Friday, 13 June 2014

புத்தாண்டு வாழ்த்துக்கள் போகுமோ

சூரியன் மேற்கில் உதிக்கின்றது - வண்ணச்
சோதிநிலா சுட்டு வேர்க்கின்றது
காரிருள் காலை குவிகின்றது - நிலம்
கொள்ளும் அரவிந்தம் பூக்கின்றது
ஏரியை விட்டு மீன் போகின்றது - அவை
ஏறிமரம் தாவி வீழ்கின்றது
வேரினில் நின்ற மரங்களுமோ - இன்று
வீறு நடைகொண் டசைகின்றது

வாரியடித் தலைபொங்குநதி - கடல்
விட்டு மலையேறப் போகின்றது
சேரியில் கன்றோடித் துள்ளுகுது - அது
தேடும்பசு அப்பா என்கிறது
பாரினில் மாற்றம் தெரிகின்றது - அவை
பாவங்களைக் கொண்டு சேர்க்கின்றது
தேரினில் தெய்வம் குறைகின்றது -எங்கும்
தேடியும் பஞ்சம் விளைகின்றது

போரினில் இச்சை பெருகின்றது - அது
பூமியில் நாசம் விளைக்கின்றது
பாரினைச் சூரியன் சுற்றுகுது - அதைப்
பார்த்து மனம் திக்கு திக்கென்றது
தூரிகை வண்ணம் மறக்கின்றது - அது
தீட்டியதோ கருப் பாகின்றது
பாரிய துன்பம் விளைகின்றது - அதைப்
பைந்தமிழே விலை கொள்கின்றது

வாடிய பூவிதழ் நெக்குவதும் - கண்டு
வண்டு அரண்டோடிச் செல்லுவதும்
நாடிய தென்றலும் கண்டதுவோ -அது
நாற்ற மெடுத்திடப் போகிறது
பாடியதோர் குரல் சிக்கியது - அவர்
பாடுமிசை காதில் குத்தியது
கூடியவள் நடமாடுகையில் - சிறு
கோணலில் காலும் சுளுக்கியது

கோடையில் பேய்மழை ஊற்றுகுது -அது
கூடிச் சிவப்பபெனக் காணுகுது
ஆடையற்ற விதம் வீதியிலே - பெண்கள்
அம்மண மேனி கிடக்கின்றது
கூடையில் பாவம் நிறைகின்றது இதைக்
கோவின் திறைசேரி கொள்கின்றது
பாடைகளின் தொகை கூடுவதும் - புவி
பார்த்துப் பரவச மாகின்றது

மேடையில் பூக்கள் சொரிகின்றன - அங்கு
மன்னன் நடையொலி கேட்கின்றது
ஜாடையில் பேசிய தேசங்களின் - இனம்
யந்திரங்கள் கொண்டு போடுகுது
பேடைகள் ஆடவர் பூங்கிளிகள் = கத்தப்
பேய்களின் இராச்சியம் ஓங்கியது
காடையர் கைகள் உயர்கின்றது - அதில்
காமப்பசிக் கிரை நம்மவரோ?

ஓடையிலே மலர் கூடையிலே - எழில்
கூடுமலை பொய்கைச் சோலையிலே
மேடையிலே மணிக்கோவிலிலே - நல்ல
மென்னிசை கோலம் கொள் பள்ளியிலே
சோடைப் பனைமரக் கூடலிலே - எங்கும்
செல்லு மிடமெங்கும் நாட்டினிலே
காடையர் கைத்திறன் காண்கிறது - எங்கள்
கன்னித்தமிழ் இனம் சாகிறது

போலிகள் ஆளுமுலகமிது - இதில்
போவன யாவும் தலைகீழிது
தாலிகள் மெல்ல அறுகின்றது - துயர்
தாங்கும் தமிழ்பெண்கள் காணுலகு
காலில்லா மேனி நடக்கிறது - அதைக்
காணச் சுவைத்திடும் பூமியிது
மேலிடத்துப் பெரு இராச்சியங்கள் வாழ்த்தி
மின்னஞ்சலில் சபாஷ் போட்டிடுமோ

No comments:

Post a Comment