Thursday, 3 July 2014

ஒளி காண் விழி திறக்க!


தீயாய் ஒளிர்வது தெய்வம் - அது தீதல்ல
திங்கள் மின்னெழில் வடிவம் -  அதன் சுயமல்ல
காயாய் கனிவது காணின்  - கற்பனை யல்ல
காயம் பெறும் சுகம்யாவும் - அது கனிவல்ல
ஓயா மலர்தரும் வாசம்  - நிரந் தரமல்ல
ஓடும் காற்றுடல் நீவும் - அது உறவல்ல
தேயா விண்ணொளிர் சக்தி - அதைத் தினமெண்ண
தேறும் வாழ்வுனதாகும் - திடம் மனங்கொள்ள

ஓடும் அலைகளின் தேடல் - அதை மனங்கொள்ள
ஓங்கும் மனமதில் உண்மை -  சுடர் ஒளியன்ன
நாடும் பெருமதி ஞானம் -  மனமதைக் கொள்ள
மலரும் உன்னெழில் வாழ்வும்-  அவள் மனமெண்ண
ஆடும் மனமதில் ஆசை - உணர்வுனை வெல்ல
அனலோ எரிதழலாகும் - அது இலையென்ன
மேடும் கொள்ளெரி மலையாய் - பொறி வெளிதள்ள
மின்னும் தீக்கடலாகும் - இவ்வுலகென்ன

வானத் தெழும் பெருசக்தி - அதுவடிவல்ல
வந்தே கொள் மனதெங்கும் - அது விளைவெண்ண
தேனென் றாகிடும்வாழ்வு - அது தொலைவல்ல
தினமும் எண்ணிடு நாளும்-  வரும் துயர்வெல்ல
மோனத்திரு வெளிஅண்டம் -  அங்கொலிக் கின்ற
மூச்சின் எழும் ஓங்காரம் - அதை உயிர்கொள்ள
ஞானத்தொளி உடல்பரவும்-  அது புதிதல்ல
நாளில்  நீயதை உண்ர்வாய் - வெறும் பேச்சல்ல

நாளை எனும்தொடர் வாழ்வு - அது நமதல்ல
நாளும் தொடர் துயர்தானும் - நிரந் தரமல்ல
தேளைத் தொடும் வலிபோலும் - தினம் உயிர்கொல்ல
தேடிச் சக்தியைக் தொழுவய் - அது கடிதல்ல
பேழைப் பெட்டகமுள்ளே - ஒளி விளக்கன்ன
பெருதாய் தெரிவது இல்லை -  உன் மதிமின்ன
ஏழை உன்மனம் தேடும்  - ஒளி பிறிதல்ல
உள்ளே உள்ளது காண்பாய் - அதில் ஒளிவில்லை


Wednesday, 2 July 2014

விதியும் வாழ்வும்

நினைவெங்கும் துயர் தந்ததென்ன
நிலையெண்ணி ஏங்குதே உள்ளம் 
வினை செய்து உளம் நொந்ததென்ன
விலையற்றதோ வெறும் வாழ்வும்

நிலையெண்ணி ஏங்குதே உள்ளம் 
நெஞ்சத்தில் கீறிடும் காயம்
விலையற்றதோ வெறும் வாழ்வும் 
வெஞ்சினம் கொள்வதோ வீணும்

நெஞ்சத்தைக் கீறிடும் காயம் 
நிலையோடித் தொலைபோகுமின்பம்
வெஞ்சினம் கொள்வதோ வீணும்
வலையினுள் மீனன்றோ நானும்  

நிலையோடித் தொலைபோகும் இன்பம் 
தலைமேவிப் பாயுதோ வெள்ளம்
வலையினுள் மீனன்றோ நானும்  
வறுமைக்கு விலையாகிப் போகும் 

தலைமேவி பாயுமோர் வெள்ளம்
தருகின்ற துன்பங்கள் மிஞ்சும்
வறுமைக்கு விலையாகிப் போகும்
வருகின்றதோ எல்லை தானும்

தருகின்ற துன்பங்கள் மிஞ்சும் 
தண்ணீரில் மீன்விட்ட கண்ணீர் 
வருகின்றதோ எல்லை தானும்
வண்ணங்கள் தொலைகின்றதாகும்

தண்ணீரில் மீன்விட்ட கண்ணீர்  
தான் கண்டதோ தெய்வம் தானும்
வண்ணங்கள்  தொலைகின்றபோது
வான் வந்ததே ஏழுவண்ணம்

