Monday, 16 June 2014

ஒன்றுமில்லாத அந்தம்

நீ நடந்த பாதையெங்கும் நிலவெறித்தது - அது
நெஞ்சில் மீண்டும் இன்சுகத்தை நேரெறித்தது
தீபரந்த வேளையென்று வான் ஒளிர்ந்தது - அங்கு
தேடிவந்த செங்கதிரால் திங்கள் போனது
பூ நிறைந்த சோலையெங்கும் போயலைந்தது - தென்றல்
பூமணத்தைக் கேட்டு வாங்கிப் போட்டழித்தது
நாவினிக்க ஒர் சுகத்தைத் தேன் கொடுப்பது - போலும்
நாடிவந்து  ஓர் இதத்தைப் பா கொடுத்தது

சூனியத்தில் ஓர் பெருத்த தீ எரிந்தது - அது
சுட்டபோது மேனியெங்கும் சூடெழுந்தது
ஆநிசப்த வான்பரப்பு ஆற்றல் கொண்டது - அது
யார் வகுத்ததோ மனத்தில் ஞானம் தந்தது
வானிலோடும் பூமியெங்கும் பாசம் பொங்குது - அது
வந்து மீண்டும்  ஏன்மனத்தைப் பின்னிழுக்குது
ஏநிகர்த்த தேது அன்பு என்றும் நல்லது - அது
ஏறிவந்த ஏணிபோலும் வீழ்த்த வல்லது

கூவி நிற்கும் கோகிலத்தின் கீதம்கேட்குது - அது
கொண்டதென்ன யார் கொடுத்த தேனினிக்குது
ஆவின் பாலைப் போலஉள்ளம் ஆசைகொண்டது - அது
ஆகவெண்மை யாயிருக்க மாசு கண்டது
தாவிஓடும்மானினத்தின்   தன்மைதோற்குது - பாரில்
தன்மை மாறி வெஞ்சினத்தின் கேடு வெல்லுது
பூவினாலே வாழ்வுகொள்ள காடு என்பது - மட்டும்
போதுமாம்  சுதந்திரத்தைப் பார்த்தளித்தது

வாய் சிரிக்க உள்ளம்போலி வாழ்வு கண்டது - அது
வண்ணம் கொண்ட பூவைப் போலும் வாடிப்போனது
தூய வெண்கதிர் நினைந்து சுற்றும் உலகிது - தானும்
தோன்றும் மாயகற்பனைக்குச்  சொந்தமானது
தாய் நினைத்ததென் இருத்தி வாழ்வளித்தது - பின்ன
தாய் நினைத்ததென் கருக்கி வாழ்வழிப்பது
பாய்விரித்த போது முன்னர் பூக் கிடந்தது - பின்னர்
பார்த்தபோது பூமறைந்து நோய் பரந்தது

மாயவாழ்வில்  மந்திரத்தை யாருரைத்தது - அங்கு
மங்கை என்று பேரெடுத்துத் தோளிணைந்தது
சாயவென்று தோள்விரிப்பில் சார்ந்துகொண்டது - கூந்தல்
சாமரைக்கு நேர்நிகர்த்த சாயலானது
காயமிட்ட நெஞ்சில் தீபம் யார் வளர்த்தது  - வானம்
காணும் தீயின் வெம்மை பட்டுத் தீபமாடுது
தோயும் இன்பம் தோல்விகண்டு தீயில் வேகுது - இந்த
தேகம் கொண்ட ஞாபகங்கள் என்னவாகுது

No comments:

Post a Comment