Monday, 16 June 2014

தென்றலே புயலாகும் தீரம் தா

தென்றலே வாராயோ தேடுவதென் எனைத்
  தீண்டவும் மாட்டாயோ -பக்கம்
நின்றவ ளன்னையும்  நீவிய கூந்தலை
  நீதொட்டுச் செல்லாயோ - இன்று
சென்றதென் வாழ்வினில் சீரிய தாம்மனச்
   செம்மையும் காணேனே - இங்கு
ஒன்றென நின்றனள்  உள்ளத்தில் மெல்லியள்
   உன்துணை கூடாதோ

கன்றென ஆவினைக் காணத் துடித்திடும்
  காலமும் கொண்டேனோ - இதில்
வென்றவர் செய்கையில் வீணில் கொடுமையை
  வீரமென்றார் நீயோ -அன்று
தென்றல் என்றாகிடத்  தேசம் நடந்ததென்
   தீப்புயல் ஆகாயோ -  அவர்
சொன்னது பொய்மைகள் சுடெழவோ புன்மை
 சுக்கு நூறாக்காயோ

மென்னலைப் பொய்கையின் மாமலர்மீதினில்
மேவிடும் மாலை யிருள் - அதைப்
பொன்னென ஆக்கிடப் போதை தரு மாலைப்
போதினில் மஞ்சள்வெயில்  நின்று
வென்றனர் இன்றென  வீரத்தமிழினம்
வெற்றியைப்  போற்றி மனம் - கொண்ட
துன்பியல் நீங்கிடத்  தோழமை  கொள்ளுமோர்
தோற்றமும் காண்போமோ

மின்னிடும் வானத்துப் பொன்னிழை  தாரகை
முற்றும் ஒளிர்ந்துநிற்க- தெய்வ
சன்னதியில் கரம்  கூப்பித் தொழுதிட்டு
சேர்நுதல் நீறுமிட்டு  - நல்ல
பன்மலர்வாசமும் சந்தனமும் எழப் 
பாடியே இன்பமொடு - இனி
செந்தமிழ் நாவில் திறன் கொள்ளுமோ வந்து
தென்றலே கூறிவிடு

மென்றவர் உண்டதோ எங்கள் சுதந்திரம்
மீண்டும் பிறப்பதெப்போ  -  இனி
ஒன்றெனக்கூடிட  எம்தமிழ் வீரமும்
ஓங்கி யொளிர்வதெப்போ - நீயும்
தென்றலே வன்புய  லாகிட தேசத்தின்
தொன்மைத்  தமிழினத்தை - இன்று
நன்றெனக் காத்திட நாட்டில் சுழன்றிடு
நன்மையைத் தாராயோ

இன்று தவித்திடும்  என்னுயிர் தன்னதில்
ஏற்றமும் தந்து செல்லாய் - அந்தக்
குன்றில் உதிக்கின்ற சோதியும்போல்முகம்
சிந்திடும் புன்னகையில் - மனம்
ஒன்றிடல்போலிவள் மங்கைமகிழ்ந்திட
மாபெரும் தூய்மைகொண்டு- சுழல்
தென்றலே வந்தெனைத்  தீண்டிச்சிலிர்த்திடத்
தீரமும்  தாராயோ

No comments:

Post a Comment