தான் கண்டதோ தெய்வந்தானும்
தந்ததே அன்பினை பக்கம்
வான் வந்ததோ ஏழுவண்ணம் கண்டு
வந்திடும் இன்பங்கள்மீண்டும்      

தந்ததே அன்பினைப் பக்கம்
தாகமும் கொண்டங்கு நிற்க 
வந்திடும் இன்பங்கள் மீண்டும்
வேகம் கொண்டே வீழ்த்தக் கண்டேன்

தாகமும் கொண்டங்கு நிற்க 
தவித்திட துன்பங்கள் சூழ்ந்தே
வேகம் கொண்டே வீழ்த்தக் கண்டேன்
வெடித்தே நல் உணர்வுகள்நோகும்

தவித்திட துன்பங்கள் சூழ்ந்தே
நினைவெங்கும் துயர் தந்ததென்ன
வெடித்தே  நல்லுணர்வுகள் நோகும்
வினை செய்து உளம் நொந்துப்போகும்

(மீண்டும்)
நினைவெங்கும் துயர் தந்ததென்ன
நிலையெண்ணி ஏங்குதே உள்ளம் 
வினை செய்து உளம் நொந்துபோகும்
விலையற்றதோ வெறும் வாழ்வும்

எல்லைமீறும் உன்னழகு

நீ சிரிக்கும் போதிலலை
  நீர்ச் சுனையில் வெள்ளி நிலா
   நின்றுமிளிர் துள்ளல் காண்கிறேன்
பூ விரித்த சோலைதனில் 
  புள்ளினங்கள் . போடுமொலி 
  புல்லரிப்பில் இன்பங்காண்கிறேன்
ஆ.எரிந்து கொள்ளும்சினம் 
. அத்தனையும் நீர்ச்சிதறல்
. ஆகிவிடப் புன்னகைக் கிறேன்                     
தீவிரித்தே முன்னெரியத் 
. தேகம் குளிர் காய்வதெனத்
.   தேவி உந்தன்முன் சுகிக்கிறேன்

மாவிரித்த கிளையிடையில்
. மங்கு மந்திவேளை தனில்
.   மாங்குயில்கள் இரண்டுகாண்கிறேன்
பூசொரிந்த தேனையுண்ட
   போதையெழக் கூடுகையில்
    பாவையுனை எண்ணி வாடினேன்
தேவரிந்தத் தேனழகைத் 
. தேவதையைக் கண்டுவிட்டால்
. தேவலோகம் பூமிவருங் காண்
கோபுரியும்  ஆட்சி யென்ன 
. கோலெடுத்த ஆண்டிதனும்
. கூடியிரந் தாடுவர் முன்னால்

நாவரையும் வார்த்தையென்ன 
. நாள் விரியும், காட்சியென்ன
. நீசிரித்த பேரழகே மேல்
பாவரிக்கும் உள்ளடங்காப் 
. பாவையுந்தன் அழகின்நிகர்
. பார் உதிக்கும் வானின் சுடர்தான்
காவிரிக்கும் கங்கைநதி 
. காணுகின்ற மென் நெளிவு
. கால் நடக்கும் உன்னசைவே, நான்
நீவிரிக்கும் விழியிடையே 
. தீஎரிக்கும் ஐம்புலன்கள்
. நேரெதிர்த்துத் தோல்வி கண்டேனேன்?

வான்விரித்த மேகம்வரும் 
. வாழுமுந்தன் மென்மையின்முன்
.  வாழ்விழக்க நிர்மலவானம்
மான் திரியும் மாவனமுள் 
. மாமலையின் கூர்முகமும்
. மங்கியதுன் கூர்விழி கண்டோ
ஏன்சரியும் வானடியும் 
. ஏந்திழையுன் கார்குழலில்
. எண்ணமெழப் பூமி தொட்டதோ 
ஊனெரியும் காடுதனில் 
. உள்ளமதை வைத்தெரிக்கும்
. ஓர்நிலையைத்  தந்துவிடாதே

தேன்சொரியும் பூக்களிலே 
. தேவையென்ன வென்றது யார்
. தேம்பியழப் பூக்கள் வீழ்வதேன்
மீன்பிரிந்தே நீரைவிட்டு 
. மெல்லதுடித் தாடுவதென்
. மென்விழியின் துள்ளல் வெல்லவோ
மேன் புரியின் இராச்சியத்தில் 
. மேடுகண்ட பொற்குவியல்
. மின்னவில்லைச் சென்றுவந்தாயோ
கோன் முடியைத் தொட்டதில்லை 
. கோலம்கெட்டு வாழுகிறான்
. கொண்ட பகை உன் விழிவாளோ

