Sunday, 30 November 2014

உறவுமோடி உணர்வுமோடி

கண்மூடிக் கண்ணெதிரே 
  காணுகின்ற காட்சிதனில் களங்கமோடி
பண்ணும் செயல்பொறுத்துப் 
  பாவியெனச் சாவதுவோ பகலுமோடி
விண்காணும் இருள் வந்து 
  விளைகின்ற வாழ்வதிலே இரவுமோடி
மண்மீது செய்பாவம் 
  மறைப்பதென மறைத்ததெனப் பரந்துமோடிக்

கூடியுங்கு லாவவொரு 
  குற்றமற்ற கோஅருகிற் குறைவாமோடி
ஆடிநடங் கொள்ளவென 
  ஆளறுத்துக் கூச்சலிடும் அரக்கன் நாடித்
தேடியுங் கைகூட்டியொரு 
  தேவமகன் வாவுந்தன் திருப்பாதங்கள்
கூடியுமென் தேசமதில் 
 குறுநடையில் சத்தமிடக் கொள்ளல் நன்றே

தேசநிலை தூய்மையுறும் 
  தேடிவரும் பேரின்பம் திகழுமோடி
நீசமனக் கொலைபுரிவாய் 
  நின்செயலில் நிறைவழியுங் குருதியோடிப்
பாசமணிக்  கரங் கொண்டாய்
   பற்றியிவன் பதவிகொள்ளச் சிறப்புமோடி
வாசங்கொள் தீமைகளும் 
 வாசல்வழி ஓடுமென நினைந்துமோடி

செங்டலென் றாக்கியவன் 
  சிரசறுக்க உயிர்வாங்க தொகையுமோடி
எங்கிவனோ எமனெனையும்  
  இருத்தியொரு புகழோங்கி பெரிதுமாகி
பங்காளி யென்றாகிப் 
  பகையாகி எனைவென்று பதவிபெற்றே
வங்கக் கடலிடையே 
  வைத்தபுகழ் விண்பரவு வகையென்றஞ்சும்

மின்னலெழ இடியிடிக்க 
  மேகங்கள் கறுத்தூற்ற வெள்ளமுமோடி
பின்னியெழும் நீரலைகள் 
  பேசாமற் புறமோடிப் பேராறாகி
தன்னிலையில் கூடவெனச் 
  சாகரத்தை நினந்தோடும்  அயலர் நாமும்
நின்னருளில் கூடவரும் 
  நிலைதானும் வளமோடு சிறக்குமென்றே

பஞ்சாகும் மென்மேனிப் 
 பச்சைக்கு ழந்தைகளும் படுகோரத்தில் 
அஞ்சாது துண்டாக்கி 
  அவலமெழக் கதறியவர் அறுத்துமூடி 
நஞ்சான கையுடைமை 
  நாட்டினொரு வேந்தனையே நலமும்கூடி
வஞ்சகனாம் கொலைபுரிவோன் 
   வாழ்த்தியெனைக் கொள்ளென்ற விருப்பமோடி

பற்றியிழுத் தன்கரத்தில் 
  பச்சைக் குருதிகரம் பற்றுவதோடி
வெற்றியென ஈர்மனமும் 
    வேளைதனில் கூடுவதென்  வெறுப்புமோடி
சற்றேனு மீவிரக்கஞ் 
  சாராக் கொடும்மகனை விருந்துமூட்டி
உற்றதொரு பாசமென 
  உரைப்பதென்  உறவற்றால் உரமும்போமோ?

குற்றமதைப் புரிந்தவனாய்க் 
  கூண்டிலிட்டு வழக்கென்று குறித்து நோக்கி 
மற்றும் பல்தேசங்கள் 
  மருந்தைநோய் கொள்வோனும் மாந்தவைத்தே
சுற்றிலும் நெருங்கியிவன்
  சொல்லுவழி யென்றொருகால் செய்யும்வேளை
அற்றவனாம் பாவமிவன் 
  அறியான் மடியிருத்தி அணைத்து நீவி

விட்டதுமென் வேந்தேகால்  
   விற்றதென்ன விலைபேசி மனுவின் நீதி
சுட்டெரித்த ஈழத்தில் 
  தூதுவனைக் கொண்டவரின் செயலைப் போற்றி
விட்டெறிந்த சிலம்போடி 
  வெடிக்கக் குடைசாய்ந்த வீரத் தேசம்
துட்டரையும் பக்கமிட்டு 
  துணைசேர்த்தே அழுக்கடையத் தேவையென்ன ?

No comments:

Post a Comment