Monday, 16 June 2014

தமிழ் வளர்ப்போம்

நாட்டில் நலிந்தோடி நாமுழன்று 
  நலம்தேடி நாளில் வந்தோம்
கூட்டாய் பலமெடுத்தே வென்றிடவும் 
  கொள்கைதனை கொண்டோமா சொல்
தேட்டமெனுங் கல்விதிசை திக்கெதெனத் 
 தெரியாது தொலைப்போமா சொல்
நாட்டின் எதிர்கால நம்மிளைய 
  வீரர்களே நற்றமிழ் கொள்வீர்

பூக்கள் சொரியட்டும் புன்னகையும் 
  பரவட்டும் பொலிந்தே இன்பம்
நாக்கில் சுவைத்தமிழே நல்லுணர்வாய் 
  விரியட்டும் நலிந்து துன்பம்
போக்கில் தமிழ்வளர்ந்து பெருவளமும்
  கொள்ளட்டும் புகழ்ச்சி கொண்டே
நோக்கில் சிறப்போங்கி நிற்கத் தமிழ் 
   நிலையத்தை நெஞ்சே வாழ்த்து!

ஆர்க்கும் முரசொலித்தே  அறம்தன்னைக் 
  கூட்டட்டும் அன்பு கொண்டே
சேர்க்கும் கலைத்திறனும் கல்வியதும் 
  சிறப்புடனே செறிந்து காண
கோர்க்கும் மணியாரம் கொள்ளும் 
  எழில் முத்தேபோல் குழந்தையுள்ளம்
தேர்ச்சி பெருமளவில் சிறக்கவெனத் 
  தமிழென்ப தினம் படிப்பீர் 

கற்கும் மாணவர்க்கும் கற்பிக்கும் 
  ஆசிரியர் கடமை கொண்டோர்
உற்றோர் வழியினிலே உருவாக்கி 
  வழிநடத்தும் உயர்ந்தோர் உள்ளம்
சற்றும் நெறிவழுவா சத்தியத்தின் 
  நேர்வழியில் செல்லென்றோதும்
முற்றும் ஓர்குடைகீழ் கொண்டார் 
  பெருந்தகை நம் தலைவர் தானும்

ஐயா பெரியவரை  அகமகிழப் 
  போற்றினோம் அன்புகொண்டு
மெய்யாய் உடல்வருந்தி மேதினியில் 
  தமிழ்தன்னை மிளிரவைக்கும்
செய்யக் கடுமை எனும் செயல்களையும் 
  சீருறவே செய்தளிப்பார்
கையை பற்றியவர் கனவெதுவோ
  இலக்கதனை காணச்செய்வோம்

வையகமும் புகழ்ந்தேத்த வெய்யவனாய் 
  ஒளிர்வாழ்வு விளங்க வாழ்த்தி
மெய்கொண் டிலங்குதமிழ் மேன்மையுறச் 
  செய்கநற் பணிகள்தானும்
எய்யும் ஓர்அம்போடி இலக்கடையும் 
  ஈதேயாய் இலங்கும்வண்ணம்
தெய்வச்சுடரொளியாம் திகழ்வல்ல 
  தீபத்தை தொழுது நின்றேன்

No comments:

Post a Comment