Monday, 16 June 2014

விதியை மாற்றி எழுது

வெளுத்து வானடி சிவக்கின்றதே - அட
விழித்தே யெழு தமிழா
பளுத்த முகிலயல் விரைகின்றதே - அது
பதைத்த துடிப்பெடு வா
கழுத்தில் எதிரியும் கயிறிடவா - விழி
கறுத்து மழிவதுவா  
விழுத்து முடல் தனி உயிரெனவே - இவர்
விருப்பம் எனவிடவா

குளித்து விட எமதுதிரமதா - அதைக்
கொடுக்க மனமிசைவா
அளித்ததெது துயர் அகவலியா அதை
அடுத்துப் பிரிஉயிரா
களித்துஅவர் குலம் குதியிடவா அங்கு
கிழிப்பதெம துடலா
இளித்து சரியென இரந்திடவா  இது
இயற்கை யறமெனவா

விழித்தும் எழுவது எதுதினமோ அது
வரைக்கும் துயில் கொளவா
பழித்துக் கிடப்பது இறைமையதோ - அவர்
பறித்துச் செலவிடவோ
கொழித்து நிறைவது கொள் நிதியோ - அவர்
கொடுத்த வலி வதையோ
சுழித்து விழிகளைப் பெறுவதுவோ - உடல்
சிறுத்த உணர்வுனதோ

தெளித்த நீர்த்துளி அலையெனவே - மன
தெடுத்து நிரையினில் வா
பழித்த நிலை தமிழ்க்கேன் மனிதா - நிலம்
பறித்த வகை  சரியா
செழித்த தமிழ்நிலை சிறுத்திடவும் - நாம்
சிரித்துக் களித்திடவா
அழித்து மெழுத எம்தலை விதியை - நாம்
அடுத்து செயலிட வா

No comments:

Post a Comment