Friday, 13 June 2014

குளிர்காற்றும் கொடுங்கோலனாக

ஊதிவீசுங் கூதல்காற்றே ஒருமுறை என்னைப் பார்
.உள்ளம் நொந்தே ஓடும்போதேன் ஓசையிடுகின்றாய்
பாதி தேயும் சந்திர ரூபம் பார்த்தே மகிழ்வாயா
பாவம் என்றே பால்வெண் நிலவின் பக்கமி ரங்காயா
நீதித்தேவன் நிம்மதியாக நித்திரை கொள்கின்றான்
நீலக்கடல்மேல் காக்குந் தெய்வம் நெஞ்சம் கல்லானான்
ஆதிப் பரமன் அங்கையற்கண்ணிக்  அரைகொள் ளென வீந்தான்
யாரைக் கேட்போம் யாரும் தேடாப் பாலைவன மானோம்

சேதிசொல்லும் சங்கும் ஊதித் தென்றல் கொண்டோடி
செய்யும் விளைவும் தீதும் நன்மை சொன்னோம் கேட்டார் யார்
ஓதிவேப்பங் குழைகொண்டாடி ஓடச்சொன்னாலும்
ஏறும் எண்ணம்  இல்லாப்பேயில் இரக்கம் கொள்ளல்போல்
சோதிக் கனலாய் சூழ்ச்சிநுட்பம் சற்றே பெரிதாக 
சொல்லாப் பொய்மை சொல்லிக்  காதில் சுற்றும்பூவாக
போதித் தருவின் கீழேகண்ட புண்ணிய மாநாமம்
புன்மை பொலியப் பொழியும் உதிரப் புனலில் நீராட

நீயும்காற்றே நெஞ்சம்கொண்டு நினந்தே எம்மைப் பார்
நெற்றிவியர்வை நிலம்மீ தூற்றி நிதமும் சோறுண்டோர்
காயும் பஞ்சாய் கடுவெம்பசியில் கைகொள் நீருண்டு
சாயும் வேளை சற்றேதூங்கச் சஞ்சலம் செய்தாயேன்
சேயும் இன்றித் தாயோ நிலவைக் கண்டே விழிஊற்றிச்
சோறும் ஊட்டப் பாலகனின்றி சுற்றும் நிழல் பார்த்து
நாயும், காணா நலிவைக்கொண்டே நாளும் தூங்குங்கால்
நீயுமகுளிராம் நீசக்கரமின் நிலையில் தொடலாமோ

ஓலைக்குடிசை உரிமைசத்தம் உல்லாசச் சிறுவர்
ஓடியாடி உழுதுண்வயலில் உழைப்பின் வழிகண்டும்
வேலை அசதி விட்டேகணவன் விருப்பில் மலர்வாகி
வேளை விடியல் முன்னே எழுவாள் விளை செந்தீகண்டும்
காலைக் கதிரைக் காணும் கமலம் கனவில் நிறைகொண்டு
கையில் வேலை கடமைஎன்றே காணுமின் வாழ்வில்
காலை கட்டி காதற்பெண்டிர் காயம்  சுவைகொள்ள
காணும் காட்சி வீரத்தமிழ் இற் றைப்புறமோ அகமோ சொல்

தூண்போற் தோளும் வேளத்திமிரும் தொலைவான்அதிர்வோடு
தொட்டால் மலையும் தூளென்றாகும் தொன்மைத் தமிழ்வீரம்
’வீண் எம்மெண்ணம் வீரத் தமிழே  வெற்றிச் சங்கூதும்
வேண்டாமென்று விடியல் முன்னே  விரைந்தே பகையோடும்
மாண்பும் மறமும்  மனதில் தீரம் மங்காப் புகழ்கொண்ட
மரபுத் தமிழா மறந்தா போனாய் மதியைக் கொள்ளாது
கேண்மை என்றே கூடாப்பகையின் கூடாரத்துள்ளே
கூடிகொள்ளக் கோழையல்ல கொள்ளாய் வீரம் கொள்!

No comments:

Post a Comment