Friday, 13 June 2014

புத்தாண்டு வாழ்த்துக்கள் போகுமோ

சூரியன் மேற்கில் உதிக்கின்றது - வண்ணச்
சோதிநிலா சுட்டு வேர்க்கின்றது
காரிருள் காலை குவிகின்றது - நிலம்
கொள்ளும் அரவிந்தம் பூக்கின்றது
ஏரியை விட்டு மீன் போகின்றது - அவை
ஏறிமரம் தாவி வீழ்கின்றது
வேரினில் நின்ற மரங்களுமோ - இன்று
வீறு நடைகொண் டசைகின்றது

வாரியடித் தலைபொங்குநதி - கடல்
விட்டு மலையேறப் போகின்றது
சேரியில் கன்றோடித் துள்ளுகுது - அது
தேடும்பசு அப்பா என்கிறது
பாரினில் மாற்றம் தெரிகின்றது - அவை
பாவங்களைக் கொண்டு சேர்க்கின்றது
தேரினில் தெய்வம் குறைகின்றது -எங்கும்
தேடியும் பஞ்சம் விளைகின்றது

போரினில் இச்சை பெருகின்றது - அது
பூமியில் நாசம் விளைக்கின்றது
பாரினைச் சூரியன் சுற்றுகுது - அதைப்
பார்த்து மனம் திக்கு திக்கென்றது
தூரிகை வண்ணம் மறக்கின்றது - அது
தீட்டியதோ கருப் பாகின்றது
பாரிய துன்பம் விளைகின்றது - அதைப்
பைந்தமிழே விலை கொள்கின்றது

வாடிய பூவிதழ் நெக்குவதும் - கண்டு
வண்டு அரண்டோடிச் செல்லுவதும்
நாடிய தென்றலும் கண்டதுவோ -அது
நாற்ற மெடுத்திடப் போகிறது
பாடியதோர் குரல் சிக்கியது - அவர்
பாடுமிசை காதில் குத்தியது
கூடியவள் நடமாடுகையில் - சிறு
கோணலில் காலும் சுளுக்கியது

கோடையில் பேய்மழை ஊற்றுகுது -அது
கூடிச் சிவப்பபெனக் காணுகுது
ஆடையற்ற விதம் வீதியிலே - பெண்கள்
அம்மண மேனி கிடக்கின்றது
கூடையில் பாவம் நிறைகின்றது இதைக்
கோவின் திறைசேரி கொள்கின்றது
பாடைகளின் தொகை கூடுவதும் - புவி
பார்த்துப் பரவச மாகின்றது

மேடையில் பூக்கள் சொரிகின்றன - அங்கு
மன்னன் நடையொலி கேட்கின்றது
ஜாடையில் பேசிய தேசங்களின் - இனம்
யந்திரங்கள் கொண்டு போடுகுது
பேடைகள் ஆடவர் பூங்கிளிகள் = கத்தப்
பேய்களின் இராச்சியம் ஓங்கியது
காடையர் கைகள் உயர்கின்றது - அதில்
காமப்பசிக் கிரை நம்மவரோ?

ஓடையிலே மலர் கூடையிலே - எழில்
கூடுமலை பொய்கைச் சோலையிலே
மேடையிலே மணிக்கோவிலிலே - நல்ல
மென்னிசை கோலம் கொள் பள்ளியிலே
சோடைப் பனைமரக் கூடலிலே - எங்கும்
செல்லு மிடமெங்கும் நாட்டினிலே
காடையர் கைத்திறன் காண்கிறது - எங்கள்
கன்னித்தமிழ் இனம் சாகிறது

போலிகள் ஆளுமுலகமிது - இதில்
போவன யாவும் தலைகீழிது
தாலிகள் மெல்ல அறுகின்றது - துயர்
தாங்கும் தமிழ்பெண்கள் காணுலகு
காலில்லா மேனி நடக்கிறது - அதைக்
காணச் சுவைத்திடும் பூமியிது
மேலிடத்துப் பெரு இராச்சியங்கள் வாழ்த்தி
மின்னஞ்சலில் சபாஷ் போட்டிடுமோ

குளிர்காற்றும் கொடுங்கோலனாக

ஊதிவீசுங் கூதல்காற்றே ஒருமுறை என்னைப் பார்
.உள்ளம் நொந்தே ஓடும்போதேன் ஓசையிடுகின்றாய்
பாதி தேயும் சந்திர ரூபம் பார்த்தே மகிழ்வாயா
பாவம் என்றே பால்வெண் நிலவின் பக்கமி ரங்காயா
நீதித்தேவன் நிம்மதியாக நித்திரை கொள்கின்றான்
நீலக்கடல்மேல் காக்குந் தெய்வம் நெஞ்சம் கல்லானான்
ஆதிப் பரமன் அங்கையற்கண்ணிக்  அரைகொள் ளென வீந்தான்
யாரைக் கேட்போம் யாரும் தேடாப் பாலைவன மானோம்

சேதிசொல்லும் சங்கும் ஊதித் தென்றல் கொண்டோடி
செய்யும் விளைவும் தீதும் நன்மை சொன்னோம் கேட்டார் யார்
ஓதிவேப்பங் குழைகொண்டாடி ஓடச்சொன்னாலும்
ஏறும் எண்ணம்  இல்லாப்பேயில் இரக்கம் கொள்ளல்போல்
சோதிக் கனலாய் சூழ்ச்சிநுட்பம் சற்றே பெரிதாக 
சொல்லாப் பொய்மை சொல்லிக்  காதில் சுற்றும்பூவாக
போதித் தருவின் கீழேகண்ட புண்ணிய மாநாமம்
புன்மை பொலியப் பொழியும் உதிரப் புனலில் நீராட

நீயும்காற்றே நெஞ்சம்கொண்டு நினந்தே எம்மைப் பார்
நெற்றிவியர்வை நிலம்மீ தூற்றி நிதமும் சோறுண்டோர்
காயும் பஞ்சாய் கடுவெம்பசியில் கைகொள் நீருண்டு
சாயும் வேளை சற்றேதூங்கச் சஞ்சலம் செய்தாயேன்
சேயும் இன்றித் தாயோ நிலவைக் கண்டே விழிஊற்றிச்
சோறும் ஊட்டப் பாலகனின்றி சுற்றும் நிழல் பார்த்து
நாயும், காணா நலிவைக்கொண்டே நாளும் தூங்குங்கால்
நீயுமகுளிராம் நீசக்கரமின் நிலையில் தொடலாமோ

ஓலைக்குடிசை உரிமைசத்தம் உல்லாசச் சிறுவர்
ஓடியாடி உழுதுண்வயலில் உழைப்பின் வழிகண்டும்
வேலை அசதி விட்டேகணவன் விருப்பில் மலர்வாகி
வேளை விடியல் முன்னே எழுவாள் விளை செந்தீகண்டும்
காலைக் கதிரைக் காணும் கமலம் கனவில் நிறைகொண்டு
கையில் வேலை கடமைஎன்றே காணுமின் வாழ்வில்
காலை கட்டி காதற்பெண்டிர் காயம்  சுவைகொள்ள
காணும் காட்சி வீரத்தமிழ் இற் றைப்புறமோ அகமோ சொல்

தூண்போற் தோளும் வேளத்திமிரும் தொலைவான்அதிர்வோடு
தொட்டால் மலையும் தூளென்றாகும் தொன்மைத் தமிழ்வீரம்
’வீண் எம்மெண்ணம் வீரத் தமிழே  வெற்றிச் சங்கூதும்
வேண்டாமென்று விடியல் முன்னே  விரைந்தே பகையோடும்
மாண்பும் மறமும்  மனதில் தீரம் மங்காப் புகழ்கொண்ட
மரபுத் தமிழா மறந்தா போனாய் மதியைக் கொள்ளாது
கேண்மை என்றே கூடாப்பகையின் கூடாரத்துள்ளே
கூடிகொள்ளக் கோழையல்ல கொள்ளாய் வீரம் கொள்!

