Saturday, 5 July 2014

குறுக்கலின்றி நீட்டாய்

   நீரலைக் குள்மாறி மாறி  நீச்சலென் றசைத்த தாயே
நிர்மலத் தில்நெஞ்சை விட்டதேனோ
தீரலைக் கவிக்குள் காணும் தித்திக்கும் இனித்தமாயம் 
தென்றலை நிகர் அசைத்தல் ஈந்தே
சாரலைப் பொழிந்த மேகம் சட்டெனும் இடிக்குமோசை
சத்தமும் இழந்த்திருப்பதுண்டோ
சேரலைக் கொடுத்த தாயே செந்தமிழ் பிணைத்த வாழ்வில் 
சொற்கவித் திறன் அளித்து மேவாய்

ஆடலை மறந்த தோகை ஆற்றலை இழந்த போலும்
ஆக்கலைத் துறந்த எண்ணம் வேண்டா
கூடலைச் செந்தீயின் வெம்மை கொண்டனன் இத்தேக வன்மை
கொஞ்சமில் குவிந்ததாக ஈந்தே
வேடிக்கை பாரென்று யாக்கை வீதியில் கிடந்த குப்பை
வீசிடக் குறிக்கும் எண்ணம் வேண்டா
பாடலை இசைக்கும் நெஞ்சம் பைந்தமிழ் குடித்த உள்ளம்
பக்குவம் இழத்தலற்ற சீர்செய்

சோடியைப் பிரிந்த அன்னம் சுற்றமும் விட்டோர் ஏகாந்தம்
சுற்றிலும் தனிதத வாழ்வு வேண்டாம்
சாடியை விடுத்து மூடி சட்டெனப் பிரித்து ஊற்றி
சஞ்சலப்படுத்தும் தன்மை விட்டே
கோடியைப் பெருத்த பொன்னைக் கொட்டியும் கிடக்கும் வைரம்
கூட்டியும் அள்ளென்று வீசலின்றி
ஆடியும் கொள்ளென்று  தொட்டில் ஆட்டியும் அணைத்துக் கிள்ளி 
ஆவெனக் கத்தென்றும் ஆக்கலின்றி 

தேடியும் நான் கண்டதில்லை தீயிலும் பெருத்த  சோதி
தீண்டியும் கொள்ளிச்சை நெஞ்சில் இல்லை
பாடியும் நான் கண்டஇன்பம் பஞ்சமும் இருந்ததில்லை
பட்டினை யொத்தோர் பளிங்கென் றாக்கி
ஆடிடும் பேராழி போலும் ஆக்கினும் அசைத்து என்னை
அண்டமும் கண்டாடும் மின்னல் வெள்ளம்
நீடிடுமென் றன்பு வாழ்வில்  நித்தியம், பொறித்து மின்னும் 
நேரலைக் குறைத்தலின்றி நீட்டாய்

**************** 

No comments:

Post a Comment