Wednesday, 2 July 2014

கூட்டுக்குள் விதியோ

நாட்டுக்கு நல்லது செய்பவர் யாருளர்
வீட்டுக்குள் நீ கிடந்தால் - அவர்
போட்டுச் சிதைத்திடும் பூவையர் கண்டுமுன்
பாட்டுக்கு நீயிருந்தால் - இந்தக்
கேட்டுக்கு ஓர்முடிவுண்டோ எழுந்துசெல்
வாட்டும்துயர் களைந்தே -உள்
நாட்டுக்கு வாழ்ந்திடும் எம்மவர்காத்திடு
கோட்டுக்குள் எல்லைவைத்தே

கூட்டுக்குள் வைத்தவன் கொல்லும் தமிழ்இனம்
கொட்டுமிரத்த வெள்ளம் - ஓர்
நீட்டுக்கு ஆறென ஓடி நனைக்குது 
நீதியின் கால்க ளையும் - அவன்
வேட்டைக்குத் தீனியென் றாகும் தமிழ் கணடு
வெஞ்சினம் கொள்ளலின்றி - வெறும்
சாட்டுக்கு நாமழு துள்ளம் மறந்திடில்
சாவது எம்மினம்தான்

வீட்டுக்குள் வந்தவன் வெற்றியென்றால் விட்டு
ஓட்டத்தில் நாம்போவதோ - அவன்
போட்டும் உடைத்திடப் பூக்களும் பிஞ்சதும்
பார்த்துக் கிடந்திடவோ - வெகு
சூட்டுக்குள் நெய்யென பற்றி எரிந்திடத்
தேகம் அழிவதுதான் - இறை
போட்டகணக்கென எண்ணம் கொள்ளாதுடன்
காக்க இணைந்துவிடு

பூட்டுக்குச் சாவியும் நீயல்லவோ திடம்
காட்டி நடைகொள்ளடா  - ஒரு
ஏட்டுக்குள் கீறிய எந்தச் சுரைககாயும்
கூட்டுக் கறிகல்லடா - வெட்ட
ஆட்டுக்கு மாலையை போடுவர் நம்பியுன் 
ஒட்டத்தில் மாறலின்றி -  எங்கள்
நாட்டுக்கு நாளைய மன்னரில் நீயொன்று
நாட்டமெழக் கூடடா

No comments:

Post a Comment