முதுமை படர் மேனி ( பெண்ணும் நானும்)

அழகுறு குழலும் அலைமுகில் வடிவாய்
மெழு கதன் வண்ணம்  மிக நரை கொள்ள
குழலுடை இனிதாய் குரல்தரு மென்மை
வழுகிட மெலிதாய் வாயசை வாக
நிழல்தரு தண்மை நிகரிளம் மேனி
பொழிலுடை அலையின்  பொலிவடிவேந்த
கழலுறு மணியின் கடுநடை யோசை
முழுதென இலதாய் மெதுநடை பழக

சுழலொரு புயலின்  செறிவலி குறுகி
தழலெழ மனதை தகித்திட வைத்தாள்
முழமொரு பூவை குழலிடை சூடி
விளைவினி ஒடியும் வெறுமிடைஎன்னும்
தளதளமேனி தகையிளந் தாடும்
துளைவிழி யம்பு தொடுவலி குன்றி
சுளை பலகனியின் சுவையிவள் அதரம்
விளை வெனும் புகழும் விரயமென்றாகி

தடிகரம் கொண்டே தவழ்ந்திடும் மழலை
அடியெடு நடையும் அருகிட விழல்போல்
துடிப்பது மடங்கித் துறுதுறு பார்வை
வெடித்திட முயலும் வெறியுணர் வோய
கடித்திடக் கனியும் கணை மதன் மலரும்
வடித்திடு மதுவாய் வந்தவள் இன்றோ
அடித்திட அரவம் அதன் கிடைபோலே
நடித்திட வைக்கும் நயன் கெடுவாழ்வில்

எடுத்திட முடிவாய் இளமையை நம்பி
துடுப்பிழந் தோடம்  திசைநேர் விடும்போல்
தடுப்பிழந் தலைகள் தொடத் தொலைவாகி
கொடுத்தோன் பறிக்கும் குயவனின் கலயம்
அடுத்தெனும் உடலை அமுதுகொண் டேற்றி
விடுத்து நீரூற்றி வீம்பினில் திழைத்துப்
படுத்திடக் கனவும் பகலினில் தினவும்
எடுத்துண்மை அறியா இருளிடை வாழ்ந்தோம்

வெய்யிலில் காய்ந்து விழுமழை புரவி
பொய்யினில் வாடி புறந்தள்ள ஓடி
செய்குணம் வஞ்சம் திரிந்திடமொழிந்து
கையினில் களவும் கனிமலர் பேச்சும்
மைவிழி மாதர் முனைந்தயல் கொண்டு
மெய்யிடை  ஈரம் மிகச் சுவைகண்டு
தெய்வம் மறந்து திருமலர்ப் பாதம்
உய்வது விட்டே உலகிடை நலிந்தோம்

இதயம் அழுமோசை

எங்கள்வானம் ஏனோ இன்னும் இருண்டே கிடக்கிறது
இதயம் எல்லாம் இரும்பாய் கண்டே ஏங்கித் தவிக்கிறது
பொங்கும் கடலும் புரண்டே ஓடிப் புலம்பித் திரைகிறது
போதில் அலையும் காற்றும் புயலாய் பொங்கித் தணிகிறது
கங்குல் போயும் காலை தோன்றக் கதிரும் மறுக்கிறது
கருமை இருளும்கயவர் நெஞ்சில் கனலை எரிக்கிறது
மங்கும் அறிவும் மதமும்கூட மனிதம் அழிகிறது
மாமணி தேசம் மலர்கள் கொன்று  மகிழும் அவலமிது

திங்கள் தோன்றும் வானில் மேகம் தனியே திரிகிறது 
தோன்றும்,மதியும் தேயும் பிறையாய் தினமும் குறைகிறது
தங்கம் என்றால் தரையில் வீசும் தன்மை பெருகிறது
தாங்கா நெஞ்சும் தவித்தே அழுதும்  தலைதுண் டாகிறது
அங்கம் வெட்டி அழித்தோர்  கேடு அறமென் றாகிறது
அன்பைத் தேடும் உள்ளம் நொந்து அழிவில் முடிகிறது
சிங்கம் முயலை தினமும் கொன்று தின்றே களிக்கிறது
சொல்லும் விதிகள் சட்டம் ஆக்கிச் சுழலும் உலகமிது

சங்கம் கண்டோர் தமிழும் தலையைக் குனியக் காண்கிறது
செங்கள வீரச் செம்மல் ஏற்றும் செய்யுள் சிரிக்கிறதே
அங்கம் வெட்டி அழிவேன் என்றாள் அன்னை பாலகனும்
அரும்போர் கண்டோன் இதயம்ஏற்கா அம்பென் றாகும்கால்:
மங்கை மேனி மரணப் பாயில் மாற்றான் வீழ்த்தக்காண்
மானம் கெட்டே மருளும் மனமும்  மடமை நிலையன்றோ
எங்கும் துன்பம் ஏகம் ஆகி  இயல்பில் பிறழுங்கால்
ஏனோ எம்மால்  இயலாதென்றோர் எண்ணம் சரியாமோ

பங்கம் இன்றிப் பனிநீரோடை பரவும் இனிகாற்றும்
பகலில்  ஒளியும் இரவில் கனவும்  பார்த்துத் கொண்டேபின்
தெங்கும் ஆடத் திங்கள் மிளிரும் தென்றல் கதைபேசும்
தினமும் எழிலார் திகட்டா துய்க்கும் தேனில் இனிவாழ்வை
மங்கும் இனமும் மாண்டேபோகு மதனின் முன்காண
மனமும் வேண்டில் மனதில் என்றும் மதிநுட் பத்துடனே
பொங்கும் அருவிப் புனலென்றோடிப் போற்றும் புதுவாழ்வை
பொன்னேர் தமிழும் தன்முடிகொள்ளப் பாரா துயிர் போமோ

வாழச் செய்வாய்



நீளப்பரந்த வானத்தின் நிர்மலதோற்றத் தொலைவூடே
தாழக்கிடந்த வெண்மேகம் தேகம் சுட்டுச் சிவந்ததனால்
வீழக் கிடந்த வெய்யோனின் வெம்மை தங்கா கன்றியழ
மேளத் திடுதிடு சத்தமுடன் மேகத்திடி மின் னல்கூட்டம்

ஆளப் பிடித்த அரசனவன் அயல்நாட் டுள்ளே விதிமீறும்
வேழப்படையின் விரையோசை விதமென்றாகி மதங்கொள்ள
மீளப் பிறிதோர் நாள்வருவேன் மின்னல் மாயம் பொழிமழையாய்
வீழ்த்தான்நீ வெகுண்டாயோ விடியும்காணென் றொளிர்தீயும்

ஆழக் கடலில் அடிவீழ்ந்தே அனலைத் தீய்க்கும் அறங்கண்டே
மாளச் செய்வதில் முனைவாக மாலை யிருளன் போதையிடு
சூழச் செறிந்த விதங்கண்டு சுற்றிச் சுழன்றே புவியோட
நாளப்போதில் நிலைநோக்கி நடைகொள் மாந்தர் மனையேக

நாளும் பறந்தே இரைதேடி நன்றாயுண்ட பறவையினம்
கீழும் மேலும் திசைகண்டு  கிளர்ந்து விரைந்து மேகுங்கால்
கோளும் செழித்த தீயுலவிக் கூத்தா டும்விண் ணாழத்தில்     
வாழுமுலகில் வாழாது வதைபட்டுழலென் றாக்கியவள்

