Sunday, 30 November 2014

அழகும் இன்பமும்

பெருக்கலும் கூட்டலும் பெண்மைக் கழகு
பேரின ஒற்றுமை  சமூகத்தின் கழகு
வகுத்தலும் கழித்தலும் ஆடவர்க் கழகு
வருந்துயர்  நீக்குதல் வீரத்தி னழகு
உருக்கலும் மெருகிடல் பொன்னதற் கழகு
உடுத்தலும் சிறுத்தலும் உடல் தனுக் கழகு
வருந்துதல் நிறுத்திடின் வலியோர்க் கழகு
வாய்மையைப் போற்றுதல் ஆளுமைக் கழகு

கருத்தினைப் பகிர்வது சான்றோர்க் கழகு
கணித்திடல் ஆய்வுகள் கொள்மதிக் கழகு
பெருத்த நற் சோலையில் பூக்கள் அழகாம்
பெய்மழை யும்பாறை கொட்டும் அருவி
கருந்திரள் பற்றிடக் காணடி வானும்
கன்னியின் நாணத்தின் செம்மை யழகே
சரிந்துயர் வானத்து நீடுபறக்கும்
சின்ன எழிற்கோலப் புள்ளினம் யாவும்

நீடுறை வான்தொடு  கோபுர உச்சி
நேர்செல்லும் வெண்முகில் நீந்த லழகே
காடுகள் மாவனக் காட்சிகள் தோன்றும்
கற்பாறை அற்புதம் கண்ணுக்கழகே
போடும் தூறல் வானவில்லும் அழகு
போகும் வாழ்வும் வானவில்லென் றுணர்ந்து
தேடும் தெய்வம் காணத் திக்கெங்கும் ஓடி
தெய்வம் உள்ளதுளெனத் தேர்தலழகு                                                                     
                                                                                               
நாடும் நல்வாழ்வினில் நல்லரசாள
நாமும் சுதந்திர தேசமென்றாக
கூடும் உறவுகள் கொள்வதும் இன்பம்
கொள்கை சிறப்பதும் நேர்மையு மின்பம்
பாடுமிசை மகிழ்வாக்கிடும் இன்பம்
பள்ளிச் சிறுவரின் துள்ளொலி இன்பம்
வாடும் மலர்கலின் வாழ்வினைக்காண
வந்துயிர் கொளும்நாள் ஆண்டுகள் இன்பம்!

சக்தியே நிரந்தரம்

சக்தி சக்தி சக்தி யொன்றே நிச்சயம்
சத்தியத்தின் மொத்தரூப சித்திரம்
சகதி சக்தி சக்தி யொன்றே அற்புதம்
சக்தியெண்ணு காணு இன்பம் முற்றிலும்
சக்தி சக்தி சக்தி என்றும் கற்பகம்
சக்தி சாருவோர்க்கு நன்மை யைத்தரும்
சக்தி சக்தி சக்தி யுந்தன் அஸ்திரம்
சாப நீச பாவம் வெல்ல கைப்படும்

சக்தி சக்தி சக்தியே நிரந்தரம்
சக்தி யென்றும் உந்தன் தாரக மந்திரம்
சக்தி சக்தி சக்தி கால இயந்திரம்
சக்திவேண்டின் என்றும்நல் வரம்தரும்
சக்தி சக்தி சக்தி யே மகத்துவம்
சக்தி கேட்பின் மேன்மைநெஞ் சுரந்தரும்
சக்தி சக்தி எண்ணிக் கொள் பெருந்தவம்
சக்தியோடு காணுவாய் சு தந்திரம்

சக்தி சக்தி சக்தி தன்னை நெஞ்சில்வை
சற்குணத்தினோடு காணும் உள்ளமும்
சக்தி சக்தி சக்தி யொன்றே நித்தியம்
சக்தியோடு வாழ்வில் வெல்லு இலட்சியம்
சக்தி சக்தி சக்தி கூறு அப்பதம்
சாந்தியோடு தாரும் வீரம் வெற்றியும்
சக்தி சக்தி சக்தி யோடு சங்கமம்
சித்தியாகும் உந்தன்வாழ்வின் அந்தமும்!

