Monday, 16 June 2014

சக்தியே தா சக்தி

சிந்தையிலே வந்த கவி சொந்தமுமல்ல -  அதை
விந்தையிதே தந்தவிதம் எந்தனுமல்ல
நந்தவனம் கொள்மலர்கள் தந்தவள் தானே   -இன்று
இந்தவகை சொல்லிடவும் செய்தவள்காணே
சந்திரனும் செங்கதிரால் மின்னுதல் போலே - சக்தி
தந்திடயான் இங்கொளிரும் தன்மை கொண்டேனே
அந்தகனும் கொண்டவிழி கண்டிடல் போலே - கவி
சந்தமெனக் கொண்டதிவன் ஒன்றெனக் காணே

எந்த ஒளி இன்றியிருள் சென்றதுமில்லை - அதை
தந்தசுடர் என்றுமுள தந்தமுமில்லை
பந்தமதில் நின்றதுதீ யணைந்தது போலும்   -ஒரு
அந்தமதை  யெங்களுடல் கொண்டிருந்தாலும்
சிந்தனையால் செந்தணலாய் வெந்திடுந் தேகம் -  உயிர்
வந்தவழி சென்றுயர்வான் சங்கமமாகும்
அந்தரவான் கண்டதுவென் சிந்தனை கூடும் - உயிர்
விந்தையெனும் செஞ்சுடரில் ஒன்றிடப் போகும்

மின்னுமொளி அன்னை உரு அற்றவளாமோ - அவள்
இன்னுமொளிர் சூரியனில் பற்பல தீயோ
கன்னங் கரு அண்டமதில் `கற்பனைக் கெட்டா - ஒரு
பொன்னுருவோ பூகம்பமோ பூந்திரிதானோ
வன்மைகொளோ மென்மையெனும் வெள்ளொளிர் தீயோ -உயர்
தன்மையிலே எண்ணங்களின் வெம்மை கொண்டாளோ
என்னகதிர் காண்விழியும் கண்குருடாகும் -  எனில்
பென்னம்பெரு தீயவளைக் கண்டிடலாமோ

சந்தணம் நல் வாசமிடும் இவ்விளை மேனி - வெறும்
கந்தகமாய் தீப்பிடித் தெரிந்திடும் வாசம்
சொந்தமில்லை என்றபின்பும் சந்தணம் பூசி - உயர்
சுந்தரமென் றாகுவிதம் சிந்தனைக்காமோ
மந்தமிதே இந்தநிலை விட்டிருள் நீங்க - ஒளிர்
உந்து சுழல் அண்டமதை ஆக்கிய சோதி
முந்தியவள் கொள்ளமுதல் இன்பமேவேண்டின் - அன்னை
சந்தமெழ  வாழ்வினிமை தந்திடுவாளே

No comments:

Post a Comment