Wednesday, 2 July 2014

மாற வேண்டுமா?

(அன்றும்)
நீசிரிக்கப் பொன்னிலங்கும் நிர்மலவானம் - இன்று
யார்சிரித்துப் பூத்ததிந்த வெண்ணிலவோரம்
வாய்விரித்துப் பூக்குமந்தப் பூக்களின் பாரம் - உந்தன்
வாழ்க்கை யின்று காணுதடா வானவில்லாகும்
காய் பழுத்துத் தூங்குமரம் கண்டிடும் நாளும் - பல
காக்கையுடன் குருவிகளும் கலகலப்பாகும் 
நோய்பிடித்த  ஏழையென நீர்சொரி விழிகள் - துயர் 
நெஞ்சுணர்வில் வேகிவிடும் நேரெதிராயின்

தாய் உரைத்துப் பாடம் சொன்னார் தமிழினி தென்றேன் - பின்பு
தாகத்துக்காய் ஏடுகற்றே தமிழ்ப்பலம் கொண்டேன்
மாயவளோ தூரநின்றோர் மண்ணிடை வரைந்தாள் - இன்று
மாறுதலை ஈந்தவளோ மந்திரமானாள்
தீ குளிரக் கண்டதுண்டோ  தென்றலும் பாடும் - அந்த
தேவதையின் வாழ்த்தினிலே தேனதும் ஊறும்
ஏய் நிறுத்து என்பதின்றி இளமையின் இன்பம்- இனி
ஏட்டினிலே எழுதும் வகை இன்சுவையாகும்

(இன்றும்)
ஆற்றினிலே வெள்ளமென அன்பலை பாய- நாமும் 
அத்தனை தான் சத்தியத்தாய் அணைப்பினில் தூங்கி
சேற்றினிலே நின்றிடினும் சீர்புகழோங்க - வாழச்
சிரித்த தென்ன விதி பகையின் சேர்பலமோங்க
மாற்றமென மண்ணிலெமை மாபெரும் தேசம் - பல 
மனமெடுத்தே குரல்நெரித்தும் மழலை யென்றாட்டி
காற்றினிலே நேர்மைதனை கரைத்ததும் மெய்யோ - இது
கற்பனைக்கு ஏற்றதன்றிக் கருவிடலாமோ  

தீவெடித்துப் போட்டதெல்லாம் எங்களின் வானம் - முற்றும்
தீய்ந்ததென்ன பொன்னுயிர்கள் பொய்களும் மாயம்
சேய்துடித்துச் சாய்ந்திடவே செய்தவள் கண்டும் - வாய்
தேம்பியழ விதி மறித்து தீயதைச்செய்யும் 
பேயிரங்கும் பிறவி யென்றார் பேதைகள் கெஞ்ச - வன்மை
பேரிடியாய் பிணமெரிக்கும்  பூமியென்றாக
ஏய் துடித்து எழவதின்றே இயற்கையின் விதியோ - இனி
ஏழைகளின் கனவு எனும் இதயத்தில் மிஞ்சும்

*******************

No comments:

Post a Comment