சக்தி எனும் சக்தி!

அஞ்சி அழுதலும் ஆடிஅடங்குதல் 
 யாருக்குத் தேவை சொல்லாய் கிளியே.
நெஞ்சிலுரங்கொண்டு நீநிமிர்ந் தேநட
 நேர்மை வழியெடுப்பாய் கிளியே
துஞ்சி அழுதலும் தூறும் விழிகளும் 
 தேவை யுண்டோ நினை வீறுடனே
தஞ்சமெனக் கொள்ளும் தாழ்மை களைந்திடு  
  தன்மை யுயரொளி தான்நினைந்தே

பஞ்சு மனம்கொள்ளு பண்பை அணைத்திடு
 பட்டதுயர் வெயில்கீழ்ப் பனியே 
எஞ்சும் மகிழ்வெனில் இன்னிசை யோடின்பம் 
 எய்குவை நிச்சயம் காண்கிளியே 
வஞ்சம் கொள்ளின்மனம் வாளைஎடுப்பது
 வில்லைவளைப்பது போல்கிளியே
நஞ்சை மனம்கொள்ள நாடவைத்தெம்மையே
  நாளில் விழுத்தி விடும் தனியே

கொஞ்சுந் தமிழ்கொண்டு கூடிக் கலந்திடு 
  கொள்கை நலமுடையோ ரிடையே
மிஞ்சும் அழகொடு மேன்மைத் தமிழின்பம்
  மொட்டு மலர்நிறை பூவனமே
வெஞ்சினம் என்பது வேண்டுவதில்லடி
  வெள்ளை யுள்ளம் கொள்ளுவோ ரிடையே
வஞ்சியுனை கண்டு வாழ்வில் நகைப்போரை
  வந்து தெய்வம் கேட்கும் வேண்டினையேல்

அஞ்சிலிரண் டுண்டு ஆறில் மூன்று மூன்று ;
 அஞ்சி மிரண்டு கொள்ளாதினியே
மிஞ்சும் சினம் ஆறில் மேதினியில் மூன்று
 மின்னும் எழுத்தைக் கொள்வாய் சக்தியே
வஞ்சமின்றி எண்ணும் உந்தன் நினைவுகள்
 பஞ்சினில் தீபற்றலாய் அவளே
மிஞ்சி வலிமையும் வேண்டுமன்பைக் கொண்டு
 மேகத்தொலைவில் நின்றாள் தனியே

உலகம் பலவண்ணம்

மனமதில் தெளிவுறு மகிழ்வுடன் பழகுவர் 
 முகம் மனம் எதிரிருக்கும்
கனமென நினைந்தொரு பொதியினைப் பொன்னெனப்
பிரித்திடக் கல்லிருக்கும்
வனமதின் தேவதை வருமெனும் நினைவுகள் 
  வலிஎழத் தீதும்வரும் 
தினமது தொடுமுனைத் தென்றலும் மறுகணம் 
  திரிந்திடும் புயலடிக்கும்

கனவுகள் எனநினந் தழுந்திடும் செயல் சில 
  கண்முன்னே நடந்து கொளும்
தனமென நிலமிடை புதையலும் வருமென 
  தலைவிதி வேறிருக்கும்
சினமெனக் கொள்வது சிலருக்கு உள்ளத்தில் 
  சிறுமையில் பெருமைதரும்
புனலிடை வலையெனப் போடுவர் பிடிபடப் 
  போவது உயிர் கணக்கும்

அனலிடை பொன்நிகர் அனுதின முதவிடும் 
  அறிஞரும் இடையிருப்பர்
தனதென நலமதை தாங்கிய மனமின்றித் 
  தருதலில் நிறைவுகொள்வர்
சனமென நடந்துடை சம நிலைஉருத்தென  
  சகலதும் பகிர்ந்தளிக்கும் 
உனதயல் பலசில உலகத்தில் சிறப்பெனும்
   உத்தமர்களு மிருப்பர்

