Wednesday, 2 July 2014

இயற்கையும் முரண்களும்

ஓடித்திரிவது மேகம் உட்கார்ந் திருக்கும் மலைகள்
கூடிப் பேசிடும் கிளிகள் கொட்டும்பனி மழைத் தூறல்
ஆடித் திரிவதும் ஆறு அலைகள் தோன்றிடும் நூறு
தேடித் திரிவது வாழ்வை திசைகள் பலவென ஓட்டம்

வாடிச்சோர்வது பூக்கள் வானத் தீ மறை ஆழி
கூடிக்கொள் மலர்அல்லி கோலச் சுனை மதி விம்பம் 
சூடிக் கொள்வது மாலை சுற்றும் காற்றிழை வாசம்
வேடிக் கைவிடி வேளை விடியாப் பாமரர் வாழ்க்கை

மூடிக் கிடப்பது மேகம் மெல்லப் பரவிடுங் காற்று
நாடித் தொழுவது தெய்வம், நன்மை விட்டுயர் துன்பம்
பாடித் திரிந்திடும் தென்றல் பட்டுச் சிலிர்த்திடும் மேனி
வாடிக்கை யிதுவென் றாகும் வாழ்வில் இச்சைகள் கூடல்

மாடிக், கூடமும் மஞ்சம் மரகதப் பட்டில் போர்வை
ஆடிக் களிப்பது தேகம் அனலை பூசிடும்  காற்று
கூடிக் காண்பது கொடுமை குறைந்தே போவது இளமை
சேடிப் பெண்ணவள் மீதும் சிலிர்க்கும் அனங்கன் பாணம்

சூடிக்கொள் மலர் மங்கை சுகமறியாப் பெண்லோலன்
வாடிச் சோர்ந்திடும் பூவாய் வன்மை துய்த்திடக் காமம்
வேடிக்கை யென்றவர் எண்ணும் விளைவில் பெண்மையின் அவலம்
நாடிசெல் புவிவாழ்வில் நன்மைக் குண்டோ வாழ்வும்

No comments:

Post a Comment