**********

இரு முனைகள்


(இன்பமும்)

வட்ட வட்ட நீரெழுந்து வாவிமீது ஓடியென்னை
வாவென் றோரக் கண்ணைக் காட்டி வேகங் கொள்ளுதோ
தட்டத் தட்டப் பூவுதிர்த்து தென்றல்தொட்டதால் மரங்கள் 
தேடி என்னில் பூ எறிந்து சேவை செய்ததோ
கட்டக் கட்டக் கற்பனைகள் காற்றிலேறி வான்பரவிக்
காட்சியென்று வண்ணங் கொள்ளக்   காணு முள்ளமோ
எட்ட எட்ட நீர் வளைந்தே என்னை நோக்கி ஒடிவந்து
இன்பமென்று காலைதொட்டும் அஞ்சி மீளுதோ

முட்டமுட்ட நீர்வழிந்து மோகங்கொண்ட பார்வை கெட்டு
மங்கை வானம் ஊற்றுங் கண்ணீர் மாரியானதோ
விட்டுவிட்டு  வித்தையென்று வீம்புடனே பக்கம்வந்து’
வீசுந் தென்றலும் தழுவ நாணம் கெட்டதோ
பொட்டுப் பொட்டு வைத்தவளாய் பூமுடிந்த கூந்தல்மகள்
புன்னகைத்த தாக மின்னல்  போதெழுந்ததோ
நட்ட நட்ட மாயிழந்து நன்மைவிட்டும் இன்னற்பட்டு
நான்விழுந்தபோதும் உள்ளம் நாடும் இன்பமோ

கட்டுக்கட்டுப் பூவிரியக் காலைவெயில் சூடுபட்டுக்
கண்ணுறக்கம் நீங்கியதாய் உன்முகங்காண
தட்டுப்பட்டுக் கீழ்விழுந்து தன்னிலுடை மண்கலமாய்
தானும் தவித் தேனிதயம் சுக்குநூறாக
வெட்டுப்பட்ட போதிரத்தம் வீறுடனே பாயுமுந்தன்
வீச்செழும் கண்பார்வை யின்றி  வெண்மலர்தேகம்
சொட்டிச் சொட்டிக் கீழிரத்தம் சுற்றிலுமிங் கொட்டியதால்
சோர்ந்துநடை தாழுகிறேன் சொல்லொரு வார்த்தை


(துன்பமும்)
திட்டத் திட்ட நேர்நடந்து தேரிலேறி வான்கடந்து
தேகம்மீது ஆசைகொண்டு காலன் நிற்பதேன்
சட்டமில்லை நீதியில்லைச் சற்றும் மனம் தாழவில்லைச்
சுற்றிலும் சு தந்திரத்தை ஏன் வெறுத்தாரோ
நிட்டையுடன்  நீள்படுக்கை நெஞ்சமைதி கொண்டவராய்
நீசரெங்கள் மேனிகொள்ள நீளுறக்கம் ஏன்
இட்ட இட்ட சாபெமென்றே எண்ணி யுள்ளம் தானடங்கி
இல்லை யென்றும் வாழ்விதென்றே ஏங்கி நிற்போமோ

மொட்டு மொட்டுப் பூஅலர்ந்து முன்னிருக்க ஓடிவந்து
முட்டமூச்சு வாங்கி வண்டும் தேனெடுத்தாடக்
கட்டை கட்டையாக வெட்டிக் கன்னம் பிய்த்துக் கண்பிடுங்க
காதற்பெண்டிர் மேனிகொல்லக் கண்விழிக்காயோ
சுட்டுச்சுட்டுப் பல்விதத்தில் தூரவென்று மெய்யெறிந்து
தொட்டதில்லை நாங்களென்பார் தோள் சிறுத்தேகி
கட்டிக் கட்டிஆண்டநிலம் கையிழந்து போனதெனக்
கட்டில்மீது காண்சுகங்கள் காணும் என்பதோ?