நினதிரு விழிசொலும் வழிதனில் செலமுதல் 
  நிலைதனை மதியறிவாய்
என பெருங் குணமெடு எழுந்திடு பகுத்தறி 
 வெனும் வழிநடந்துவிடு
பனைமர அடியொடு பாலுண்ணப் பழகுதல்
  பலசிர மங்களையுந் தரும் 
நனவுகள் அதில்சில கனவுகள் எனின்உளம்
  நகைத்திடு நலனையெடு!

இதயங்கள்

   அழகான இதயங்கள் அணீசேரலாம்  
அதன்மீது சினம்வந்து அரசாளவோ
பழகாத இதயங்கள் பலம் காணலாம் 
பரிவென்ற உயிர்கொண்டும் பகைகாணவோ
இழகாத மனமென்று இருந்தாலும் சொல்
இசையாத மனந்தானே எதிராகிடும்
வளர்கின்ற தீயென்று வருமாயிடின்
வருங்காலம் சிதைவுற்றுப் போகாதோசொல்

புதுவெள்ளம் மனம்மீது பாய்ந்தோடலாம்
பிரவாகப் புனல் நெஞ்சைக் அழித்தோடவோ 
செதுக்காத சிலையென்று திரைமூடலாம் 
திரும்பாத வழிகண்டும் தொடர்ந்தோடவா
எதுகாண நினைத்தாலும் எழில்சோலைப் பூ 
இதழுக்கு ஓர் வண்ணம் வேறாகுமா
இதுகாக்க உன் எண்ணம் முடிவென்பதோ
இருக்கின்ற வரையின்பம் பெரிதல்லவோ

மதுகொண்ட மலர் தன்னும்தீ ஊற்றுமோ  
மதிஎன்னும் நிலவென்றும் இருள் போர்க்குமோ
இதுவென்ன அழகென்று மனம் கேட்கலாம்
இதயத்தின் நலிவெண்ணி நான்வேர்க்கிறேன்\
பொதுவாக உடல் நொந்து பகை காணலாம்
பிறிதாக இதயத்தின் குரல்கேட்குதே
அது வாழவேண்டுமெனில் அயலோடு நான்
அகம்கொள்ளும் உணர்வுக்கு அளவொன்|று வை

தவறுகள் மலியும் தருணம்

அலைந்திடும் மனமதில் அலைகடலெனு மொரு
அவதியும்  உருவாகும்
கலைந்திடும் கனவுகள் கடுதியில் மறைவது
கவலையை உருவாக்கும்
குலைந்திடும் உறவுகள் கொடுமையென் பிரிவது
குமுறலை தரும் நாளும்
சிலையெனும் மனமதில் சிறுமையின் இழிவெழச்
சீற்றமும் எழுந்தாடும்

வலைதனில் புகுங்கயல் வாழ்விழந்திடத் தாய்
வீரிட்டு அழமோசை
விலைதனைக் பழியென வெறிகொண்டு எழுவது
விடைசொலும் செயலாகும்
கொலைசெயத் தினதினம் கூடியும் மனிதர்கள்
கொஞ்சிடும் ஆழிமகள்
நிலை கொண்ட குழந்தைகள் நெஞ்சழ பிரிப்பது
நினைவதில் துயர்விளைக்கும்

தினம்தினம்பொங்கியே துடிக்கின்ற கடல், மதி 
தேய்வதை சகிக்காதும்
மனமதில்.மகிழ்ச்சில் பொங்கிட எழுச்சியை  
முழுமதி வரப்; பெறலும்
வனமதில் கொடிமலர் வருமணம் எழும்வகை
வருடிய தென்றலொடு,,
இனமதில் ஒருத்தியின் இயற்கையின் குழந்தைகள்
என விதி இருந்திடவே

