Wednesday, 2 July 2014

வண்ணக்கவிதை

(நீலம் பச்சை மஞ்சள் சிவப்பு கறுப்பு  வெள்ளை ஊதா)

நீலக் கடலிடையே
  நெளிதிரைமண் வீழ்ந்துருளும்
காலச் சுழல்புவியில்
   காணும் உயிர் கடந்துசெலும்
ஞாலத் திருமனிதர்
    ஞாபகங்கள் ஆக்கியவள்
சீலம் தனை நினந் தால்
    செல்வவளம் பெருகாதோ

பச்சை மரங்களையும் 
    பார்க்கும் மலர்ச் செடிகொடிகள்
இச்சை யுணர்வுகளும் 
   இத்தரையில் ஈந்தவளை
அச்சம் நிறைவெளியாம்
    அண்டமெங்கும் உறைபவளை
உச்சம் மனமெடுத்தால் 
   உயர்வுதனை கொள்ளோமோ

செவ்வண் வானடியில்
     செங்கதிரின் உதயமெழும்
அவ்வெண் ணொளி யுயர்வில்
     அன்னையவள் ஆட்சியெழும்
கவ்வும் இருளொழியக் 
     காட்சிகளில் புலனிழையும்
இவ் வான் உருளுலகில் 
     ஏழைமனம் காப்பாளோ


மஞ்சள் நிலவொளியில்
    மனது கொளும் குளுகுளுப்பும்
கொஞ்சம் மதிமயக்கும்
    குளிர்நிலவில் போதைகொளும்
நெஞ்சில் நினைவழிந்தே
    நீண்டமனக் கனவுவெளி
பஞ்சாய் மறைவதெங்கே
   பார் ஒளியின் சேர்வழியோ

கருமை இரவுதிரக்
    கதிர் முகத்தின் தெளிவெழவும்
வரு மைவிழி யுடையாள்
    வாழ்க்கை நலம் ஈந்தவளை
பெரு மையத் திருந்து
    பிரபஞ்ச தோற்றமுடை
திருமெய் உணர்வுகலந்
    தாக்கியவள் நினை தினமே

ஊதாக் குழலில் இசை
   ஓங்கியெழல் தானுமில்லை
தீதாய் பொழிவதில்லை
   தூறும்மழை தென்றல்நிலை
போதாதென அலைந்தும்
    பொழுதில் உருப் பெற்றதில்லை
நீதான் என வேண்டில்
    நிர்க்கதியாய் விட்டதில்லை

வெள்ளை மனதெடுத்து
   விளையுமன்பு பூப்பொலிந்து
கொள்ளை யிடு மனதைக்
    குலவு மெழில் வசந்தமலர்க்
கள்ளை யுண்டதுபோல்
    காணுமெழில் வாழ்வினிக்க
உள்ளம் கலங்கி யவள்
   ஒளியைநினை உருவெடுக்கும்

வண்ணக் கலவையெழ
    வான்வெளியின் சுற்றும்பெரும்
விண்ணை நிறை கிரக
    வட்டவளை பந்துகளை
அண்டந்தனில் உருட்டி
    ஆனந்திக்கும் அன்னை தொழு
திண்ணம் உயர் பெரிதாம்
    தேகநலச் சக்திவரும்

எண்ணக் கருவழிந்தே
    இத்தரையில் பிறவி எனும்
மண்ணைப் பிடிஉடலில்
    மாயசக்தி ஏற்றியவள்
கண்ணில் காணும்நிலை
    கடந்தவளைப் போற்று தினம்
உண்ணக் கனியெனவே
    உலகமதின் வாழ்வினிக்கும்
************

No comments:

Post a Comment