**********************

வண்ணக்கவிதை

(நீலம் பச்சை மஞ்சள் சிவப்பு கறுப்பு  வெள்ளை ஊதா)

நீலக் கடலிடையே
  நெளிதிரைமண் வீழ்ந்துருளும்
காலச் சுழல்புவியில்
   காணும் உயிர் கடந்துசெலும்
ஞாலத் திருமனிதர்
    ஞாபகங்கள் ஆக்கியவள்
சீலம் தனை நினந் தால்
    செல்வவளம் பெருகாதோ

பச்சை மரங்களையும் 
    பார்க்கும் மலர்ச் செடிகொடிகள்
இச்சை யுணர்வுகளும் 
   இத்தரையில் ஈந்தவளை
அச்சம் நிறைவெளியாம்
    அண்டமெங்கும் உறைபவளை
உச்சம் மனமெடுத்தால் 
   உயர்வுதனை கொள்ளோமோ

செவ்வண் வானடியில்
     செங்கதிரின் உதயமெழும்
அவ்வெண் ணொளி யுயர்வில்
     அன்னையவள் ஆட்சியெழும்
கவ்வும் இருளொழியக் 
     காட்சிகளில் புலனிழையும்
இவ் வான் உருளுலகில் 
     ஏழைமனம் காப்பாளோ


மஞ்சள் நிலவொளியில்
    மனது கொளும் குளுகுளுப்பும்
கொஞ்சம் மதிமயக்கும்
    குளிர்நிலவில் போதைகொளும்
நெஞ்சில் நினைவழிந்தே
    நீண்டமனக் கனவுவெளி
பஞ்சாய் மறைவதெங்கே
   பார் ஒளியின் சேர்வழியோ

கருமை இரவுதிரக்
    கதிர் முகத்தின் தெளிவெழவும்
வரு மைவிழி யுடையாள்
    வாழ்க்கை நலம் ஈந்தவளை
பெரு மையத் திருந்து
    பிரபஞ்ச தோற்றமுடை
திருமெய் உணர்வுகலந்
    தாக்கியவள் நினை தினமே

ஊதாக் குழலில் இசை
   ஓங்கியெழல் தானுமில்லை
தீதாய் பொழிவதில்லை
   தூறும்மழை தென்றல்நிலை
போதாதென அலைந்தும்
    பொழுதில் உருப் பெற்றதில்லை
நீதான் என வேண்டில்
    நிர்க்கதியாய் விட்டதில்லை

வெள்ளை மனதெடுத்து
   விளையுமன்பு பூப்பொலிந்து
கொள்ளை யிடு மனதைக்
    குலவு மெழில் வசந்தமலர்க்
கள்ளை யுண்டதுபோல்
    காணுமெழில் வாழ்வினிக்க
உள்ளம் கலங்கி யவள்
   ஒளியைநினை உருவெடுக்கும்

வண்ணக் கலவையெழ
    வான்வெளியின் சுற்றும்பெரும்
விண்ணை நிறை கிரக
    வட்டவளை பந்துகளை
அண்டந்தனில் உருட்டி
    ஆனந்திக்கும் அன்னை தொழு
திண்ணம் உயர் பெரிதாம்
    தேகநலச் சக்திவரும்

எண்ணக் கருவழிந்தே
    இத்தரையில் பிறவி எனும்
மண்ணைப் பிடிஉடலில்
    மாயசக்தி ஏற்றியவள்
கண்ணில் காணும்நிலை
    கடந்தவளைப் போற்று தினம்
உண்ணக் கனியெனவே
    உலகமதின் வாழ்வினிக்கும்
************

தமிழன் என்றொரு இனமுண்டு!

இன்று போய் நாளைவா என்றுசொன்னோம் இன்றும்
எத்தனை நல்லவர் யாம்
கொன்று பேயாகிக் குடித்திரத் தம்கடை 
சிந்தவும் யாம் பொறுத்தோம்
வென்றுவா என்றேழுந் தேவிளை யாடிட 
வேண்டிக் களித்திருந்தோம்
சென்று வா நாளை என்றே குடல் கொண்டவன் 
செல்வதில் மெய் சிலிர்த்தோம்

தொன்றுதொட்டே தமிழ் சொல்பனுக்கொரு 
தன்னந் தனிக்குணம் காண்
என்றுமவன் இணையில்லை உலகினில் 
எத்தனை பற்றுதல் பார்
கன்றென நின்று பா .லுண்ட  வயதுடை 
கண்மணிச் செல்வங்களை
சென்றுவா போர்க்களம் என்றுரைத்த அன்னை
சிந்தனை மாற்றமின்றோ