மனிதரின் செயலினில் மலிந்திடத் தவறுகள்
மலையெனப் பெரிதாயின்
புனிதமும் கெடப்  பெரும் புய லெனத் திரிவது
படைத்தவள் செயலாகும்
தனில் கொண்ட மனதினிற் தகிப்பில்லை தமிழ்சொலத்
தவறுகள் எனக்கூறின்
பனிப்புயல் கொடுமனல் குமுறிய விண்ணுறை
பெருமன்னை செயலாகும்

புதுமைத்தாய்

 நீரும் நீயே நெருப்பும் நீயே நிகழ் வானத்தின் தீ
தாரும் வெம்மைத் தகிப்பும் நீயே தமிழும் பொறிகொள்ளச்
சேரும் வார்த்தை சிதறுமெண்ணம் திருவாய்மொழியாகி
ஊரும் கொள்ளும் உறவில் நட்பின் உவப்பும் தந்தாயே

தேரும் மனமும் தெரிவான் நிலவும் தேசம் உயர்வானம்
கூரும் கொள்ளும் அம்பும் ஏவும் வில்லும் விளைவாயும்
தீரும் உறவின் திரும்பல் வீணே திசைகள் வழிமாற்றம்
வாரும் முடிவும் வழியும் உந்தன் வண்ணத் திகழ்வாமே

பாரும் காலைப் பனியும் பகலும் பாறை மலைதந்தாய்
யாரும்கொள்ளா அறிவுதிறனுக் கப்பாற் தொலை நின்றாய்
ஏரும் உழவும் இதனால் விளையும் இனிமை அமுதுண்டு
காரும் முகிலும் கடைவான் மறையும் கதிரும் கனஇருளும்

நேரும் இரவின் நிசப்தம் நெஞ்சின் நெறிகொள் உணர்வோடு
நாரும் கோர்க்கும் நறுவாசப்பூ  நவிலும் தமிழ்த்தேனும்
தாரும் உந்தன் தகைதான் தந்தும் தனியே விட்டாலும்
சாரும் பிளவும் சலிப்பும் உள்ளம் தவறும் நிலையீந்தாய்

வாரும் மழையும் விரிவான் இடியும் வேகக்காற்றோடு 
தீரும் மின்னல் போலும் கணங்கள் திகழும் வாழ்வோடு
சீரும் செல்வச் சிறப்பும் என்றே திரிந்தே பெயர்சூட்டி
பேரும் கூடப் பிறழ்வும் தந்தாய் புதுமைத் தாய்நீயே

நடந்திடு நேரே !

நடக்கின்ற பாதைமீது 
.. இடர்க்கென்று முள்ளிருக்கும்
  அட’க்கண்டும் அல்லல் கொள்வதோ
தடக்கென்று கல்லை வைப்பார் 
.  நடக்கின்ற வேளைதன்னில்
.  கடக்காமல் தடுக்கி வீழவோ
அடக்காமல் சினமெடுக்க 
.  முடக்காமல் எதையும் செய்து
.  விடக்காலமென்னசொலுமோ
இடக்காலும் வலக்காலும் 
.  உள்ளம் சொல்ல போகுமங்கு
.  தடுக்காமல் கண்கள் கூறுமோ

குடத்தினுள் வைக்கும்தீபம் 
.  இடத்துக்கு ஒளிர்வதில்லை  
.  கிடக்கட்டும் என்று விடுவதோ
கடக்கின்ற முள்ளும் கல்லும் 
.  படத்தன்னும் உள்ளம்நோகும்
.  தடங்கற்கு ஏதுசெய்யவோ
விடங்கக்கும் அரவம் உண்டு 
.  விதியுமுண்டு தீண்டவந்தால்
.  சடமென்று ஆக்கவிடுவதோ
அடங்கென்று அவதியுற்று 
.   நிறங்கெட்டு உருவம்கெட்டு
.   தடமின்றி முற்றும்போவதோ