ஆழும் முறைமை சீர்கெட்டே அநியாயத்தில்  வீழ்ந்தோரின்
தாழும் வாழ்விற் கைதந்தே தருமம் என்றே நிலைகொள்ளா
கூழுங்குடித்துத் திண்ணையிலோ கூடிவீரர் கதைபேசி
வாழத் தந்தாய் வாழ்வென்றே வாசல் புகுந்த வேளையிலே

நீளப் பெருத்த பாம்புகளும் நீள்கூர் கொள்ளும் கொம்புடனே
காளைப் பெருமா டோடிவரக் காலைச் சுற்றும் கருநாகம்
தேளின் கொடுவால் தீண்டிவிட தீயில் உயிரோ டெரிபோகும்
ஆளைக் கொல்லும் உயிர்வாங்கி அனைத்து மொன்றாய் அணிசேரின்

பேழைகுள்ளே பிணமாகிப் போதலன்றிப் பிறிதுண்டோ
தூளைத் தூசைத் துரும்பென்றும் தேவர்குலமாம் இவையாவும்
மூளைத்திறனில் மானிடமும் முழுதும் இயற்கை வளமாக்கி
ஏழை மனதோ டெம்தமிழர் இயல்பென் றிங்கே செய்தாய் ஏன்

பூவைப் பூக்கச் செய்தாய் பின் போதில் வாடும் தகையீந்தாய்
ஆவைக் கன்றென் றன்புடனே  ஆக்கி யணைக்கு மன்பீந்தாய்
மாவைக் கனிகொள் மரமாக்கி மண்ணில் பசிபோம் வகைசெய்தும்
சேவைக்கென்றோ தமிழீந்தாய் செல்லாக் காசாய் இருவென்றாய்

நாவிற் தேனாய் இசைபாட நல்லோர் தமிழைத் தந்தாலும்
பாவை இனமென் றோர்பாதி பட்டுத் துடியென்று டலீந்தாய்
சாவைத் தந்தேன் சதிபோலும் சரிதம் செய்தாய், மானிடனைத்
தேவைக் கென்றோ மானிடனே தீண்டிக்கொல்லும் குணமீந்தாய்

Monday, 26 May 2014

ஒன்றில் ஒன்று



ஒன்றாம் ஒன்றே உண்டென்றார்கள்
 ஒன்றைத் தேடிக் காணேன்யான்
ஒன்றே துயரம் கண்டேன் வாழ்வில்
  ஒன்றாநெஞ்சம் கொண்டேனாம்
ஒன்றும் இல்லா அந்தந் தானே
 ஒன்றாம் முடிவில் தோற்றுவகை
ஒன்றில்லாத ஒன்றாய் ஆகும்
  உயிரின் முடிவில் ஏது நிலை

ஒன்றே காணும் எண்ணம் கொண்டே
 ஒன்றைக் காண ஒன்றிக்கொள்
ஒன்றோ டொன்றாய் ஆகும் தன்மை
  ஒன்றுண்டானால் வாழ்வோங்கும்
ஒன்றில் ஒன்றும் இல்லை யென்றே
 ஒன்றை எண்ணில் மாயைதனும்
ஒன்றே கடையாம் ஒன்றே எண்ணு
  ஒன்றில் ஒன்றைக் கொள்ளென்றார்

ஒன்றே தெய்வம் என்றால் உலகில்
  ஒன்றாய்  மனிதர் ஏனில்லை
ஒன்றை ஒன்று கொல்லும் வேட்கை
  ஒன்றில்தானே மனித நிலை
ஒன்றை யொன்று அன்பாய் காணின்
 ஒன்றும் தீமைக் கிடமில்லை
ஒன்றாய் காணும் தெய்வம் ஏனோ
  ஒன்றும்செய்யா துள்ளநிலை

ஒன்றை கருதீர் பொன்னில் மண்ணில்
  உள்ளம்கொள்ளும் பெண்ணாசை
ஒன்றைக் கொண்டோர் வாழ்விலின்பம்
  என்றும் தோன்றா துன்பநிலை
ஒன்றும் உண்மைஇன்பம் இல்லை
  ஒன்றும் வேண்டா உள்ளமதில்
ஒன்றாம் தெய்வம்வாழும் அப்போ
  துலகம் கொள்ளும் சொர்க்க நிலை!

ஒன்றும் வேண்டா தெய்வம்ஏனோ
 ஒன்றென் றெம்மை ஆக்கிவிடின்
ஒன்றேதேவன் ஒன்றேகுலமாம்
  ஒன்றே மொழிநாம் ஓரினமாய்
ஒன்றே யெண்ணி ஒன்றின் மீது
  ஒன்றாய் அன்பை உயிர்கொண்டு
ஒன்றை யொன்று ஒடிச் சுற்றும்
  உலகில் இன்பம் கண்டிடலாம்

Thursday, 13 March 2014

கடவுள்

கடவுளைத்தேடும் உள்ளங்கள் மீதே
கடவுள் இருக்கின்றான்
கருவினில் தோன்றி கருகிடும் வரையும்
கலந்தே இருக்கின்றான்
உடலின்காணும்  ஒவ்வொரு திசுவில்
உயிராய்த் துடிக்கின்றான்
உள்ளத்தினுள்ளே  உன்னத ஒளியாய்
ஓங்கி மிளிர் கின்றான்

இடமென எதுவும் இறைவனுக்கில்லை
 எங்கும் இருகின்றான்
இருப்பது ஏனோ எம்முள் இதனை
ஏற்றிட மனமில்லை
கடப்பது ஞானம் கருவினுள் வாசம்
கடவுள்   என்றாகும்
கடவுள் காணின் கட உள் கண்டால்
கருத்துகள் நிறைவாகும்

நடையினிலாடும்  நம்முடை தேக
நெளிவில் அசைகின்றான்
நடமதைப் புரிவோன் நரம்பினில்  கீதம்
நாவொலி ஆகின்றான்
தடம் புரள்வின்றித் தருமத்தை ஓதும்
தண்ணொலி நாதமெனும்
விடையறு கேள்வி விரவிடும்சப்தம்
விந்தையில் கலக்கின்றான்

நடந்திடும்போதில் உயர்ந்திடும் உதிர
நிறைவினில் உறைகின்றான்
கடந்த எம்வாழ்வின் காரணமானான்
காரிய மினியாவன்
கிடந்திடும்போது  கிறங்கிடும் மனதில் 
கேளிக்கை புரிகின்றான்
கேட்பது கொண்டே  கிளர்ச்சியைத் தந்து
கீழ்மையில்  சிரிக்கின்றான்

உயர்வதும் அவனால் தாழ்வதும் அவனால்
உலகதும் அவனாலே
தயவொடு சினமும் தரும் மகிழ்வுணர்வும்
தரணியில் அவனாலே
கயமையின் அழிவு கடமை நல்நீதி
காப்பதும்  அவன்தானே
நியதியும் அவனே நிகழ்வுகள் அவனே
நேர்ந்திடும்  முடிவவனே

நினைப்பதோ ஒன்று நடப்ப தின்னொன்று 
நியதிகொள் உலகமய்யா
நினைந்துளம் ஆற்றும் நிகழ்வுகள் திரிந்தே
நடந்திடும் நேரிலய்யா
வினை செயல் நாமே  எனநினைந்தெம்மை 
வேறிடத் துடித்தாலும்
வனைந்திடும் பானை வடிவது அவனே 
வகுப்பது முரணாகும்

எண்ணங்கள் மீது  இழைபவ னவனே
எதிலும் அவனய்யா
கண்ணிடை தோன்றும் காட்சியின் கர்த்தா
காரணம் கடவுளய்யா
வண்ணங்கள் கொண்டு வரைந்திடு மெங்கள்
வாழ்க்’கை’ என்றாலும்
எண்ணங்கள் கொள்ளும் இருப்பின் கருவோ
இறைவன் எனவாகும்