நன்றுதான் நாளும்ந லிந்து முடன் எங்கள்  
நாட்டில் பிறந்தவரை
மென்றுதின்ற பெரு மன்னவர் மாவதை
மன்னித்து விட்டிடுவோம்
பன்றிகளாகிப் பரவசித்தோம் பட்டை   
பந்தைச் சுழன்றடிக்க 
வென்றவர் எங்களின் வீரத்திருநாடு 
வெற்றி என்றே களித்தோம்

ஒன்றுமில்லை உள்ளே ஓடுநிறை மண்ணென் 
றெப்படி நாமறிவோம்
தின்று களித்தெங்கள் தேகம் சுகித்திட
தேடிவழி சமைப்போம்
கொன்றவன் கைகளால் கூட்டியணைத்திடக் 
கொக்கரித்தே மகிழ்வோம்
நின்றுயர் வானில் பறந்திட எண்ணுதல்
நீசக் குருவி என்போம்

என்றும் தமிழ் மகன் என்பவர்க் கென்றொரு 
எல்லைதனை வகுப்போம்
மன்றம் கலைதமிழ் மாமரபு விதி 
மாற்றி அமைத்திடுவோம்
தென்றல் வரும் அது தேகம் தழுவிட 
தேடிப் பிரிக்கின்றதா
கொன்றவன் நின்றவன் வென்றவன் பேதமும் 
கண்டு பிரித்திடவா!/

அன்னையும் போயினள் அப்பனும் செத்தபின்  
ஆடிக் களித்திடுவோம்
என்னையும் நான்வந்த இன்மொழி என்றொரு
எண்ண மமதை விட்டோம்
சின்னவன் என்றெமை சிந்தனை கொள்ளுவோர்
சொல்லியே கேலி செய்தால்
தின்னவும் நஞ்சிட்டு தென்னவர் காத்திடும்
தீரத் தமிழன் இவன்

மாற வேண்டுமா?

(அன்றும்)
நீசிரிக்கப் பொன்னிலங்கும் நிர்மலவானம் - இன்று
யார்சிரித்துப் பூத்ததிந்த வெண்ணிலவோரம்
வாய்விரித்துப் பூக்குமந்தப் பூக்களின் பாரம் - உந்தன்
வாழ்க்கை யின்று காணுதடா வானவில்லாகும்
காய் பழுத்துத் தூங்குமரம் கண்டிடும் நாளும் - பல
காக்கையுடன் குருவிகளும் கலகலப்பாகும் 
நோய்பிடித்த  ஏழையென நீர்சொரி விழிகள் - துயர் 
நெஞ்சுணர்வில் வேகிவிடும் நேரெதிராயின்

தாய் உரைத்துப் பாடம் சொன்னார் தமிழினி தென்றேன் - பின்பு
தாகத்துக்காய் ஏடுகற்றே தமிழ்ப்பலம் கொண்டேன்
மாயவளோ தூரநின்றோர் மண்ணிடை வரைந்தாள் - இன்று
மாறுதலை ஈந்தவளோ மந்திரமானாள்
தீ குளிரக் கண்டதுண்டோ  தென்றலும் பாடும் - அந்த
தேவதையின் வாழ்த்தினிலே தேனதும் ஊறும்
ஏய் நிறுத்து என்பதின்றி இளமையின் இன்பம்- இனி
ஏட்டினிலே எழுதும் வகை இன்சுவையாகும்

(இன்றும்)
ஆற்றினிலே வெள்ளமென அன்பலை பாய- நாமும் 
அத்தனை தான் சத்தியத்தாய் அணைப்பினில் தூங்கி
சேற்றினிலே நின்றிடினும் சீர்புகழோங்க - வாழச்
சிரித்த தென்ன விதி பகையின் சேர்பலமோங்க
மாற்றமென மண்ணிலெமை மாபெரும் தேசம் - பல 
மனமெடுத்தே குரல்நெரித்தும் மழலை யென்றாட்டி
காற்றினிலே நேர்மைதனை கரைத்ததும் மெய்யோ - இது
கற்பனைக்கு ஏற்றதன்றிக் கருவிடலாமோ  

தீவெடித்துப் போட்டதெல்லாம் எங்களின் வானம் - முற்றும்
தீய்ந்ததென்ன பொன்னுயிர்கள் பொய்களும் மாயம்
சேய்துடித்துச் சாய்ந்திடவே செய்தவள் கண்டும் - வாய்
தேம்பியழ விதி மறித்து தீயதைச்செய்யும் 
பேயிரங்கும் பிறவி யென்றார் பேதைகள் கெஞ்ச - வன்மை
பேரிடியாய் பிணமெரிக்கும்  பூமியென்றாக
ஏய் துடித்து எழவதின்றே இயற்கையின் விதியோ - இனி
ஏழைகளின் கனவு எனும் இதயத்தில் மிஞ்சும்