சுடர்கண்டு கடகடென்று 
. மடல்தன்னை மலர்விரிக்கும்
. உடம்புள்ளும் இதயமுண்டன்றோ
திடங்கொண்டு தெய்வம் வேண்டு 
.  நடந்திடும் மலர்வு நெஞ்சில் .  
.  புடம் செய்து பொன்னொளிர் வதாய்
முடமென்ற எண்ணமின்றி 
.  முடியுமென்று கொள்ளூ யாவும் 
.  படக் காணுமுந்தன்.கையிலே
கடமைகள் தன்னியெண்ணிக் 
.  கடும்வேகம் கொண்டு மேகு
.  கெடும் தீது நன்மை பொங்கவே

எங்கு சென்றாய் மகளே

மழைகொண்ட உறவுக்கு மரமென்றும் நினைவாக
மண்ணிலே நீரைத் தேடும்
களை கொண்ட பயிரன்பு கயமைக்கு பொருளாகும் 
கரங்களால் அழிந்துபோகும்
முளை கொண்டு வளர்கின்ற சமுதாயத் தோட்டத்தில் 
மகளே வா நீயும் நானும்
பிழை என்றுஎது கொண்டு பிரிவென்று வந்ததோ 
பதில் கண்டதில்லை இன்றும்

பிரிவென்ப மாறாத நியதிதான் இருந்தாலும் 
பேசற்ற நிலைமை போதும் 
பரிவென்ப மனம் கொள்ளும் பரிசென்றபோது மேன்
படையற்ற போரும்காணும்
வரியன்பில் கலந்திங்கு வரும்பாடல் நின்செவியுள் 
வண்டுண்ணும் தேனையூற்றும்
சிரியெந்தன் மகளே நின்திருவிழிகள் எனைக்காணச் 
சிலிர்க்கின்ற உணர்வு போதும்

பறியென்றே காலமெனும் தேவனுனைப் பாதியிலே 
பக்கத்தி லிருந் தகற்றி
முறியென்று நின்னழகுப் பேச்சிலுளம் நான் மயங்க 
முன்நின்று பிரித்து வைத்தான்
தெறிஎன்று தந்தைகொளப் பாசமுயர் தேர்ச்சில்லை 
திருகியுடைத் தரை வீழ்த்துவான்
குறிஎன்றும் வாழ்வரையைக் கொள்பவன் தனையிங்கு 
கூப்பிட்டு விடவும்செய்வான் 

எரிகின்ற நின்மனதின் இடர்தாரும் சினந் தணியின் 
இதில் மிச்சம் இன்பமாகும்
புரிகின்ற வரைதானும் புகைகொண்டு காணும்மனம்
பொய்யுள் வாய் மைமறைக்கும்
விரியுந்தன் சிறகுகளை விண்ணேறிப் பறக்கின்ற 
விதமாக நீயும்காணும்
சரியென்னும் நம்பிக்கை தவறாதென் மீதெழுமின்
சற்றும் துயரற்றுப்போகும்

வளைகொண்ட நண்டுதனும் வழிமீது நடக்கையில் 
வழமைக்கு மாறிஓடும்
சுளைகொண்ட பழமான தேன்சுவைப் பலாக்கனி 
சுற்றிக்கை தொட முள்ளாகும்
விளைகின்ற பசி நீக்க வெளித்தோற்றம் மறுத்தாலும்
விரித்துபார் பொய்யுள் மெய்யாம்
மழை தூற வெயில்காண வரும்வான வில் அல்ல
மகளே நாம்வாழவேண்டும் 

உறவுமோடி உணர்வுமோடி

கண்மூடிக் கண்ணெதிரே 
  காணுகின்ற காட்சிதனில் களங்கமோடி
பண்ணும் செயல்பொறுத்துப் 
  பாவியெனச் சாவதுவோ பகலுமோடி
விண்காணும் இருள் வந்து 
  விளைகின்ற வாழ்வதிலே இரவுமோடி
மண்மீது செய்பாவம் 
  மறைப்பதென மறைத்ததெனப் பரந்துமோடிக்

