Thursday, 3 July 2014

ஒளி காண் விழி திறக்க!


தீயாய் ஒளிர்வது தெய்வம் - அது தீதல்ல
திங்கள் மின்னெழில் வடிவம் -  அதன் சுயமல்ல
காயாய் கனிவது காணின்  - கற்பனை யல்ல
காயம் பெறும் சுகம்யாவும் - அது கனிவல்ல
ஓயா மலர்தரும் வாசம்  - நிரந் தரமல்ல
ஓடும் காற்றுடல் நீவும் - அது உறவல்ல
தேயா விண்ணொளிர் சக்தி - அதைத் தினமெண்ண
தேறும் வாழ்வுனதாகும் - திடம் மனங்கொள்ள

ஓடும் அலைகளின் தேடல் - அதை மனங்கொள்ள
ஓங்கும் மனமதில் உண்மை -  சுடர் ஒளியன்ன
நாடும் பெருமதி ஞானம் -  மனமதைக் கொள்ள
மலரும் உன்னெழில் வாழ்வும்-  அவள் மனமெண்ண
ஆடும் மனமதில் ஆசை - உணர்வுனை வெல்ல
அனலோ எரிதழலாகும் - அது இலையென்ன
மேடும் கொள்ளெரி மலையாய் - பொறி வெளிதள்ள
மின்னும் தீக்கடலாகும் - இவ்வுலகென்ன

வானத் தெழும் பெருசக்தி - அதுவடிவல்ல
வந்தே கொள் மனதெங்கும் - அது விளைவெண்ண
தேனென் றாகிடும்வாழ்வு - அது தொலைவல்ல
தினமும் எண்ணிடு நாளும்-  வரும் துயர்வெல்ல
மோனத்திரு வெளிஅண்டம் -  அங்கொலிக் கின்ற
மூச்சின் எழும் ஓங்காரம் - அதை உயிர்கொள்ள
ஞானத்தொளி உடல்பரவும்-  அது புதிதல்ல
நாளில்  நீயதை உண்ர்வாய் - வெறும் பேச்சல்ல

நாளை எனும்தொடர் வாழ்வு - அது நமதல்ல
நாளும் தொடர் துயர்தானும் - நிரந் தரமல்ல
தேளைத் தொடும் வலிபோலும் - தினம் உயிர்கொல்ல
தேடிச் சக்தியைக் தொழுவய் - அது கடிதல்ல
பேழைப் பெட்டகமுள்ளே - ஒளி விளக்கன்ன
பெருதாய் தெரிவது இல்லை -  உன் மதிமின்ன
ஏழை உன்மனம் தேடும்  - ஒளி பிறிதல்ல
உள்ளே உள்ளது காண்பாய் - அதில் ஒளிவில்லை


No comments:

Post a Comment