Friday, 13 June 2014

முதுமை படர் மேனி ( பெண்ணும் நானும்)

அழகுறு குழலும் அலைமுகில் வடிவாய்
மெழு கதன் வண்ணம்  மிக நரை கொள்ள
குழலுடை இனிதாய் குரல்தரு மென்மை
வழுகிட மெலிதாய் வாயசை வாக
நிழல்தரு தண்மை நிகரிளம் மேனி
பொழிலுடை அலையின்  பொலிவடிவேந்த
கழலுறு மணியின் கடுநடை யோசை
முழுதென இலதாய் மெதுநடை பழக

சுழலொரு புயலின்  செறிவலி குறுகி
தழலெழ மனதை தகித்திட வைத்தாள்
முழமொரு பூவை குழலிடை சூடி
விளைவினி ஒடியும் வெறுமிடைஎன்னும்
தளதளமேனி தகையிளந் தாடும்
துளைவிழி யம்பு தொடுவலி குன்றி
சுளை பலகனியின் சுவையிவள் அதரம்
விளை வெனும் புகழும் விரயமென்றாகி

தடிகரம் கொண்டே தவழ்ந்திடும் மழலை
அடியெடு நடையும் அருகிட விழல்போல்
துடிப்பது மடங்கித் துறுதுறு பார்வை
வெடித்திட முயலும் வெறியுணர் வோய
கடித்திடக் கனியும் கணை மதன் மலரும்
வடித்திடு மதுவாய் வந்தவள் இன்றோ
அடித்திட அரவம் அதன் கிடைபோலே
நடித்திட வைக்கும் நயன் கெடுவாழ்வில்

எடுத்திட முடிவாய் இளமையை நம்பி
துடுப்பிழந் தோடம்  திசைநேர் விடும்போல்
தடுப்பிழந் தலைகள் தொடத் தொலைவாகி
கொடுத்தோன் பறிக்கும் குயவனின் கலயம்
அடுத்தெனும் உடலை அமுதுகொண் டேற்றி
விடுத்து நீரூற்றி வீம்பினில் திழைத்துப்
படுத்திடக் கனவும் பகலினில் தினவும்
எடுத்துண்மை அறியா இருளிடை வாழ்ந்தோம்

வெய்யிலில் காய்ந்து விழுமழை புரவி
பொய்யினில் வாடி புறந்தள்ள ஓடி
செய்குணம் வஞ்சம் திரிந்திடமொழிந்து
கையினில் களவும் கனிமலர் பேச்சும்
மைவிழி மாதர் முனைந்தயல் கொண்டு
மெய்யிடை  ஈரம் மிகச் சுவைகண்டு
தெய்வம் மறந்து திருமலர்ப் பாதம்
உய்வது விட்டே உலகிடை நலிந்தோம்

No comments:

Post a Comment