பிறப்பதுமில்லை பிரிவதுமில்லை
பிறிதென ஏதுமில்லை
இறப்பதில் முடிவாய் இருப்பதுமில்லை
இயற்கையின் சுழற்சிவகை
திறப்பதுமில்லை மூடுவதில்லை
திக்கில் எட்டும் நிறை
நிறமெனும் உருவம் இறைவனுக்கில்லை
நிர்மலசக்தி  நிலை

*

Saturday, 8 March 2014

கரம் கோர்ப்போம


ஓடிநடந்து மென்ன செல்லமே செல்லம் - தினம்
உண்டுங் களித்துமென்ன சொல்லடி செல்லம் - ஒரு
ஆடிவந்தான பின்னர்  ஆவணி வரும் - எங்கள்
அன்னை நிலத்தில் என்றும் துன்பமே வரம்- இன்பம்
தேடிநடந்துமென்ன  பாரடி செல்லம்  - எங்கள்
திக்கில் இருளடர்ந்த பேய்களின் வாசம் - வந்த
பேடி பிறத்தியர்கள் கொண்டனர் நிலம் -நெஞ்சு
பித்துப் பிடித்தழிந்தோம், கொஞ்சமோ வஞ்சம்

நாடிபிடித்து மென்ன தங்கமே தங்கம் - அவர்
நாளை பிழைப்பரென்று சொன்ன சாத்திரம் - இங்கு
ஓடி நிலம்பறிக்கும் புல்லரின் கரம் - எங்கள்
ஓசை  வழியிறுக்க கொள்ளுமோ உரம் - இவர்
கோடி உழைத்து மென்ன தங்கமே தங்கம் -  உயர்
கோபுரக்கள் சுற்றியென்ன  தங்கமே தங்கம் - இங்கு
கூடி உழைத்து உண்ட நெல்வயல் நிலம் - நாமும்
கொண்டோர் பொருள் கவர்ந்து போயினர்எல்லாம்
\
மாடி மனைகள் கட்டி வாழுவர் செல்லம் - உயர்
மன்னர் குலத்தரென்று பேசுவர் தம்மை- கொடும்
பேடி மனத்தரிவர்  செய்யும் இழிமை இந்தப்
பூமி பொறுத்தேனோ பொய்மை வாழவும் - உண்மை
மூடி மறைக்க வில்லை செல்லமே செல்லம்  - ஒரு
மூடர் இருக்கும்  இனம்  சொல்லவா செ ல்லம் - என்றும்
ஓடி ஒருகுலமென் றாவது மில்லை - அவர்
உய்யும் வழி இடையில் தோன்றலுமில்லை

வாடி நடந்துவழி  காணுவோம்  தங்கம் - எங்கள்
வம்சம் எடுக்கும் வீரம் வெல்லது திண்ணம் - அந்தச்
சூடிப்பிறை யுடையோன் கொண்டவள் நெஞ்சம் - வந்து
சுட்ட உதிரம் வலு ஊட்டுவள் இன்னும் -இனித்
தாடி உனது கரம் தங்கமே தங்கம் - நாங்கள்
தன்னந் தனியே இல்லை தங்கமே தங்கம் -வரை
கோடிஎன இழந்தும்  உள்ளவர்  சேரின் - இங்கு
கொள்ளும்  துயர் மறையக்  காணுவோம்  தேசம்

நான் என் செய்தேன்?


பிறந்தேன் வளர்ந்தேன் பெரிதென் றின்பம்
 பெற்றே னல்லேன் இதுதான் நல்
அறம் தேன் எனவும் அறியாதேனோ
 அகத்தென் இருளைக் கொண்டேன் நான்
சிறந்தேன் பருவம் இளந்தென் புடைத்தேன்
 செழித்தேன் எழுந்தே சிரித்தேன் அப்
புறந்தேன் கொள்ளும் புன்னகை கண்டேன்
   பொய்த்தேன் அவளுள் புகுந்தேன் ஏன்

மறந்தேன் என்னை மலரின் தேனை
 மதுவை யுண்ணும் வண்டானேன்
துறந்தேன் தேசம் துடித்தேன் அரண்டேன்
 துணிவை மட்டும் கொள்ளாதென்
பறந்தேன் உயிர்கள் பிரிந்தென் றாகிப்
  பரந்தென் இனமும் அழிந்தேகாண்
இறந்தே னென்போர் இழப்பைக் கண்டும்
 இருந்தேன் ஏதும் செயலற்றேன்

நறுந்தேன் உலகில் நடந்தேன் நலிவை
 நாளும்கண்டேன்  நினைவெல்லாம்
அறுந்தென் எண்ணம் அழிவென்றாக
   அடைந்தேன் பிணியும், தமிழன்னை
குறுந்தேன் கவிதை கொள்ளென் றாள் நான்
 குளிர்மை கொண்டேன் கலைபோற்றிப்
பொறுத்தே னன்றிப் புரிந்தேன் கடமை
 புகழ்ந்தேன் தாயே சக்திதனை

கருந்தென் றலதும் காணா அண்டம்
 கருவின் உயிராய்காண் அன்னை
வருந்தென் படையும் வாழ்வில் செய்யும்
 வருத்தம் தன்னைக் குணமாக்கி
மருந் தென்றாகும் மண்ணின்வீரம்
 மலரச் செய்யும் நாள்மட்டும்
இருந்தென் வாழ்வில் எதுசெய்தாலென்
 இரந்தேனன்றோ  இதுவாழ்வோ?

புதிய பாதை

(புதுத்தம்பதியினர் திருமணம் முடிந்து வண்டியில் செல்லும் காட்சி)


காலைத் தூக்கித் தாளம்தட்டிக் காளை இரண்டு முன்னே பூட்டிக்
  காலை நேரம் சாலையோர மோடுது வண்டி -அதைக்
  காண நெஞ்சம் துள்ளுதடா கடகடவென்றே

வாலை யாட்டி மூச்சுமுட்ட வண்டிமுன்னே தோளுயர்த்தி 
  வைத்தடிக்கு நல்லமாடு வேகமுங் கூட்டி -அது
  வந்த காற்றை மோதி வென்று ஓடுது பார்நீ     
சேலை கட்டும் மாதொருத்தி சின்னப்பெண்ணைத் தாலிகட்டிச்
  சேர்ந்துவாழ இரண்டுபேரும் ஆசையில்கூடி அங்கு
  செல்லுகின்ற வண்டி மீது உள்ளதைப் பார்நீ!
மாலை மாற்றிக் கைபிடித்து மங்கை நெற்றி பொட்டுமிட்டு
  மாது காதல் கொண்ட அந்த மன்னவன்நாடிச் - செல்ல
  மாந்தர்கூடி வாழ்த்துன்றார் மங்கலம்பாடி

ஓலைமீது ஓடிவீழும் கூரைசொட்டும் தூறல் போல
  ஓரக் கண்ணிலூறும் நீரைக் கீழே விழுத்தி - அன்னை
  ஊரை விட்டுப போவதென்று வாடும் ஒருத்தி
பாலைப் போலும் உள்ளங் கொண்டு பாதைமீது ஆடிநின்று
  பாட்டுப்பாடி ஓடும் சின்னக் கூட்டமும் கண்டு - அந்தப்
  பேதையுள்ளம் மீண்டுங் காணும் ஆனந்தம் கொண்டு
சோலைக் காற்றும் வீசக்கொப்பில் தொங்கியாடும் மந்திஒன்று
  சுத்தமான தேனடையை உண்டதன் பின்பு  ஆடிச்
  சோர்ந்து போகும்போது  காணும் தன்மையுங் கொண்டு
சாலையோடு போகும்வண்டி சடசடத்த ஒட்டம்மாறிச்
  சற்று சோர்ந்து போனதென்ன வீதியில் இறங்கி - அது
  செல்லும்பாதை கோவில்பக்கம் மண் அணைவீதி


