Sunday, 30 November 2014

சக்தி எனும் சக்தி!

அஞ்சி அழுதலும் ஆடிஅடங்குதல் 
 யாருக்குத் தேவை சொல்லாய் கிளியே.
நெஞ்சிலுரங்கொண்டு நீநிமிர்ந் தேநட
 நேர்மை வழியெடுப்பாய் கிளியே
துஞ்சி அழுதலும் தூறும் விழிகளும் 
 தேவை யுண்டோ நினை வீறுடனே
தஞ்சமெனக் கொள்ளும் தாழ்மை களைந்திடு  
  தன்மை யுயரொளி தான்நினைந்தே

பஞ்சு மனம்கொள்ளு பண்பை அணைத்திடு
 பட்டதுயர் வெயில்கீழ்ப் பனியே 
எஞ்சும் மகிழ்வெனில் இன்னிசை யோடின்பம் 
 எய்குவை நிச்சயம் காண்கிளியே 
வஞ்சம் கொள்ளின்மனம் வாளைஎடுப்பது
 வில்லைவளைப்பது போல்கிளியே
நஞ்சை மனம்கொள்ள நாடவைத்தெம்மையே
  நாளில் விழுத்தி விடும் தனியே

கொஞ்சுந் தமிழ்கொண்டு கூடிக் கலந்திடு 
  கொள்கை நலமுடையோ ரிடையே
மிஞ்சும் அழகொடு மேன்மைத் தமிழின்பம்
  மொட்டு மலர்நிறை பூவனமே
வெஞ்சினம் என்பது வேண்டுவதில்லடி
  வெள்ளை யுள்ளம் கொள்ளுவோ ரிடையே
வஞ்சியுனை கண்டு வாழ்வில் நகைப்போரை
  வந்து தெய்வம் கேட்கும் வேண்டினையேல்

அஞ்சிலிரண் டுண்டு ஆறில் மூன்று மூன்று ;
 அஞ்சி மிரண்டு கொள்ளாதினியே
மிஞ்சும் சினம் ஆறில் மேதினியில் மூன்று
 மின்னும் எழுத்தைக் கொள்வாய் சக்தியே
வஞ்சமின்றி எண்ணும் உந்தன் நினைவுகள்
 பஞ்சினில் தீபற்றலாய் அவளே
மிஞ்சி வலிமையும் வேண்டுமன்பைக் கொண்டு
 மேகத்தொலைவில் நின்றாள் தனியே

No comments:

Post a Comment