*******************

துன்பமே மிஞ்சும்

நெஞ்சம் கனக்குதடி தங்கமே தங்கம் - இந்த  
நீண்ட வழிப்பயணம் எத்தனை தூரம்
அஞ்சக் கிடக்குதடி அன்பெனும் உள்ளம் - அதில் 
ஆடிக் களிப்பதென்ன அன்னையும் தினம்
மிஞ்சிக் கிடப்பதென்ன மேனியின் சுகம் - தனை
மீளப் பறித்தெடுக்க எஞ்சிய துன்பம்
நஞ்சை நிகர்த்சுவை வாழ்வதுகொளும்- விண்ணை 
நாடிப் பறக்கவெனக்  கெஞ்சுதே மனம்

எட்டிநடந்து வந்தேன் எத்தனை துயர் - அதில்
ஏனோ நடந்தவழி இச்சைகள் படர்
தட்டி விழுத்துமனம் தான் தரும் இடர் -அது 
தானே எனக்களித்த தர்மத்தின் கரம்
கட்டி இழுத்த தந்த காமனின் கணை - அது
காலம் விதித்த இருள் கண்கெடும் விதம்
முட்டி விழுத்த வந்த முன்வினைபயன் - என் 
மூச்சை நிறுத்தவென்று மோகம்கொள்வதென்

சட்டச் சட இடிகள் சஞ்சலம் தரும் - அதில் 
தாங்கா மனம் கலங்கி நீர் வழிந்திடும்
இட்ட விதியின் செயல் இத்தனை கோரம் - அதை
எண்ணி பதைபதைக்கும் ஏகமென்மனம்
வட்டிகொடுத்து மிந்த வாழ்வெனும் தனம் - அதை 
வந்து விதிபறிக்கப் போரிடும்குணம்
நட்டமதைத் தவிர நான் பெறும் சுகம் - இந்த 
நாளின்வரை இவனும் கண்டதில் எனும்

செட்டைமுளைத்துமந்த வான் பறந்திடும் - வரை 
செய்யும் அவலம் இதைக் கேட்பதற்கெனும்
சட்டம் இயற்றவிங்கு யாருளர் இனும் - இது 
சுட்ட குருதிகலந் தோடிடும் ஆலம்
கொட்டவிழித்திருக்க கோடிகள் கொல்லும் - சில 
கொள்கை எடுத்தவரைப் போலும் விதியும்
வட்ட உலகில் எந்தன் வாழ்விருந்திடும் - வரை
வந்து வழித்துணையென் றிம்சைகள் செயும்

சிவனே, சீற்றமெங்கே?

ஆலயங்கள் எங்கும் மணி கேட்காதோ -அங்
ஆண்டவனே நீயெழுந்து வாராயோ
காலமகள் ஓர்வழியும் காட்டாளோ -நம்
கைவிலங்கும் தானுடைந்து வீழாதோ
கோலமென்ன குற்றுயிரும் சாவாமோ 
கூறுந்தமிழ்க் குலமழிந்து போவதுவோ
ஆலமதை உண்டுயிர்கள் காத்தவனே 
ஆலயத்தில் நாமழுதும் நீதியெங்கே

தாவி நடந்த தோடும் எழிற் பூமியில்நாம் 
தங்குவதில் ஏன் நியதி மாறியதோ
மேவியுயிர் காவியுடல் வாழ்வுபொய்யோ 
மேனிய்யிழந் தேஎங்கிநிற்குஆவியதோஓ- எமைப்
பார்த்தவர்கள் கொல்லும் விதி ஒன்றாமோ
சேவித் துனைக் கையெடுத்ததுக் கூப்பிநின்றோம் - நாம் 
செய்வினைகள் யாவும் பகை கொள்வதென்ன

வேலவனை ஈன்றவனே வேடமென்ன - உன்
வீறுசுடர் தீவிழியும் மூடலென்ன
பாலமுதத் தேன்நிலவை உன்சடையில் - ஓர் 
பாவமெனச் சூடியுயிர் காத்தவனே
நாலதெனக் கொண்டகுண நங்கையவர் - இற்றை
நாளில் மலர்த்தேக உடை தானுரித்து
மூலவிதி மானுடத்தின் நேர்மையினை - அவர்
மீறி மிகக் கேவலங்கள் செய்கையிலே

