Friday, 13 June 2014

தாயின் பெருமை

கடல்தன்னில் அலைஒன்று புரள்கின்றது - அது
களிகொண்டு உயர்வாகி எழுகின்றது
திடங்கொண்டு கரைவந்து உருள்கின்றது - என்றும்
தெளிவோடு மணல்மீது குளிர்தந்தது
நடங்கொண்ட அலையென்ப உயர்வாகையில் - அதன்
நளினத்தின் எழில்தன்னும் எதுகொண்டது
கடலான தாய்கொண்ட கருவல்லவா - அலைக்
கரமென்ப பெருமாழி  உருவல்லவா

உடலிங்கு புதுராகம் இசைகொண்டதோ - அது
உயிர் கொண்ட புதுவாழ்வின் வரைபல்லவா
இடமென்ப குளிர்கொண்டு மழைகண்டபோ -தென்
இடி மின்னல் கருமேக முதிர்வல்லவா
சடமென்ற சிலைநின்று நடமாடினால் - இச்
சரிதமதி சயமென்று சிரம் கொள்ளவா
கிடவென்று விதிசெய்த கொடும் வேளையில் - இலைக்
கொடு யின்பத்தமிழ் என்ற குரல்அல்லவா

தடுமாறி மனமென்ப அலைகின்றபோ - தெனைத்
தரமாக்கி இவள் தந்த வாழ்வல்லவா
முடமாக்கி இதுபோதும் முடிவென்றிட - இலை
முனை யென்று மகிழ்வாக்கி முழுதாக்கினாள்
அடர்வான முகிலூடு வெயில்தோன்றவும் - இவ்
அறிவான தொளிகொள்ள அறமீந்தவள்
திடம்கொண்டு தமிழ் பேசி கவிசெய்யவும் -இத்
திறம் தந்த தவள் சேரும் புகழ்யாவையும்


கடைகொண்ட நிலை யின்று முன்னேறவும் - இக்
கதியென்று களைகொள்ளக் கரம்தந்தவள்
மடையாக புதுவெள்ள மனம் தந்தவள் - என்
மனதுக்குள் பிரவாகம் உடை என்றவள்
நடைகொண்டு வழிசெல்ல நலமாக்கியும் - என்
நிலைகொண்ட குறைபோக்க நடுவந்தவள்
விடைகொண்டும் உயிர்போகும் வரைநிற்பவள் - அவ
விடை சொல்லப் புதிருக்குள் பதிலாகுவேன்

குடைதந்து மழையென்றும் வெயில்தன்னிலும் - நில்
குறையின்றி வாழென்றும் அறம்செய்தவள்
படைகொண்டு முடைசெய்யும் பகைகொண்டவன் - அங்கு
புரிகின்ற துயர்தன்னை முடிவாக்கவும்
இடைவந்த விதியாலே எமதன்பினர் - தமை
இலையென்றே உயிர்கொல்லும் இவ்வேளையில்
தடையின்றித் தமிழ்பேசும் இனம் காக்கவும் - எம்
தமிழ்ஈழ உயர்வுக்கும் வரம்வேண்டினேன்

No comments:

Post a Comment