துள்ளும்காளை தாளங்கேட்டு தூரநின்று கூவும் பட்சி
  துள்ளிசைக்குக் கூச்சலிட்டு பாடுதுகத்தி - அயல்
  தோழமை கொண்டான தொன்று கொஞ்சுது முட்டி
முள்ளைத் தன்னில் கொண்டதாளை மூடிஎங்கும் கூரைநீட்டி
  முன்னிருக்க பாம்புஒன்று போகுது சுற்றி  - அது
  மௌனத்தாலே சொல்லும் சேதி நெஞ்சினில் பற்றி
வெள்ளை நீல வான் பறக்கும் விட்ட பஞ்சு கொண்டமெத்தை
  வைத்தபூக்கள் மீதுறக்கம் கொள்வதுமல்ல - இன்பம்
  வாரி அள்ளித் தூவும் வாழ்வு முற்றிலுமல்ல
உள்ளம் உண்மைகாண வென்று அன்னை சொல்லும் சேதிபற்றி
  ஒன்றுகலந் துறுதிகொள்ளும் இதயமும் கொண்டே-  இவர்
  உலகவாழ்வில் பயணம்போகும் உன்னத காட்சி

பூமி பொறுத்தது ஆழி பொங்குமா?

நீலத்திரைக்கடல் ஓரத்திலே நானும்
நின்றிருந்தேன் வரும்பேரலைகள்
ஞாலத் தரையென்னும் மேடையிலே எழில்
`நாட்டியமாடிக் களித்திருக்க
ஓலத்தை ஒத்தொரு கூக்குரலில் கடல்
ஓங்கி ஒலிப்பதும் ஏனோ என்றே
கோலத்தைக் கூறிடும் காற்றினிடம் நானும்
கேட்டுவைத்தேன் அது ஆழியிடம்

காலைக் கருக்கலும் நாள்விடிந்தும் கடற்
காரிகையே இன்னும் அச்சமென்ன
மேலைத்திசை விழுந் தாதவனும் அதோ
மின்னிக் களிப்பில்மீண் டேறுகிறான்
சேலை கறுப்பிளம் மேனி விட்டும் உந்தன்
சிந்தை வருந்தி அழுவதென்ன
தோலைக் குளிர்கொள நீலமெனும் ஆடை
துள்ளும் எழிலுற நீயுடுத்தும்

ஆடும் இன்பம் விட்டு ஆனதென்ன செம்மை
யாகி அவ் வாதவன் போற்றுகிறாய்
மூடுவெயில் உந்தன் நீர்கவர்ந்தே அந்த
மேகவெளியினில் பஞ்செனும் வான்
ஓடும் அசைந்திட மென் துகிலாய் முகில்
ஓங்குவி தானத் திரை யமைத்தான்
கேடுதனைச் சொல்லி நெஞ்சலறியென்ன
கேட்டுநீதி எங்கும் வந்ததுண்டோ

என்றது மாழி நீர்தா னெழுந்து அலை
ஓங்கிய வேகத்தில் கீழ்விழுந்து
பின்னிப் புரண்டிடும் தென்றல்தனைச் சினம்
பொங்கப் புயலெனும் தீமை சொல்லி
மென்னுள்ளம் பீதியில் அல்லலுறச் செய்து
மீண்டும் மலர்வனச் சோலை சென்றே
கன்னம் தடவியும் பொன்மலரின்வாசம்
கண்டு கவர்ந்தோடும் தன்மை கொண்டாய்

எந்தன் கதையினைக் கேட்டதனால் வட்ட
இன்ப நிலவன்று தேய்ந்தழுதாள்
நந்தவனப் பூக்கள் சோர்ந்து விழ அதை
நாடிடும் வண்டு ரீங் காரமிட்டே
சிந்தனைகொண்டு திரும்பிவிட மழை
சோவெனக் கொட்டிக் கதறியதில்
என்துயர் எத்துணை இன்னல்தரும் அதை
இன்று மனங் கொள்ளப் பாருமய்யா

நித்தம் அலைந்தும் உயர்திரைகள் கொண்ட
நேரிய வாழ்வினைக் கண்டிருந்தேன்
சுத்தம் கொளப்பல நன்மைசெய்வேன் இந்தச்
சுந்தர பூமியில் மானிடர்கள்
ரத்தம் வழிந்திடச் செய்கொலைகள் தம்மை
ராஜமுத் திரையும் கொண்டவராய்
செத்துப்போ என்றே சிரசறுத்து தமிழ்
சொல்லும் இனத்தைப் புதைத்தெரித்தார்

உத்தமன் ஆதவன் ஓடிவிழுந்தெழும்
உன்னத பொன்னெழில் மாலையிலே
புத்துணர் வோடுயர் காலையிலே யிரு
போதிற் செம்மையடி வான்பரவ
எத்தனை இன்பமென் றாடியதும் இன்று
ஏனோ மறைந் துயர்மேவியதாய்
குத்தியழித்திடும் செந்தமிழர் உடல்
கொட்டும் உதிரம் கண்டஞ்சுதடா

அந்தியிலும் காலைப்போதினிலும் அந்த
ஆதவனின் எழில் செம்மைவண்ணம்
செந்தமிழர் வீரம் காட்டுதென நானும்
தேகம் மிளிர்ந்திட மின்னலுற்றேன்
சிந்திவிழுத்தது நற்தமிழர் கொள்சு
தந்திரம் வேண்டிய செம்மைகண்டு
அந்தியும் காலையும் ஏக்கமுற்றும் அது
ஆறாதெந் நேரமும் ஆர்ப்பரித்தேன்

சத்தியமே என்றும் வெற்றி கொள்ளும் எனச்
சாத்திரம் சரிதை நூல்களெல்லாம்
பத்திபல கொண்டு காண்கையிலே இந்தப்
பாரில் நிகழ்வது வேறல்லவோ
ரத்தக்குளிப்பினில் போதைகொண்டு இங்கு
வெட்டிக்களித்திடும் புல்லரினை
சத்தமின்றி காந்த பூமிவிட்டு அவர்
சுற்றும் விண்ணிற் போக கொட்டிவிடு

சுத்தமனங்கொண்ட பூமியென இந்தச்
சோதியெழும் அண்டமாவெளியில்
சித்தமெடுஎனச் சொல்லியென்ன அதைச்
செய்ததில்லைப் புவி புத்தியிலே
மொத்தமும் மண்ணெனப் போனதுவோ இந்த
மோச மிழைப்பவர் குற்றங்களை ’
அத்தனையும் புவிதாங்குதம்மா இந்த
ஆழக்கடல் ஓர்தினம் பொங்குமம்மா

***************

Thursday, 27 February 2014

காலம் கடந்த ஞானம்


மௌனம் அதிசுக ராகம் அதுவொரு
மந்திரம் மனதின்சு கந்தம்
மௌனம் உள்மதி ரூபம் இறையின்சன்
மானம் தூயநல் மார்க்கம்
மௌனம் அகமிடை தியானம் இருளது
மாற்றும் இறைமையைக் கூட்டும்
மௌனம் ஆயுத மாகும் நலிவுறு
மனதை தைரிய மேற்றும்

அமைதி அலைகடல் தூக்கம் அகமிடை
ஆற்றல் தனைதினம் தோற்றும்
அமைதி அநுபவ இன்பம் தனிமையின்
ஆக்கம் புதுசுகம் சேர்க்கும்
அமைதி அழகினைக் கூட்டும் அதிபகை
ஓட்டும் உயர் சுகம் காட்டும்
அமைதி பெருகிட ஆள்மை யுடன்மன
அறியா மையின்முடி வாகும்

