Saturday, 5 July 2014

சக்தி யீந்தனள்

ஒளியென வெளிதொலை யுயர்விடை எழிலுற
உறைந்திருப் பவளுனையே
அளிபெரு வரமென அனுதினம் உருகினன்
அறமொடு வழி யமைத்தே
தெளிவெடு மனதுடன் திடமெடு நடைகொளத்
தருவதுன் வலிமையதே
களிகொள எழுவது கருமையில் ஒளியெனும்
கருணையுன் திருவருளே

செழிமலர் இதழ்கொளும் சிறுமையில் மெருகினைச்
செறிவெழ எமக்களிப்பாய்
பொழிமழை குளிர்சுகம் புது நதியெனும்விதம்
பொலிந்திடும் உணர்வளிப்பாய்
எழில்மலர் சிரித்திடும் இளமையின் சுவடுகள்
இனும்பெரி தென அமைப்பாய்
தொழிலுனைத் தொழுவதும் தமிழினி கவிதைகள்
தினமெனப் பெருக வைப்பாய்

குலமிவன் தமிழ்தனும் குறைவின்றிப் பெருகிடக்
குவலயமதில் சிறப்பாய்
நிலமதில்  பெருந்துயர் நிகழ்வினை நிறுத்தியெம்
நினைவினில் சுகம் கொடுப்பாய்
கலகமும் பிணிகளும் கடும் வினைப் பயன்களும்
கருகிட இனிமை ஒன்றாய்
உலகமும் எமை ஒரு உயிரென மதித்திட
உணர்வுகள் பெறவும் வைப்பாய்

இலையொரு உயர்வினில் இதைவிட ஒருஇடம்
எனுமொரு தகையளிப்பாய்
கலையுடன் பெருந்தமிழ் களைபெற அறிவினைக்
கணமிதில் எமக்களிப்பாய்
அலைகடல் பெரிதெனும் அதைவிடப் பெருந்தொகை
அமைதியில் எமை இருத்தாய்
தலைதனில் முடிகொளும் தகுதிகொண்டிவர் நிலை
தருமத்தின் வழிநடத்தாய்

************

No comments:

Post a Comment