மனமதில் தெளிவுறு மகிழ்வுடன் பழகுவர்
முகம் மனம் எதிரிருக்கும்
கனமென நினைந்தொரு பொதியினைப் பொன்னெனப்
பிரித்திடக் கல்லிருக்கும்
வனமதின் தேவதை வருமெனும் நினைவுகள்
வலிஎழத் தீதும்வரும்
தினமது தொடுமுனைத் தென்றலும் மறுகணம்
திரிந்திடும் புயலடிக்கும்
கனவுகள் எனநினந் தழுந்திடும் செயல் சில
கண்முன்னே நடந்து கொளும்
தனமென நிலமிடை புதையலும் வருமென
தலைவிதி வேறிருக்கும்
சினமெனக் கொள்வது சிலருக்கு உள்ளத்தில்
சிறுமையில் பெருமைதரும்
புனலிடை வலையெனப் போடுவர் பிடிபடப்
போவது உயிர் கணக்கும்
அனலிடை பொன்நிகர் அனுதின முதவிடும்
அறிஞரும் இடையிருப்பர்
தனதென நலமதை தாங்கிய மனமின்றித்
தருதலில் நிறைவுகொள்வர்
சனமென நடந்துடை சம நிலைஉருத்தென
சகலதும் பகிர்ந்தளிக்கும்
உனதயல் பலசில உலகத்தில் சிறப்பெனும்
உத்தமர்களு மிருப்பர்
நினதிரு விழிசொலும் வழிதனில் செலமுதல்
நிலைதனை மதியறிவாய்
என பெருங் குணமெடு எழுந்திடு பகுத்தறி
வெனும் வழிநடந்துவிடு
பனைமர அடியொடு பாலுண்ணப் பழகுதல்
பலசிர மங்களையுந் தரும்
நனவுகள் அதில்சில கனவுகள் எனின்உளம்
நகைத்திடு நலனையெடு!
No comments:
Post a Comment