நிசப்தம்  நினைவெழ நீசம் மடிந்திடும்
நீக்கும் கறை சுவை சேர்க்கும்
நிசப்தம் நினைவுடல் போர்க்கும் நிம்மதி
நிகழ்வில் நேர்கொளும் பார்வை
நிசப்தம் ஊற்றிடும் தேனை உலகினில்
நிலவும் இனிமையை காக்கும்
நிசப்தம் காற்றின்சங் கீதம் இசைப்பதும்
நிகரில் பிரபஞ்ச தோற்றம்

ஞானம் பெரிதெனக் காணும் உளமதும்
ஞாலம் மிடை உயர்வாகும்
ஞானம் அறிவிலை யாகும் மனதெழு
ரோகம் போக்குங் கஷாயம்
ஞானம் இதுவரை காணா துயருடை
நீளும் வானெழு மேகம்
யானும் இருந்தனன் போதும் உலகினை
ஆளும் தீயெனைக் காப்பாய் !
*****************

கற்பனை ரதமேறி

கலைவான முகிலேறிக் காற்றூதும் வெளிதாவக்
கனவுரதம் ஒன்றுதர வேண்டும்
நிலையற்ற புவிபோலும் நீலவான்வெளி செல்லும்
நெடும்பயண மின்றுகொள வேண்டும்
தொலைவானில் வண்ணமெழும் தீப்புயலின் சூடுதனில்
தொட்டபடி தூரப் விழுந்தேகும்
இலையென்வி நோதமெழும் இன்பங்கள் அதிசயங்கள்
எழில்காணும் ஓருலவு வேண்டும்

ஒரு பயணம் புதுமையுடன் ஒருகோடி ஒளியாண்டு
உறைபெரு விண்ணூ டடைய வேண்டும்.
கருவானில் எழுமதியின் காணுமொளி பால்நிலவின்
குளுமையுடன் சூரியன்கள் தோன்றும்
பெருமலர்கள் ஆளுயரம் பொலியும்படி உயர்வுகொளப்
புதுஅருவி தேன்வழிந்து வீழ
இருசிறகு இணைந்ததெனும் உணர்வுஎழக் கரமசைய
இலகுவென வான் மிதக்க வேண்டும்


மலர்களொளி வீச அதில் மத்தாப்பின் வண்ணவகை
மணித்துகள்க ளாய்த் தெறிக்க வேண்டும்
கலகமின்றிக் கனிமொழியும் காணுருவம் ஒளியெனவும்
கதைபேசிக் குலவும் வகைவேண்டும்
சில நதிகள் வாசமெழச் சென்றதனில் நீர்பருகச்
சிலுசிலெனக் குளுமைகொளு முணர்வில்
தொலைவில்விண் மீதுபறந் துலவியெரி தீயருகில்
தொட்டவிதமாய்த் திரும்பவேண்டும்

தெருவெங்கும் சிறுரதங்கள் திருமகளி னழகுடனும்
திகழுமெழிற் தேவதைஉட் செல்ல
வருமிளைய தென்றலதில் வண்ணநிறப் புகையெழுந்து
விழிகளின்முன் விளையாடவேண்டும்
பருகிடவெண்மலர்த் தேனும் பாவெழுதும் போதைதனும்
பெருகுவெனக் கவிநூறு தந்து
உருகி மனம் வழிந்தோட உணர்வுதனில் தீபரவ
உயிர்கள் மகிழ் வடையுந் தமிழ் வேண்டும்

நெளிவுகளும், வளைவுகளும் நீரோடை மலைகளென
நீந்திவிண் வெளிகாண வேண்டும்
பொழியமுதத் தூறலெனப் புதுவிளக்கினொளி வெள்ளம்
புகுந்தேகும் விளையாட்டு வேண்டும்
மொழியெதுவும் பிறிதின்றி மதுவென்சுவைத் தமிழுடனே
மனிதரெனும் பதுமைகளின் உலகம்
ஒளியழகுத் திருநாடும் உணர்வதனில் திறனோடும்
ஒருமையுட னாயிருக்க வேண்டும்

கருவயலில் உறைகுளிரில் கண்கவரும் தோரணங்கள்
காணுமொரு எழிற்கோலம் வேண்டும்
பெருகும் செறிகயமையுடன் நெறிதவறும் நிகழ்வுமின்றிப்
பசுமையுணர் வானநிலை வேண்டும்
உருகி மனம் வழிந்தோட உயரிசையில் நடமாடும்
உருவங்கள் உலவிவரவேண்டும்
தருணமதில் காற்றோடு தலைநிமிர்ந்து படபடத்து
தமிழன்கொடி உயர்பறக்கவேண்டும்

நீலமலை உயர்ந்தநெடு முச்சிதனில் நின்றண்டம்
நிலைமை தனைப் பார்வையிட வேண்டும்
கோலமிடு வாசலெழிற் கோளங்கள் சுற்றுமெழில்
குழிவானை  விழிகாண வேண்டும்
வாலெரியும் நட்சத்திரம் வளர்பிறையும் ஒளிவீச்சும்
வடிவுற்ற அசைவும் விழிகாண
காலம்சில நாள்களென காணுமெழில் மனமகிழ்ந்து
காயும் இந்த பூமிவரவேண்டும்

கொட்டு முரசே!

பூமியில் யாவரும் ஒன்றென வாழ்வினைப்
பெற்றனர் கொட்டுமுரசே -இதில்
நாமதில் மூத்தவர் நம்மி லிளையவர்
பேதமில் கொட்டுமுரசே
வா மிதமாய் நமை எண்ணிடும் தீமைகள்
வெந்தன கொட்டுமுரசே இங்கு
நாமினி யாவரும் ஒன்றெனப் பாடியும்
ஆடுவர் கொட்டுமுரசே

தீமைஅகன்றிட தீங்கெழும் எண்ணங்கள்
தீய்ந்தன கொட்டுமுரசே -இனி
வாய்மை யுடைத்ததோர் வாழ்வு செழித்துமே
வாழென்று கொட்டுமுரசே
தேய்மனம் யாவிலும் தென்றல் வருடிட
தேறென கொட்டுமுரசே - அந்தத்
தெய்வமொன்றே பெரிதென்று முழங்கிட
தோமென்று கொட்டுமுரசே

சொல் தமிழானது சூரியனொத்தது
சொல்லி முழங்கு முரசே - இனி
வெல்லும் தமிழ் நல்ல வீரமெடுத்திடும்
வீறுடன் கொட்டுமுரசே
நல்ல மனங்களில் அன்பு உணர்வெழும்
நாளென்று கொட்டுமுரசே - இனி
நானல்ல நாமெனும் எண்ணம் பரவுதல்
நிச்சயம் கொட்டு முரசே

தேமதுரத் தமிழ்நாதம் பரவிடச்
செய்யெனக்கொட்டு முரசே நல்ல
மாமதயானை யின் தீரமெடுவென
மேவிஎழும் சத்தம்கொண்டே
பூமியதில் வெகு தொன்மொழியானது
பொங்கிட கொட்டுமுரசே -இனிப்
புன்னகையன்றி பொலிவதுவேறில்லை
போய்எழு கொட்டுமுரசே
— w

Saturday, 22 February 2014

காத்தருள் தெய்வமே

விழிமீது ஒளிதந்து வெளிமீது நிலைகொண்ட
அழியாத பெருந்தீபமே
எழிலான மலர்வாசம்  இழைகின்ற காற்றோடு
எமைவாழப் புவியீந்தனை
பொழிலாடி விரிகின்ற  புனல்மீது அலைபோலப்
பொலிகின்ற உணர்வீந்தெமை
வழிதேடி விரிகின்ற  வாழ்வின்பம் தனைவேண்டி
வழுவோடு அலை என்றனை