கூடியுங்கு லாவவொரு 
  குற்றமற்ற கோஅருகிற் குறைவாமோடி
ஆடிநடங் கொள்ளவென 
  ஆளறுத்துக் கூச்சலிடும் அரக்கன் நாடித்
தேடியுங் கைகூட்டியொரு 
  தேவமகன் வாவுந்தன் திருப்பாதங்கள்
கூடியுமென் தேசமதில் 
 குறுநடையில் சத்தமிடக் கொள்ளல் நன்றே

தேசநிலை தூய்மையுறும் 
  தேடிவரும் பேரின்பம் திகழுமோடி
நீசமனக் கொலைபுரிவாய் 
  நின்செயலில் நிறைவழியுங் குருதியோடிப்
பாசமணிக்  கரங் கொண்டாய்
   பற்றியிவன் பதவிகொள்ளச் சிறப்புமோடி
வாசங்கொள் தீமைகளும் 
 வாசல்வழி ஓடுமென நினைந்துமோடி

செங்டலென் றாக்கியவன் 
  சிரசறுக்க உயிர்வாங்க தொகையுமோடி
எங்கிவனோ எமனெனையும்  
  இருத்தியொரு புகழோங்கி பெரிதுமாகி
பங்காளி யென்றாகிப் 
  பகையாகி எனைவென்று பதவிபெற்றே
வங்கக் கடலிடையே 
  வைத்தபுகழ் விண்பரவு வகையென்றஞ்சும்

மின்னலெழ இடியிடிக்க 
  மேகங்கள் கறுத்தூற்ற வெள்ளமுமோடி
பின்னியெழும் நீரலைகள் 
  பேசாமற் புறமோடிப் பேராறாகி
தன்னிலையில் கூடவெனச் 
  சாகரத்தை நினந்தோடும்  அயலர் நாமும்
நின்னருளில் கூடவரும் 
  நிலைதானும் வளமோடு சிறக்குமென்றே

பஞ்சாகும் மென்மேனிப் 
 பச்சைக்கு ழந்தைகளும் படுகோரத்தில் 
அஞ்சாது துண்டாக்கி 
  அவலமெழக் கதறியவர் அறுத்துமூடி 
நஞ்சான கையுடைமை 
  நாட்டினொரு வேந்தனையே நலமும்கூடி
வஞ்சகனாம் கொலைபுரிவோன் 
   வாழ்த்தியெனைக் கொள்ளென்ற விருப்பமோடி

பற்றியிழுத் தன்கரத்தில் 
  பச்சைக் குருதிகரம் பற்றுவதோடி
வெற்றியென ஈர்மனமும் 
    வேளைதனில் கூடுவதென்  வெறுப்புமோடி
சற்றேனு மீவிரக்கஞ் 
  சாராக் கொடும்மகனை விருந்துமூட்டி
உற்றதொரு பாசமென 
  உரைப்பதென்  உறவற்றால் உரமும்போமோ?

குற்றமதைப் புரிந்தவனாய்க் 
  கூண்டிலிட்டு வழக்கென்று குறித்து நோக்கி 
மற்றும் பல்தேசங்கள் 
  மருந்தைநோய் கொள்வோனும் மாந்தவைத்தே
சுற்றிலும் நெருங்கியிவன்
  சொல்லுவழி யென்றொருகால் செய்யும்வேளை
அற்றவனாம் பாவமிவன் 
  அறியான் மடியிருத்தி அணைத்து நீவி

விட்டதுமென் வேந்தேகால்  
   விற்றதென்ன விலைபேசி மனுவின் நீதி
சுட்டெரித்த ஈழத்தில் 
  தூதுவனைக் கொண்டவரின் செயலைப் போற்றி
விட்டெறிந்த சிலம்போடி 
  வெடிக்கக் குடைசாய்ந்த வீரத் தேசம்
துட்டரையும் பக்கமிட்டு 
  துணைசேர்த்தே அழுக்கடையத் தேவையென்ன ?