வேலதனைக் கொண்டவனைப் ஈந்தவனே - பக்கம்
வீறெழுந்த மாதின் அரை கொண்டவனே
சூலமுடன்  தேவியயல் சேர்ந்தவராய் - நின்று 
சுற்றுமுற்றும் பார்ப்பதென்ன வேகமிட்டு
மாலவனைக் காத்தருளக் கூறாயோ - மங்கை
மானங் காக்கச் சேலையீந்த மாதவனும்
கோலமெங்கள் பூவையரின் மேனிதனை விழி
கொண்டுமருள் செய்தலின்றி நிற்பதென்ன

மேலமுதத் தீந்தமிழும் சீரழியும் - நாட்டில் 
மீண்டும் எங்கள் கண்ணகிகள் சாபமிட
சீலமுடை சிலம்பபொடிந்த ஓசைகளும் - கொண்ட
சீற்றம் பெருந் தேசமதைத்  தீய்க்காதோ
பாலமுதத் தெய்வமகன் பார்த்தழவும் அன்னை
பார்வதியும் பாலளித்து தூக்கியவர்
வீலெனவே கத்துமிளம் பாலகர்கள் - பகை
வீசியெறிந் தாடுகையில் காப்பாரோ

சிவனே சீற்றமெங்கே! (2 ம் பகுதி)

மேவியெழும் கோபம் புயல் ஆகாதோ - இங்கு
மீண்டுமொரு தீயெழுந்து மூடதோ
நீதி நதி பெருக்கெடுத்தும் ஓடாதோ  - நீசர்
நித்திரையில் சாம்பலாக்கிப் பூசாயோ
கேவியழு தோர்குலமே சாகுதய்யா - இங்கு 
கூடிப்பல நாடுகளும் மோதுதய்யா
ஆவியெழுந் தோடும்தொகை கொஞ்சமல்ல - எம்
ஆயுள் எனும் தேவன்கொடை என்பதல்ல 

பாவிகளின் கைகளிலே பாவைர்கள் - படும்
பாடுதனை நீதி கொண்டு கேட்காயோ
ஆவிவிடும் காட்சிப் கண்டும் அம்பலத்தில் - நீ
ஆடும் நடம் பூமியதிர் வாக்கதோ
கூவியழக் குடலறுக்கும் மாவதைகள் - ஒரு
கொட்டுமிடி மின்னல் பட்டுத் தீராதோ
சேவித்துனைக் கேட்டுமினி என்னசெய்ய - நாம்
செய்பழிகள் கொண்டவரோ ஆவதென்ன

தேனினிய பேசுந்தமிழ் நாவுடையோர் - தமைத்
தேசங்களின் நீதிதுறை செய்வதென்ன
பூநிகர்த்த மாதர் உடல் தான்கிழித்தல் - அவை
புண்ணியமோ கண்ணிருந்தும் புண்களென
தானிதனைக் கொண்டதென நாம் நினைக்க இவர்
தத்துவமும் பேசிக் காலம் ஓட்டுவதேன்
வானில் கரும் மேகங்களின் மின்னல்இடி - அவை
வாக்களித்து  நீங்குமெனக் காப்பதென்ன

மயிலிறகே போடு எனப் பேசுகிறார் - ஒரு
மந்திரத்தில் மாங்கனியைத் தேடுகிறார்
பயிலும்நடம் பாதமுடைத் தாடுவென - நாம் 
பார்த்திருக்கக் காதுகளில் ஓதுகிறார்
நாயின்வளை வால்நிமிர்த்தப் பாடுபட்டார் - அயல்
நாடியந்தப் பேயிரங்க ஆசைப்பட்டார்
கோயிலிலே தெய்வமெனக் கூப்பியகை - பின்
கோபுரத்தை ஏனிடிக்கக் கூடுகிறார்

மோதவரும் மாடு தனை முன்னிருத்தி - உன்
மோதும் செயல் தீதெனவே மெய்யுரைத்தால்
சேதமிட எண்ணும் மனம் மாறிடுமோ -  ஒரு
சீர்திருத்த வாதம் அதை வென்றிடுமோ
நாதமிடும் நா பலதும் பேசுமய்யா - விட்டு 
நாம் பிழைக்க ஏதுவழி சொல்லுமய்யா
போதுமினிப் பொறுத்த கதை மூடிவைத்தே  - உன்
புத்திகொண்டே ஓர்வழியைக் காட்டுமய்யா

