Saturday, 5 July 2014

சோர்ந்து போகிறேன்

சின்னச் சின்ன வாசப்பூக்கள் தொட்டுப் பார்க்கிறேன் - அதில்
சேர்ந்தமென் னிதழ்கள் கண்டும் சோர்ந்து போகிறேன்  
என்ன வாழ்வில் இன்பமென்றே ஏங்கி நிற்கிறேன் - பூவில்
ஏது மிச்ச முண்டு நாளை எண்ணிப் பார்க்கிறேன்
தின்னவென்று தேகம்கொண்டு என்ன செய்கிறேன் - நாளும் 
தீமைநாடித் துய்த்து மேனி தீய்ந்துபோகிறேன்
நன்மையேது வாழ்வில் என்றும் துன்பமே வதம் - இங்கு
நானும்வாழ வந்ததென்ன சோர்ந்துபோகிறேன்

வட்டமான பொட்டுப் போலும் வான வெண்ணிலா - அது
வந்துபோகும் என்ன உண்டு வாடிப் போகிறேன்
சுட்டகாலை தோன்றும் அண்ட சூரியன்களும் - ஒன்றைச்
சுற்றும் பூமி கொண்டதிங்கு ஏனென் றெண்ணினேன்
வெட்டி வேலையற்றுத் தெய்வம் வீம்பில் செய்ததோ -இல்லை
விற்பனைக்கும் உட்படாத வீசும் குப்பையோ
கட்டிக் காக்க  யாருமற்ற கேடுபெற்றதோ - இங்கு
காணும் மாந்தர் கட்டவிழ்த்த காட்டு மாக்களோ

மெட்டிகாலில் கொண்டமாதர் மின்னும் நேர்விழி - கொண்ட 
மேனி என்ன நாய்களுண்ண போட்ட மச்சமோ
அட்டகாசமிட்டுக் கொல்ல ஆன வர்க்கமோ - தேசம்
யானை சென்ற பூவின் தோட்டம் ஆனதென்னவோ
விட்டதென்ன பூமியென்ப வேதனைகளின் - வான
வீதியோடும சூனியத்தின் விம்பமானதோ
சொட்டி வீழ்வதென்ன நீதிக் கண்ணில் இரத்தமோ - இதை
சற்றும் கண்கள் காணவில்லை தெய்வ சக்தியோ

மொட்டலர்ந்த பூக்கள் தன்னை வெட்டிவீசிடும் - இந்த
மாயன் காலன் செய்வழக்கை உள்ளம்ன் காண்பதோ
தொட்டிலிட்டுக் காத்தபிள்ளை தோள் வளர்ந்ததும் - இந்தத்
தூயமண்ணில் வேரறுத்து வீழச்செய்யவோ
மட்டி மா பெருத்தமூடன் மற்றவர்களும் - இந்த 
மேதினிக்கு காவலிட்டு மேன்மை கொண்டிட
அட்டமாதிக் கெங்குமேகி ஆதியாம் தமிழ் என்றும்
அல்லலுற்றும் இன்னற்பட்டும் ஏழையாவதோ

சுட்டபொன்னும் சட்டியும் துலங்கும் தோற்றத்தில் - இங்கு
சுட்டதும் கலங்கி வீழும் தேகம் அல்லவோ
தட்டியும் அடித்தகத்தி கூர்மையாகிடும் - எம்மைத்
திட்டியு மழிக்கும் கூட்டம் தெய்வ சித்தமோ
முட்டியும் விழுத்தும் மாட்டில் அன்புகொள்ளவோ - கெட்ட
மூர்க்கரும் தமிழ்குலத்தை இல்லென்றாக்கவோ
கட்டியும் வதைக்கக் கைகள் கட்டிநிற்பதோ - இந்த
காதகர் தமிழ் இனத்தைக் கட்டியாள்வாரோ

குட்டியும் குழந்தைமேனி கொல்ல யாரிவர் - இந்தக்
கோலமும் எடுத்த வாழ்வில் குற்றம்யாரதோ
எட்டியும் இனம் அழிக்க ஏது மௌனமோ - இந்த
இன்னலை இங்கீந்தவர்க்கு இன்ப வாழ்வதோ
ஒட்டியும் ஒன்றாகி நட்பு கொண்ட பாவிகள் - இங்கு
ஏகமும் இடர்விதைக்க தெய்வம் காத்திடா
விட்டதேன்  வியந்தும் பின்னர் சோர்ந்து போகிறேன் - மீண்டும்
வீரமும் விளைந்த வாழ்வை என்றுகாணுவேன்.


****************

No comments:

Post a Comment