காதலும் வீரமும்

மாலையும் இரவும் அதிகாலைப் போதும் 
.      --மதி மயங்கினாள்

மாலையி ருண்டென்ன மல்லிகை பூத்தென்ன
மங்கைமன மிசைபாடி யென்ன 
சோலை மலர்மணம் சேருந் தென்றல் வந்து
செல்லும்வழி உடல்நீவி யென்ன
மேலை வானச் செம்மை போயிருள மணி
மாடத்தகல் விளக்கேற்றி யென்ன
நாலைக் குணம்கொண்ட நங்கை விட்டுப் போரை
நாடிச்சென்ற மன்னன் காணவில்லை

மாலையிட்டே மணங் கொண்டவனோ தனின்
மார்பில் இடம் தந்தே கையினில்செங்
கோலைப் பிடித்தர சோச்சுபவ னெதிர்
கொண்ட பகைமுடித்துன் னிடத்தில்
நூலை இடைகொண்ட நேரிழையே இருள்
நீங்குமுன் கூடுவன் நேரிலென 
வேலைக் கை கொண்டுமே வீறெழச் சென்றுமேன்
வெற்றி முரசொலி கேட்கவில்லை

ஊரைப் பகைத்தென்ன உண்ண மறுத்தென்ன
ஓசையின்றி உள்ளம் கேவியென்ன
கூரைக்கொள் வாள்நிகர் கொண்ட விழிகளில்
கூடும் நீர் கன்னத்தில் சுட்டுமென்ன
போரை நிறுத்தடி போதுமென மங்கை 
பூவடி மீது கை பற்றியவன்
தேரை அடுத்தொரு தீரர் படையுடன்
தேடிச்சென்றவழி தேறவில்லை

வானம் சிவந்தென்ன வண்ணப்பூப் பூத்தென்ன
வட்டக்கோலம் வாசலிட்டுமென்ன
தேனம் மலர்கொண்டு  தென்றலில் ஆடியும்
தேவை கடந்தெழில் கொண்டுமென்ன
மோன நிலைதன்னில் மூடும் விழியின்றி 
முற்றும் துயில்விட்டு காத்துமென்ன
போன வழியின்னும் போரைமுடித்தபின் 
பூவை அணிந்தில்லம் சேரவில்லை

காலை விடிந்தென்ன காகம் கரைந்தென்ன
கங்கை போலும்விழி பொங்கியென்ன 
சேலை யணிமாது செவ்விதழ்கோணியே 
திஙகள் முகத்தொளி சோர்ந்துமென்ன
பாலை அருந்தவும் பக்கமாகக் கனி 
பார்த்திரவு வைத்துக் காத்துமென்ன
பாலைவனமெனும் பாஙகில் வெறிச்சோடிப்
பார்க்கும் வழி காய்ந்து காணுவதேன்

வீணை இருந்தென்ன  வித்தைகள் கற்றென்ன
வெள்ளிச் சலங்கைகள் பூட்டியென்ன
நாணமுடன் உடை பூண்டுமென்ன  அதில்
நர்த்தன மாடும் மெய் காத்துமென்ன
பாணம்,தொடுத்திடும் பைங்கிளி தூயநல் 
பாசமெழ மனம் காத்திருந்தும்
ஆணை யிடும் மன்னன் அந்தபுரத்திடை
ஆவலெழச் சேரக் காணவில்லை

ஓலை படித்திட உன்னத மாம்மொழி
யோங்கித் தமிழ் சொலும் காதலுடன்
சோலைக் கரும்பதன் சாறு பிழிந்ததில் 
சொட்டும் தேனை இட்டதாய் உவந்து
காலைக் கருக்கலில் சொந்தமென எழில்
காணும் மலர்கொண்டை சூடிநின்றும்
வாலைக் குமரியின் வாசமெழும் கூந்தல்
வந்து கலைத்திடக் காணவில்லை