Wednesday, 2 July 2014

இரு முனைகள்


(இன்பமும்)

வட்ட வட்ட நீரெழுந்து வாவிமீது ஓடியென்னை
வாவென் றோரக் கண்ணைக் காட்டி வேகங் கொள்ளுதோ
தட்டத் தட்டப் பூவுதிர்த்து தென்றல்தொட்டதால் மரங்கள் 
தேடி என்னில் பூ எறிந்து சேவை செய்ததோ
கட்டக் கட்டக் கற்பனைகள் காற்றிலேறி வான்பரவிக்
காட்சியென்று வண்ணங் கொள்ளக்   காணு முள்ளமோ
எட்ட எட்ட நீர் வளைந்தே என்னை நோக்கி ஒடிவந்து
இன்பமென்று காலைதொட்டும் அஞ்சி மீளுதோ

முட்டமுட்ட நீர்வழிந்து மோகங்கொண்ட பார்வை கெட்டு
மங்கை வானம் ஊற்றுங் கண்ணீர் மாரியானதோ
விட்டுவிட்டு  வித்தையென்று வீம்புடனே பக்கம்வந்து’
வீசுந் தென்றலும் தழுவ நாணம் கெட்டதோ
பொட்டுப் பொட்டு வைத்தவளாய் பூமுடிந்த கூந்தல்மகள்
புன்னகைத்த தாக மின்னல்  போதெழுந்ததோ
நட்ட நட்ட மாயிழந்து நன்மைவிட்டும் இன்னற்பட்டு
நான்விழுந்தபோதும் உள்ளம் நாடும் இன்பமோ

கட்டுக்கட்டுப் பூவிரியக் காலைவெயில் சூடுபட்டுக்
கண்ணுறக்கம் நீங்கியதாய் உன்முகங்காண
தட்டுப்பட்டுக் கீழ்விழுந்து தன்னிலுடை மண்கலமாய்
தானும் தவித் தேனிதயம் சுக்குநூறாக
வெட்டுப்பட்ட போதிரத்தம் வீறுடனே பாயுமுந்தன்
வீச்செழும் கண்பார்வை யின்றி  வெண்மலர்தேகம்
சொட்டிச் சொட்டிக் கீழிரத்தம் சுற்றிலுமிங் கொட்டியதால்
சோர்ந்துநடை தாழுகிறேன் சொல்லொரு வார்த்தை


(துன்பமும்)
திட்டத் திட்ட நேர்நடந்து தேரிலேறி வான்கடந்து
தேகம்மீது ஆசைகொண்டு காலன் நிற்பதேன்
சட்டமில்லை நீதியில்லைச் சற்றும் மனம் தாழவில்லைச்
சுற்றிலும் சு தந்திரத்தை ஏன் வெறுத்தாரோ
நிட்டையுடன்  நீள்படுக்கை நெஞ்சமைதி கொண்டவராய்
நீசரெங்கள் மேனிகொள்ள நீளுறக்கம் ஏன்
இட்ட இட்ட சாபெமென்றே எண்ணி யுள்ளம் தானடங்கி
இல்லை யென்றும் வாழ்விதென்றே ஏங்கி நிற்போமோ

மொட்டு மொட்டுப் பூஅலர்ந்து முன்னிருக்க ஓடிவந்து
முட்டமூச்சு வாங்கி வண்டும் தேனெடுத்தாடக்
கட்டை கட்டையாக வெட்டிக் கன்னம் பிய்த்துக் கண்பிடுங்க
காதற்பெண்டிர் மேனிகொல்லக் கண்விழிக்காயோ
சுட்டுச்சுட்டுப் பல்விதத்தில் தூரவென்று மெய்யெறிந்து
தொட்டதில்லை நாங்களென்பார் தோள் சிறுத்தேகி
கட்டிக் கட்டிஆண்டநிலம் கையிழந்து போனதெனக்
கட்டில்மீது காண்சுகங்கள் காணும் என்பதோ?

**********************

No comments:

Post a Comment