழுவாய்
இரங்குதல் கொண்டே இருந்தது போதும் 
எடுகை உயர்ந்திட முயல்வாய்  

குனிந்திடக் குட்டும் குவலயமீதே
கூடிய மொழிகள் யாவும்
தனிநிலம் கொண்டே திமிருடன் வாழும்
தகமையைக் காண்பாய் எழுவாய்
நுனியினில் தன்மை உயர்திணை கொண்டே
நான் எனதென்றிடும் மொழிகள்
இனி மறந்தேனும் எழில் தமிழ் குறைவென் 
றெண்ணுதல் விட்டே எழுவாய்

எடு நடைபோடு ஏறென ஓடு
எதிரியை நட்பென் றேற்காத்
தொடு கணை போலும் தோல்வியைப் பகையின் 
துணைநலம் ஆக்கித், துயரம்
விடு எமதல்ல வீரத்தின் மைந்தர் 
வீறுகொண்டே வாழ்ந்திட்டோம்
தடு எவர்தானும் தமிழ்குறை வென்றால் 
தவறென உணரச் செய்வாய்

*******************

No comments:

Post a Comment