மொழிகூறிக் கதை பேசி  முழுதாகத் தமிழ்கூறி
முடிவான வரையாடினோம்
அழியாத உடலென்றே அகங்கார மதம்கொண்டு
அறிவானததைப் போக்கினோம்
பழியாவும் எமையென்று  பரிதாபம் உலகன்று
படைகொண்டே எமைமோதவும்
குழியாகப் பெரும்வாழ்வு குலைந்தாக எமையிங்கு
குடியாக்கி வழி செய்தனை

அழுதாலும் விழுந்தாலும் அதிதீபஒளியான
அருஞ்சோதி யெமதன்னையே
தொழுதோமே எமைக் காத்து துயரென்ன அதைக்கேட்டு
துடிக்காது இரு என்றனை
மழுவேந்தும் சிவன் வந்து மண்மீது நடமாடி
மறையென்று  முடிவாக்கியும்
தொழுதாலும் இரங்காது துயர்கண்டு இறங்காது
துடிஎன்று தொழில்செய்தனன்

புழுவாக வாழ்வென்ப புரியாமல் நெளிந்தோடிப்
பொழுதான பல ஓட்டினோம்
வழுவாக நடைபாதை வலமாக இடமாக
விழிமூடி  நடை கொண்டனம்
தொழுதோமின் றருள் வேண்டித் துகளோடு பெருங்கோளம்
தொலையண்டம் தனையாக்கியே
வழுகாது சுழன்றாடும் வகையான செய்தாயே
வா எம்மைக் காத்தன்பு செய்

Thursday, 20 February 2014

உலவும் நிலவே ஓடிச்சொல்!!!

நேற்றிருந்தாய் இன்றில்லையேன் வெண்ணிலாவே - அந்த
நீலவெளி மேகத்திலே விண்ணுலாவியே
தோற்றி விட்டால் பொன்னிலங்கி மின்னிடுவாயே - இன்று
தேயவைத்து யார் மறைத்தார் கூறு நிலாவே
காற்றும் மேனி தொட்டுமாலை சென்றிடும் வேளை - நீயும்
காதலுளம் கனிய வைப்பாய் காண்பவர்மீதே
சாற்றுமொழி வார்த்தை கொண்டேன் பொன்னின் நிலாவே- இச்
சங்கதியை அங்கிருந்தே கேட்டிடுவாயே

வீற்றிருந்தார் மன்னர் குலம் செந்தமிழ்தானே - அன்று
வீடுமனை கோவில் கட்டித் தந்ததனாலே
நாற்று நட்டு நெல்லுடைத்துத் தின்றவர்வாழ்வு- அற்றை
நாளிலொரு சொர்க்கமென்றே கண்டது ஊரே
தூற்றிமக்கள் தீயழிக்க செய்தவர்யாரோ - அவர்
தெய்வத்தமிழ் கொல்ல மனம் தீதுகொண்டாரோ
ஏற்றி வைத்த தீபமெல்லாம் எங்கே நிலாவே - இங்கு
இருள்மிகுந்தே உயிரழிந்த தேது சொல்லாயோ

ஆற்றினிலே வெள்ளம்வரப் படகினில் நாமே - அதில்
அலையடிக்க இடையில்நின்று சுழன்றடித்தோமே
மாற்றமில்லை போகுந்திசை ஒன்றெனவாகி - நாம்
மனமெடுத்தே துடுப்பசைத்திட வேண்டும்நிலாவே
வேற்றுமையாய் நாம் நடந்திடில் பொன்னின்நிலாவே - நாம்
வீற்றிருப்பது கூற்றுவன் கரம் ஆகும் நிலாவே
சீற்றம்கொள்ளினும் ஈற்றில் ஒன்றிடு கொள்கைவிடாதே - நீ
சேர்ந்து நின்றிடு தீமைவென்றிடு விடிந்திடும்நாளே

சுடரே ஒளியே!

காலத்தின் சுடரே காணரும் விளக்கே காட்சியின் கருமுதலே
ஞாலத்தின் ஒளியே ஞாபகத் தாயே நானுன்னைக் காணேனோ
சீலத்தின் உருவே சிந்தனை வடிவே தீந்தமிழ் தருபவளே
கோலத்தை நானும் கண்ணொடுகாணும் காலமும் வாராதோ


நீலத்தில் தீயும் நெஞ்சத்தில் சூடும் நீயெனக் கண்டுகொண்டேன்
ஆலத்தில் சாவும் அன்னத்தில் வாழ்வும் ஆக்கி யளித்தவளே
சாலத்தில் பொய்மை சற்குணம் யாவும் வைத்தவள் நீயன்றோ
தூலத்தில் மென்மை தூரத்தில் தோற்றம் தேவிநீ கொண்டாயோ

காற்றொடு மூச்சாய் கண்ணிடை ஒளியாய் கற்பனையில் வாழ்வும்
தோற்பொதிஉள்ளே துன்பத்தின் தோற்றம் தந்தெமைச்செய்தாயே
சீற்றத்தில் ஆர்வம் செய்முறை தோல்வி சிறுமையில் உழலென்று
நாற்றத்தில் புரளும் நகைப்பினை கொள்ளும் நலிவையும் தந்ததென்ன

மாற்றத்து மூலம் மங்கையின் யௌவனம் மந்திரப் பொன்னழகு
வேற்றதன் ஆர்வம் வீறிட்ட போக்கு வித்திடச் செய்தவளும்
கூற்றுவன் கொள்ளக் குற்றத்தின் தீர்ப்பு கொள்கையும் செய்தளித்து
தேற்றலுமின்றித் தேகம் வதைப்பாய்  தீர்ப்புக்கள் இப்படியோ

சாற்றின் இனிமை சேரும் கரும்பாய் செய்துலகில் படைத்தாய்
ஊற்றெழும் உள்ள வெம்மை வெறுப்பு உள்ளத்தில் தோன்றவிட்டு
சேற்றினில் பூக்கும் செந்தாமரைபோல்  தேகத்தைச் செய்தவளும்
போற்செழும் பூவில் போதையை தந்தோர் போதில் கருகுவதேன்??

கனவுகளில் காணும் இன்பம்

கிண்கிணென்றே ஒலிக்கின்ற மணிகள்- கூடநின்றே
குளுகுளுக்கத் தொட்டோடும் காற்று -கண்மறைய
விண்ணிருந்து தூவுமெழிற் பூக்கள் - விழியகன்று
வெளுவெளுக்கும் வரைகாணும் காட்சி சுற்றிவர
பண்ணெழுந்து பாடலிசைநாதம் பக்கத்தில்
பாதமொலி கேட்டாடும் பூவை  ஆடலிடை
புன்னகைத்து கண்ணடிக்கும் பேதை -கண்டுமவன்
பூவெடுத்து நுகர்கிற காட்சி

மாலையிலே மஞ்சள் வெயில்மோகம் மனம்மயங்க
மணி முத்து வைடூர்யம் வைரம் எட்டிவைக்க
காலைத்தொடும் கனகமுடன் ரத்னம் கண்டெடுக்கக்
கோமேதகம் பக்கமெழில் நீலம் மரகதமோ
மேலைவைத்த தென்ன புஷ்பராகம் ஆசைதரும்
மேகலைக ளோடுஒட்டி யாணம் வெள்ளிமணி
மூலையிலே கொட்டிவைத்தகாசு கண்டுஅள்ள
மின்னுமவை கண்ணாடித் தூள்கள்

வெண்ணிலவு பொன்னொளிர்ந்த வேளை கண்சிமிட்டி
விளையாடிச் சிரிக்கும் விண்மீன்கள் பூமியிலே
தண்சுனையில் ஆடுமலை வேகம் கண்ணழகாம்
தூரத்தேபோகும் முகில் காட்சி இத்தருணம்
எண்ணமதில் ஏற்றமுறும் இன்பம் எழுந்துவிழும்
ஆழ்கடலின் ஓடுமலை போலும் எங்கிருந்தோ
கண்ணெதிரில் மின்னுகின்ற வானம் கடுமிருளில்’
கைதட்டும் ஆகாயப் பெண்கள்