இயற்கையும் முரண்களும்

ஓடித்திரிவது மேகம் உட்கார்ந் திருக்கும் மலைகள்
கூடிப் பேசிடும் கிளிகள் கொட்டும்பனி மழைத் தூறல்
ஆடித் திரிவதும் ஆறு அலைகள் தோன்றிடும் நூறு
தேடித் திரிவது வாழ்வை திசைகள் பலவென ஓட்டம்

வாடிச்சோர்வது பூக்கள் வானத் தீ மறை ஆழி
கூடிக்கொள் மலர்அல்லி கோலச் சுனை மதி விம்பம் 
சூடிக் கொள்வது மாலை சுற்றும் காற்றிழை வாசம்
வேடிக் கைவிடி வேளை விடியாப் பாமரர் வாழ்க்கை

மூடிக் கிடப்பது மேகம் மெல்லப் பரவிடுங் காற்று
நாடித் தொழுவது தெய்வம், நன்மை விட்டுயர் துன்பம்
பாடித் திரிந்திடும் தென்றல் பட்டுச் சிலிர்த்திடும் மேனி
வாடிக்கை யிதுவென் றாகும் வாழ்வில் இச்சைகள் கூடல்

மாடிக், கூடமும் மஞ்சம் மரகதப் பட்டில் போர்வை
ஆடிக் களிப்பது தேகம் அனலை பூசிடும்  காற்று
கூடிக் காண்பது கொடுமை குறைந்தே போவது இளமை
சேடிப் பெண்ணவள் மீதும் சிலிர்க்கும் அனங்கன் பாணம்

சூடிக்கொள் மலர் மங்கை சுகமறியாப் பெண்லோலன்
வாடிச் சோர்ந்திடும் பூவாய் வன்மை துய்த்திடக் காமம்
வேடிக்கை யென்றவர் எண்ணும் விளைவில் பெண்மையின் அவலம்
நாடிசெல் புவிவாழ்வில் நன்மைக் குண்டோ வாழ்வும்

கூட்டுக்குள் விதியோ

நாட்டுக்கு நல்லது செய்பவர் யாருளர்
வீட்டுக்குள் நீ கிடந்தால் - அவர்
போட்டுச் சிதைத்திடும் பூவையர் கண்டுமுன்
பாட்டுக்கு நீயிருந்தால் - இந்தக்
கேட்டுக்கு ஓர்முடிவுண்டோ எழுந்துசெல்
வாட்டும்துயர் களைந்தே -உள்
நாட்டுக்கு வாழ்ந்திடும் எம்மவர்காத்திடு
கோட்டுக்குள் எல்லைவைத்தே

கூட்டுக்குள் வைத்தவன் கொல்லும் தமிழ்இனம்
கொட்டுமிரத்த வெள்ளம் - ஓர்
நீட்டுக்கு ஆறென ஓடி நனைக்குது 
நீதியின் கால்க ளையும் - அவன்
வேட்டைக்குத் தீனியென் றாகும் தமிழ் கணடு
வெஞ்சினம் கொள்ளலின்றி - வெறும்
சாட்டுக்கு நாமழு துள்ளம் மறந்திடில்
சாவது எம்மினம்தான்

வீட்டுக்குள் வந்தவன் வெற்றியென்றால் விட்டு
ஓட்டத்தில் நாம்போவதோ - அவன்
போட்டும் உடைத்திடப் பூக்களும் பிஞ்சதும்
பார்த்துக் கிடந்திடவோ - வெகு
சூட்டுக்குள் நெய்யென பற்றி எரிந்திடத்
தேகம் அழிவதுதான் - இறை
போட்டகணக்கென எண்ணம் கொள்ளாதுடன்
காக்க இணைந்துவிடு

பூட்டுக்குச் சாவியும் நீயல்லவோ திடம்
காட்டி நடைகொள்ளடா  - ஒரு
ஏட்டுக்குள் கீறிய எந்தச் சுரைககாயும்
கூட்டுக் கறிகல்லடா - வெட்ட
ஆட்டுக்கு மாலையை போடுவர் நம்பியுன் 
ஒட்டத்தில் மாறலின்றி -  எங்கள்
நாட்டுக்கு நாளைய மன்னரில் நீயொன்று
நாட்டமெழக் கூடடா