போதைதரும் கனவுகளின் மிச்சம் தேன்மலராம்
பூவிரலில் நாதமிடும்வீணை புல்லரிக்கக்
கோதையவள் கைபிடிக்கும் மென்மை கைமலரக்
குவளையிலே தேன்கனியின் சாறு மூதறிஞர்
சூதுஎனும்  விளையாட்டில் ஆர்வம் சுற்றிநிற்க
துரியோதனன் தருமர்வாதம் ஆடவென
பாதகமோ பண்பறியேன் நானும் பார்க்கவிழி
பரிதாபம் தூக்கம் விடும் நேரம்

அணைப்பின் துயரோ சுகமோ

நீரணைத்து நதிகுதித்துப் பாயுதம்மா - அங்கு
 நீள்கருத்த முகிலணைத்த வேளை குன்றில்
வேரணைக்க மண்நெகிழ்ந்து விட்டதாலே - நல்ல
 வீறெடுத்து மரம் வளர்ந்து காணுதம்மா
ஏரணைக்கத் தான்புரண்ட சேற்றுமண்ணில் - இன்று
  ஏற்றம்கண்டு நெல்நிமிர்ந்து நிற்குதம்மா
யாரணைக்க  நாம்பிறந்து வந்தோமம்மா - இந்த
   ஞாபகத்தை மேனி கொண்டவாழ்வின்போது

போரணைக்க வாழ்வணைந்த பூமிமீதில் - ஏன்
 போதணைக்க அன்னை கையில் போய்க்கிடந்தோம்
மாரணைத்துப்  பால் குடித்த அன்புதன்னும் - இன்று
  மாறியெம்மை தீதணைத்த காட்சியு மேன்
ஊரணைக்கும் தீகொளுத்தி விட்டவர்கள் - தம்மை
  உலகணைத்துக் கரம்கொடுத்த போதிலெம்மை
பாரணைத்து நீ கொள்ளாது விட்டதென்ன - இந்தப்
 பாவம் என்னும் விதியணைத்த கோலமென்ன 

நாரணைத்த பூகழுத்தில் ஏறுமம்மா - உச்சி
ஞாயிற்றின் கதிர் அணைப்பின் வீழுமம்மா
சேரணைத்துக் கொள்கரத்தி னாலேயெம்மை - அந்தச்
சேதம்வந்து வாழ்வணைக்கும் முன்னதாயே
பேரணைக்கும் புகழ் இனிக்கும் போதில்லாமல் - என்றும்
பூஇருக்கும் போலுமென்மை யன்பு கொண்டே
நேரிணைந்து வாழ்வதன்றி வேறு மாற்றம் - இங்கு
நீயிணைத்துச் செல்லல் என்ப  விட்டிடம்மா

கூறனைத்துச் சேதிதன்னும் கொண்டு எம்மை - இக்
கூடிணைத்துப் பூமிவிட்ட கோலமென்ன
ஆறணைத்துக் கொள்ள ஆழிபோவதன்ன - எங்கள்
ஆற்றல்கொண்ட உயிரணைத்த மேனிதானவ்
வாறிணைந்து வாழும்போது விட்டுநிற்கா ஓர்
வேடிக்கை என்றேகம் துன்பம் செய்ததென்ன
சேறணைத்த மண்விளைந்த பூவென்றாகி  காலம்
சீரணைத்த வாழ்வு காணச்செய்வை யம்மா

குப்பை மேனி

என்னநினைத்து மண்ணில் மாந்தர் - சிலர்
  இகழ்ந்து பிறரை நகையாடும்
தன்மை எடுத்தனரோ அறியேன்  -அந்தோ
  தவிக்கும் உளமும்கொண்டு நின்றேன்
மின்னும் மகிழ்ச்சி கொண்டமுகமும் - அவர்
 மேனி மினுக்கும் விதம் கண்டால்,
இன்னும் குழந்தை மனம்தானோ -  இவர்
 இருக்கும் நிலை கிணற்றில் மீனோ 

நேசமுடைத்த இந்த உடலும் - அதில்
  நெய்யில் எரியும் நெருப்புணர்வும்
கூசும் ஒளிகதிரி னுதயம்  - வரக்
  கொள்ளுந்  துயில் கலையக் காணீர்
கேசம் கலைந்தவிதம் வாயின்  -கடை
   கிடப்பில் வழிந்தஎச்சில்  தோற்றம்
வீசும் வாடை சிறுநீரும் - உண்டு
   விளைந்து கழித்த வகையாவும்

காணச் சகிக்காத நிலையும் -அதைக்
  கண்டும் மனம்கொள்ளும் கர்வம்
நாணமெழும் குடலின் நாற்றம் - விரல்
   நகமும் முடியும் கழிவாக்கம்
வீணே பூசி மெழுகேற்றி - வழி
   வியர்வை துடைத்து மனம் மாற்றி
ஆணும்பெண்ணும் கொண்ட அவலம் - இது
   அழகுவாழ்க்கை எனும் மாயம்

மேனி கொளும் அழகை போற்றும் - இந்த
  மாந்தர் குடல் புழுக்கள் வாழும்,
தேனின் உதடு கசப்பாகும்  - உள்ளே
  தீனும் கிடந்து வாய் நாறும்
தானிவ் வுடலுணர்வு காதல் - கொண்டு
  தன்னைத் தரும் இளமை இன்பம்
ஏனோ கழிவுகளின் இறக்கம் - அவை
  இருக்கும் பாதைகளின் மோகம்

கூடிக் கொண்டியற்றும் செயலும் - ஒரு
   குழந்தை  குடும்பமெனப் போற்றும்
ஆடி திரியுமிந்த உலகில் - இந்த
   ஆகத்திமிர் பிடித்த நிலையும்
கோடியெனக் காலம்போயும் - இவர்
   கொள்ளும் கனவுகலையாதோ
தேடித் திரிந்து பணம் கொண்டும்- கொள்ளத்
   தேவையற்ற வழிபோவர்

சாலச் சிறந்த பொய்கள் கூறி - இங்கு
    தானே அழகென்றிவர் ஆடும்
காலக் கருமை கொண்டமனிதா - நின்
   கண்கள் திறப்பது மெப்போது
நீலம் நிறைந்த  விண்ணில் நின்று - கீழே
 நீயும் சிந்தைகொண்டு பாராய்
கோலம் மனித வாழ்வெதுவோ -மனம்
  கூட்டிக் கழித்தும் உண்மை பாராய்

பூமி யென்றசாக் கடையில் - இங்கு
   புழுக்களாய் நெளியும் மனிதர்
தாமிக் கழிவுஎனும் குருதி -  கொண்டு
  தன்னில் கிடந்தழியும் சதையும்
போமிவ் வுணர்ச்சி கொளும் பாவம் -அதில்
   பிறரைக் கெடுக்கு மனபாவம்
நாமிவ் வழியில் சொல்லும்பொய்கள் -இன்னும்
   நலிவு களவு பெருமச்சம்

ஆன தொரு வாழ்வைகொண்டு - உளம்
  அகந்தை நிறைந் தயலைக் கெடுக்கும்
தானேஎனும் கர்வம் மீறித் - துள்ளும்
  தன்மை வெறுமை எனும் ஞானம்
ஏனோ இதைமறந்து காணும் -இந்த
  இயல்பு புரியவில்லை நானும்
வீணே உரைத்துமென்ன உலகில் - அட
   விந்தை மனம் இருளின் குகையே!

**************